MTN 17
பயிற்சி நிறைவு விழா அன்று, விமானக் கல்லூரி பயிற்சி மையமே திருவிழாக் கோலம் பூண்டு கோலாகலமாகக் காட்சியளித்தது. முதன்முறையாக இலங்கை விமானச் சீருடையை அணிந்திருந்த பணிப்பெண்கள் அனைவரும், நீல வானில் சிறகடிக்கக் காத்திருக்கும் மயில்களைப் போலவே மிளிர்ந்தனர். அவர்கள் ஒவ்வொருவரது முகத்திலும் தங்கள் இலக்கை அடைந்த பெருமிதமும், இத்தனை நாள் பழகிய நண்பர்களைப் பிரியப்போகும் மெல்லிய சோகமும் ஒருசேரக் கலந்திருந்தன.
சான்றிதழைப் பெற்றுக்கொண்ட மேகலா, தனது நீண்டகாலக் கனவு நனவான மட்டற்ற திருப்தியுடன் ஒரு விமானப் பணிப்பெண்ணாக யாழ்ப்பாணம் திரும்பினாள்.
அன்றைய சந்திப்பிற்குப் பிறகு மேகலா தரிந்துவை நேரில் சந்திக்கவேயில்லை. மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டவன், மேலதிக ஓய்விற்காகத் தனது சொந்த ஊரான கண்டிக்குச் சென்றிருந்தான்.
அவர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொள்ள முடியாவிட்டாலும், அலைபேசி வழி உரையாடல்கள் அவர்களின் காதலை ஆழப்படுத்திக் கொண்டிருந்தன. ஒவ்வொரு அழைப்பின் போதும், எவ்வித எதிர்பார்ப்புமற்ற தனது தூய காதலை வாரி இறைத்து, மேகலாவின் ஆழ்மனதில் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துக் கொண்டேயிருந்தான் தரிந்து.
பத்து நாட்களுக்குப் பிறகு, மேகலாவின் முதல் கண்காணிப்பு விமானப் பயணம் (Supervised Flight) இனிதே தொடங்கியது.
இலங்கையிலிருந்து இந்தியாவை நோக்கித் தனது முதல் வான்வழிப் பயணத்தை அவள் மேற்கொண்ட அந்தத் தருணம், அவளது வாழ்வில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நாளாக அமைந்தது.
விமான நிலையத்தின் ஓடுதளத்தில் கம்பீரமாக நின்றிருந்த அந்த விமானத்தைப் பார்த்தபோது, மேகலாவின் இதயம் வழக்கத்தை விட வேகமாகத் துடிக்கத் தொடங்கி, அவளது உடலெல்லாம் ஒருவிதப் பரவசத்தில் புல்லரித்தது.
அந்த பிரம்மாண்டமான இயந்திரத்தின் இரும்புச் சிறகுகள், அவளது இத்தனை காலக் காத்திருப்புக்கும் உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாகத் தெரிந்தன. அந்தக் காட்சியைக் கண்டதும் அவளுக்குள் ஏற்பட்ட கிளர்ச்சி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
ஒவ்வொரு முறை இதயம் அடித்துக்கொள்ளும் போதும், அந்தத் துடிப்பு ‘நான் சாதித்துவிட்டேன்’ என்று அவளது காதுக்குள் ஓயாமல் முழங்குவது போன்றதொரு பேரானந்தம் அவளை முழுவதுமாக ஆட்கொண்டது. சிறுவயதில் வானில் பறக்கும் விமானங்களை அண்ணாந்து பார்த்து வியந்த அந்தச் சிறுமி, இன்று அதே வானத்தைத் தன் கைவசப்படுத்தி சிறகடிக்கப் போகிறாள் என்பதை நினைத்தபோது அவளது கண்கள் பெருமிதத்தில் மின்னின.
மயிலிறகு வண்ணம் பதிக்கப்பட்ட, மரகதப் பச்சை சீருடையில், கூந்தலை நேர்த்தியாகக் கொண்டையிட்டு, மார்பில் தனது பெயர் தாங்கிய பெயர்ப் பதக்கம் மின்ன, கண்ணாடி முன் கம்பீரமாக நின்றவள், தன்னை ஒருமுறை பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டாள்.
