• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜனின் ‘இயற்கை’ - 1

ரோசி கஜன்

Administrator
Staff member
வாசகர்களுக்கு அன்பான வணக்கம்!

என் இருபதாவது நாவலான, இயற்கையை உங்களோடு இங்கு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி!

இக்கதை, என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு முதல் எழுத ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக குருவி கூடு கட்டுவது போலவே தான் எழுதி முடித்தேன்.
பயணங்கள், அதுவும் இயற்கையோடு பயணப்படுவதை பெரிதும் விரும்பும் நாங்கள், நிறைய நாட்கள் திட்டமிட்டு, கனவு என்றே சொல்லலாம், 2018 கோடை விடுமுறையில் 'சான்ஸ்பிரான்சிஸ்கோவிலிருந்து நயாகரா வரை' இரு கிழமைகளுக்கு ‘ரோட் ட்ரிப்’ செல்லத் திட்டமிட்டோம். நெதர்லாந்தில் இருந்து புறப்பட்டு வெற்றிகரமாக அந்தப் பயணத்தை முடித்து, பின் கனடா சென்று அங்கிருக்கும் எங்கள் உறவுகளோடு சேர்ந்து சுற்றி விட்டு வந்தோம்.

முழுமையாக இரு மாதங்கள்; ஒவ்வொரு நாளுமே மறக்கவியலா பல அழகிய நினைவுகளை, சந்தோசத் துளிகளை மனதில் பதித்திட்ட அந்த அனுபவங்களை வைத்தே இக்கதை நகர்கிறது. கதையில் வரும் மலர் பாத்திரம், என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய மாமியை(கணவரின் தாயார்) மனதில் கொண்டும், மிகுதி ஒவ்வொருவரும் என் உற்ற உறவுகளை மனதில் வைத்தும் அவர்களின் குணாதிசியங்களோடே இயல்பாக எழுதியுள்ளேன். அடுத்து, வெளிநாடு வாழ் இளைய தலைமுறை பற்றிய பார்வை, கதைகள், படங்களில் ஏன் நம் சொந்த நாட்டு உறவுகள் மத்தியில் உள்ள பொதுவான பார்வையில் எனக்கு எப்போதுமே முரண் உண்டு. ஏனென்றால் தளம்பித் திரியும் மனிதர்கள் எல்லா இடங்களுக்கும் எல்லா காலகட்டத்திற்கும் பொது! இங்கு வளரும் பிள்ளைகள், முற்று முழுதான வேறுபட்ட சூழலில், தாம் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் பலவற்றையும் சமயோசிதமாகச் சமாளித்து ‘நான் இன்னார்’ என்பதில் உறுதியாக நிற்பது காண்கையில் மிகுந்த சந்தோசமாக உணர்கிறேன். அதை, எங்கள் வீட்டு இளையவர்கள் மூலம் இக்கதையில் சொல்ல முயன்றிருக்கிறேன். எல்லாமே வளர்ப்பில்தான். கதையில் மலரும் நேசம் மட்டும் முற்றிலும் கற்பனை! ஹா...ஹா...

எப்படி இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நிமிடத் துளியையும் நாங்கள் இரசித்து மகிழ்ந்தோமோ அப்படியே உங்களையும் இரசித்து மகிழச் செய்யும் வகையில் கதை நகர்த்தியுள்ளேன் என்று நம்புகிறேன். இனி, நீங்கள் தான் சொல்லவேண்டும்.

பிரியங்களுடன்,
ரோசி கஜன்.




அணிந்துரை

எழுத்தாளர் ரோசி கஜன் அவர்களின் படைப்புலகம் இயல்பானது. பாவனைகள் அற்ற மொழிநடையும், எளிமையான சித்தரிப்பும் கொண்டது. இலகுவான இலங்கைத் தமிழில் புலம் பெயர் தமிழர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இவரது ஆக்கங்களில் நிதானமும் பொறுமையும் குடும்பச் சூழலை அனுசரித்து நடக்கும் மனிதர்களுமே கதை மாந்தர்கள்! எதார்த்தமான குடும்பச் சிக்கல்களும் உணர்வுச் சிதறல்களுமே இவரது படைப்புலக ஆடுகளம்!



