மேகம் 7

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sathya Karunya

Well-known member
May 5, 2026
130
281
63
Sri Lanka 🇱🇰
MTN 7

அதன்பிறகு மேகலா ஒரு நொடியும் தாமதிக்கவில்லை. தனக்கும் சுபாஷினிக்கும் இலங்கை விமான சேவைக்கு விண்ணப்பித்துவிட்டு தான் நிம்மதியாக மூச்சுவிட்டாள். ஆனால், அவளது எதிர்பார்ப்பிற்கு மாறாக அந்த விண்ணப்பம் கிணற்றில் போட்ட கல்லைப் போல எந்தச் சலனமும் இல்லாமல் அமைதியில் மூழ்கிப் போனது.

நாட்கள் வாரங்களாயின. விண்ணப்பித்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும் எந்தத் தகவலும் வரவில்லை. முதல் சில நாள்கள் அவள் தினமும் மின்னஞ்சலைத் திறந்து திறந்து பார்த்தாள். ஒவ்வொரு முறை தொலைபேசியில் ஒலி வந்தாலும், இதயம் திடுக்கிட்டு துடித்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் அது வேறு செய்தியாகி விட, அவளது முகத்தில் ஒரு மெல்லிய ஏமாற்றம் படர்ந்தது. அவளது தவிப்பை வீட்டினரும் மெளனமாக பார்த்துக்கொண்டு இருந்தனர். நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டால் கூறலாம் என்று, மேகலாவின் முடிவைப்பற்றி உறவினர் அயலவர் யாருக்கும் சொல்லியிருக்கவில்லை.

ஒரு கட்டத்தில், 'எனக்கு அதிஷ்டம் இல்ல போல..' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு, அந்த ஆசையை மெதுவாக மறந்து விட்டு அண்ணனின் முடிவுக்கு கட்டுப்பட முயன்றாள்.

ஒரு சனிக்கிழமை மதியம். தபால்காரர் கந்தையா "மேகலா அரவிந்தன்...!" என்று உரக்கக் கூவியபடி ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.

இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்சின் இலச்சினை மின்னிய அந்தக் கடிதத்தைப் பிரித்த மேகலாவிற்குத் தலை சுற்றியது.

என்ன நினைத்தாளோ தெரியவில்லை. அடுத்த நொடியில் ஓடிப்போய் சாமியறைக்குள் தஞ்சம் புகுந்தாள். கண்களில் கண்ணீர் கரகரவென வழிய, இருகரம் கூப்பி நின்றபடி இறைவனை நன்றியுடன் வேண்டினாள்.

செய்தியறிந்த மகேஸ்வரியும் அரவிந்தனும் அவளை வாழ்த்தினர்.

"அண்ணாவுக்கும் ஒருக்கா எடுத்து சொல்லுங்கோ பிள்ளை.."
என்று மகேஸ்வரி கூற, மேகலா முரளியின் எண்ணுக்கு அழைத்தாள்.

அந்த நேரத்தில்தான்,
“அடியேய்… எனக்கு லெட்டர் வந்திருக்கடி… உனக்கும் வந்துட்டா…?” என்று சந்தோஷம் பொங்கக் கூச்சலிட்டபடி ஓடி வந்தாள் சுபாஷினி.

"ஓம்... இப்பதான் வந்தது." என்று மேகலா பதிலளிக்க,

“நாங்க ஜெயிச்சிட்டோமடி… அடிச்சான் பாரு எப்பொய்ண்ட்மென்ட் ஓர்டர்..." என்று அவளைக் கட்டிப் பிடித்து சுற்றினாள் சுபா.

அவளது அந்தக் கூத்தை அரவிந்தனும் மகேஸ்வரியும் புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருக்க, மேகலாவின் அலைபேசியில் மறுபக்கத்தில் இருந்த முரளியோ,

"எல்லா முயற்சியும் எடுத்து எங்களை கன்வின்ஸ் பண்ணி எப்ளை செய்தது அவள்... நீர் ஜெயிச்சிட்டீரோ..." என்று கேட்டான்.

அப்பொழுது தான் அவன் இணைப்பில் இருக்கிறான் என்பது மேகலாவுக்கு நினைவு வந்தது.

