Episode 2

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Jun 2, 2026
24
35
13
Virudhunagar
வரம் 2
நவநீதன் வீட்டில் அவன் அப்பா கண்ணப்பன், அம்மா அஞ்சனா தாத்தா காத்தவராயன் அமைதியாக நின்றிருக்க குதிகுதியென குதித்துக்கொண்டிருந்தான் துவாரகாவின் கணவன் மாயவன்.

“என்ன தைரியம் அவளுக்கு. அம்மா செத்துப்போன துக்கம் குறையும் வரை பிறந்த வீட்டில் இருந்துட்டு வரட்டும் னு விட்டா தெனவெடுத்துப் போய் இந்த வீட்டு ஆம்பளையோட பழக்கம் வைச்சு, கரு உண்டாகி அதைக் கலைக்கிற அளவு போய் இருக்காளா?

புதுப்பழக்கமா? இல்ல எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே இரண்டு பேருக்கும் பழக்கம் இருக்கா?” என்ன நடந்தது என்று பெயருக்கு கூட விசாரிக்காமல் இது தான் நடந்திருக்கும், தனக்கு முன்னால் இருப்பவர்கள் இப்படியான ஆட்களாகத் தான் இருப்பார்கள் என தானாகவே முடிவு செய்து அதன்படி ஆடிக்கொண்டிருந்தான்.

தன் மகனின் ஒழுக்கத்தின் மீது விழும் தூற்றல்களைக் கேட்க முடியாமல் காதுகளைப் பொத்திக்கொண்டார் அஞ்சனை. அவரின் அநாதரவான நிலையைக் கண்டும் அவன் மனம் ஆறவில்லை. மனைவியின் மீது இருக்க வேண்டிய நம்பிக்கையில் துளி அளவு கூட இல்லாமல், கண்டபடி பிதற்ற ஆரம்பித்தான்.

“ஆமா, உங்க பையனுக்கு அந்த அமைச்சர் பொண்ணு ஐஸ்வர்யாவைக் கல்யாணம் பண்ணி வைக்கிறதா தானே பேச்சு. ஒருவேளை அந்தக் கல்யாணத்துக்கு இவ தடையா வந்திடுவாளோன்னு தான் அவங்க உறவை பிரிச்சு அவசர அவசரமாக அவளை என் தலையில் கட்டி வைச்சீங்களா?” கோபமாய் கேட்டான்.

“வாய்க்கு வந்தபடி பேசாதீங்க தம்பி. எங்க பிள்ளைங்களுக்கு தப்பு பண்ணத் தெரியாது. நான் அடிச்சு சொல்றேன், அவங்களுக்கு நடுவில் எந்த சம்பந்தமும் இருக்காது.

நீங்க துவாரகாவை எப்படி நடத்துனீங்களோ, இங்க வந்ததில் இருந்து திரும்ப புருஷன் வீட்டுக்குப் போக மாட்டேன்னு தான் அவ சொல்லிக்கிட்டு இருந்தா.

குழந்தை உருவான விஷயம் எங்களுக்கோ, உங்களுக்கோ தெரிஞ்சா அவளைக் கட்டாயப்படுத்தியாச்சும் உங்ககூட அனுப்பி வைச்சிடுவோமோங்கிற பயத்தில் தான் இப்படி பண்ணி இருப்பா.” உரத்த குரலில் சொன்னார் நவநீதனின் தாத்தா காத்தவராயன்.

“நீங்க சொல்றது உண்மையா இருந்தா எதுக்குய்யா புருஷன்னு நவநீதன் கையெழுத்து போட்டிருக்கான். என்ன நினைப்பில் அதை செஞ்சான்.” மாயவன் கேட்க, அதற்குப் பதில் இல்லை அங்கிருந்த யாரிடமும்.

“அவனைச் சொல்லி என்ன பண்றது. நான் தாலி கட்டின தரித்திரத்தை சொல்லணும். எங்க வீட்டில் அவ செஞ்சு வைச்ச குளறுபடிக்கு காத்தோட சேர்த்து நாலு இழுப்பு இழுத்தேன். அதுக்காக என்னைக் கழட்டி விட்டுட்டு மச்சானைக் கட்டிக்க நினைக்கிறாளா?” சூடாகக் கேட்க, காதுகளைப் பொத்திக்கொண்ட காத்தவராயன்,

“பேச்சுக்கு கூட அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நான் உயிரோட இருக்கும் வரை அப்படி நடக்க நான் விடமாட்டேன்.” என்றார்.

அவரை ஒரு பார்வை அழுத்தமாகப் பார்த்த மாயவன், “அவளை என் வீட்டுக்கு அடிச்சு இழுத்துட்டு போறதுக்கு முன்னாடி, உங்களை நாலு வார்த்தை நல்லா கேட்டுட்டுப் போகலாம் னு தான் இங்க வந்தேன்.

