மேகம் 4

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sathya Karunya

Well-known member
May 5, 2026
130
281
63
Sri Lanka 🇱🇰
MTN 4

அரவிந்தன் ஒரு அரசாங்க உத்தியோகத்தர். தன் உறவுகள் பலரை போரில் பரிதாபகரமாக காவு கொடுத்ததோடு தனது ஒரு காலையும் இழந்து செயற்கைக் காலின் துணையுடன் மீதி வாழ்க்கையைத் தாங்கி நிற்கிறவர். தனது சம்பளத்தை மட்டுமே நம்பியிராமல் தன் வீட்டுக்காணியில் மரங்கள் நட்டு, பயிரிட்டு, கால்நடைகள் வளர்த்து, தன் குடும்பத்தின் வாழ்வாதாரத்தைத் தானே கட்டியெழுப்பியவர். பிள்ளைகள் வளர்ந்து தொழிலுக்காக வெளியிறங்கிய பொழுதும் தன் கடமைகளை நிறுத்தாதவர். பிள்ளைகளாகவே இருந்தாலும் தன் மனைவி யாரிடமும் கையேந்தக் கூடாது என்று நினைப்பவர்.

அவருக்கு ஏற்ற அமைதியான துணை மகேஸ்வரி. வீடு, கணவன், பிள்ளைகள், அதுவே அவரது உலகம். பூமரங்கள், கனிமரங்கள் நட்டு, கணவரின் உழைப்புக்கு தோள் கொடுப்பவர். மூத்தவன் முரளி யாழ் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நிபுணராக பணியாற்றுகிறான். வார இறுதியில் அனைவரும் வீட்டில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது அந்த வீட்டின் எழுதப்படாத சட்டம்.

அன்றும் அப்படித்தான் உடுவிலின் அதிகாலை குளிரில், தேநீரை பருகி முடித்த கையோடு, வராந்தாவில் அமர்ந்து நாட்டு நடப்புகளைப் பற்றி வாசித்துக் கொண்டிருந்தார் அரவிந்தன். அவரின் பார்வை ஒரு குறிப்பிட்ட செய்தியில் பதிந்து நின்றது. அவரது புருவம் மெதுவாக சுருங்கியது. மீண்டும் அந்தப் பக்கத்தைக் கவனமாகப் பார்த்தார். அதற்குக் காரணம், அந்தச் செய்தியில் கூறப்பட்ட விடயமும், அதில் பிரசுரிக்கப்பட்டிருந்த அந்தப் புகைப்படமும், அதன் திகதியும் தான். அது, கடந்த ஐந்து வருடங்களாக அந்த வீட்டில் உச்சரிக்கத் தடை செய்யப்பட்ட ஒரு பெயரின் முகம்.

வான்படைச் சீருடையில், தோள்பட்டையில் மூன்று பட்டைகளுடன் கம்பீரமாகச் சிரித்துக் கொண்டிருந்த தரிந்து சேனநாயக்கவின் புகைப்படத்துடன் ‘சிங்கப்பூர் வான்வழிப் பாதுகாப்பு மாநாட்டில் இலங்கை வான்படை விங் கமாண்டரின் சாதனைப் பேச்சு’ என்ற செய்தியை தாங்கி இருந்தது அந்தப் பக்கம்.

அரவிந்தனின் விரல்கள் லேசாக நடுங்கியது. தேநீர்க் கோப்பையை மெதுவாக மேசையில் வைத்தவர், தன் வலது காலின் முட்டிக்குக் கீழே இருந்த அந்தச் செயற்கை அவயவத்தைத் தடவிக்கொண்டார். அந்த இரும்புக்காலுக்கும் அவன் அணிந்திருந்த அதே சீருடைக்கும் பின்னால் இருந்த ஒரு ரத்த சரித்திரத்தை உலகம் மறந்தாலும் அவரால் மறக்க முடியவில்லை.

காலையில் நடைபயிற்சிக்காக வெளியே வந்த முரளி, தந்தையின் உறைந்த பார்வையைக் கண்டு,
"என்னப்பா... நீங்க உத்துப் பார்க்குற அளவுக்கு பேப்பர்ல என்ன அவ்வளவு பெரிய விசேஷம்?" என்று கேட்டான்.

