• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மேகம் 6

STN-116

Member
MTN 6

உயர்தரத்தில் வணிகப் பிரிவில் சிறந்த தேர்ச்சிகளைப் பெற்று, கொழும்பு ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவப் பிரிவிற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தாள் மேகலா. அவளது வீடே கொண்டாட்டத்தில் இருந்தது. அரவிந்தனுக்கு மகளை ஒரு கணக்காளராய் பார்க்கத்தான் ஆசை. ஆனால், எதையுமே அவளிடம் வற்புறுத்தவில்லை. தற்பொழுது, அவர் நினைத்தது போலவே அவளும் சிறந்த பெறுபேறு எடுத்து வணிகத்திற்கு பேர் போன பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்ததும் அளவிலா மகிழ்ச்சி அவர் நெஞ்சத்தில்.

ஆனால், மேகலாவின் எண்ணமோ வேறு மாதிரி இருந்தது. பல்கலைக்கழகச் சுவர்களுக்குள் ஐந்து வருடங்களை முடக்க அவள் தயாராக இல்லை. சுதந்திரப் பறவையாய் வானத்தில் வட்டமிடவேண்டும், விமானத்தில் அமர்ந்து உலகம் முழுக்கப் பயணம் செய்ய வேண்டும் என்பது அவள் சிறுவயதில் இருந்து அவள் மனதில் புதைந்த ஆசைகள். அவளது வாழ்க்கை ஒரு இடத்தில் நின்று விடாது, பல நாடுகள்... பல நகரங்கள்... பல மனிதர்கள்... என்று இவ்வுலகின் பல்வகைத் தன்மைகளை அனுபவிக்க வேண்டும் என்பது அவள் வளர வளர அவள்கூடவே சேர்ந்து வளர்ந்த கனவு. எப்போதாவது உயரத்தில் பறக்கும் விமானங்களின் மெல்லிய இரைச்சல் கேட்கும்போதெல்லாம், அவள் இதயம் அனிச்சையாகத் துடிக்கும்.

அந்த எண்ணத்தில் தான் சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றும், அவள் விஞ்ஞான பிரிவிற்கோ கணிதப் பிரிவிற்கோ விண்ணப்பிக்கவில்லை. மருத்துவமோ, பொறியியலோ கிடைத்துவிட்டால் அவள் கனவு கனவாகவே கரைந்து விடும். அதனாலேயே அவள் வணிகப் பிரிவை தேர்வு செய்தாள். ஏன் எதற்கு என்று கேட்காமலே அவளுக்கான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்தனர் அவள் வீட்டினர்.

அன்றும் வழக்கம் போல ஜன்னல் வழியே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நீல வானத்தின் நடுவே மெதுவாக ஒரு வெள்ளை கோடு வரைந்து சென்ற விமானம் அவள் பார்வையைக் கவர்ந்தது. அது சிறிது சிறிதாக தொலைந்து போனாலும், அவளது பார்வை இன்னும் அதே திசையிலேயே நிலைத்திருந்தது.

“என்னம்மா... அப்படி வானத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறனீங்க... ?”
என்று ஆதூரமாய் தலையைத் தடவினார் மகேஸ்வரி.

“ஒண்டுமில்லமா…”
என்று அவள் அமைதியாகத் திரும்பினாள்.

அதற்கு மாறாக அவளது மனசு அமைதியிழந்து தவித்தது. வீட்டில் அனைவரும் சந்தோஷத்தில் திழைத்திருந்தார்கள். உறவினர்கள், அயலவர்கள் என எல்லோரும் வந்து பாராட்டிவிட்டுச் சென்றார்கள். வந்த அனைவருமே,

“ஜே புர பல்கலைக்கழகம் கிடைச்சிருக்கு… பெரிய விஷயம்!” என்று பெருமையுடன் சொன்னார்கள்.

சற்றுநேரம் கழித்து அரவிந்தன் வீட்டுக்குள் வந்தார். கையில் ஒரு இனிப்பு பெட்டி இருந்தது.

