மொழியின் இலக்கணம் நீயடா - 16

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113

அத்தியாயம் - 16

"ஏன்டி, உனக்கும் மாப்பிள்ளைக்கும் எதாவது பிரச்சனையா? அவர் முகமே சரியில்லையே," சமையலறையில் மகளிடம் வினவிய விசாலம் " நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா தானே இருக்கீங்க?" சற்று தாழ்ந்த குரலில் சந்தேகமாகக் கேட்டார்.

" அது.." தமிழ் சற்று இழுக்கவும் அவளை முறைத்தவர், "ஓபனாவே கேட்கறேன். இன்னமும் நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேரலையா தமிழு?" கண்டனமான குரலில் கேட்க தனது பார்வையை திருப்பிக் கொண்டாள் அவள்.

அவளது மௌனமே அவருக்கான பதிலைக் கூறிவிட பெருமூச்செறிந்த விசாலம், "இங்க பாரு தமிழு, ஆம்பளைங்க ஓரளவுக்கு தான் பொறுப்பாங்க. ஒரு கட்டத்துக்கு மேல வீட்டுல சலிச்சு போயிட்டா, வெளியே தேடத் தொடங்கிடுவாங்க."

"அதனால, சீக்கிரமே மாப்ளையோட ராசியாக பாரு. உன்னோட பிடிவாதத்தால கையில கிடைச்ச நல்ல வாழ்க்கையை தொலைச்சுட்டு அப்றம் ஏங்காத." மகளுக்கு அதர பழசான அறிவுரையை வழங்க, அவளுக்கு சலிப்பாக இருந்தது.

அதேசமயம் தாய் சொன்னதைப் போல எதுவும் நடந்து விடுமோ என்ற எண்ணம் அச்சுறுத்த, அவளது உள்மனம் 'லூசா நீ!? அவரு நீ கல்யாணம் வேணாம்னு சொன்னபிறகும் நீதான் வேணும்னு உன்னை விரும்பி கட்டி இருக்காரு. அப்றம் எப்படி வேற ஒருத்திகிட்ட போவாரு?!' அதட்டியது.

இருப்பினும் மருத்துவரை சந்தித்து வந்தபிறகு அவனிடம் விலகல் தெரிவதை அவளால் உணர முடிகிறது. கேட்பதற்கு பதில் என்ற ரீதியில் இருக்கும் அவனது பேச்சு அவளுள் குழப்பத்தை ஏற்படுத்த, தற்போது தாயின் பேச்சு அந்தக் குட்டையை மேலும் குழப்பி விட்டது.

"என்னடி நான்பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன், நீ வாயே திறக்காம இருக்க? பார்த்து சூதானமா நடந்துக்க தமிழு. எந்த பிரச்சனையா இருந்தாலும் ஆறப்போடாம உடனே தீர்க்கப் பாரு. நான் அவ்ளோ தான் சொல்லுவேன் பார்த்துக்க." என்றவர்,

" நாளைக்கு உன் ஒன்னு விட்ட பெரியப்பா மக கல்யாணம் முடிஞ்சதும் நைட்டே நாங்க கிளம்பிடுவோம். நீ அவரைக் கொஞ்சம் கவனி தமிழு." என முடிக்க, சரியென தமிழும் தலையசைத்து அங்கிருந்து அகன்றாள்.

தங்களது அறைக்கு சென்றவளின் நினைவுகள் இரண்டு தினங்களுக்கு முன்பு செல்ல, அன்றுதான் தமிழின் மருத்துவரை சந்தித்து விட்டு திரும்பி இருந்தனர் தம்பதியினர்.

ஆழ்மன அலசல் முடிந்து, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தமிழ் எழுந்த பிறகு இருவரும் வீடு வந்து சேரும்வரை அவள் ஒருவித மயக்கநிலையில் இருந்ததால் அகத்தியனை கவனிக்கவில்லை.

அன்றைய இரவு அந்த கிறக்கத்திலேயே உறங்கி விட்டாள். அகத்தியனுக்கு தமிழின் இந்த பிரச்சினைக்கு முதல் காரணம் அவளது தாய் என்ற எண்ணம் ஆழப் பதிந்து அவனே அறியாமல் அவன் மனதில் அவர்மீது வெறுப்பை உண்டாக்கி இருந்தது.

காலையில் இருவரும் பணிக்கு தயாராகிக் கொண்டிருக்க, அப்போது அலைபேசியில் அழைத்த விசாலம், உறவினர் ஒருவர் வீட்டு திருமணத்திற்கு செல்வதற்காக மறுநாள் காலை புனே வருவதாக தமிழிடம் கூறினார்.