‘இயற்கை’யும் இவ்விதமே! பட்டுப் பொதியின் ஊடே பொதிந்து பரிசளிக்கும் விதமாய் மென்மையானதோர் காதல் கதையை வட அமெரிக்காவின் சாலை வழி பயணிக்கும் ‘road trip’ வாயிலாக ‘travalogue’ புதினமாக விவரித்திருக்கிறார் ரோசி. கனடாவின் Lac-Cayamant - லிருந்து புறப்பட்டு, அமெரிக்காவின் நயாகரா வழியே டொராண்டாவிலிருந்து மேற்குக் கோடியில் உள்ள சான் பிரான்சிஸ்கோ வரை கிழக்கு மேற்காக நீளும் இந்நாவல் வெறும் பயணக்கட்டுரை தானா என்றால், இல்லை, அதனூடே அன்பால் பிணைந்துள்ள நல்லதோர் குடும்பத்தையும், பயணத்தின் வழியே வெளிப்படும் காதலையும் அழகான மலர்கொத்தாகப் பின்னி அவர் பரிசளித்திருக்கும் விதம் நம் ரசனைக்கு விருந்தாகிறது.



கனடா தொடங்கி நயாகரா, பென்சில்வேனியா, நியூயார்க், ஒஹோயோ, சிகாகோ, கொலராடோ, வியாமிங், யுதா, லாஸ் வேகாஸ் எனப் பல இடங்களையும் காட்டி கலிபோர்னியாவை வந்தடையும் சாலை வழி பயணத்தில் வாசகர்கள் நாமும் கதை நாயகர்களுடன் ‘போர்ட் ட்ரான்சிட்’-ல் பயணிக்கிறோம். எழுத்தாளர் சுட்டும் சுற்றுலாத் தளங்களைக் கண்டு மகிழ்கிறோம், அவருடைய ரசனையான வர்ணிப்பின் அழகை பருகுகிறோம். கண் முன் விரியும் இயற்கையின் வனப்பை வியக்கிறோம்.



Lac-Cayamant-இன் அழகை, அதன் விஸ்தீரணத்தை -

ஏரியின் அமைதியான நீரோட்டத்துக்கும், மழைச் சாரலுக்கும் இடையே முகிழ்த்து மொட்டு விடும் இரு இளம் உள்ளங்களின் இனம் புரியா பரிதவிப்பை -



நயாகரா நதியின் ஊடான படகு பயணத்தில் பனித்துளிகளாய் சிலீரென்று வெளிப்படும் காதல் மென் சாரலாய் குளிர்விப்பதை -

வேந்தனின் நம்பிக்கையை, ஆளுமையை, தன் காதல் மீதான தேடலுக்காக இறங்கி நிற்கும் அவன் எளிமையை -

இலக்கியாவின் குறும்பை, இளமைக்கே உரிய துணிச்சலை, சீண்டல்கள் வழி அவள் வெளிப்படுத்தும் நேசத்தை -

கவி, இலக்கியா இடையே உள்ள பிரியத்தை, பிணைப்பை -

இரண்டாம் தலைமுறையாக அயல்நாட்டில் வேரூன்றி நின்றாலும், நமக்கான மதிப்புகளை (values) தொலைத்துவிடாமல் பேணும் இளம் தலைமுறையை -

தமிழ் குடும்பங்களுக்கான கட்டமைப்புடன் பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் மூத்த தலைமுறையினரின் அன்பை, கண்டிப்பை, நெகிழ்வை -

