மொழியின் இலக்கணம் நீயடா - 15

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113

அத்தியாயம் - 15

அகத்தியன் ஒருமாதிரி குழப்பமான மனநிலையில் இருந்தான். ஹிப்னடைஸ் செய்து தமிழின் வாய்மொழியாக சிறுவயதில் அவளுக்கு நேர்ந்த துன்பங்களைக் கேட்டு அவனது மனம் கனத்துப் போனது.

சில ஜென்மங்களுக்கு அதெப்படி சிறு குழந்தையைக் கூட காமத்துடன் பார்க்கத் தோன்றுகிறதோ?! அதுவும் உடன்பிறந்த சகோதரியின் மகளுக்கு இப்படி ஒரு செயலைச் செய்ய அவனுக்கு எப்படி மனம் வந்தது?!.

குழந்தைகளின் மிகப்பெரிய நம்பிக்கையே தாய்தான்! தனக்கு என்ன நேர்ந்தாலும் தாயிடம் கூறிவிட்டால் அவர் அனைத்தையும் சரி செய்து விடுவார் என்ற நம்பிக்கையில் தனக்கு நேர்ந்த அவலத்தை தமிழ் வாய்விட்டு சொல்லியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அவளது தாய் விசாலத்தின் மீது அகத்தியனுக்கு அதிருப்தி ஏற்பட்டது.

அன்றே அவளது கண் முன்னே அவனுக்கான தண்டனை என எதையாவது அவர் செய்திருந்தால் தமிழின் மனதில் அந்த சம்பவத்தின் வீரியம் சற்று மட்டுப்பட்டு இருக்குமே! அதை செய்யாத அவர்மீது சிறு கோபமும் தோன்றியது.

இவ்வாறான சிந்தனையில் அப்படியே அமர்ந்திருந்த அகத்தியனிடம் வந்த மருத்துவர், "டோன்ட் வொர்ரி அகத்தியன். அவங்கள சீக்கிரம் சரி செய்துடலாம்." அவனுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பேச்சைத் துவங்க தனது சிந்தனையிலிருந்து வெளி வந்தான்.

"தமிழுக்கு இருக்கறது PTSDனு சொல்லுவாங்க. பட் இதைவிட சிவியரான நிறைய ட்ரோமா எல்லாம் பார்த்து இருக்கேன். தமிழோட கேஸ்ல அவங்களுக்கு நடந்த அநீதிக்கு சம்பந்தப்பட்ட ஆட்களுக்கு தண்டனை கிடைக்கலங்கற எண்ணம் தான் அவங்கள இந்தளவுக்கு மூர்க்கமா மாத்தியிருக்கு." மருத்துவர் சித்ரா சொல்வதை கவனமாகக் கேட்டான் அவன்.

"நானும் அதைத்தான் யோசிச்சுட்டு இருந்தேன் டாக்டர். அதெப்படி ஒரு தாய் தன்னோட பெண்ணுக்கு இப்படியொரு அவலம் நேர்ந்த பிறகு கூட அமைதியா இருக்க முடியுது? வாயில்லா ஜீவன் கூட தன்னோட குட்டியை யாராவது உத்துப் பார்க்கறாங்கனு தெரிஞ்சாலே எதிர்த்து நிக்கும். ஆனா இவங்க," அவனுக்கு அதை எண்ணி மனமே ஆறவில்லை.

அகத்தியனின் கோபமானப் பேச்சிற்கு லேசாக புன்னகைத்த சித்ரா, "அவங்களோட சூழ்நிலை என்னனு நமக்கு தெரியாதே அகத்தியன். ஒருவேளை அவங்களும் இதுமாதிரி சூழலை கடந்து வந்திருக்கலாம். இது வெளியில தெரிஞ்சா தன்னோட மகள் மத்தவங்களுக்கு பேசுபொருளா ஆகிடுவாளோனு பயந்திருக்கலாம்."

"எனிவே முடிஞ்சது முடிஞ்சு போச்சு. இனி அதைப்பற்றிப் பேசி நோ யூஸ். இப்போ இதை எப்படி சரிசெய்றதுனு தான் நாம யோசிக்கனும்." என்றவரின் கூற்றை அகத்தியனும் ஆமோதித்தான்.

"இந்த இன்சிடென்ட்ஸ் எல்லாம் அவங்க ஆழ் மனசுல விதையா விழுந்து வேர் விட்டதால, அவங்கள அவங்களேதான் பாதுகாத்துக்கனும் அப்படீன்ற எண்ணமும் இதுபோல யாருக்கும் நடக்கக்கூடாது என்ற வேகமும் அவங்களே அறியாம அவங்களோட பிஹேவியரே மாறிடுச்சு."

