அத்தியாயம் - 49
ஒரு வாரத்திற்கு மேல் கடந்த நிலையில் அகரன் அதிக நேரம் தனிமையில் கரைத்தான். தமிழ் வந்து கேட்ட போது கூட தனது ஆராய்ச்சி படிப்பு பற்றிய தேடலில் இருப்பதாகக் கூறி சமாளித்தான்.
அன்று மாலிலிருந்து கிளம்பிய அகரன் நேராக வீட்டிற்கு வந்து தன் அறைக்குள் அடைந்து கொண்டான். நவீனிடம் அமிர்தா என்ன பேசினாள் என்று தெரியவில்லை.
அடுத்து வந்த இரு தினங்களில் 'முக்கியமான வேலை இருக்கிறது அமெரிக்கா செல்ல வேண்டும்' என்று கூறி கிளம்பி விட்டான் நவீன். ஏன் எதற்காக என்று எதுவும் சொல்லவில்லை.
அமிர்தாவின் வீட்டில் பெண் கேட்டதைப் பற்றி தமிழ் வினவியதற்கு, " அந்த விசயமா தான் ஆன்ட்டி கிளம்பிப் போறேன்." என்று மட்டும் மொட்டையாக கூறியவனின் பதிலிலிருந்து அகரனால் எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை.
அன்றைய தினத்திற்கு பிறகு அமிர்தாவும் அந்த வீட்டிற்கு வராததால் என்னாயிற்று என எதுவும் தெரியாமல் தலை சுற்றியது. தன்னை அந்த சுழலிலிருந்து வெளிக் கொணர படிப்பைப் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கி விட்டான்.
அகரனுக்கான பகல் சாப்பாடு, தண்ணீர் அனைத்தும் அறைக்கே வந்து தமிழ் தந்து விட, (இல்லை என்றால் அதற்காக கூட வெளியே வராமல் இருந்தான்.) பகல் முழுவதும் அறைக்குள் இருப்பவன் தந்தை வந்ததும் இரவு மட்டும் மூவராக உணவு உண்பார்கள்.
ஒரு வாரத்திற்கு மேலாக அகரனும் அறைக்குள் மடிக்கணினியில் தன்னைப் புதைத்துக் கொள்ள, வீடு வீடாக இல்லாததை போல தோன்றிய தமிழுக்கு வெறுமையாக இருந்தது.
"நீயும் என்னை மறந்துட்டல அம்மு? எப்பவும் வாரத்துல ரெண்டு மூணு முறையாவது வருவ. இப்ப நீ இங்க வந்தே பத்து நாளுக்கு மேல ஆகுது. எனக்கு தனியா இருக்க எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?"
"அவனா!? அவன் ரூம்க்குள்ள முட்டை எதாவது போட்டுட்டானா தெரியல, அதையே அடைகாத்துட்டு இருக்கான். நீயும் வர மாட்டீன்ற. அவ்வளவு தான்ல.. நான் இனிமே உங்கூட பேச மாட்டேன் போ."படபடவென பொரிந்த தமிழ் அழைப்பைத் துண்டித்து விட்டாள்.
ஒரு வாரத்திற்கு பிறகு அப்போது தான் அவனாக வெளியே வந்த அகரனுக்கு தாயின் பேச்சைக் கேட்டு ஒரே குற்ற உணர்வாகிப் போனது. தனது சிந்தனையில் தாயை கவனியாமல் போனோமே என்று.
அலைபேசியை ஸோஃபாவில் தூக்கிப் போட்ட தமிழ் ரிமோட்டை கையில் வைத்து எதேதோ மாற்றிக் கொண்டிருக்க, அவளருகில் வந்து அமர்ந்த மகனை அதிசயமாக திரும்பி பார்த்தவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அவளது செய்கையில் புன்சிரிப்புடன் "ஸாரிம்மா! நான் கொஞ்சம் மூட் அவுட்ல இருந்தேன். என்னை நானே டைவர்ட் செய்ய பிஸியாகி போனதுல உங்கள கவனிக்கல. ரியலி ஸாரி!" கண்கள் சுருக்கி பாவமாக மன்னிப்பு கேட்டான்.
"உனக்கு மூட் அவுட் ஆச்சுனா முதல்ல எல்லாம் எங்கிட்ட தானே ஷேர் செய்வ, நீ மட்டுமே யோசிக்கறதுக்கு நான் வேற ஏங்கிள்ல யோசிச்சு சொல்யூஷன் சொல்றேன்னு அப்ப எல்லாம் தேங்க்ஸ் சொல்லுவ. ஆனா இப்ப.. நீ ரொம்ப மாறிட்ட கண்ணா!" சற்று வருத்தமாகக் கூறினாள் தாய்.