அவ்விசயத்தை அகத்தியனிடம் தமிழ் கூறியபோது அவர்களது வருகையில் பெரிதாக ஆர்வம் இல்லாமல் "ஓஓ! அப்படியா, சரி." என்ற அவனது பதிலில் தான் அவன் மனதிலிருந்த அவர் மீதான வெறுப்பையே உணர்ந்தான்.

தமிழின் தாயை நேரில் கண்டபிறகு அவனது மனதில் புசுபுசுவென எழும் கோபத்தை கட்டுப்படுத்த அவனால் முடியவில்லை. அந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆனாலும், அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

'அதெப்படி பெத்த பொண்ணு தனக்கு இப்படி நடந்ததுனு சொன்னபிறகு கூட உங்களால் அமைதியா இருக்க முடிஞ்சது!?' அவரை நறுக்கென்று கேட்க வேண்டும் என்று அவன்மனம் பரபரத்தது.

அவரிடம் அகத்தியன் அதைக் கேட்டுவிட்டால் அவ்விசயம் தமிழுக்கு தெரியவரும், மருத்துவர் வேறு அவளிடம் எதையும் ஞாபகப்படுத்த வேண்டாம் என்று சொன்னபிறகு விசாலத்திடம் அவனால் எதையும் கேட்க முடியவில்லை.

ஆனால் தனது விலகலைக் காட்டி தள்ளியிருக்க முயல, அதுவோ வேறு பக்கம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவன் அறியவில்லை. அவளது தாய்மீது இருந்த அதிருப்தியில் அவர்களைப் பற்றி பேசும் தமிழிடம் ஓரெழுத்து பதிலோடு நிறுத்திக் கொண்டான் அவன்.

அதைச் சுட்டிக்காட்டி விசாலம் தற்போது பேசியதில் ஏற்கனவே கணவனின் நடவடிக்கையில் மனத்தாங்கல் கொண்டிருந்த தமிழ் தன் தாயின் பேச்சில் 'அவருக்கு என்னை பிடிக்கலையா? என்னை விட்டு போயிடுவாரா?' கலங்கித் தவித்துப் போனாள்.

மறுநாள் காலையும் அதே போல அளவான பேச்சோடு அகத்தியன் அலுவலகத்திற்கு செல்லக் கிளம்பி வந்தவனிடம், தமிழின் தந்தை அன்றைய இரவு அவர்கள் அப்படியே ஊருக்கு கிளம்புவதாகக் கூறவும் சரியெனக் கூறிவிட்டு பணிக்கு சென்றுவிட்டான்.

அனைத்தையும் கவனித்த தமிழும் தனது பள்ளிக்கு தயாராக, "நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சுக்க தமிழு. உன் பிடிவாதத்தை எல்லாம் விட்டுட்டு வாழ்க்கைய காப்பாத்திக்க தங்கம். நாங்க கிளம்பறோம்." மகளுக்கு புத்திமதி கூற தலையசைத்தாள் தமிழ்.

தாய் சொன்னது போல எந்த பிரச்சினையும் ஆறப்போடாமல் உடனே இதை சரி செய்ய வேண்டும் என்ற முடிவோடு பணிக்கு கிளம்பிய தமிழ், மாலை வீடு திரும்பிய பிறகு அன்றாடப் பணிகளை முடித்து கணவனுக்காகக் காத்திருந்தாள்.

சற்று தாமதமாக பணிமுடித்து வீடு திரும்பிய அகத்தியனின் மனதில் விசாலத்தை நேரில் கண்ட தாக்கம் இன்னமும் இருக்க அதே மனநிலையில் வலம் வந்தவன் தமிழின் முகமாற்றத்தை கவனிக்கவில்லை.

இருப்பது இருவர், இருவருமே வெவ்வேறு மனநிலையில் இருந்ததால் இயந்திர கதியில் உணவு முடித்து, அகத்தியன் சிறிது நேரம் டிவியை பார்த்துவிட்டு படுக்கச் சென்று விட, தமிழ் அனைத்தையும் ஒதுங்கச் செய்து அறைக்கு வந்தவள் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள்.

கணவனிடம் எப்படியாவது பிரச்சனை என்னவென்று கேட்டு சரி செய்ய வேண்டும் என்று எண்ணியவளுக்கு எப்படித் தொடங்க என்று தெரியவில்லை. சிறிது நேரம் புரண்டு படுத்தவள் ஒரு முடிவுக்கு வந்து அவனை நோக்கி திரும்பினாள்.
 

Author: Vishakini
Article Title: மொழியின் இலக்கணம் நீயடா - 16
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
ஏண்டா நீ சின்னதா முகம் சுருக்கினாலே அவ தவிச்சி போவானு தெரியாத உனக்கு????
பாவம் டா .....ஏதேதோ யோசிச்சி கஷ்டபடுத்திக்கிறா