மேகம் 16

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sathya Karunya

Well-known member
May 5, 2026
130
281
63
Sri Lanka 🇱🇰
MTN 16

அறையில் தங்களைத் தவிர வேறு ஆட்கள் இருப்பதை உணர்ந்ததும், சட்டெனச் சுயநினைவு பெற்ற மேகலா, தரிந்துவின் பிடியிலிருந்து பதற்றத்துடன் விலகி நின்றாள். அவளது முகம் சங்கடத்தில் சிவந்தது.

அவளது படபடப்பை உணர்ந்த தரிந்து, மெத்தையில் கிடந்தவாறே தனது கரங்களால் அவளது மென்மையான விரல்களைப் பற்றித் தன் பக்கம் மெல்ல இழுத்தான்.

தன் பெற்றோரை ஏறிட்டுப் பார்த்தவன்,
"அம்மே... தாத்தே... மெயா தமய் மேகலா... ஒயாலாகே லேலி.." (அம்மா... அப்பா... இவள் தான் மேகலா... உங்களுடைய மருமகள்..) என்று பெருமிதத்துடன், கண்களில் காதல் மின்ன அறிமுகம் செய்தான்.

அவர்களின் கண்கள் தன் மீது நிலைகுத்தியிருப்பதை உணர்ந்த மேகலா, மெல்லிய நடுக்கத்துடன் கரம் கூப்பி அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தாள். அவளது விழிகளில் இன்னும் துடைக்கப்படாத கண்ணீரின் ஈரம் மிச்சமிருந்தது.

அந்த ஈரம், அவளது தவிப்பையும் அளவிட முடியாத அன்பையும் அவர்களுக்கு மௌனமாகச் சொல்லியது. அவளது காதலை அங்கீகரிப்பதைப் போல, அவர்கள் இருவரும் நெகிழ்ச்சியுடன் மேகலாவைப் பார்த்துப் புன்னகைத்தனர்.

தரிந்துவின் அம்மா வத்சலா சேனநாயக்க, மேகலாவிற்கு அருகில் வந்து அவளது முகத்தை வாஞ்சையுடன் வருடினார்.

அவளது நாடியை மென்மையாகப் பிடித்துத் தூக்கி,
"ஒயா ஹரிம லஸ்ஸனய் துவ..." (நீங்க ரொம்ப அழகு மகள்...) என்று கனிவுடன் கூறினார்.

ஒரு தாயின் அரவணைப்பை அந்தத் தீண்டலில் உணர்ந்த மேகலா, நெகிழ்ச்சியில் தலைகுனிந்து நின்றாள்.

அருகிலிருந்த தந்தை ஜகத் சேனநாயக்கவும், அவளைப் பார்த்து வாஞ்சையுடன் புன்னகைத்தார்.

"ஆக... இந்த 'லஸ்ஸன கெல்ல' (அழகான பெண்) கிடைக்க எங்கட மகன் தீ குளிக்க வேண்டியிருக்கு என..?" என்று அவர் கிண்டலாகக் கேட்டார்.

அவர் விளையாட்டாகச் சொன்னாலும், தன்னை மீட்டெடுக்க அவன் சந்தித்த அந்த துயரத்தை நினைத்த மேகலாவிற்கு மீண்டும் கண்கள் கசிந்தன. அவள் தழுதழுத்த பார்வையுடன் தரிந்துவைத் திரும்பிப் பார்க்க, அவன் அவளுக்கு ஆறுதலாய் புன்னகைத்தான்.

அவர்களின் ஆழமான காதலைப் புரிந்து கொண்ட பெற்றோர்கள், அந்த இளமனதினர் மனம் விட்டுப் பேசட்டும் என்று எண்ணி, அவர்களைத் தனியே விட்டுவிட்டு மெல்ல அறையை விட்டு வெளியே வந்தனர்.