அரவிந்தன் மௌனமாகப் பத்திரிகையை நீட்டினார். அதைப் பார்த்த அடுத்த நொடி முரளியின் முகம் சிவந்தது.

"இவன்... இந்த விசரன எதுக்கப்பா பார்க்குறனீங்க..? ஐயா பெரிய ஒபிசர் ஆகிட்டார் போல.. விங் கொமாண்டர் எண்டு போட்டு இருக்கு. இவனெல்லாம் ஒரு ஆள் என்டு நீங்க எதுக்கு ஒருமாதிரி இருக்கிறீங்க.." கண்களில் வெறுப்பு மின்னக் கேட்டான்.

பத்தொன்பது வயதில் இராணுவக் காவலால் இழுத்துச் செல்லப்பட்டு, சித்திரவதைக் கூடங்களின் இருளைக் கண்ணால் பார்த்துவிட்டு வந்தவனுக்கு இன்றும் சீருடை அணிந்தவர்களைப் பார்த்தால் அவனது உடல் தன்னிச்சையாக நடுங்கும், அல்லது ஆத்திரத்தில் கொதிக்கும்.

அரவிந்தன் ஒரு பெருமூச்சு விட்டார்.
"அதை ஒருக்கா வாசி... இடம் நேரம் காலம் எல்லாம்.." என்று அவன் கையில் பத்திரிகையை கொடுத்தார்.

"சிங்கப்பூர்..." என்று தொடராக அனைத்து விபரங்களையும் வாசித்தவன், சடாரென தலையை நிமிர்த்தினான்.

“அப்படியென்டா… மேகலா டியூட்டி போன அதே பிளைட்டில அவனும் போனவனோ.."

"சரியாத் தெரியேல்ல.. அப்படி நடந்திருக்கக் கூடாது எண்டு வேண்டுறன்.." என்று குரல் பிசிர் தட்டச் சொன்னார்.

இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே அங்கு வந்த மகேஸ்வரி, மெதுவான குரலில்,

" நீங்க ரெண்டு பேரும் கவலைப் படுற அளவுக்கு எல்லாம் ஒண்டும் இருக்காது அப்பு... அப்படி ஏதும் எண்டால் அவள் எங்கட்ட சொல்லிருப்பாள் தானே.." தாயுள்ளம் தன் பிள்ளையை தவறாக எண்ணவில்லை.

முரளி கசப்பாகச் சிரித்தான்,
"உங்கட மகள் தானே... அவள் ஒரு அமுசடக்கி... ரெண்டு வருசமா ஒரு சிங்களவனை காதலிச்சதை மறைச்சவள் தானே அவள்.. இதையும் அப்படித் தான் மறைச்சிருப்பாள்.."

"ஐயோ அப்படி சொல்லாதேய்யா... அஞ்சு வருசமா அவளை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறனாங்க... எங்களிட்ட வாக்களிச்சது போல தானே இருக்கிறாள்." என்றார் கண்ணீர் குரலில்.

"ப்ச்... அம்மா... இப்ப எதுக்கு டேமை திறக்கிறனீங்க... இப்ப சும்மா இருந்தாலும், அப்ப அவள் செஞ்சது இல்லையெண்டு ஆகிடாதெல்லோ... இருங்கோ.. ஒருக்கா கூகுளில் செக் பண்ணி பார்க்கிறனான்.."

என்றுவிட்டு தேடுதளத்தில் குறித்த தினத்தில் புறப்பட்ட விமானங்களின் பட்டியலைப் பார்த்தான். மேகலாவின் துரதிஷ்டவசத்துக்கு, அன்று இலங்கையில் இருந்து மேகலா பயணித்த விமானம் மட்டுமே சிங்கப்பூருக்குச் சென்றிருந்தது. அவனின் முகமாற்றமே சொல்லியது என்ன நடந்திருக்கும் என்பதை.

"என்னவோ சொன்னனீங்க... என்ர மகள் அப்படி இப்படி எண்டு... இப்ப பாருங்கோ... ரெண்டு பேரும் ஒண்டா தான் ஜோடி போட்டு போயிருக்கினம்.. திரும்பவும் ஏமாத்திப்போட்டாள்... வரட்டும் அவள்... காலை வெட்டிப் போடுறன்.."
என்று எகிறிக் குதித்தான்.