அவளது பெற்றோரின் ஆசீர்வாதமும், அண்ணனின் வாழ்த்தும், தரிந்துவின் நம்பிக்கையான வார்த்தைகளும் அவளுக்குள் ஒரு பெரும் துணிவைத் தந்தன.
விமானம் மெல்ல ஓடுதளத்தில் நகரத் தொடங்கியபோது, அவளது அடிவயிற்றில் ஒரு சிலிர்ப்பு பரவியது.
அடுத்த சில நொடிகளில், அந்த இராட்சத உலோகப் பறவை மேலெழுந்து மேகக் கூட்டங்களுக்கு இடையே மிதக்கத் தொடங்கியபோது, ஜன்னல் வழி தெரிந்த உலகத்தைப் பார்த்து மெய் மறந்தாள். நிலப்பரப்பு மெல்ல மெல்ல மறைந்து, பஞ்சுப் பொதிகளாய் மேகங்கள் அவளைச் சூழ்ந்து கொண்டன. 'நான் பறக்கிறேன்... உண்மையாகவே என் கனவுச் சிறகுகளால் இதோ வானில் பறக்கிறேன்...' என்று அவளது உள்மனம் எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது.
இரண்டு நாட்கள் நீடித்த தனது முதல் சர்வதேசப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, நள்ளிரவில் பாதுகாப்பாகத் தரை இறங்கினாள் மேகலா.
தலைமைப் பணியாளர் மேகலாவின் சுறுசுறுப்பையும் திறமையையும் மனதாரப் பாராட்டியபோது, அவளது முகம் சாதனையின் பெருமிதத்தில் பிரகாசித்தது.
விமான நிலையத்தின் முறையான நடைமுறைகளை ஒவ்வொன்றாக முடித்துவிட்டு, வருகை முனையத்தின் (Arrival Terminal) வழியாக அவள் பெட்டிகளை உருட்டிக்கொண்டு வெளியே வந்தபோது, அவளது பார்வை தற்செயலாக ஓரிடத்தில் நிலைத்தது.
அங்கே... ஒரு தூணில் சாய்ந்தபடி, கையில் ஒரு அழகான பூங்கொத்துடன் கம்பீரமாக நின்றிருந்தான் தரிந்து.
தன்னைப் பார்ப்பதற்காக அவன் அங்கே வருவான் என்று மேகலா துளியும் எதிர்பார்க்கவில்லை. அவனை அந்த இடத்தில் சற்றும் எதிர்பாராத மேகலா, வியப்பிலும் மகிழ்ச்சியிலும் அப்படியே நின்ற இடத்திலேயே உறைந்து போனாள்.
அவனது காயங்கள் இன்னும் முழுமையாக ஆறாத நிலையிலும், அவளது இந்த முக்கியமான தருணத்தில் அவளோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே, கண்டியிலிருந்து இவ்வளவு தூரம் அவன் பயணித்து வந்திருந்தான். அவனது அந்த அன்பின் ஆழம், மேகலாவின் விழிகளில் ஆனந்தக் கண்ணீரைத் துளிர்க்கச் செய்தது.
அவளது திகைப்பை ரசித்தபடி, தனது வசீகரமான புன்னகையை உதிர்த்தான் தரிந்து.
“சேர்ப்ரைஸ்…”
என்றபடி மெல்லக் கண் சிமிட்டி அவளை வரவேற்றான்.
அவனைக் கண்ட அந்த நொடியில், மேகலா ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொள்ளத் துடித்தாள். ஆனால், விமான நிலையத்தின் பரபரப்புக்கு மத்தியிலும், தான் அணிந்திருக்கும் அந்தப் பொறுப்பான சீருடையின் கண்ணியத்தையும் உணர்ந்து மெல்லத் தன்னைத் தடுத்துக் கொண்டாள்.
இருந்தாலும், அவளது கண்கள் அவனிடம் கேட்காமலேயே ஆயிரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தன.
