MTN 22
மேகலாவைப் பணி நிமித்தமாகக் கொழும்புக்குத் திரும்ப அனுப்பி வைப்பதில் மகேஸ்வரிக்கும் முரளிக்கும் துளியும் விருப்பமில்லை. ஆனால், அவர்கள் இருவரின் ஆத்திரத்தையும் அரவிந்தன் தனது மௌனத்தாலேயே அடக்கி வைத்திருந்தார். இருப்பினும், அவள் மீண்டும் கொழும்பு செல்வதைப் பற்றி அந்த வீட்டில் யாருமே ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஒருவிதமான கனத்த நிசப்தம் அந்த வீட்டைச் சூழ்ந்திருந்தது.
விடுமுறை முடிந்து சுபா மட்டும் கொழும்பிற்குத் திரும்பிவிட, மேகலா தனது பணிக்கு மருத்துவ விடுமுறை எடுத்துக்கொண்டு ஒரு மாதம் வீட்டிலேயே இருக்க முடிவு செய்தாள்.
சுபாவின் மூலம் நடந்தவற்றை அறிந்த நிம்மி, மிகுந்த குற்றவுணர்ச்சியுடன் மகேஸ்வரியின் அலைபேசிக்கு அழைத்துத் தொடர்பு கொண்டாள். காஞ்சனாவின் வஞ்சகமான பேச்சில் தான் ஏமாற்றப்பட்டு, அறியாமல் உண்மைகளைக் கூறிவிட்டதை விளக்கி, மேகலாவிடம் மன்னிப்புக் கோரினாள். நிம்மியின் பேச்சைக் கேட்ட பின்னரே மகேஸ்வரியின் மனதிலிருந்த இறுக்கம் சற்றே தளர்ந்தது.
ஆனாலும், மகேஸ்வரி எப்போதும் ஏதோ ஒரு வேலையிருப்பது போல மேகலாவைச் சுற்றியே நகர்ந்து கொண்டிருந்தார். தான் ஒவ்வொரு நொடியும் மறைமுகமாகக் கண்காணிக்கப்படுவதை உணர்ந்த மேகலா, அதைத் தடுக்க முடியாத கையாலாகாதத் தனத்துடன் மனது கலங்கி மெளனியாகிப் போனாள்.
இதற்கிடையில், சிவாகூட ஒருமுறை யாழ்ப்பாணம் வந்து அரவிந்தனைப் பார்த்துச் சென்றான். தான் உண்மைகளை மறைத்ததற்காக அரவிந்தனிடம் மன்னிப்புக் கோரியவன், முரளியின் கடுமையான வசவுகளையும் மேகலாவிற்காகப் பொறுமையுடன் சகித்துக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றான்.
கடந்த இரண்டு வாரங்களாக தரிந்துவினால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நிம்மி மற்றும் சுபா மூலமாக அவன் அறிந்த செய்திகள் ஒவ்வொன்றும் அவனது இதயத்தை ஈட்டியாய் துளைத்தன.
மேகலாவின் நடத்தையைப் பற்றி காஞ்சனா ஊர் அறியக் கீழ்த்தரமாகப் பேசியதை அறிந்தபோது, அவனுக்குக் கட்டுக்கடங்காத ஆத்திரம் பொங்கியது. எல்லாவற்றிற்கும் மேலாக, தனது மென்மையான வெண்மேகம் அவளது தாயின் கரங்களாலேயே அடி வாங்கியிருக்கிறாள் என்பதை அவனால் தாங்கவே முடியவில்லை.
தன் காதலி அனுபவிக்கும் ஒவ்வொரு துளி வலிக்கும் தான் ஏதோ ஒரு வகையில் காரணமாகிவிட்டோமோ என்ற குற்றவுணர்ச்சி அவனை வாட்டியது.
