அத்தியாயம் - 46
மகனுக்காக பழரசம் தயாரித்துக் கொண்டிருந்த தமிழிடம் வந்த அமிர்தா "அகரன் எங்கே ஆன்ட்டி?" கோபக்குரலில் கேட்க, புரியாமல் பார்த்த தமிழ், "அவன் ரூம்ல இருக்கான்டா. லாப்டாப்ல ஏதோ பார்த்துட்டு இருந்தான்." பதிலளித்தாள்.
உடனே அங்கே செல்லத் திரும்பிய அமிர்தாவை அழைத்து நிறுத்தி, "அம்மு! அங்க தானே போற? அப்படியே இதை அவனுக்கு கொடுத்துடு. ஆமா இன்னிக்கு நீ ஆஃபிஸ் போகலையா? பேகோட காலையிலேயே இங்க வந்திருக்க?!" தமிழ் கேள்வி கேட்க, முறைத்தாள் அமிர்தா.
" சரி..சரி.. கேட்கல போதுமா? என்னமோ பண்ணு போ." கண்களை உருட்டி அவள் முறைத்ததில் சிரித்தபடி பின்வாங்கினாள் தமிழ். "அம்மாக்கும் புள்ளைக்கும் இதைத் தவிர வேற கேட்கவே தோணுது போல," முனகியபடி செல்ல, அது தமிழின் காதில் தெளிவாகவே விழ பக்கெனச் சிரித்தாள்.
அதற்கும் தமிழுக்கு கண்களை சுருக்கி ஒழுங்கு காட்டியவள், அகரனின் அறைக்கதவை திறந்து உள்ளே சென்றாள். திடுமென அவள் உள்ளே வந்ததில் நிமிர்ந்து பார்த்தவன், "உள்ள வரும்போது சத்தம் கொடுத்துட்டு வர மாட்டீங்களா அம்மு?" எனக் கேட்டான்.
அவனது பேச்சில் ஏதோ வித்தியாசம் தெரிய அவளால் சட்டென்று அடையாளம் காண முடியவில்லை. அதை விடுத்து, "அதெல்லாம் முடியாது போடா." என்றவள் அவனது கையில் பழரசத்தை திணித்து விட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
அவளது உரிமையான 'போடா'வில் ஒருநொடி தடுமாறியவன் சுதாரித்துக் கொண்டு, "என்ன மரியாதை எல்லாம் தூள் பறக்குது!?" சிறு புன்னகையுடன் கேலியாகக் கேட்க, எழுந்து அவன் முன்பு வந்து இடுப்பில் கைகளையூன்றி நின்று நன்றாக முறைத்தாள்.
"உனக்கெல்லாம் இதுவே போதும்." என்றவள், "உன்னை எவன்டா அந்த கூந்தலை இங்க கூட்டிட்டு வரச் சொன்னது?" கோபம் குறையாமல் கேட்க, வாய்மீது கைவைத்து கண்களை அகல விரித்தான் அகரன்.
"கூந்தலா!!!" அதிசயித்தவன், "ஒரு காலத்துல தமிழ் பேச தெரியாதுனு க்ளாஸ்ல யார் கூடவும் பேசாம இருந்த அமிர்தாவா இது!!?" நம்ப முடியாத திகைப்புடன் கேட்க அவனது கரத்தில் இருந்த டம்ளரை வாங்கி கீழே வைத்தவள் டேபிளில் இருந்த புக்கால் அவனை அடித்தாள்.
"ஹேய்!! சும்மா விளையாட்டா சொன்னேன். வலிக்குது விடுங்க அம்மு." அவளை தடுத்து புத்தகத்தை பிடுங்கி வைத்தவன் சொல்ல மீண்டும் அவனது பேச்சில் அவளுக்கு ஏதோ வித்தியாசம் நெருடியது.
அவள் அதை ஆராயும் முன், "இப்ப அவன் என்ன செய்தான்னு எனக்கு இந்த அடி விழுது!?" அவள் அடித்த அடியில் வலி எடுத்த இடங்களை தேய்த்தவாறே அவன் கேட்க, அவனது கேள்வியில் பெருமூச்சு விட்டு பொத்தென இருக்கையில் அமர்ந்தாள்.
"சும்மா இருக்க மாட்டாம அவன் போட்ட சாம்பிராணியில எங்கப்பா சாமியாட ஆரம்பிச்சுட்டாருடா." தலையில் கை வைத்து அமர்ந்தவள் நேற்றிரவு நடந்ததை சொல்லத் துவங்கினாள்.