மகேஸ்வரியோ அதிர்ந்த குரலில், "என்ன தம்பி கதை இது.. வெட்டுவன் கொத்துவன் எண்டு... முதலில் அவள் வரட்டும். இண்டைக்கு வாறவள் தானே.. என்ன எண்டு விசாரிப்பம்.. எங்கட காலத்துக்கு பிறகு நீங்க தானே அப்பு எல்லாம் அவளுக்கு... இப்படி நீயே கதைச்சால்..."
என்று கண்ணீர் விட்டார்.

"அப்போ காலத்துக்கும் அவளை மேகலா அரவிந்தனா வெச்சு பூசை செய்யிற எண்ணமோ..??? முதல்ல அவளுக்கு ஒரு கால் கட்டு போடோணும்... இனிமேல் விடுறேல்ல அவளை..."
என்றான் கோபக்குரலில்.

அரவிந்தனின் முகம் இறுக,
"தம்பி சொல்லுறதில என்ன பிழை இருக்கு ஈஸ்வரி...? என்னவா இருந்தாலும் அவள் எங்களிட்ட சொல்லிருக்கோணுமா இல்லையா..? இனிமேலும் என்ர மகளாவே அவாவை வெச்சிருக்க எனக்கும் விருப்பமில்ல.. இண்டைக்கு ஒரு முடிவு கட்டுவோம்... நீ வாயை திறக்கவே கூடாது சொல்லிப்போட்டன்... இத்தனை நாளும் உன்ர பேச்சைக் கேட்டுத்தான் நான் சும்மா விட்டிருந்தன். இத்தனை வருசம் காணும் அவா மனசு மாறி வர..."
என்றுவிட்டு போய் இருக்கையில் அமர்ந்தார்.

"முதல்ல நீங்க ரெண்டுபேரும் அவா சொல்லேல்ல எண்டு சொல்லுறத நிப்பாட்டுங்கோ.. அவர் அந்த நாளே தான் போகோணுமா... அதுக்கு முந்தின நாள் போயிருக்கலாம் தானே.. நீங்க அவா போன நாளை மட்டும் செக் பண்ணிப் போட்டு ஏசிட்டு இருக்கிறீங்க... இன்னும் கொஞ்ச நேரத்தில அவா வந்திருவா... ஆற அமர விசாரிங்கோ..."

முரளியும் தாயை ஒரு பார்வை பார்த்துவிட்டு நடைபயிற்சியை மறந்தவனாக, அறையினுள் சென்று படாரென கதவை சாற்றினான்.

யாருக்காக பார்க்க என்று யோசித்த மகேஸ்வரியோ,
"நீ என்னவோ பிளான் போட்டுட்டாய்... அதை நல்லபடியா யாரின்ர மனசும் கோணாம நடத்திக்கொடு முருகா.." என்று நல்லூர் கந்தனை வேண்டிவிட்டு, கட கடவென காலையுணவை தயாரித்து முடித்துவிட்டு வெளியே வரவும், மேகலா கேட்டை திறந்துகொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது.

வந்ததும் வராததுமாக தமையன் நிற்க வைத்து கேள்வி கேட்க, பயத்தில் மேகலாவின் உடல் நடுங்கத் தொடங்கியது.

"அண்...ணா... அ..து வ..ந்து... நான்... வேணுமெண்டு... " என்று தலையைக் குனிந்தவாறே திணற,

"தம்பி என்னதிது... விசாரணைக் கைதியை கேள்வி கேட்குற மாதிரி... முதல்ல அவாவை உள்ளே வந்து கொஞ்சம் இளைப்பாற விடுங்கோ. பிறகு உங்கட விசாரணையை ஆரம்பிங்கோ. இரவிரவா ரயிலில் தூங்காம வந்திருக்கிறா." என்று முரளியிடம் ஆரம்பித்து, "காலைச் சாப்பாடும் செய்து முடிச்சிட்டன், போய் கை கால் அலம்பிப் போட்டு வாங்கோ மகள்" என்று மேகலாவிடம் முடித்தார்.

மகனின் முறைப்பைப் புறந்தள்ளிவிட்டு மேகலாவை கையோடு அழைத்துச் சென்று அறையில் விட்டுவிட்டு வந்தார் மகேஸ்வரி.