அவனுக்கருகில் அமர்ந்த அவளின் மென்மையான கைவிரல்களை அவன் இறுகப் பற்றிக் கொண்டான். இருவருக்கும் வார்த்தைகள் ஏதும் வரவில்லை; மௌனம் மட்டுமே அங்கே அரசாட்சி செய்தது.

ஒருவரை ஒருவர் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த மௌனமான பார்வையில் ஆயிரம் அர்த்தங்களும், சொல்லப்படாத காதலும் பொதிந்திருந்தன.

அவர்களின் அந்த அழகான மோனநிலையைக் கலைக்கும் விதமாக, அறையின் கதவைத் திறந்துகொண்டு சிவா உள்ளே நுழைந்தான். முதலில் தரிந்துவின் உடல்நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்தவன், பிறகு சட்டெனத் திரும்பி மேகலாவை முறைத்தான்.

"எருமை... நான் ஓட்டோவுக்குக் காசு கொடுத்துட்டு வாறதுக்குள்ள என்ன விட்டுபோட்டு இப்படி ஓடி வந்திட்ட...? உன்னைத் தேடி இந்த ஆஸ்பத்திரி முழுக்க அலஞ்சி திரிஞ்சிட்டு வாறன்... நல்லவேளை, இவர்ட அப்பா அம்மாதான் இந்த ரூமை எனக்குக் காட்டினாங்க..." என்று போலிச் சினத்துடன் சலித்துக் கொண்டான்.

அவனது வசையை கேட்ட மேகலா, தன் மறதியையும் அவசரத்தையும் எண்ணி நாக்கைக் கடித்துக்கொண்டு சிறுபிள்ளைத்தனமாகச் சிரித்தாள்.

"இப்ப நல்லா சிரி... இந்த சிரிப்பை எல்லாம் ரெண்டு நாளா எங்க ஒளிச்சு வெச்சிருந்தனீ... இவரை பார்த்த பிறகும் எண்ட ஞாபகம் வரேல்ல என உனக்கு... ஒருத்தனை துணைக்கு கூட்டி வந்தமே... அவன் என்ன ஆனானோ எண்டு யோசிக்கவே இல்ல... இதுதான் லவ்வரை கண்டதும் பிரெண்டை கழட்டி விடுறதோ.." என்று தொடர்ந்தான் சிவா.

அப்போது, மேகலாவின் மன்னிப்புக் கோரலோடு இணைந்து தரிந்துவின் குரலும், "சொறி..." என்று மெல்லிய ஒலியில் கேட்டது.

சிவா என்னவென்று புரியாமல் அவனைப் புருவம் உயர்த்திப் பார்க்க, தரிந்து தன் அடிமனதில் இருந்த குற்றவுணர்வை வெளிப்படுத்தும் விதமாக மெல்லிய தயக்கத்துடன் தொடர்ந்தான்.

"அது... நீங்க... சுது.. ம்க்ஹும்... மேகலாவை நீங்க காதலிக்கிறீங்க எண்டு நான் தப்பா நினைச்சிட்டன்..." என்றான் தாழ்ந்த குரலில்.

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த சிவா,
"ஐயையோ... இவளையா...? மனுசன் லவ் பண்ணுவானா இவளை...? பிறகு எண்ட அத்தை மகள் அகல்யா என்ன விரட்டி விரட்டி அடிப்பா.." என்று பொய்யாக அழுது மழுப்பினான்.

உடனே மேகலா இடையில் புகுந்து, "அப்ப இவர் மனுசன் இல்ல எண்டு சொல்லுறியா...?" என்று வம்பிழுக்க,

"அச்சோ... அவர் மனுசன் இல்லை... தெய்வம்..." என்று சிவா சமாளித்தான்.

சிவா கிண்டலாகச் சொன்னாலும், தரிந்துவை ஒரு தெய்வமாக மேகலா ஒப்புக்கொண்டதை அவளது கண்கள் சொல்லாமல் சொன்னன.