“தரிந்து… நீங்க எப்படி இஞ்ச...? அதுவும் இந்த நேரத்துல…? நேத்து கதைக்கும்போது கூட என்னட்ட சொல்லவே இல்லையே நீங்க இஞ்ச இருக்கிறத...”
என்று தழுதழுத்த குரலில் கேட்டாள்.
"எண்ட தேவதையின்ர முதல் பயணத்தில நான் இல்லாம எப்படி சுது வலாகுழு...?" தரிந்து அவளை நேசத்துடன் பார்த்தபடி மெதுவாகச் சொன்னான்.
மேகலாவின் கண்கள் ஆனந்தத்தில் நனைந்தன.
"அதுக்காக நித்திரை கொள்ளாம முழிச்சிக்கொண்டே இருந்தனீங்களா...?"
"நான் கேம்ப்பில எது எதுக்கோ எல்லாம் நித்திரை முழிக்கிறன்... உனக்காக செய்ய மாட்டனா.."
அவனது இந்தப் பேரன்பைப் பெற தான் என்ன தவம் செய்தோம் என்று நெஞ்சம் நிறைந்தாள் மேகலா.
“வா போவம்...”
என்று தரிந்து மெல்லிய குரலில் அழைக்க, அவனது அழைப்பில் இருந்த காந்த ஈர்ப்பு மேகலாவை அவன்பால் இழுத்தது.
“எங்க...?” என்று வியப்புடன் மேகலா கேட்டாள்.
“ஒரு சின்ன டிரைவ்... இந்த உலகத்தையே மறந்துட்டு நீயும் நானும் மட்டும் தனியா...” என்று அவன் ஒற்றைக் கண்ணைச் சிமிட்ட, மேகலாவின் முகம் அந்த நள்ளிரவிலும் தாமரையாய் மலர்ந்து சிவந்தது.
“இப்படியா...?” என்று தான் அணிந்திருந்த விமானப் பணியாளர் சீருடையைச் சுட்டிக்காட்டி அவள் தயங்கினாள்.
அவளது தயக்கத்தை ரசித்தவன்,
“சரி, நீ முதல்ல க்ரூ பஸ்சில உண்ட ரூமுக்கு போயிட்டு ட்ரெஸ் மாத்திட்டு ரெடியா இரு... நான் உனக்கு பின்னுக்கவே வாறன்...” என்றான்.
தன்னைப் பார்ப்பதற்காகவே, அந்த நள்ளிரவில் உடற்காயங்களைப் பொருட்படுத்தாது, உறக்கமின்றி காத்திருந்த அவனை ஏமாற்ற மேகலாவின் மனதிற்குச் சக்தியிருக்கவில்லை.
விமானப் பணியாளர்களுக்கான பிரத்யேகப் பேருந்தில் ஏறி ஓய்வறை நோக்கிச் சென்றாள். அவளது வருகைக்காகத் தவம் கிடந்தவனைப் போலவே, அவனது கார் அவளது பேருந்தை ஓர் நிழலைப் போலப் பின் தொடர்ந்தது.
பயணக் களைப்பு நீங்க ஒரு குளியல் போட்டு, எளிமையான உடைக்கு மாறினாள் மேகலா. கண்ணாடி முன் நின்று கலைந்திருந்த கூந்தலைச் சரி செய்தவள், மெல்லத் திரும்பி சுபாவைப் பார்த்தாள்.
அடுத்த நாள் காலைப் பணி இருந்ததால், எதற்கும் கவலைப்படாமல் சுபா அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவளது உறக்கத்தைக் கலைக்க விரும்பாமல், அவளிடம் சொல்லாமலேயே மெல்ல வெளியேறினாள் மேகலா.
தரிந்துவின் கார் நள்ளிரவு கொழும்பின் சாலைகளில் மெல்ல மிதக்கத் தொடங்கியது. அவர்களுக்கு கிடைத்த அந்தத் முதல் தனிமை, அவர்களுக்குள் ஒரு இனிய மௌனத்தைப் படரச் செய்தது.