"அம்மா...!!!" என்று அவன் உறும,

"நீங்க கதைக்கப் போற எதுக்கும் நான் இடையில வந்து ஒண்டுமே கதைக்க மாட்டன். உங்க ரெண்டுபேரின்ர முடிவு தான் என்ரயும்." என்று அரவிந்தன், முரளி இருவரையும் பார்த்துக் கூறி,

"ஆனால் அதுக்கு முதல் ஒரு தாயா நான் அவாவை கவனிக்கோணும். நாடு நாடா அலைஞ்சுப் போட்டு பிள்ளை களைச்சுப் போய் வந்திருக்கிறா. பார்த்தனீங்க தானே நாங்க முகம் திருப்பேக்க, அவள் பேயறைஞ்சுப் போய் நிண்ட மாதிரிய. எங்கள விட்டா அவாக்கு ஆர் இருக்கிறா சொல்லுங்க... எங்கள விட்டு அவா எங்க போவா??? இப்பவும் சொல்லுறன், என்ர மகள் தப்பு செய்ய மாட்டா. முதல்ல என்ன ஏது எண்டு விசாரிங்கோ..."

"இன்னும் என்ன தப்பு செய்ய மாட்டா எண்டு கொடி பிடிக்கிறீங்க அம்மா... பார்த்தனீங்க தானே அவா திக்கி திணறியத... அவளிட்ட உண்மை இருந்தா கண்ணை பார்த்து நேரா சொல்லிருப்பாலெல்லா..." என்று பல்லைக் கடித்தான் முரளி.

"அவா போன பிளைட்டில் தான் அந்த பெடியனும் போனான் எண்டாலும், அதை அவா மறைச்சிருக்கிறா எண்டால் ஏதும் காரணம் இருக்கும். மெதுவா கேட்டு விசாரிங்கோ.. கோவப்பட்டு ஒண்டும் ஆகப்போறேல்ல... அவா இன்னுமின்னும் எங்களை விட்டு தூரமாத்தான் போவா... காரியம் பெருசா வீரியம் பெருசா எண்டு யோசிங்கோ... அவ்வளவு தான் நான் சொல்லுவன்.." என்றுவிட்டு சாப்பாட்டை எடுத்து வைக்க சமையலறைக்குள் சென்றார்.

அறைக்குள்ளே வந்த மேகலாவின் நிலையோ பொறியில் மாட்டிய எலியின் நிலையில் இருந்தது. முகமெல்லாம் முத்து முத்தாய் வியர்த்தது. அவனைக் கண்டது ஒரு அதிர்ச்சி என்றால், அது தன் வீட்டினருக்கு தெரிந்தது பேரதிர்ச்சி. அப்பா விட்டாலும் அண்ணன் சும்மா விட மாட்டான் என்று அவளுக்கு தெரிந்தது. பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், சுபாஷினியின் எண்ணுக்கு அழைத்தாள். அழைப்பு உடனே எடுக்கப்பட்ட மறுமுனையில்,

"போய் சேர்ந்துட்டியாடி... உன்ர கோலுக்காக தான் வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தனான். இவ்வளவு நேரமா நீ வீட்ட போக..." என்று பேசிக்கொண்டே போக,

"சு... சுபா..." என்று விம்மலுடன் இடைமறித்தாள் மேகலா.

"மேகி... என்னடி... ஏனடி அழுறாய்..??"

பதில் சொல்லாமல் மேகலா கண்ணீர் வடிக்க,

"அடியேய்... எனக்கு விசர் ஏத்தாம என்ன எண்டு சொல்லடி... நான் என்ன ஞானியா.. உன்ர கண்ணீரில் காரணம் கண்டுபிடிக்க..."

"அவர் எங்கட பிளைட்டில வந்தது வீட்டில தெரிஞ்சிட்டு டி..."

"எப்படியடி... ஆர் சொன்னது..??? சான்ஸே இல்லையே..." என்று சுபாஷினி குழம்பினாள்.

"அது... பேப்பரில அவரின்ர படத்தோட போட்டிருக்கினம். அவர் சிங்கப்பூருக்கு போனது பத்தியெல்லாம்... அண்ணா கோபமா கேட்டாங்க"

"உன்ர முசுட்டு அண்ணன் கோபப்படாட்டி தான் அதிசயம்... அவர் சிங்கப்பூர் போனதுக்கும் நாங்க போனதுக்கும் என்ன சம்பந்தம்..??? அவர் வேற பிளைட்டில் கூட போய் இருக்கலாமெல்லா... முரளியண்ணா என்ன மை வெச்சே பார்த்தவர்..."