"ஆர்... முரளியண்ணாவோ..." என்று மேகலாவிடம் கேட்டுவிட்டு,

"ஹலோ அண்ணா... உங்களுக்கு தெரியுமா நான் ஒண்டும் செய்யேல்ல எண்டு..." என்று முகத்தைச் சுருக்கிக் கேட்டாள் சுபா.

“எலிப்புழுக்கை மாதிரி அவள் பின்னுக்குப் போனதைத் தவிர வேற என்ன செய்தனீ…?” என்று முரளி மேலும் சீண்டினான்.

"உங்கட பயந்தகோழி தொங்கச்சிக்கு தைரியம் சொல்லி மோட்டிவேட் பண்ணினதே நானாக்கும்... அதுக்கே கன்சல்டேஷன் பீஸ் கேட்கலாம் எண்டு இருக்கிறன்... அது தெரியுமா உங்களுக்கு முதல்ல.." என்று கோபமாகப் பதிலடி கொடுத்தாள் சுபா.

சன்னமாகச் சிரித்துவிட்டு,
"உன்ர வாய் மட்டும் எப்பவுமே ஓவர் டியூட்டி பாக்கும்... ஒண்டு நல்லா சாப்பிடுறது... இல்லையோ சண்டை போடுறது..."

"நான் என்ன சண்டை கோழியோ..."

“இந்தா… நான் சொன்னேனல்லா… அவள் பயந்த கோழி… நீ சண்டைக் கோழி… ஆகமொத்தம் கோழியைத்தான் உவமைக்கு எடுத்திருக்கிறாய்! இண்டைக்கு அம்மா கோழிக்கறி சமைச்சுத் தருவா… அங்கயே இருந்து நல்லா சாப்பிட்டு போ!” என்று கூற,

“பாருங்கோம்மா… இந்த அண்ணாவ…” என்று மகேஸ்வரியிடம் புகாரளித்தாள் சுபா.

அனைவரும் இவர்கள் இருவரின் சம்பாஷணையைப் பார்த்து வாய்விட்டு சிரித்தனர்.

முரளியும் சுபாவும் எப்போதுமே இப்படித்தான், ஏட்டிக்குப் போட்டி போட்டு சண்டை பிடிப்பார்கள். ஆனால் மேகலாவின் மீது முரளி வைத்திருக்கும் அதே பாசத்தைத் தான் சுபாவின்மீதும் காட்டுவான்.

மேகலாவுக்கு ஏதாவது வாங்கினால், சுபாவுக்கும் சேர்த்தே வாங்குவான். சுபாவின் வீட்டிலும் அப்படித்தான். அவளுக்கு உடன்பிறந்த சகோதரன் இல்லாத குறையை முரளி நிரப்பியிருந்தான்.

அலைபேசியின் மறுமுனையில் முரளியின் சிரிப்புச் சத்தம் மெல்ல அடங்கியது. அவன் குரல் இப்போது சற்று நிதானமாகவும், அண்ணனுக்கே உரிய அக்கறையோடும் ஒலித்தது.

"சரி மேகி... விளையாட்டெல்லாம் காணும். லெட்டர்ல என்ன போட்டுருக்கு? எப்ப இன்டர்வியூ? என்னென்ன டொக்கியூமெண்ட்ஸ் கொண்டு போகோணும்..?" என்று அடுக்கடுக்காகக் கேட்டான் முரளி.

"வாற புதன்கிழமை காலைல ஒன்பது மணிக்கு கொழும்பு, கட்டுநாயக்க எயார்லைன் சென்டர்ல இருக்கச் சொல்லிருக்கினம் அண்ணா... ஒரிஜினல் சர்டிபிகேட்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோஸ் எல்லாம் வேணுமாம்..."

"அப்ப செவ்வாய்க்கிழமை மதியமே யாழ்தேவியில வெளிக்கிடோணும்... ராகமவுக்கு டிக்கெட் எடுங்கோ... நான் அங்க வாறன் உங்களை ஏத்த... நீர்கொழும்பில என்ர கூட்டாளி சரவணன் வீடு இருக்கு, அவன்ர வீட்டில நிற்கலாம்... அங்கயிருந்து 'பிக் மீ' (Pick Me) பிடிச்சு கட்டுநாயக்க போகேலும்... சுபா நீயும் உன்ர வீட்டில சொல்லிடு..." என்றான் முரளி.