காரின் ஸ்பீக்கர்களில் இருந்து கசிந்த மெல்லிசைப் பாடல்கள், அந்த இரவின் நிசப்தத்திற்கு மேலும் அழகு சேர்த்தன. ஒரு கையால் ஸ்டீயரிங்கைப் பிடித்திருந்த தரிந்து, மறு கையால் மேகலாவின் விரல்களை மெதுவாகக் கோர்த்துக்கொண்டான். அவனது கரத்தின் கதகதப்பு, மேகலாவின் பயணக் களைப்பை மொத்தமாகத் துடைத்து எறிய, அவனது தோளில் மெல்லத் தலைசாய்த்துக் கொண்டாள்.
தரிந்து அவளைத் திரும்பிப் பார்த்து, அவளது கையைத் தன் நெஞ்சின் மீது மென்மையாக அழுத்தி வைத்தான். அவளும் அவனது தோளில் சாய்ந்தவாறே, கண்கள் பனிக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அந்த நெருக்கமான தருணத்தில், அவளது அழகில் தன்னைத் தொலைத்தவனாக, அவளது விழிகளோடு தன் விழிகளைக் கலக்கவிட்டு, வெண்டைப்பிஞ்சு போன்ற அவளது மென்மையான விரல்களில், தனது காதலின் முதல் அச்சாரத்தை ஒரு மெல்லிய முத்தமாகப் பதித்தான்.
எதிர்பாராத அந்த ஸ்பரிசத்தில் மேகலாவிற்குள் ஒரு மின்னல் வெட்டியது. மெல்லிய வெட்கம் அவளை ஆட்கொள்ள, அவள் மெதுவாக அவனிடமிருந்து விலக முயன்றாள்.
ஆனால், அவளது கையை விடாமல் பிடித்துக் கொண்ட தரிந்து, அவளது வெட்கத்தை ரசித்தபடி மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தான்.
நள்ளிரவின் குளுமை மெல்ல மெல்லத் தன் வீரியத்தை அதிகரிக்க, கொழும்பு மருதானையின் அந்தப் புகழ்பெற்ற உணவகத்தின் முன் கார் வந்து நின்றது.
அந்தக் குளிர்ச்சியான இரவில், சுடச் சுடப் பரிமாறப்பட்ட கொத்து ரொட்டியும், ஆவி பறக்கும் தேநீரும் அவர்களுக்குத் தேவாமிர்தமாகவே தெரிந்தது. அந்தச் சாதாரண உணவில் பொதிந்திருந்த ருசியை விட, ஒருவரையொருவர் பார்த்தபடி அவர்கள் பகிர்ந்து கொண்ட அந்தத் தருணத்தின் இனிமையே அந்த உணவை இன்னும் சுவையாக்கியது.
அங்கிருந்து அவர்கள் காலி நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடங்கியபோது, மேகலா ஆச்சரியத்துடன் அவனை நோக்கினாள்.
"சின்ன டிரைவ் எண்டு தானே சொன்னனீங்க... இப்ப அப்படியே எதிர்பக்கத்துல போறீங்க...?" என்று வினவினாள்.
"உன்னோட எவ்வளவு தூரம் போனாலும், அது எனக்கு சின்ன பயணமா தானே தெரியுது..." என்று காதல் ததும்பக் கண் சிமிட்டியவன்,
"நாளைக்கு ஓப் தானே நீ... கொஞ்சம் என்னோட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்... பிழையில்ல..." என்று அவளைப் பார்த்துக் கூறினான்.
"அச்சோ... சுபா எழும்பி என்னத் தேடுவாளே... அவளுக்கு காலையில சுப்பர்வைஸ்ட் பிளைட் இருக்கு... அவ எழும்ப முதல் ரூமுக்கு போயிடேலும் எண்டு நினைச்சனான்..."
என்று மேகலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, திரையில் சுபாவின் புகைப்படத்துடன் அலைபேசி அதிரத் தொடங்கியது.
