அத்தியாயம் - 33
"ப்ளீஸ்ம்மா! எங்கிட்ட பேசுங்கம்மா. அவங்க சொல்லுற மாதிரி நான் எதுவும் தப்பா செய்யலம்மா. என்னை நம்புங்க." தமிழின் காலடியில் அமர்ந்து கண்ணீரோடு கெஞ்சிக் கொண்டிருந்தான் அகரன்.
கல்லென இறுகிய முகத்துடன் அசையாது அமர்ந்திருந்த மனைவியின் கோபம் இம்மாதிரி விசயங்களில் எந்தளவுவரை செல்லும் என்பதை அறிந்த அகத்தியன் மகனின் கதறலில் வருந்தி அவனை எழுப்பிக் கொண்டு தனியே அழைத்து வந்தார்.
"ப்ளீஸ்ப்பா! நீங்களாவது என்னை நம்புங்களேன்!" தகப்பனிடமும் கெஞ்சிய அகரன் மனமுடைந்து இருப்பது புரிந்தாலும் அவருக்கு உண்மை என்னவென்று தெரியாத குழப்பம்.
"நீ பொறந்துல இருந்து நம்ப பையனை ஒரு நல்ல ஆண்மகனா வளர்க்கனும்னு கிட்டத்தட்ட தவம் மாதிரி, மனம் கொள்ளா ஆசையோட இருந்தவள் உன் அம்மா, உன்னைப் பற்றி எல்லாரும் நல்ல விதமா சொல்லும் போது அத்தனை பெருமைப்பட்டுட்டு இருந்தாள்."
"இப்ப.. இப்படி.. அதுவும் அவளை எப்பவும் நிலைகுலைய செய்ற பெண்கள் விசயத்துல தன்னோட மகனே இப்படி செய்திருக்கான்னு எல்லாரும் சொல்லும் போது ஹர்ட் ஆகி இருக்கா அகரா. புரிஞ்சுக்க." மகனுக்கு தாயின் மனநிலையை விளக்கினார்.
"எனக்குமே உன் பிரின்சிபால் சொன்னதை நம்ப முடியல தான். ஆனா அவங்க எல்லாம் பார்த்ததா சொல்றாங்க. உன் மேல இருக்கற கொஞ்சநஞ்ச நம்பிக்கையில தான் உன்னை.." என்றவருக்கு போலீஸ், கேஸ் என்பதை பற்றி எல்லாம் தன் வாயால் சொல்லக்கூட முடியவில்லை.
"எதையும் மறைக்காம என்ன நடந்ததுனு எங்கிட்டேயாவது மனசு விட்டு சொல்லுடா." ஆற்றாமையுடன் கூறிட, அகரனிடம் சில நொடிகள் மௌனம் தொடர, உள்ளே இருந்த தமிழும் தன் காதுகளை திறந்து வைத்திருந்தாள்.
"அந்த பொண்ணு பேர் அமிர்தவல்லி. அவளும் நான் இங்க சேர்ந்தப்ப தான் ஸ்கூல்ல சேர்ந்தாள்ப்பா." எனத் தொடங்கி அவனுக்கும் அவளுக்கும் உண்டான ஆரோக்யமான நட்பு வரை சொல்லி முடித்தவன், "இன்னிக்கு ஃபேர்வெல் அப்ப.." இன்று நடந்ததை கூறத் தொடங்கினான்.
" ஸ்டூடண்ட்ஸ்! இன்னிக்கு உங்களுக்கான டே. இத்தனை நாளும் எக்ஸாம் டென்சன்லேயே இருந்த நீங்க பப்ளிக் எக்ஸாம் வரும்போது கொஞ்சம் ரிலாக்ஸ்டா ஃபீல் பண்றதுக்காக தான் இந்த ஏற்பாடு. அதனால என்சாய் யுவர்செல்ஃப்!" ஆசிரியை தேவிகா சொல்ல,
அழகழகான புடவையில் பெரிய பெண்களைப் போல மிளிர்ந்த மாணவிகளும், கோட் சூட் சகிதம் கச்சிதமான ஆண்மகன்களாக இருந்த மாணவர்களும் ஓவென்று ஆர்ப்பரித்தனர்.
அதன்பிறகு அவர் புன்னகையுடன் சென்றுவிட, மாணவ மாணவிகள் தாங்கள் கொண்டு வந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் மூலம் பாடலை ஒலிக்க விட, நடனம், பாடல் என்று கொண்டாட்டம் தொடங்கியது.