அந்த மறைமுக அங்கீகாரத்தில் தரிந்துவின் கண்கள் பிரகாசமாக மின்னின. அவன் மேகலாவின் விரல்களைக் கோர்த்து ஒரு மெல்லிய அழுத்தத்தைக் கொடுத்தான்.

"அப்ப... நீங்க யாழ்ப்பாணத்து மருமகன் எண்டு சொல்லுங்க..." என்று சிவா மீண்டும் கலாய்க்க, மேகலாவின் முகம் நாணத்தில் சட்டெனக் குங்குமமாய் சிவந்து பின் வாடியது.

அவளது அந்த மாற்றத்தைத் தரிந்துவின் கண்கள் கவனிக்கத் தவறவில்லை.

"சரி.. நான் அப்படியே வெளியே போய் ஒரு ரவுண்ட் அடிச்சுப் போட்டு வாறன்... நீ கதைச்சு முடிஞ்சதும் எனக்கு ஒரு மிஸ் கோல் தா..." என்று அவர்களுக்குத் தனிமை கொடுத்துவிட்டு, புன்னகையுடன் அங்கிருந்து வெளியேறினான் சிவா.

சிவா வெளியேறியதும் அந்த அறையில் மீண்டும் ஒரு நிசப்தம் நிலவியது. அந்த மௌனத்தில் மெல்லிய காதலின் வாசனை பரவியிருந்தது.

தரிந்து, மேகலாவின் விரல்களை இன்னும் நெருக்கமாகப் பிணைத்துக்கொண்டான். அவளது மென்மையான கரங்களில் படர்ந்திருந்த நடுக்கத்தை உணர்ந்தவன், மிக மென்மையாக அவளைத் தன்னை நோக்கி இழுத்தான். அந்தச் சிறு இழுப்பில் அவனது காயங்களை விட, அவளிடமிருந்து அவன் எதிர்பார்க்கும் ஆறுதலும் அன்பும் அதிகமிருந்தது.

அவளது நாணத்தில் சிவந்த முகத்தை ரசித்தபடி,
"அப்ப... கண்டி மருமகளா ஆக மெடம் ரெடி ஆகிட்டீங்க போல..? இனிமேல் சரி எண்ட ரிக்வெஸ்டை எக்செப்ட் பண்ணுவீங்க தானே..." என்று குறும்பு கொப்பளிக்கக் கேட்டான்.

மேகலா பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாகத் தலைகுனிந்து கொண்டாள். நாணத்தில் அவளது முகம் தக்காளிப் பழமெனச் சிவந்து போனது. அந்தச் சிவப்பை ரசித்தபடி அவளைப் பார்த்துக் கொண்டிருந்த தரிந்துவின் கண்கள், அவளது முகத்தில் நிழலாடிய ஒரு மெல்லிய வாட்டத்தைக் கவனித்தன.

“என்னம்மா… ஏன் முகம் வாடிப்போச்சு...? உண்ட மண்டைக்குள்ள இப்ப என்ன ஓடிட்டு இருக்கு...? எதைப் பத்தி யோசிச்சு கவலைப்படுறாய்...?"” என்று மிகுந்த அக்கறையுடன் கேட்டான்.

மேகலா மெல்லத் நிமிர்ந்து அவனது கண்களை ஏறிட்டுப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒருவிதத் தயக்கமும், சொல்லத் துடிக்கும் அச்சமும் கலந்திருந்தன.

"நாங்க ஒண்டா சேருவமா...?"
என்று தழுதழுத்த குரலில் கேட்டாள்.


அவளது கலக்கத்தைப் பார்த்த தரிந்து, அவளது கைகளை இன்னும் உறுதியாகப் பற்றிக்கொண்டு,

"கட்டாயம் சேருவம்... ஏன் அப்படி யோசிக்கிறனீ..?"
என்று கனிவுடன் வினவினான்.