"நீங்களும் எங்களோட நிற்பீங்களா அண்ணா..!" என்று மேகலா கேட்டாள்.

"இல்லை மா... கிழம நாள்கள் எனக்கு கஷ்டம்... அதுவும் புதன்கிழமை தான் கிளினிக் நாள். என்னால அசையவே ஏலாது... நான் வேலை முடிஞ்சு வாற நேரம் உங்கட ரயிலும் வந்துரும்... உங்கள நீர்கொழும்பில விட்டுட்டு நான் கொழும்புக்கு திரும்பிடுவன்..."

இவர்களின் உரையாடலை செவிமடுத்துக் கொண்டிருந்த அரவிந்தன்,
"நானும் இவங்களோட வரட்டே... துணையா இருக்குமெல்லா..." என்று கேட்க,

"வேணாமப்பா... ரயிலில பெஸ்ட் கிளாஸ் எடுத்தாங்க எண்டா எந்த பயமும் இல்ல... அவங்கள பிக் அப் பண்ண நான் போவனே... பிறகு 'பிக் மீ' யும் பாதுகாப்பு தானே... அதுமட்டுமில்லாம இதையெல்லாம் இவேயள் பழக தானே வேணும்..."

என்று விட்டு, என்ன செய்யவேண்டும் என்ற அறிவுரைகளையும் தங்கைக்கு கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.

அடுத்து வந்த இரண்டு நாள்களும் மேகலாவுக்கும் சுபாவுக்கும் தங்களை நேர்முகத்தேர்வுக்கு தயார் செய்வதிலேயே கழிந்தன. மகேஸ்வரியும் பிள்ளைகளுக்கும் அவர்கள் தங்கப் போகும் வீட்டினருக்கும் சேர்த்து பலகாரங்களைச் செய்தார்.

செவ்வாய்க்கிழமை மதியம், யாழ்ப்பாண ரயில் நிலையத்தின் மேடையில் வந்து நின்ற 'யாழ் தேவி' ரயிலின் அந்த நீண்ட விசில் சத்தம், மேகலாவிற்கு ஒரு புதிய வாழ்க்கையின் அழைப்பாகவே கேட்டது. இருவரும் தத்தம் பெட்டிகளை தூக்கிக் கொண்டு, பெற்றவர்கள் நால்வரும் விடைகொடுக்க, கண்களில் இனிய கனவுகளுடனும், ஒருவித இனம் புரியாத பயத்துடனும் ரயிலில் ஏறினர்.

ரயில் ஓடத் தொடங்கியதும், ஜன்னலோரம் அமர்ந்து பின்னோக்கி ஓடும் தென்னை மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்த மேகலாவிடம் சுபாஷினி கிசுகிசுத்தாள்.

"மேகி... எனக்கு நம்பேலாம இருக்கடி... ஆனாலும் கொஞ்சம் பயமா கிடக்கு..."

"ஏன்...??"

"கொழும்பு, கண்டி சிங்களப் பெட்டையள் எல்லாம் வடிவா மொடர்னா வருவாங்க. நாங்க தமிழாக்கள்... யாழ்ப்பாணத்தில இருந்து போறம்... எங்கள செலக்ட் பண்ணுவினமா...?"

தமிழினம் காலங்காலமாக அனுபவித்த புறக்கணிப்பின் சுமையோடு, விரக்தியாக கேட்டாள் சுபா.

மேகலா அவள் கையைப் பற்றி, "எங்கள பத்தி எல்லாம் தெரிஞ்சி தானே இன்டர்வீவுக்கு லெட்டர் அனுப்பினாங்க... இதுக்கு மேலேயும் அவங்கட துவேஷத்த காட்டினால் நல்லா ஏசிட்டு வந்துருவம்... எங்கட்ட இருக்கிற தன்னம்பிக்கையும் நிமிர்வும் தான் எங்கட அழகு சுபா.... பயப்படாத... எல்லாம் நல்லதா நடக்கும்..." என்று நம்பிக்கையூட்டினாள்.