“ஈஸ்வரி… இண்டைக்கு ஒபிஸில எல்லாருக்கும் இனிப்பு குடுத்துப்போட்டு வந்தனான்...” என்றார். அவர் முகம் பூரிப்பில் மலர்ந்திருந்தது.

அவரின் மகிழ்ச்சியில் அவளும் மென்மையாக சிரித்தாள். ஆனால் அது அவள் கண்களை எட்டவில்லை. மகளின் அமைதியான முகத்தை பார்த்துவிட்டு,

“என்னம்மா… முகம் வாடியிருக்கு..?”
என்று மெதுவாகக் கேட்டார்.

“அப்படியெல்லாம் ஒண்டும் இல்லப்பா…” என்றாள். ஆனால் அவள் குரலில் ஒரு தயக்கம் இருந்தது.

அரவிந்தன் அதனைக் கவனித்தார். ஆனால் உடனே எதையும் கேட்கவில்லை. அவளின் தோளில் தட்டி விட்டுச் சென்றார்.

அந்த நேரம் மேகலாவுக்கு சுபாஷினியிடமிருந்து அழைப்பு வந்தது.

"என்னடி... வீட்டில சொல்லிட்டியா...?? நீ சொன்ன பிறகு உன்ன வெச்சுத்தான் நான் என்ர வீட்டுல சம்மதம் வாங்கோணும்..."

"இல்ல சுபா... எப்படி ஆரம்பிக்கிறது எண்டு தெரியேல்லயடி... இஞ்ச எல்லாரும் மிச்சம் சந்தோசமா இருக்கிறவே... அயலட்டை வேற வந்து வாழ்த்திட்டு போனவே... அப்பாவும் அவரின்ர ஒஃபீஸில ஸ்வீட்ஸ் எல்லாம் குடுத்திருக்கிறார்... உடைச்சு சொல்ல என்னால் ஏலாம இருக்கடி... அண்ணா இருந்தாலாவது அவர் மூலமா சொல்லியிருப்பன்.." என்று இழுத்தாள் மேகலா.

"இன்னும் ரெண்டு நாளில் முரளியண்ணா வாரவர் தானே... வந்த பிறகே சொல்லு... எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல... நான் எல்லாம் ஏ லெவல் (Advance Level) பாஸ் பண்ணினதே பெருசு... காசு செலவழிக்காமல் நாடு நாடாய் சுற்றி வித விதமாய் சாப்பிடுவது எண்டால் நான் ஏன் 'நோ' சொல்லப் போறன்..." என்றுவிட்டு போனை வைத்தாள்.

சுபாவிற்கு ஒன்றும் வானத்தில் பறப்பது அத்தனை பெரிய கனவொன்றும் இல்லை. மேகலா என்ன செய்கிறாளோ அதை அப்படியே பிரதிபலிப்பது தான் சிறுவயது முதல் அவள் செய்யும் ஒரே வேலை. பாலர் பாடசாலையில் ஆரம்பித்த நட்பு, சாதாரண தரத்தில் தெரிவு பாடங்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து, உயர்தரத்தில் வணிகப் பிரிவை தெரிவு செய்து, விமானத்தில் பறக்கும் கனவு என்று இன்றுவரை நெருக்கமாகத் தொடர்கிறது.

அடுத்த இரண்டு நாள்களும் அவள் ஒரு பொம்மைப் போலவே நடமாடிக் கொண்டிருந்தாள். தன் விருப்பத்தை எப்படி எத்திவைக்க வேண்டும் என்ற சிந்தனை அவள் உள்ளத்தில் அமைதியாக உருவாகிக் கொண்டிருந்தது. அரவிந்தன் அவளை மெளனமாக கண்காணித்தாலும் அமைதியாகவே கடந்தார். தன்னை விட முரளியிடம் அவள் வெளிப்படையாக பேசுவாள் என்று எண்ணி, அவன் வரும்வரை அவரும் காத்திருந்தார். மகேஸ்வரியிடமும் எதுவும் அவளிடம் கேட்க வேண்டாம் என்று கூறியிருந்ததனால் அவரும் எதுவும் மேகலாவைத் தூண்டித் துருவவில்லை.