சுபா மற்றும் சிவாவின் பலத்த எச்சரிக்கைகளையும் மீறி, மேகலாவின் குடும்பத்தினரை சந்திக்க துணிந்து புறப்பட்டுவிட்டான்.
"தரிந்து... இப்போதைக்கு நீங்க அங்க போகாம இருக்கிறது தான் நல்லது..." என்று சிவா தடுத்தான்.
"ஓம் தரிந்து... எனக்கென்னவோ பயமா இருக்கு... முரளி அண்ணா பயங்கர கோபத்தில் இருக்கிறார்... உங்களை ஏதும் சொல்லிப்போடுவார்... அரவிந்தன் அப்பா அவளுக்கு பாசத்தால் வேலி போட்டிருக்கிறார்... ஈசுமாவோ அவளைக் கண்கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டு இருக்கிறா.. அவேயளை எல்லாம் மீறி மேகி உங்கட்ட நிச்சயமா வர மாட்டா... ப்ளீஸ்... கொஞ்சம் பொறுமையா இருங்கோ..." என்று சுபாவும் அவனைத் தடுக்க முயன்றாள்.
ஆனால் தரிந்து தனது முடிவில் உறுதியாக இருந்தான்.
"இல்லைம்மா... நான் போகவே வேணும்... நான் போய் அவேயளோட நேரடியாக் கதைக்கோணும்... இப்படி ஓடி ஒளியேலாது... ரெண்டு பேரும் தானே லவ் பண்ணினனாங்க… தண்டனை மட்டும் அவவுக்கா… அவளுக்காக நான் அவே என்ன சொன்னாலும், செஞ்சாலும் தாங்குவன்..." என்று தீர்க்கமாகக் கூறிவிட்டுப் புறப்பட்டான்.
இந்த முறை எதையும் மறைக்காமல் சுபா அனைத்து விவரங்களையும் சரவணனிடம் கூறிவிட்டாள்.
நிலைமை மேலும் விபரீதமாகாமல் இருக்கவும், ஒருவேளை மோதல் வெடித்தால் அதைச் சமாளிக்கவும் சரவணனும் உடனடியாக யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டான்.
மேகலா தனது அறையில், ஒரு கோட்டோவியம் போலச் சலனமின்றி அமர்ந்திருந்தாள். ஜன்னல் வழியாக விரிந்திருந்த அந்தப் பரந்த வானத்தை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள். உடைந்த சிறகுகளின் வலியில் தத்தளிக்கும் பறவையைப் போல, அவள் உள்ளுக்குள் சிதைந்து கொண்டிருந்தாள்.
அந்த நேரத்தில், பதற்றத்துடன் ஓடிவந்த மகேஸ்வரி, அவளது அறைக் கதவை வெளிப்புறமாகப் பூட்டினார்.
அதிர்ச்சியுடன் எழுந்த மேகலா,
"அம்மா... என்னம்மா இது...? கதவை திறவுங்கோ..." என்று கதவைத் தட்டியபடி கெஞ்சிக் கொண்டிருக்கும்போதே,
வீட்டின் விறாந்தையில் சலசலப்பான குரல்கள் கேட்கத் தொடங்கின. முரளியின் ஆக்ரோஷமான சத்தத்திற்கு நடுவே, தரிந்துவின் தவிப்பான குரலும் மெல்லியதாகக் கேட்டது. ஒரு கணம் மேகலாவிற்கு உலகம் தட்டாமாலை சுற்றியது.
"தரிந்து..."
என்று அவளது கண்கள் விரிய, நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கதவோரம் அப்படியே சரிந்து விம்மினாள்.
வெளியே, தரிந்துவை வாசற்படியைக் கூட மிதிக்க முரளி அனுமதிக்கவில்லை.
தரிந்து வந்து நின்றதும், அவன் யாரென்று புரியாமல் மகேஸ்வரியும் முரளியும் புருவம் சுருக்கிப் பார்த்தனர். ஆனால், தரிந்து தன்னை அறிமுகம் செய்த அதே கணத்தில், முரளியின் முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடியது.