"இல்ல தரிந்து... என்ர வீட்டில எங்களின்ர காதலை ஏற்பினமா எண்டு பயமா இருக்கு... கலாச்சாரம், மொழி, இனம் எண்டு எத்தனை தடைகள்... இதையெல்லாம் தாண்டி எங்களுக்கான வாழ்க்கை அமையுமா...??? அதோட... நீங்க... இராணுவ வீரன் வேற... உங்கட யுனிபோர்மை பார்த்தாலே எங்கட ஆக்களுக்கு ஒருவித ஒவ்வாமையும் வெறுப்பும் வரும்... ஆனால் அதை பிழை சொல்லவும் ஏலாது... ஏன் எண்டா நாங்க அனுபவிச்ச வலி அப்படி..."

என்று தன் தந்தைக்கும் தமயனுக்கும் நேர்ந்த கொடுமைகளைச் சொல்லி முடிப்பதற்குள் அவளது குரல் உடைந்தது.

அவளது ஆழ்மனதில் உறைந்திருந்த அந்தப் பயம், ஒரு மெல்லிய நடுக்கமாக மாறி அவனது கைகளைப் பற்றியிருந்த அவளது விரல்கள் வழியாக அவனுக்குக் கடத்தப்பட்டது.

தரிந்து, அவளது கண்களில் தேங்கியிருந்த வலியைக் கவனித்தான். அவளது பயத்தைப் புரிந்துகொண்டவன், அவளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக மென்மையாகப் புன்னகைத்தான்.

"எல்லாச் சீருடைகளும் காயப்படுத்துறது இல்ல மேகலா... சிலது காயங்களை ஆற்றவும் செய்யும்..."

என்று கனிவாகக் கூறியவன், அவளது கைகளைத் தன் கரங்களுக்குள் பொதிந்து மென்மையாக வருடினான்.

பின்பு, அவளது கண்களை நேராகப் பார்த்தவனாக,
"உன்ர பயம் நியாயமானது எண்டு எனக்குத் தெரியும்... ஆனா ஒண்டு மட்டும் விளங்கிக்கொள்ளு… உன்ர வீட்டாக்களின்ர சம்மதமும், அவேன்ர ஆசீர்வாதமும் இல்லாம நான் உன்னை என்ர வாழ்க்கைக்குள்ள கூட்டிக்கொண்டு வரமாட்டன்.... யாரின்ர மனசையும் காயப்படுத்தி நாங்க கல்யாணம் கட்டப் போறதில்ல... காலம் எல்லாத்தையும் மாத்தும் மேகலா... உன்ர வீட்டினரின்ர சம்மதத்தை நான் வாங்குவன்... அதுவரைக்கும் நான் வெயிட் பண்ணுவன்..." என்று நிதானமாக அவளைத் தேற்றினான்.

தரிந்துவின் அந்த முதிர்ச்சியான பேச்சும், அவளது குடும்பத்தின் மீது அவன் காட்டிய மரியாதையும் மேகலாவின் மனபாரத்தைப் பாதியாகக் குறைத்தது. அவனது தோள்களில் தலைசாய்த்துக்கொள்ள வேண்டும் போல அவளுக்குத் தோன்றியது.

அவளது எண்ணவோட்டத்தை உணர்ந்த தரிந்து, மெல்லத் தன் கரங்களை உயர்த்தி, அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான். அந்த அணைப்பில் ஒரு பாதுகாப்பும் பேரன்பும் கலந்திருந்தது.

அவனது தீக்காயங்கள் நினைவுக்கு வர, மேகலா சட்டெனப் பதறிப்போய்,

"அச்சோ... உங்களுக்கு நோகாதா... நானும் அதை யோசிக்காம அப்ப உங்கட மேல சாஞ்சிட்டன்.."
என்று படபடப்புடன் அவனிடமிருந்து விலகி எழப் பார்த்தாள்.