அகரன் குடும்பத்தினரும் நவீனும் கிளம்பிய பிறகு அமிர்தா தனது அறைக்குள் சென்று அடைந்து கொள்ள, சமையலறையில் சுத்தம் செய்து கொண்டிருந்த ரூபாவிடம் வந்த ராகவன் "அந்த பையனைப் பற்றி உன்னோட அபிப்ராயம் என்ன ரூபா?"எனக் கேட்டார்.
அவருக்கு நவீனின் குடும்பம் பற்றி அவன் சொன்னதும் அமெரிக்காவில் சொந்த வீடு வைத்திருப்பவர்கள் நல்ல வசதியாக தான் இருப்பார்கள் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் என்ற ஆசை முளைவிட்டது.
அவளுக்கு சிறு வயதிலேயே இதய அறுவை சிகிச்சை செய்திருக்கிறது அத்தோடு முத்ராவினால் பள்ளியில் நடந்த சம்பவத்தால் அவளுக்கு ஒருமுறை அட்டாக்கும் வந்து விட்டது. இந்நிலையில் அவளை மிகவும் பாதுகாப்பானவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உறுதி அவருள்.
அதற்கு தகுந்தாற்போல நவீனும் இருதய மருத்துவம் படித்திருப்பதால் தங்களது அம்மு பாதுகாப்பாக இருப்பாள் என்ற எண்ணம் தோன்றிய அதேசமயம் அவனது வசதி மற்றும் அவளை விரும்பி மணக்கக் கேட்கிறான் இதெல்லாம் அதை வலுப்பெற செய்தது.
மனைவியிடமும் தன் எண்ணத்தை பகிர்ந்தவர் அவரது கருத்தையும் கேட்டார். ஆனால் "நீங்க சொல்றது எல்லாம் சரிதாங்க. ஆனா நமக்கு இருக்கறது ஒரே பொண்ணு." என்ற ரூபா,
"அவளை கண் காணாத ஏதோ நாட்டுல விட்டுட்டு, நாம எப்படி இங்க நிம்மதியா இருக்க முடியும்? திடீர்னு எதாவது ஆத்திர அவசரத்துக்கு போற தொலைவிலயா இருக்கு அந்த அமெரிக்கா?" நியாயமாக கேட்டார்.
அங்கு மகளது வாழ்வு வளமாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என ராகவன் மீண்டும் மீண்டும் அதையே சொல்ல அதற்கு மேல் அவரிடம் பேச தெம்பில்லாத ரூபா,
" நீங்க முடிவு பண்ணிட்டீங்க. ஆனா அம்முவுக்கு விருப்பம் இருந்தா தான், நான் ஓகே சொல்லுவேன்." மகளை கோர்த்து விட்டு முடித்தார்.
"அவ சின்னப் பொண்ணு ரூபா. அவளுக்கு நல்லது எது கெட்டது எதுனு தெரியாது. நாம தான் இதுல இருக்கற நல்ல விசயத்தை எடுத்து சொல்லி புரிய வைக்கனும். நாம சொன்னா அவ ஓகே தான் சொல்லப் போறா." என்றிட, அவரை ஒருமாதிரி பார்த்தவர் தலையசைத்து கொண்டு அறைக்குள் சென்று விட்டார்.
தன் அறைக்குள் தண்ணீர் தீர்ந்த பாட்டிலில் தண்ணீர் பிடிக்க வந்த அமிர்தா தந்தை பேசிய அனைத்தும் கேட்டவள், 'விட்டா நாளைக்கே அவனோட குடும்பத்தை வரவழைச்சு கல்யாணத்தையே முடிச்சுடுவார் போல' என்றெண்ணி கடுப்போடு தன் அறைக்கு திரும்பி விட்டாள்.
காலை எழுந்தது முதல் அவரிடம் கண்ணாமூச்சி ஆடிய அமிர்தா, தனது லேப்டாப் பேக்கை எடுத்துக் கொண்டு அலுவலகம் செல்வது போல கிளம்பி அகரனின் வீட்டிற்கு வந்து, அவனிடம் அதைத்தான் தற்போது புலம்பிக் கொண்டிருக்கிறாள்.
Author: Vishakini
Article Title: மொழியின் இலக்கணம் நீயடா - 46
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: மொழியின் இலக்கணம் நீயடா - 46
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.