"வெளியே போ..."
என்று ஒற்றைச் சொல்லில் இடி முழக்கமிட்டு, கதவைச் சாத்த எத்தனித்தான் முரளி.
தரிந்து அதைத் தடுத்துக்கொண்டு,
"தயவுசெய்து நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேளுங்கோ... நான் உங்க எல்லாரிட்டயும் மன்னிப்பு வேண்டத்தான் வந்திருக்கிறனான்..."
என்று சரளமான தமிழில் பேசினான்.
ஒரு சிங்கள இளைஞன் இவ்வளவு தெளிவாகத் தமிழில் பேசுவதைக் கண்டு அவர்கள் ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் உறைந்தாலும், அவனை உள்ளே அனுமதிக்க அவர்களுக்கு மனம் வரவில்லை.
"நீங்க நினைக்கிற போல சுது... ம்க்ஹும்... மேகலா மேல எந்த பிழையுமில்ல... நாங்க வேறு மாதிரி எண்ணத்தோட பழகவுமில்லை... யாரோ ஒரு பெட்டை சொன்னாள் எண்டு நீங்க அவளை அடிச்சிருக்கக் கூடாது..."
என்று உணர்வுபூர்வமாகப் பேசினான் தரிந்து.
காஞ்சனாவின் கொலை முயற்சியிலிருந்து மேகலாவைத் தான் தான் காப்பாற்றினேன் என்பதைக் கூறி, ஒரு 'நன்றிக்கடன்' என்ற பெயரில் அவர்களைத் தன்பால் ஈர்க்க அவன் விரும்பவில்லை. அத்தகையதொரு நன்றிக்கடனின் அடிப்படையில் தனக்குக் கிடைக்கும் அங்கீகாரம் கசப்பானது என்று அவன் கருதினான். அதனால், காஞ்சனா மேகலாவிற்கு இழைத்த அந்தத் துரோகங்களையும் வஞ்சகங்களையும் எவருக்கும் தெரியாமல் தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டான்.
தன் பிள்ளை மீது அவர்களுக்கு ஆழமான நம்பிக்கை இருந்தாலும், சம்பந்தப்பட்டவனே நேரில் வந்து மேகலாவிற்காகப் பரிந்து பேசும்போது, அவர்களுக்குள் ஒரு மெல்லிய ஆறுதல் எழாமல் இல்லை.
சற்று நிதானித்துக்கொண்ட அரவிந்தன், முரளியின் கையைப் பிடித்து தன் பக்கம் திருப்பி,
"அவரை உள்ள வரச்சொல்லு... வெளிய நிண்டு சத்தம் போட்டு, மறுக்காவும் எங்களின்ர மரியாதையை கெடுக்க வேணாம்... முதலும் கடைசியுமா எல்லாத்தையும் கதைச்சு, இஞ்சயே எல்லாத்தையும் முடிச்சுப்போட்டு அனுப்புவம்..."
என்று கூறிக்கொண்டிருக்கும்போதே சரவணனும் அங்கே வந்து சேர்ந்தான்.
"முரளி... அவனை உள்ள விடு... கதைச்சுட்டுப் போயிடுவான்.."
என்று சரவணன் கூற, அவனை அந்தநேரம் அங்கே எதிர்ப்பார்க்காத முரளிக்கு பலவிடயங்கள் புரிய ஆரம்பித்தன.
‘துரோகி’
என்று குற்றம் சாட்டும் விதமாக, சரவணனை உக்கிரமாக ஏறிட்டான்.
உள்ளே வந்த தரிந்து, சுற்றும் முற்றும் பார்த்து மேகலாவைத் தேடினான். அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியாமல் அவனது கண்கள் தவித்தன. அவள் கண்ணில் படாதது அவனுக்கு ஒரு பெரும் வலியைத் தர, அந்த வேதனையை மறைத்துக்கொண்டு அரவிந்தனை ஏறிட்டான்.