அதன்பிறகு, ஜன்னல் வழியே விரிந்த பசுமையான காட்சிகளை ரசித்துக்கொண்டும், இடையிடையே சாப்பாட்டைக் கொறித்துக்கொண்டும், பெற்றவர்களுக்கும் தமையனுக்கும் புகையிரதம் நிற்கும் இடங்களை தகவல் தெரிவித்துக் கொண்டும் சென்ற அவர்களது பயணம், ஆறு மணிநேரத்திற்குப் பின், சுமார் ஏழு மணியளவில் ராகமவில் வந்து நின்றது. அங்கு ஏற்கனவே முரளி அவர்களுக்காக மகிழூந்துடன் காத்துக்கொண்டிருந்தான்.

அவர்கள் வந்ததும் சுகம் விசாரித்து, இரவுணவிற்காக, நீர்கொழும்பில் அவனது நண்பன் வீட்டுக்கே சென்றனர்.

"சரவணன் வீட்டில டின்னர் ரெடி பண்ணிருக்கு... வேணாம், இஞ்ச ஏதாவது பார்க்கிறன் எண்டு தான் சொன்னனான்... அவன் விடுறானில்ல... அங்க போய்ச் சேர முப்பது நிமிசம் போல ஆகும்... பரவாயில்ல தானே.."

என்று முரளி கேட்க,

"பரவாயில்ல அண்ணா... பசியும் இல்ல... அம்மாவும் சாப்பாடு செய்து தந்தவா... வரேக்கயே சாப்பிட்டனாங்க... உங்களுக்கும் பலகாரம் எல்லாம் தந்தவா... சரவணன் அண்ணா வீட்டுக்கும்..." என்று மேகலா பதிலளித்தாள்.

"மேடம் உங்களுக்கு... உங்கட வயிறு பொறுக்குமா...??" என்று சுபாவை சீண்ட,

"முப்பது நிமிசத்துக்கு என்ர வயிறு பொறுமை காக்கும் அண்ணா... நீங்க யோசிக்காதீங்கோ.." என்று அவன் வழியிலேயே பதிலடி கொடுத்தாள் சுபா.

இப்படியே சிரிப்பும் நக்கலுமாக நீர்கொழும்பை வந்தடைந்தனர்.

மூவரையும் வாசல்வரை வந்து சிறப்பாக வரவேற்றனர் சரவணனின் குடும்பத்தினர்.

"வாடா மச்சான்... இப்பத்தான் உனக்கு இங்க வர வழி தெரிஞ்சிருக்கு என.." என்று கட்டிப் பிடித்துக் கொண்டான் சரவணன்.

இருவரும் கொழும்பு பல்கலையில் ஒன்றாக மருத்துவம் பயின்றவர்கள். சரவணனின் பூர்வீகம் கிளிநொச்சி எனினும், அவன் பிறந்தது வளர்ந்தது எல்லாம் நீர் கொழும்பில் தான்.

"வாங்கோ மா... வாங்கோ முரளி..." என்று வாஞ்சையுடன் வரவேற்று உபசரித்தார் சரவணனின் அன்னை உதயமலர்.

இரவுணவை முடித்த பிறகு, சூடாக கோப்பியை பருகினர் அனைவரும்.

"கன நாளைக்கு பிறகு இந்தப்பக்கம் வாறீங்க என... முந்தி யூனிவெர்சிட்டில படிக்கேக்க அடிக்கடி வருவீங்க இப்ப காணுறதே கஷ்டமா இருக்கு..." என்று கேட்டார் உதயமலர்.

"வேலை அன்ட்ரி... வீட்டையும் கனக்க போறதில்ல நான்..." என்று முரளி கூற,

"ஐயா சேர்ஜனுக்கு படிக்கிறாரம்மா... சமூகம் பெரிய இடம்... " என்று பெருமையாய் சொன்னான் சரவணன்.

"நீ மட்டும் என்னவாம்... கார்டியோக்கு படிக்கிறாய் தானே..." என்று கூறிச் சிரித்தான்.

"அப்ப ஒப்பரேஷன் தியேட்டர் உள்ளுக்கேயும் உங்கட நட்பு தொடரப் போகுது என...?" என்று தனக்கேயுரிய துடுக்குத் தனத்தில் கேட்டுவிட்டு நாக்கைக் கடித்தாள் சுபா.