"ஐயையோ... அவளே தான்... திங்க் ஒஃப் த டெவில் மாதிரி... அவளை நினைக்கும் போதே கோல் எடுக்குறாள்..." என்று தலையில் கையை வைத்தாள் மேகலா.
அவள் பதறியபடி போனை எடுப்பதற்குள், தரிந்து அதை அவளிடமிருந்து தட்டிப் பறித்து அழைப்பை ஏற்று, ஒலிபெருக்கியில் போட்டான்.
"எருமை... எங்கயடி இருக்கிறாய்...??? உன்ர ஐடி கார்ட் யூனிபோர்ம் எல்லாம் இஞ்ச இருக்கு... நீ எங்கயடி போனாய்...???"
என்று சுபா கத்த, அவள் குரல் கார் முழுவதும் எதிரொலித்தது.
மேகலா 'ஐயோ... வேணாம்...' என்று சைகையிலேயே கெஞ்ச, தரிந்துவோ அதைக் கண்டு கொள்ளாமல் தனது வசீகரமான குரலில்,
"ஹலோ சுபா..." என்று கேட்டான்.
மறுமுனையில் சுபா ஒரு கணம் அதிர்ந்து, பின் சுதாரித்துக்கொண்டவளாய்,
“ஹலோ... ஆரது...? என்ர செல்லத்தின்ர போன்ல... அதுவும் இந்த அர்த்தஜாமத்துல கதைக்கிறது...? பேய் ஏதும் உலாத்துதோ..?” என்று கிண்டலாகக் கேட்டாள்.
"ஓமோம்... பேய் தான்... உங்கட பிரெண்டை பிடிச்சிருக்கிற பேய்... உங்கட பிரெண்டுக்கு பிடிச்ச பேய்... இப்ப இந்த பேய் என்ர செல்லத்தை கடத்திட்டு கார்ல கூட்டிக்கொண்டு போகுது..." என்று தரிந்து குறும்புடன் சிரித்தான்.
"ஹெலோ ஏடி... என்ன... உங்கட செல்லமா... பாலர் வகுப்புல இருந்து அவள் என்ர செல்லமாக்கும்... நீங்க நேத்து வந்துபோட்டு உரிமை கொண்டாடுறீங்களோ..." என்று சுபா பதிலுக்குக் கலாய்த்தாள்..
அவனிடமிருந்து போனைப் பறித்த மேகலா,
"சுபா... சொறியடி... எயார்போர்டுக்கே வந்திட்டார் இவர்... நான் அங்க வந்து உடுப்பு மாத்திட்டு வந்தனான்... நீ நல்ல நித்திரை... அதுதான் உன்னட்ட சொல்லாம வந்துட்டன்" என்று மன்னிப்புக் கோரும் குரலில் விளக்கினாள்.
"சரி சரி... இப்ப எங்க நிக்கிறனீ...? நான் வெளிக்கிட முதல் வந்துடுவியா...??" என்று சுபா அக்கறையுடன் கேட்டாள்.
"அது... இல்லடி... நாங்க இப்ப காலி போய்க்கொண்டிருக்கிறோம்..." என்று மேகலா இழுக்க, மறுமுனையில் சுபா ஓவெனச் சிரித்தாள்.
"ஓஹோ... என்ஜோய்... நான் இன்னும் கொஞ்ச நேரம் நித்திரை கொண்டு எழும்பப் போறன்... என்ர செல்லத்த பத்திரமாப் கொண்டுவந்து விடோணும் ஏடி.." என்று அந்த 'செல்லத்தை' அழுத்திச் சொல்லி, வாழ்த்திவிட்டுச் சிரிப்புடன் அழைப்பைத் துண்டித்தாள் சுபா.
மேகலா அவனை முறைக்க, தரிந்துவோ அந்தச் சிறு பிள்ளைத் தனமான குறும்பில் திளைத்தபடி, காலியை நோக்கி வேகத்தை அதிகரித்தான்.
நிலவொளியில் நனைந்தபடி அவர்களது காதல் பயணம் நீண்டுகொண்டிருந்தது.

Last edited:
Author: Sathya Karunya
Article Title: மேகம் 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.