"எப்படி இருக்கு இப்ப உங்களுக்கு...?"
என்று கம்மிய குரலில் கேட்டான்.
அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல்,
"வந்த விசயத்தை சொல்லுங்கோ..." என்று அரவிந்தன் நேரடியாக விடயத்திற்கு வந்தார்.
வந்ததிலிருந்து தரிந்துவின் பார்வைகள் எதைத் தேடுகின்றன என்பது, அங்கிருந்த அரவிந்தனுக்குப் புரியாமலில்லை.
அங்கே தரிந்துவை அமர வைத்துப் பேசிக் கொண்டிருப்பதே முரளிக்குத் துளியும் பிடிக்கவில்லை. அவன் ஆத்திரத்தில் எதையாவது செய்துவிடுவான் என்று பயந்த சரவணன், அவனை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துச் சென்றான்.
"விடுடா என்ன... சிநேகிதத் துரோகி.."
என்று சீறினான் முரளி.
"வாயிலயே ஒண்டு போட்டன் எண்டா..." என்று அவனை முறைத்தபடி வெளியே அழைத்துச் சென்ற சரவணன், அங்கு நடந்தவற்றையும் தரிந்து ஏன் வந்தான் என்பதையும் விளக்கினான்.
"அந்த சுபாவும் சிவாவும் இன்னும் மாமா வேலை பார்க்கிறதை விடேல்லையா...??"
என்று கோபமாகக் கேட்டான் முரளி.
"மாமா வேலையும் பார்க்கேல்ல மாமி வேலையும் பார்க்கேல்ல... அவன் வந்து கேட்டிருக்கிறான்... இவே சொல்லிருக்கினம்... இஞ்ச வரவேண்டாம் எண்டு தான் தடுத்திருக்கிறாங்க... இவன் கேட்காம வந்திருக்கிறான்... கதைச்சுப்போட்டு போகட்டும்... நீ கொஞ்சம் சில் ஆகு..."
என்று அவனை விடாமல் சமாதானப்படுத்தி வெளியே அழைத்துச் சென்றான் சரவணன்.
ஒருபுறம் தாங்கள் கடந்துவந்த வலிகள், மறுபுறம் தன் மகளின் வாழ்க்கை எனப் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் அமர்ந்திருந்த அரவிந்தனிடம், தரிந்து தனது இதயத்தைத் திறந்து பேசிக்கொண்டிருந்தான்.
"மாமா... நான் மேகலாவை உண்மையா நேசிக்கிறன்... அவள் இல்லாத ஒரு வாழ்க்கைய என்னால நினைச்சுக் கூட பார்க்கேலாது... எங்களைச் சுத்தி நடந்த கசப்பான சம்பவங்களுக்கு நான் பொறுப்பேற்கிறன்.... மேகலா மேல எந்த பிழையும் இல்ல... அவா என்னை முதல்ல திரும்பி கூட பார்க்கேல்ல... ஒரு மனுசனா கூட மதிக்கேல்ல... என்ன விட்டு விலகி விலகி தான் போனவள்... ஆனால் நான் தான் விடாமல் முயற்சி செஞ்சு அவவையும் காதலிக்க வெச்சனான்... பிறகு உங்களுக்கும், முரளி மச்சானுக்கும் நடந்த கொடுமைகளை சொல்லி அழுதாள்... எங்கட ஆக்களிலயும் நல்லவர்கள் இருக்கினம்... உயிர்களை, உறவுகளை, உடமைகளை இழந்த தமிழாக்கள் எல்லாருக்காகவும் கண்ணீர் வடிச்சவங்க நிறைய பேர் இருக்கிறாங்க... அவங்களில் ஒருத்தன் தான் நானும்... இந்த அநீதிகள்ல எனக்கு எந்தவித சம்மந்தமும் இல்லையெண்டாலும்... என்ர இனத்தினால உங்களுக்கு நடந்த அத்தனை கொடுமைகளுக்கும் நான் மனசார மன்னிப்பு வேண்டுறன்... நடந்த எதையும் மாத்த ஏலாது, நீங்க இழந்தது எதையும் என்னால மீட்டுத் தர ஏலாது எண்டு எனக்குத் தெரியும்... நான் கேட்குற இந்த மன்னிப்பு நீங்க பட்ட காயங்களுக்கு ஒருபோதும் ஈடாகாது எண்டும் எனக்குத் தெரியும்... ஆனாலும் என்னை மன்னிச்சிக் கொள்ளுங்க மாமா..." என்று கைகூப்பித் தன் இதயத்தின் பாரத்தை இறக்கி வைத்தான்.