"ஏன்... நீங்க ஒண்டா பறந்து பறந்து நட்பு பாராட்ட வெளிக்கிடுறீங்களே... அதே மாதிரி நாங்க செய்யக்கூடாதா.." என்று முரளி நக்கலுடன் கூற,

"தாராளமா செய்யுங்கோ... ஆனால் 'ஒபரேஷன் சக்ஸஸ்... பேஷன்ட் டெட்' கதை ஆக்கிப் போடாதீங்கோ..." என்று வழமைப் போல வாயடிக்க,

"அடியேய்... வந்த இடத்தில சரி கொஞ்சம் அடக்கமா இரடி.." என்று மேகலா அவள் காதைக் கடித்தாள்.

சரவணனின் பார்வை மெல்லத் திரும்பி ஒருநொடி அதிகமாகவே சுபாவைத் தொட்டு மீண்டது.

"அவா சொல்லுறதும் உண்மை தானே..." என்று உதயமலர் சிரிப்புடன் கூறினார்.

அவருக்கு சுபாவின் சுவாரஷ்யமான பேச்சு பிடித்திருந்தது.

"இவ்வளவு நேரம் அரை போத்தல் அடிச்சவள் கணக்கா இருந்தா... இப்ப சாப்பாடு உள்ளே போய்ட்டெல்லோ... இனி சின்ராசை கையில பிடிக்கேலாது..." என்று முரளி மீண்டும் சீண்ட,

"அண்ணா.... வந்த இடத்துல என்ர மானத்தை வாங்கதேயுங்கோ... ஐ..யம் யுவர் பெஸ்ட்டு பிரெண்டு.. " என்று வடிவேலின் பாணியில் கெஞ்சினாள்.

முரளியின் சீண்டலில் சரவணனின் முகம் ஒருமுறை சுருங்கி, சுபாவின் 'அண்ணா' என்ற அழைப்பில் நேராகியது.

சிறிது நேரம் பேசிவிட்டு, முரளி அவர்களிடம் இருந்து விடைப்பெற்று கொழும்புக்குத் திரும்பிச் சென்றான்.

மேகலாவும், சுபாவும் அவர்களுக்கென்று கொடுக்கப்பட்ட அறைக்குச் சென்றனர். போகும் சுபாவையே பார்த்துக் கொண்டிருந்தான் சரவணன். வரும்போதே அவளைக் கவனித்திருந்தான். பலமணிநேர பயணத்தின் களைப்பிலும், அவளின் முகத்தில் தெரிந்த ஏதோவொன்று அவனை ஈர்த்தது. இப்பொழுது அவளது துடுக்குப் பேச்சு அவனை மீண்டும் கவர்ந்தது. பார்த்து ஒருநாள் கூட ஆகவில்லை, அதற்குள் பொறாமையுணர்வு வேறு என்று நினைத்த மாத்திரத்தில் அவன் முகத்தில் கீற்றாய் ஒரு புன்னகை பூத்தது.

இதயநிபுணனின் இதயவறைக்குள் அனுமதியில்லாமலே நுழைந்து சலனம்....

சின்னச்சிறு சலனங்கள் கூடி காதல் பெருவெள்ளமாய் மாறும் காலம் அதிகம் தூரமில்லை ...


 

Author: Sathya Karunya
Article Title: மேகம் 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
ஹே ரைட்டர்....சுபா தான் முரளிக்கு அப்படிகர மாறி reply செய்துட்டு....
இப்ப பாருங்க.....சுபா முரளி brotherhood பீல் la தான் இருக்காங்க.....
அப்ப முரளி அணுக்கு தான்.....
சுபாக்கு சரவணன் .... nice
 
  • Love
Reactions: Sathya Karunya

Sathya Karunya

Well-known member
May 5, 2026
130
281
63
Sri Lanka 🇱🇰
ஹே ரைட்டர்....சுபா தான் முரளிக்கு அப்படிகர மாறி reply செய்துட்டு....
இப்ப பாருங்க.....சுபா முரளி brotherhood பீல் la தான் இருக்காங்க.....
அப்ப முரளி அணுக்கு தான்.....
சுபாக்கு சரவணன் .... nice
ஆமா... முரளிக்கு அனு தான் 😍
 
  • Love
Reactions: Gowri Karthikeyan