" இன்ஃபேக்ட் அவங்களுக்கு இப்படி எல்லாம் நடந்ததுன்ற விசயமே காலத்தோட ஓட்டத்துல அவங்க மைன்ட்ல இருந்து அழிஞ்சு போச்சு. அதனால தான் நாம நார்மலா அவங்களோட நடத்துன செஷன்ஸ்ல இந்த விசயங்களை தெளிவா கண்டுபிடிக்க முடியல."

"ஆனாலும் சப் கான்ஷியஸ் மைன்ட்ல அந்த நினைவுகள் தன்னோட தடத்தை பலமா பதிய வச்சிருக்கு. அதனால் தான் இந்த மெதட் ட்ரீட்மெண்ட் பண்ணலாம்னு சொன்னேன்." என்று மருத்துவர் பேசப்பேச அனைத்தையும் கூர்ந்து கவனித்தான்.

" இப்ப தமிழோட PTSDக்கு ட்ரீட்மெண்ட் சில தெரபி மூலமாகவும், அவங்க மனசை யோகா, மெடிடேஷன் மூலமாகவும் கொஞ்சம் கொஞ்சமா கன்ட்ரோலுக்கு கொண்டு வரலாம்." அவளது பிரச்சனையின் தீவிரம் பற்றி பேசியவர் அதற்கான சிகிச்சை முறைகளைப் விளக்கினார்.

"இதுமாதிரி சைல்ட்ஹூட் அப்யூஸ் ஆனவங்க அதுல இருந்து எப்படி வெளி வந்தாங்கனு அவங்களோட இன்ட்ராக்ட் பண்ண விட்டு தமிழோட மனசை மாத்தலாம் தான், ஆனா தமிழுக்கு தனக்கு நேர்ந்த விசயம் ஆழ்மனசுல மட்டுந்தான் இருக்குன்ற போது இந்த ட்ரீட்மெண்ட் இன்னும் மோசமாக்க வாய்ப்பிருக்கு."

மருத்துவர் சொல்லவும் அகத்தியன் புரியாமல் பார்க்க அவனது பார்வையை உணர்ந்து, "அதாவது அவங்க ஞாபகத்துல இல்லாத ஒரு விசயத்தை சரி பண்றேன்ங்கற பேர்ல மறுபடியும் நாமளே தமிழுக்கு ஞாபகப்படுத்தற மாதிரி ஆகிடும்னு சொல்றேன். அப்றம் அவங்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வர வாய்ப்பிருக்கு." விளக்கமாக கூறினார்.

இதற்கு என்னதான் தீர்வு!? அவளை எப்படி இயல்பாக்குவது என்று குழப்பமாகக் கேட்டவனிடம், "லிஸன்! இது ஒன்னும் வியாதி இல்ல அகத்தியன். இப்ப நீங்க பஸ்ல கூட்டத்துல நிக்கும் போது உங்க கண்ணு முன்னாடி ஒருத்தன் இதுமாதிரி குழந்தைய பேட் டச் செய்தா உங்க மனசுல என்ன தோணும்?" எனக் கேட்டார்.

"இதென்ன கேள்வி டாக்டர்!? அந்த நாயை அப்பயே அடி வெளுத்துக்கட்டி வெட்டிப் போடனும்னு தோணும்." என்றான் வேகமாக.

"அதேதான்! தமிழும் அதைத்தான் செய்றாங்க. ஆனா என்ன பின்விளைவுகள் எதைப்பற்றியும் யோசிக்காம அந்த நேர ஹைப்ல மூர்க்கமா செய்றாங்க." தமிழின் மனநிலையை அகத்தியனுக்கு தெளிவாக விளக்கினார்.

"இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. இதுக்கு EMDR, CBTனு சில தெரபிகள் இருக்கு, அதோட அவங்கள எப்பவும் எங்கேஜ்ட்ஆ வைச்சுக்கோங்க. சில மருந்துகளும் தர்றேன். கூடிய சீக்கிரமே சரி செய்துடலாம்." மேலும் சிறிது நேரம் தமிழுக்கான சிகிச்சை பற்றி விளக்கினார்.

"தமிழ் இப்ப தூக்கத்துல இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல கண் விழிச்சுடுவாங்க அப்றம் கூட்டிட்டு போங்க. அவங்களுக்கு 'அந்த' பாஸ்ட் பற்றியெல்லாம் எதுவும் நினைவுப்படுத்தாதீங்க. "

" அதெல்லாம் ட்ரீட்மெண்ட்ல பார்த்துக்கலாம். முடிஞ்சவரை பெருசா எதுவுமில்லங்கற மாதிரியே சொல்லுங்க. ஆல் தி பெஸ்ட்!" புன்னகையுடன் வாழ்த்தி அனுப்பினார் மருத்துவர் சித்ரா.
 

Author: Vishakini
Article Title: மொழியின் இலக்கணம் நீயடா - 15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.