ஆனால், அவளை விடாமல் தன் பிடியிலேயே இருத்திக் கொண்டவன்,

"இப்படியே கொஞ்ச நேரம் இரு... எனக்கு எந்த நோவும் இல்ல... இந்த ஒரு நிமிசத்துக்காக நான் எவ்வளவு ஏங்கியிருக்கிறன் தெரியுமா...? உன்ன இப்படி என்ர தோளில சாய்ச்சு வெச்சிக்கொள்ளோணும் எண்டு நான் கண்ட கனவுகள் ஏராளம்..." என்று ஆழ்ந்த ஏக்கத்துடன் கூறினான்.

அவள் தோளில் வாகாக சாய்ந்துகொண்டவளாக,
"நான் வருவன் எண்டு எதிர்பார்த்தனீங்களா..." என்று மெல்லிய குரலில் வினவினாள்.

அவளது கேசத்தை மென்மையாக வருடியபடி,
"வருவாய் எண்டு தெரியும்... ஆனால் இப்படி எல்லாருக்கும் முன்னுக்க ஓடி வந்து, என்ன கட்டிப்பிடிச்சு உன்ர காதலை சொல்லுவாய் எண்டு நினைக்கவே இல்ல... உண்மையிலேயே இது ஒரு பெரிய சேர்ப்ரைஸ் தான்..." என்று குறும்புடன் கண் சிமிட்டினான்.

"என்ன அந்தளவுக்கு பிடிக்குமா உங்களுக்கு... அப்படி உங்கட உயிரையே பணயம் வைக்கும் அளவிற்கு நான் என்ன செஞ்சிட்டன் பெருசா..."
என்று கண்களில் நேசம் பொங்க வினவினாள்.

அவளது கேள்வியில் இருந்த அப்பாவித்தனத்தைக் கண்டு தரிந்துவின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.

"ஏன் பிடிக்கும் எண்டு சொல்லத் தெரியேல்ல மேகலா... ஏத், உன்னத் தவிர வேற யாரையுமே எனக்குப் பிடிக்கேல்ல.... ஒரு நிமிசம் நீ எண்ட கண் முன்னுக்க இல்லாமப் போனாலும், ஏதோ ஒண்டை இழந்தது போல ஒரு தவிப்பு எனக்குள்ள வருது... ஒரு வீரனா எத்தனையோ போர்க்களங்களை நான் பார்த்திருக்கன். ஆனால் உண்ட முன்னுக்கு மட்டும் நான் எப்பவும் தோத்துப் போயிடுறன்... நீ தான் எனக்கான உலகமே... நீ இல்லாம ஒரு வாழ்க்கை எனக்கு வேணாம் எண்டு தோணிச்சு... அதனாலதான் எண்ட உயிரை விடவும் நீ எனக்குப் பெருசா தெரிஞ்சாய்..." என்று உருக்கமாகச் சொன்னான்.

பின்பு, தரிந்து அவளது கையை மெதுவாக இறுக்கியபடி, “எண்ட உயிரைக் கொடுத்தாவது உன்னைப் பார்த்துக்கொள்ளுவன் மேகலா... இந்தத் தீக்காயங்களை விட, உன்னப் பிரியிற வலிதான் என்னால தாங்கேலாது.... அந்த வலியை நான் எப்பயும் அனுமதிக்க மாட்டன்...” என்று அவன் ஆழமான உறுதியுடன் கூறினான்.

அவனது அந்த வார்த்தைகள், அவளது உள்ளத்தில் இருந்த பயத்தை மெல்லக் கரைத்து, ஒரு புதிய நம்பிக்கையை அங்கே விதைத்தது.




 

Author: Sathya Karunya
Article Title: மேகம் 16
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
Aww தரு காதல் சோ cute🤩🤩🤩🤩
அவன் பெற்றோர் உம் சோ ஸ்வீட் 🥰 🥰 🥰 🥰 🥰
மேகி வீடு தான்😳😳😳😳
 
  • Like
Reactions: Sathya Karunya