தந்தையும் மகளும் எதிர்ப்பார்த்த வார இறுதிநாளும் வந்து சேர்ந்தது. இரண்டு நாள்கள் விடுமுறையில் முரளி உடுவிலுக்கு வந்திருந்தான். அலுப்பு தீர குளித்து, அனைவரையும் குசலம் விசாரித்து, அன்னையின் கைவண்ணத்தில் ஆகாரத்தையும் முடித்தபின் வீட்டு வளவின் தென்னைமர நிழலில் விச்ராந்தியாக அமர்ந்திருந்தனர் நால்வரும்.

“பிறகு மேடம்... இனிமேல் நீங்களும் என்ன மாதிரி கொழும்புவாசி ஆகப்போறீங்க என...” என்று அவளை சீண்டினான்.

அவன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் MBBS படிப்பை முடித்த பிறகு, கொழும்பு அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருக்கிறான்.

“அச்சோ அண்ணா… கேலி பண்ணாதீங்கோ…” என்று அவள் சிணுங்கினாள்.

பெற்றவர்கள் இருவரும் பிள்ளைகளின் உரையாடலைக் கேட்டு ரசித்துக்கொண்டிருந்தனர்.

“சரி சரி… பிறகு என்ன பிளேன்?... எப்ப மாதிரி அங்க வரவேணும்..??"

அந்த கேள்வி அவளை ஒரு கணம் அமைதியாக்கியது.

“அண்ணா…” என்று தந்தையை ஓரக்கண்ணால் பார்த்தவாறே தயக்கமாகக் கூப்பிட்டாள்.

“என்ன?”

ஒரு நொடி அமைதியின் பின் மெதுவாகக் குரல் எழுப்பி,

"உங்கட்ட ஒரு கேள்வி கேக்கலாமா...?”

“என்னட்ட என்ன தயக்கம்... கேளன்...”

“உங்கட கல்விப்பாதை ஒருபக்கம் போகுது... ஆனால், நீங்க காணுற கனவுப்பாதை எதிர்ப்பக்கம் கைக் காட்டுது... நீங்க கல்விப்பாதையை நோக்கி போவீங்களா...? இல்லை அதற்கு துளியும் சம்மந்தமே இல்லாத உங்கட கனவை நோக்கி போவீங்களா..."

முரளி சற்று குழம்பி,
“ஏன் திடீர் எண்டு இப்படி கேக்குறனீ..?” என்றான்.

அரவிந்தனும் மகேஸ்வரியும் குழம்பிப் போய் மேகலாவைப் பார்த்தனர். பெற்றோரின் பார்வையை தவிர்த்துவிட்டு, முரளியின் கேள்விக்கு பதில் சொல்லாமல்,

"ப்ளீஸ் அண்ணா... நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கோ..." என்று கெஞ்சினாள்.

"காணுற கனவு உருப்படியானதாகவும் அதில நாங்க நூறு வீதம் உறுதியாகவும் இருந்தால் கனவுப்பாதையில் தான் போகோணும்... சும்மா உப்புப்பெறாத கனவுகள் இருந்தால் பிடரில ரெண்டு போட்டு கல்விப்பாதைல கொண்டு போய் தள்ளி விடோணும்..." எனவும், மேகலா இலேசான சிரித்தாள்.

"இப்ப என்னத்துக்கு அப்படி கேட்டனீ... அதை ஒருக்கா எனக்குச் சொல்லு... உனக்கு மேனேஜ்மென்ட் படிக்க விருப்பமில்லையா...?" என்று சரியாகக் கணித்துக் கேட்டான்.