எழுத்தாளர் ஒவ்வொரு பின்னலையும் அழகாகக் கையாண்டு இருக்கிறார். காதல் கை கூடி விடும் என்று நினைக்கும் நொடியில் இலக்கியாவின் தயக்கம் எதனால், பாசத்திற்கு முன்னால் காதலைக் கைவிடுகிறாளா, அவள் குறும்பின் அடிக்கல் சுட்டும் உண்மைகள் என்ன என்று சுவாரஸ்யமாக விவரிக்கும் எழுத்தாளர், அமைதியாகச் செல்லும் நதியின் ஆழம் போலவே சில அர்த்தமான விசயங்களையும் அதிராமல் வாசகர்களுக்குக் கடத்துகிறார். பக்கங்களைப் புரட்ட காத்திருக்கும் உங்களுக்கு மென்மையும் எதார்த்தமுமான வாசிப்பனுபவத்தை இந்நாவல் தவறாது வழங்கும் என நம்புகிறேன். மென்மேலும் அழகான படைப்புகளை எழுத எழுத்தாளருக்கு என் அன்பும் வாழ்த்துகளும்! இப்படியோர் வாய்ப்பை எனக்கு அளித்தமைக்கு என் நன்றிகள்!


அன்புடன்,

ஹேமா ஜெய்


அத்தியாயம் 1- 1
அத்தியாயம் 1-2
 
Last edited:

Goms

Well-known member
இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும், காதலித்து கல்யாணம் கட்டின ஒரு ஜோடி நிச்சயம் இருக்கும்..... 😜😂😂😂

நீங்க சொல்லி இருக்கிற மாதிரி, உங்கள் உறவுகள், உங்கள் பயணங்கள், பார்வைகள், சமாளித்த சவால்கள், எல்லாத்தையும் காட்டப்போற நீங்கள் நேசம் மட்டும் கற்பனை என்று சொல்லி ஏன் பின் வாங்கறீங்க, உண்மையான நேசமாயிருந்தா அதுவும் தான் நிறைவேறட்டுமே😜🥰🥰🥰....நாங்க நெஞ்சார வாழ்த்துவோம்😜....வம்பு பண்ண மாட்டோம்....😜😂

அதுசரி, இயற்கையா ஊரைச் சுற்றி காட்ட மாட்டீங்களா, ஊர் சுற்றும் மனிதர்கள்தான் காட்டப் போறீங்களா?😜 இந்த அத்தியாயம் முழுசும் கவின் சேட்டையை சமாளிப்பதை சுத்திக் காட்டியிருக்கீங்க....🤣🤣🤣

வேந்தன் யாரு, இலக்கியாவை முடி சூடப்போகும் வேந்தனோ? 😜😂😂😂
 

ரோசி கஜன்

Administrator
Staff member
இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும், காதலித்து கல்யாணம் கட்டின ஒரு ஜோடி நிச்சயம் இருக்கும்..... 😜😂😂😂

நீங்க சொல்லி இருக்கிற மாதிரி, உங்கள் உறவுகள், உங்கள் பயணங்கள், பார்வைகள், சமாளித்த சவால்கள், எல்லாத்தையும் காட்டப்போற நீங்கள் நேசம் மட்டும் கற்பனை என்று சொல்லி ஏன் பின் வாங்கறீங்க, உண்மையான நேசமாயிருந்தா அதுவும் தான் நிறைவேறட்டுமே😜🥰🥰🥰....நாங்க நெஞ்சார வாழ்த்துவோம்😜....வம்பு பண்ண மாட்டோம்....😜😂

அதுசரி, இயற்கையா ஊரைச் சுற்றி காட்ட மாட்டீங்களா, ஊர் சுற்றும் மனிதர்கள்தான் காட்டப் போறீங்களா?😜 இந்த அத்தியாயம் முழுசும் கவின் சேட்டையை சமாளிப்பதை சுத்திக் காட்டியிருக்கீங்க....🤣🤣🤣

வேந்தன் யாரு, இலக்கியாவை முடி சூடப்போகும் வேந்தனோ? 😜😂😂😂
ஹா..ஹா... உண்மையாவுமே அது கற்பனைதான் . இயற்கைச் சுற்றுலா வந்து கொண்டே இருக்கு. மிக்க நன்றி கோம்ஸ்
 
Top Bottom