"அது தான் எனக்கும் தெரியேல்ல... அவர் பேப்பரை காட்டிக் கேட்டதும் பயந்தே போனனான்..."

"உன்ர நொண்ணன் கேட்டா அவரை நான் பாக்கவே இல்ல... எங்கட பிளைட்டில வரவே இல்ல எண்டு அடிச்சு சொல்லு..."

"இல்லையடி... நான் ஏற்கனவே உளறிக் கொட்டி கிளறி மூடிட்டேன்... அதுமட்டுமில்லாம பொய் சொல்லி இன்னும் பெருசாக்க நான் விரும்பேல்ல டி..."

"இந்த ரணகளத்திலயும் நீ எதுகை மோனையோட கதைக்கிறாய்... அங்க நிக்கிறாயடி நீ.. எல்லாம் சொல்லுறன் எண்டு நீ அந்த மேகம் காகம் கதையெல்லாம் சொல்லிபோடாத... பிறகு உன்ர அண்ணா உன்னை சோகம் ஆக்கிப்போடுவார்.." என்று சூழ்நிலையை இலகுவாக்க முயன்றாள் சுபாஷினி.

"நான் எதுகை மோனையில் கதைக்கிறன் எண்டு சொல்லிப்போட்டு, நீ வெளுத்து வாங்குறாய்..." என்று சன்னமாக சிரித்துவிட்டு,

"சரி வைக்கிறன்... கணக்க நேரத்துக்கு வெளியே போகாம இருந்தா அண்ணா அதுக்கும் ஏதும் சொல்லுவார்..."

"உன்ர அண்ணாவுக்கு சண்டை போட காரணமா தேவை... ஹிட்லருக்கு தம்பியா பிறக்க வேண்டியவர், உன்ர வீட்டுல தப்பி பிறந்திருக்கார்... அவரின்ர வாய்க்கு அவருக்கு ஒரு சிங்களப் பெட்டை தான் மனுசியா வரோணும்... இது என்ர சாபம்..." என்று பொருமினாள் சுபா.

"சும்மா இரடி... அண்ணாவை திட்டேல்ல எண்டா உனக்கு சோறு தண்ணி இறங்காது..."

"பின்ன... அண்டைக்கு என்னை நிற்க வெச்சு என்ன கேள்வியெல்லாம் கேட்டவர்... மறக்கமாட்டனடி... இப்பவும் எங்க பார்த்தாலும் முறைச்சிட்டே போவார்... ஒருநாள் இல்ல ஒருநாள் அவர் கண்ண நோண்டி எடுக்கிறனா இல்லையா எண்டு பார்.."

"அதை அப்ப பார்ப்பம்... இப்ப நான் வைக்கிறன்.. பை.." என்று கோலை கட் செய்துவிட்டு மனம் படபடக்க வெளியே வந்தாள்.

 

Author: Sathya Karunya
Article Title: மேகம் 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
முரளி என்ன பா இது இப்படி????
அவ என்ன அவனே வேணும்னா லவ் பண்ணா....அதா வந்துட்டு....
இப்ப என்ன செய்ய????
அது தான் இப்ப உங்க கூட தானே இருக்கா....
பிடிக்காத கல்யாணம் பண்ணி வெச்சி அவ வாழ்க்கையை தொலைக்க வெச்சிராதீங்க
 
  • Like
Reactions: Sathya Karunya

Sathya Karunya

Well-known member
May 5, 2026
130
281
63
Sri Lanka 🇱🇰
முரளி என்ன பா இது இப்படி????
அவ என்ன அவனே வேணும்னா லவ் பண்ணா....அதா வந்துட்டு....
இப்ப என்ன செய்ய????
அது தான் இப்ப உங்க கூட தானே இருக்கா....
பிடிக்காத கல்யாணம் பண்ணி வெச்சி அவ வாழ்க்கையை தொலைக்க வெச்சிராதீங்க
முரளிக்கு செக் வெச்சிடலாம்...
 
  • Love
Reactions: Gowri Karthikeyan