"தப்பு தான்ம்மா. அதான் ஸாரி கேட்கறேனே, மன்னிக்கக் கூடாதா?" தொண்டையை இருவிரலால் பிடித்து மன்னிப்பை யாசித்தவன் தாயின் கன்னத்தை கைகளில் தாங்கி கொஞ்சி சமாதானம் செய்ய, சரியாக உள்ளே வந்தாள் அமிர்தா.
" இப்ப என்ன நடந்துச்சுனு கால் பண்ணி என்னை கலாய்க்கிறீங்க ஆன்.." சத்தமாகக் கேட்டபடி வந்தவள் அகரனும் தமிழுடன் இருப்பதைப் பார்த்து வாயை மூடிக் கொண்டு தமிழை முறைத்தாள்.
"அதான் உங்க புள்ள கொஞ்சிட்டு தானே இருக்காரு. அப்றம் எதுக்கு என்னை கூப்பிட்டீங்களாம்?" அவள் முறுக்கிக் கொண்டு கேட்க, மகனது கையை எடுத்து விட்ட தமிழ் எழுந்து வேகமாக சென்று அமிர்தாவின் கைகளை பற்றிக் கொண்டாள்.
தாயை புன்சிரிப்புடன் கண்டவன் எழுந்து தனது அறைக்கு சென்றுவிட, செல்லும் அவனுக்கு உதட்டைச் சுழித்து பழிப்பு காட்டியவள்,
"நான் ஒத்தை ஆளா எத்தனை பேரை தான் சமாளிக்கறது ஆன்ட்டி? இதுல நீங்க வேற தனியா சென்டிமெண்ட் ட்ராக் போட்டுட்டு.." சலிப்புடன் கூறியவள் பொத்தென அமர்ந்தாள்.
அவள் பிரச்சனை என்றதும், "அடடா! இந்த இளவரசிக்கு அப்படி என்ன பிரச்சினை?! யாருனு சொல்லு நாம ஒருவழி பண்ணிடலாம்." தான் பேசிய உடனே அவள் பறந்து வந்த செயலில் தமிழின் மனநிலை சுத்தமாக மாறிப்போனது.
"ம்ம்ம்.. எல்லாம் உங்க தங்கமகன் தனியா வராம, கூட இழுத்துட்டு வந்த நவீனத்தால வந்தது தான். அதை சமாளிச்சா கூட, இவங்க பண்ற அட்டகாசத்தை சமாளிக்க முடியல." கண்களை உருட்டி சலிப்போடு கூறினாள்.
"எதாவது பிரச்சனையா அம்மு? நவீன் வேற அவசரமா ஊருக்கு போயிட்டான். நீ அவனுக்கு ஓகே சொல்லிட்டனு உங்கப்பா சொன்னாரே!" நடந்தது என்னவெனத் தெரியாமல் தமிழ் வினவ, அகரனின் அறைக்கதவை பார்த்தாள் அமிர்தா.
கதவை முழுதாக மூடாமல் அவளது பேச்சை கவனமாக கேட்டுக்கொண்டு இருந்த அகரன் தமிழின் இந்த கேள்வியில் காதைக் கூர்மையாக தீட்டி வைத்து காத்திருக்க, எழுந்து வந்தவள் அவனது அறைக்கதவை முழுதாக அடைத்து விட்டாள்.
கதவை அடைத்தவள் தமிழிடம் மெதுவான குரலில் பேச, அதற்கு மேல் அவனால் எதையும் கேட்க முடியவில்லை. அதனால் சில நொடிகளில் வேகமாக வெளியே வந்தவன் கேட்டது..
"நான் சொன்னதும் அவங்களும் ஓகே சொல்லிட்டாங்க." சிரிப்புடன் அமிர்தா சொல்ல, "ஹே!! கங்ராட்ஸ்! அப்ப சீக்கிரமே கல்யாணம்னு சொல்லு!" தமிழ் அவளை நெட்டி முறித்து மகிழ்ச்சியுடன் கூறியதைத் தான்.
Author: Vishakini
Article Title: மொழியின் இலக்கணம் நீயடா - 49
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: மொழியின் இலக்கணம் நீயடா - 49
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.