"இல்ல அண்ணா... அது வந்து... எனக்கு வேற ஒண்டுல விருப்பம்..." என்று தயங்க,

"கொமர்ஸ் படிச்சிட்டு டொக்டர் எல்லாம் ஆக ஏலாது மா..." என்று நக்கலாக சிரித்தான்.

"இது எனக்கு தெரியாது பாருங்கோ... என்ர கனவுக்கு ஸ்ட்ரீம் எல்லாம் முக்கியமில்ல அண்ணா... உங்களுக்கும் அப்பாவுக்கும் பிடிக்குமோ பிடிக்காதோ எண்டு தான் யோசனையா இருக்கு எனக்கு... அப்பா சொல்லாட்டியும் நான் மேனேஜ்மென்ட் படிச்சு அக்கௌன்ட்டண்ட் ஆகுறது தான் அவரின்ர ஆசை எண்டு எனக்குத் தெரியும்.." என்று தந்தையைப் பார்த்தாள்.

அதுவரை மௌனமாய் இருந்த அரவிந்தன்,
"என்னம்மா... என்ன எண்டு சொன்னா தானே தெரியும்... ரெண்டு நாளா நானும் உங்கள பார்த்துக் கொண்டுதான் இருக்கிறன்... உங்கட அமைதி நீங்க எதையோ உள்ளுக்குள்ள வெச்சு மருகுற மாதிரி இருந்தது... அண்ணா வந்த பிறகு கதைப்பம் எண்டுத்தான் அமைதியா இருந்தனான்.."

"அது வந்துப்பா... எனக்கு எயார்ஹொஸ்டஸ் ஆகத்தான் விருப்பமா இருக்கு... சின்ன வயசில இருந்தே வானத்தில பறக்கிறது எண்டால் அவ்வளவு ஆசை..."

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன் விருப்பத்தைச் சொன்னாள்.

"என்ன... பிளைட்டில சாப்பாடு போடுற வேலையா? அதுக்காகவா இவ்வளவு படிச்சனீங்க...? சும்மா அலட்டாம ஒழுங்கா யூனிவர்சிட்டிக்கு போற வழியைப் பாருங்கோ..." என்றார் உடனே மகேஸ்வரி.

"இல்லையம்மா... அது வெறும் சாப்பாடு போடுற வேலை இல்ல. அது ஒரு கௌரவமான பணி. உலகத்தையே சுற்றிப் பார்க்குற ஒரு வாய்ப்பு… ஒவ்வொரு தடவை விமானத்தை பார்க்கும் போதும், ஒருநாள் நானும் இதில போவன் எண்டு எப்பவுமே நினைப்பன்... அது என்ர கனவு... ப்ளீஸ்... அதை களைச்சுப் போடாதீங்கோ..." என்று கெஞ்சினாள்.

அரவிந்தனும் முரளியும் அவளை அமைதியாகப் பார்த்தனர். அவ்வீட்டில் நியாயமான விருப்பத்திற்கு எவரும் என்றைக்குமே குறுக்கே நிற்பதில்லை. கணவனின் ஆசையை அறிந்ததாலும், மேகலாவுக்கு கிடைத்த சிறந்த பேறுபெற்றால் உறவினர் அயலவரின் மத்தியில் கிடைத்த கௌரவத்தை இழந்துவிடுவோமோ என்ற பயத்தாலும் தான் மகேஸ்வரி கூட அப்படிக் கூறியது.

மனதில் சிறு ஏமாற்றம் படர்ந்தாலும்,
"விடு ஈஸ்வரி... பிள்ளையின்ர விருப்பம் அதுதான் எண்டால் அதையே செய்யட்டும்... நீ குறுக்க நிக்காதே..." என்று கூறி,

"அதுக்கு சேர என்ன என்ன செய்யோணும் மகள்..." என்று மேகலாவிடம் கேட்டார்.

"ஏ லெவல் செர்டிபிகேட், பாஸ்போர்ட், எங்கட சீவியோட போட்டோவும் இணைச்சு எப்ளை பண்ணோணும் அப்பா..."