சற்று மௌனத்திற்குப் பிறகு, தழுதழுத்த குரலில் தொடர்ந்தான்,
"உங்க எல்லரின்ர சம்மதத்தோடயும் ஆசீர்வாதத்தோடயும் மட்டும்தான் நான் மேகலாவின்ர கையைப் பிடிப்பன்... உங்களுக்கோ உங்களின்ர குடும்பத்திற்கோ எந்தச் சூழல்லயும் சிறு தலைகுனிவைக் கூட நான் ஏற்படுத்த மாட்டன்... அவளை நான் என்ர உசுருக்கும் மேலாக வெச்சு பார்த்துக்கொள்ளுவன் மாமா... அவளை எனக்குக் கட்டித்தாங்கோ.."
என்று ஒரு குழந்தையின் தவிப்போடு மன்றாடினான் தரிந்து.
அரவிந்தன் நீண்ட நேரம் மௌனமாக இருந்தார். அந்த மௌனம் தரிந்துவின் இதயத்துடிப்பை அதிகமாக்கியது. பின் நிதானமாகத் தலை நிமிர்ந்தவர், ஒரு பெருமூச்சுடன் பேசத் தொடங்கினார்.
“தம்பி… உங்க மனசின்ர ஆழம் எனக்கு விளங்குது... நான் காதலுக்கு எதிரியும் இல்ல... மாற்றுமத திருமணத்திற்கு எதிரானவனும் இல்ல... எனக்கு உங்க சனத்தின்ர மேல கோபமும் இல்ல... ஆனால்..." என்று கூறிச் சற்று நிறுத்தினார் அரவிந்தன்.
அவரது கண்கள் கடந்த காலத்தின் இருண்ட பக்கங்களைத் தேடிச் சென்றன.
"நாங்க கடந்து வந்த பாதையும், சுமந்து நிக்கிற காயங்களும் உங்கட கற்பனைக்கு எட்டாதவை... எங்களுக்கு உங்கட சீருடையை பார்க்கும் போதெல்லாம் பயமா இருக்கு... உடம்பெல்லாம் நடுங்குது... நெஞ்செல்லாம் பாரமா இருக்கு... சிங்கள ராணுவம் எங்களுக்கு செஞ்ச கொடுமைகளை வாயால சொல்ல ஏலாது... சின்னச்சிரிய பெட்டைகள் எண்டு கூட பார்க்காமல் கசக்கி போட்டவே... சந்தேகத்தின்ர பேருல எண்டு பெடியன்களை பிடிச்சிட்டு போய் முகாமில் வெச்சே அடிச்சுக் கொன்னு புதைச்சிட்டினம்... என்ர மகன்... முரளி... தொன்னூற்று ஒன்பதுல தப்பி வந்தவன்..."
என்று மேற்கொண்டு பேச முடியாமல் குலுங்கி குலுங்கி அழுதார்.
"மாமா..." என்று பதறியபடி தரிந்து அவருக்கு அருகில் செல்ல முயன்றான்.