மாணவிகள் ஒருபுறம் மாணவர்கள் ஒருபுறம் என்று ஆடிக் கொண்டிருக்க, தருணின் வற்புறுத்தலால் வந்திருந்த அகரன் ஒரு ஓரமாக நின்றிருந்தான். அவனையும் இழுத்து வந்து ஆட வைத்தான் தருண்.
முதலில் தருணிற்காக வந்தவன், உடனிருந்த மாணவர்கள் அவனை இயல்பாக ஏற்றதில் அகரனும் சற்று மகிழ்ந்து ஆடத் தொடங்கி விட்டான்.
சிறிது நேரத்தில் மூச்சு வாங்க கூட்டத்தில் இருந்து நகர்ந்து வந்தவன் தனது அலைபேசியை தேட, பாக்கெட்டில் இருந்த அலைபேசியை காணவில்லை. அந்த அறையை சுற்றித் தேடிக் கொண்டிருந்தான்.
அகரன் தேடுவதை கண்டு விசாரித்து வந்த தருணிடம் அகரன் தன் அலைபேசி காணாததைச் சொல்ல அவனுடன் சேர்ந்து தேடிய தருண், "ஒருவேளை க்ளாஸ்ல எதுவும் வைச்சியாடா?" எனக் கேட்டான்.
வகுப்பிற்குள் வரும்போது சார்ஜ் குறைவாக இருந்ததால் சிறிது நேரம் போட்டு இருந்தான் தான், ஆனால் இந்த அறைக்கு வருகையில் எடுத்து வந்ததாகத் தான் அகரனுக்கு நினைவு.
இருப்பினும் இங்கே காணாமல் போகவே ஒருவேளை அங்கேயே விட்டுவிட்டு வந்தோமோ எனக் குழம்பிய அகரன், "நான் போய் கண்டுபிடிச்சு கால் எடுக்கறவரை நீ என் நம்பருக்கு ரிங் பண்ணிட்டு இருடா." என்றவன் வேகமாக தங்களது வகுப்பறைக்கு ஓடினான்.
வகுப்பறை அருகே வரும்போதே அவனது அலைபேசி சத்தம் கேட்கவும், இங்கேயே மறந்துட்டேன் போல என்றெண்ணி பூட்டிய தாழ்ப்பாள் திறந்து உள்ளே வந்து பென்ச் அடியிலிருந்த தன் அலைபேசியை எடுத்தான்.
தருணின் அழைப்பை நிறுத்துவதற்காக அலைபேசியை கையிலெடுத்தபடி திரும்ப, அங்கே மூலையில் மயக்கத்தில் கிடந்த அமிர்தாவை பார்த்து பதறி விட்டான்.
வேகமாக அவளருகே ஓடிவந்தவன் அவளது கன்னத்தில் தட்டி அவளை எழுப்ப முயல அவளிடம் அசைவே இல்லை. அவளது இதயத்தில் காதை வைத்து பார்த்தவனுக்கு பயத்தில் நா உலர்ந்து, என்ன செய்வதென்று தெரியவில்லை.
யூ டியூப்பில் அடிக்கடி பார்த்த சிபிஆர் பற்றி சட்டென நினைவில் வர, அவளது இதயப்பகுதியில் அவனது கைமீது கை வைத்து குறிப்பிட்ட இடைவெளியில் ஐந்தைந்து முறையாக அழுத்தி விடுவிக்க அப்போதும் அவளிடம் மாற்றம் இல்லை.
அவளது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பில் எதைப்பற்றியும் யோசிக்காமல், அவளது வாய் மீது வாய் வைத்து அவளுக்கு தன் மூச்சை கொடுத்துக் கொண்டிருக்க, "அகரன்!!!" என்ற தேவிகாவின் அதட்டலில் நிமிர்ந்து பார்த்தான்.
தேவிகாவுடன் இன்னமும் சில மாணவிகள் நின்றிருக்க, "எனக்கு அப்பவே தெரியும் மேம். இவன் இந்த பொண்ணை என்னிக்காவது இது மாதிரி எதாவது செய்துடுவான்னு."
" முத்ரா மாதிரி தைரியமான பொண்ணு கிட்டயே கிஸ் அடிச்சவன், அமிர்தா போல அப்பாவியை விடுவானா!? ச்சே! அதுக்குன்னு அவ ட்ரெஸ் எல்லா கழட்டி.. நினைச்சாலே நடுங்குது." என்றெல்லாம் பயத்துடன் நடுங்கிப் பேச, அகரனுக்கு அப்போது தான் அமிர்தாவின் கோலமே உறைத்தது.
Author: Vishakini
Article Title: மொழியின் இலக்கணம் நீயடா - 33
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: மொழியின் இலக்கணம் நீயடா - 33
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.