"முதல்ல எந்த எயார்லைன்ஸ்சுக்கு எப்ளை பண்ணப்போறனீ... 'ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்' எண்டால் மட்டும் தான் இலங்கையில இருக்கலாம். மற்ற எயார்லைன்ஸ்சில எல்லாம் அவங்கட நாட்டுக்கு ரீலொகேட் ஆகோணும்.. 'எயார் இந்தியா' எண்டால் இந்தியாவில தான் இருக்கோணும்... 'எயார் ஏசியா' எண்டால் மலேசியாவில் இருக்கோணும்... 'எமிரேட்ஸ்' எண்டால் துபாயில இருக்கோணும்..." என்று தனக்குத் தெரிந்ததைக் கூறினான் முரளி.

"என்ன... வெளிநாட்டுல தங்கோணுமா... அதெல்லாம் வேணாம்... போறது எண்டால் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ்சுக்கே போங்கோ..." என்று இடைபுகுந்தார் மகேஸ்வரி.

"அம்மா... எயார் ஹொஸ்டஸ் எண்டாலே வெளிநாட்டுக்கு போறது தானம்மா... கனவை அடைய கடல் கடக்க வேணும் எண்டால் செய்து தான் ஆகோணும்... இப்ப நான் சேர்ஜன் படிக்க மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்கு போகோணும் எண்டால் போவன் தானே... அது மாதிரி தான்... இதில ஆண் பெண் என்ற பேதமை வேணாம்..."

"இல்லையம்மா... எனக்கும் வேற எங்கயும் போக விருப்பமில்ல... இஞ்ச தான் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ்சில தான் எப்ளை பண்ண நினைக்கிறன்... இங்கயே போட்டி கூட... மற்ற எயார்லைன்ஸ் எல்லாம் சொல்லவே தேவையில்ல..." என்று கூறினாள் மேகலா.

"எண்டாலும்... எங்கட ஆக்களுக்கு இப்ப நாங்க என்ன சொல்லுறது... ஆள் ஆளுக்கு எட்வைஸ் மழை பொழிவினம்..." என்று குறைப்பட்டார் மகேஸ்வரி.

"மற்றவேயளுக்காக நாங்க வாழுறேல்ல... அவக்கு அதை விட இது பிடிச்சு இருக்கு... வளர்ந்த பிறகும் கூட வானத்தில பிளைட் போனால் செய்யிற வேலைய விட்டுப்போட்டு ஓடி வந்து பார்க்கேக்கயே எங்களுக்கு விளங்கி இருக்கோணும்... நாங்க இன்னும் சின்னப் பிள்ளைத்தனம் போகேல்ல எண்டு விளையாட்டா நினைச்சிட்டம்... அவா வழியிலேயே விடு..." என்று அரவிந்தன் தேற்றினார்.

"நீ இஞ்சயே எப்ளை பண்ணு... அதில செலெக்ட் ஆகினா உன்ர விருப்பப்படியே உன்ர கனவைத் தேடிப்போ... ஆகேல்லையோ... யூனிவர்சிட்டில ஜோயின் ஆகி மேனேஜ்மென்டை செஞ்சு முடி..." என்ற முரளியின் நிபந்தனையுடன் அனுமதி கிடைத்தது.

"என்ர மகள் ஓ லெவல், ஏ லெவல் ல பாஸ் பண்ணினது மாதிரி இதிலயும் சாதிப்பா... எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு..." என்று மகளுக்கு ஆதரவளித்தார் அந்த தந்தை.

ஓடி வந்து தந்தையைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தாள் மேகப்பெண்.

இந்த ஆதரவால் மகள் தங்களுக்கு தீராத மனக்கவலையை தரப்போகிறாள் என்று தெரிந்திருந்தால், இதற்கு மறுப்பு தெரிவித்திருப்பார்களோ என்னவோ...

தென்னங் கீற்றுகளின் சலசலப்பிற்கு நடுவே வரப்போகும் துன்பத்தின் மெலிந்த சிரிப்பும் சேர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

 
Top Bottom