வேண்டாம் என்பது போலக் கையை உயர்த்தி அவனைத் தடுத்தவர்,
"இப்படி நிறைய... என்ர குடும்பத்தில மட்டும் பத்து பேர்கிட்ட பலி கொடுத்திட்டனாங்க... உசுர கையில பிடிச்சிட்டு நாங்க ஓடாத இடமில்ல.. ஒளியாத பங்கர் இல்ல... அதனால, தயவுசெஞ்சு இந்த எண்ணத்தை இஞ்சயே விட்டுவிடுங்கோ.... இது நடக்காது..." என்று மிக நிதானமாக, ஆணித்தரமாக மறுத்துவிட்டார்.
"மாமா... நான்..."
என்று தரிந்து மீண்டும் ஏதோ சொல்ல முயன்றான். அவனது குரலில் அத்தனை ஏக்கம் நிறைந்திருந்தது.
"வேணாம் தம்பி... இதுக்கு மேல என்னை பேச வைக்காதீங்கோ... நீங்க கொண்டு வந்த இந்த சாமான்களையும் கையோடவே எடுத்துட்டுப் போங்கோ..."
என்றார் அரவிந்தன், தரிந்து கொண்டு வந்திருந்த இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்களைச் சுட்டிக்காட்டி.
தரிந்துவின் இதயம் சுக்குநூறாக உடைந்தது. தான் கொண்டு வந்த அன்பின் அடையாளங்கள் கூடத் தீண்டத்தகாதவையாக ஒதுக்கப்பட்டதை அவனால் தாங்க முடியவில்லை. ஒரு விரக்தியான புன்னகையை உதிர்த்தான்.
"இந்தச் சாமான்கள் உங்கள் வீட்டிற்குள் நுழையவே தகுதி இல்லை எண்டு நீங்க நினைச்சா, இதைக் குப்பையில நீங்களே போட்டுவிடுங்கோ... என்ர காதலைப் போல..."
என்று கசப்புடன் கூறிவிட்டு, பாரமான இதயத்துடனும் கலங்கிய கண்களுடனும் அந்த வீட்டை விட்டு வெளியேறினான் தரிந்து.
அறையினுள்ளே அடைக்கப்பட்டிருந்த மேகலா, தந்தைக்கும் தரிந்துவுக்கும் இடையில் நடந்த உரையாடல் அனைத்தையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள்.
தனது இதயம் ஒருபுறம், தனது குடும்பத்தின் பிடிவாதம் மறுபுறம் என இரண்டிற்கும் நடுவே சிக்கியவள், இருதலைக் கொள்ளி எறும்பாய் துடித்தாள். அவளது காதலின் தோல்வி, அவளது கண்களில் கண்ணீராக ஆறாய்ப் பெருகியது. வாயைப் பொத்திக்கொண்டு தரையில் அமர்ந்து விம்மியவளுக்கு, தன்னைக் காப்பாற்றியவன் இன்று தனக்காக அவமானப்பட்டு வெளியேறுவதைத் தடுக்க முடியவில்லையே என்ற குற்றவுணர்ச்சி நெஞ்சை நெரித்தது. வாயைப் பொத்திக்கொண்டு தரையில் அமர்ந்தவள், சத்தமில்லாமல் உள்ளுக்குள் உடைந்து கொண்டிருந்தாள்.
வெளியேறிச் சென்ற தரிந்துவின் கண்களில் தெரிந்த அந்த வெற்றிடம், அவனது உலகம் இருண்டு போனதை உணர்த்தியது.
இரு துருவங்களாகப் பிரிக்கப்பட்ட அவர்கள் இருவராலும், ஒருவரையொருவர் பிரிந்து வாடும் அந்தத் தோல்வியைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
பத்து நாள்கள் கழித்து... கண்களில் நீர் கோர்க்க, தரிந்துவைப் பார்த்தவாறே அவனது காரில் அமர்ந்திருந்தாள் மேகலா...

Author: Sathya Karunya
Article Title: மேகம் 22
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.