இப்பவே போறேன். என் பொண்டாட்டி கூட கள்ளத்தொடர்பு வைச்சுக்கிட்ட உங்க வீட்டு பையனுக்கு நல்ல பாடத்தை கத்துக்கொடுத்துட்டு என் பொண்டாட்டி காலை ஒடைச்சு தூக்கிட்டு போறேன். அப்ப தான் பேசாம வீட்டோட கிடப்பா.” கடுமையாய் கத்தினான்.

“நீங்க சொல்ற படி நடந்தா போகப்போறது என் வீட்டு மரியாதை மட்டும் இல்ல, உங்களோட மரியாதையும் தான். கொஞ்சம் பொறுமையா இருங்க. எதுவா இருந்தாலும் அவங்க இரண்டு பேரும் இங்க வந்த பின்னால் பேசிக்கலாம்.” காத்தவராயன் சொல்ல, “வராமலே போயிட்டா?” சந்தேகமாகக் கேட்டான் மாயவன்.

“அப்படி ஒரு நினைப்பு இருந்திருந்தா அவங்க எப்பவோ போய் இருப்பாங்க. அப்படி செய்யலையே. கண்டிப்பா திரும்ப வருவாங்க. வந்த பிறகு நீங்க என்ன செய்ய நினைச்சாலும் நான் குறுக்க வரமாட்டேன். ஆனா எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த விஷயம் வீட்டு வாசலைத் தாண்டி வெளியே போகக் கூடாது.” கணீர் குரலில் சொல்லிவிட்டு தன் அறைக்குள் வந்தார் காத்தவராயன்.

அவ்வளவு நேரம் இருந்த மிடுக்கு சட்டென குறைந்து போனது அவரிடத்தில். பேரன் நவநீதனைப் பற்றி அவனைப் பெற்றவர்களை விட காத்தவராயனே நன்றாக அறிவார். பேரன் நடத்தை மேல் துளியும் சந்தேகம் இல்லை. ஆனால் அவன் இவ்வளவு தூரம் இறங்கி இருக்கிறான் என்றால் கண்டிப்பாக விஷயம் விபரீதமானது என்பதை யூகித்தார்.

பேத்திக்கு அவள் புகுந்தகத்தில் பெரிய கொடூரம் நிகழ்ந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார். பேரன் பேத்தியை அவள் கணவனிடம் இருந்து காக்க நினைக்கிறான், அவளுக்குப் பிடிக்காத வாழ்க்கையில் இருந்து விடுதலை கொடுக்க நினைக்கிறான் என்பது வரை தான் அவரால் யோசிக்க முடிந்தது. ஆனால் அதையே அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்னும் போது நவநீதனின் ஒட்டுமொத்த திட்டமும் தெரிய வரும்போது அந்த இடத்திலேயே அவருக்கு மாரடைப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற அவர் செய்த செயல்கள் எத்தனை ஆழமானது என்பதை அவர் மட்டுமே அறிவார். அனைத்திற்கும் தன் அன்புப் பேரனே எமனாக வந்து நிற்பான் என கற்பனையிலும் அவர் நினைத்ததில்லை.

அறைக்குள் மாட்டப்பட்டிருந்த மகள் மாதங்கியின் மாலையிட்ட புகைப்படம் அருகே வந்தவர், “உனக்கு நான் செஞ்ச பாவத்துக்கு தான் இப்படி நடக்குதா? இல்ல நீ தான் அவனைத் தவறா வழிநடத்துறியா?” தனக்குள் கேட்டபடி மகளின் உருவத்தையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தார்.

காத்தவராயன் சொன்ன வார்த்தைகளில் இருந்த நிதர்சனம் புரிய, தன் கை மீறத்துடித்த மனைவி என்னும் அடிமையை இப்போதே கழுத்தைப் பிடித்து இரத்தம் குடிக்க முடியாத கூண்டுப் புலியாக கடும் கோபத்தோடு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் மாயவன்.

தாலி கட்டி தன் வீடு வந்த நாள் முதல் எதற்கெடுத்தாலும் பயந்து செத்த கோழை மனைவி இன்று இத்தனை பெரிய முடிவு எடுத்திருக்கிறாள் என்றால், மழைக்காளான் போன்ற அவளின் திடீர் தைரியத்திற்குக் காரணம் அவளோடு இருக்கும் நவநீதன் தான் என்பதில் அவனுக்கு மாற்றுக்கருத்து இல்லை.

மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தை தன் வீட்டு வாரிசு என்பதிலும் அவனுக்குத் துளியும் சந்தேகம் கிடையாது. கடவுளே வந்து துவாரகாவைப் பற்றி தவறாகச் சொன்னால் கூட, அவளுக்கு அந்த அளவு தைரியம் கிடையாது என்று உறுதியாக எதிர்வாதம் செய்வான் மாயவன்.

நிலைமை இப்படி இருக்க, சற்று முன்னர் மனைவியைப் பற்றி அவன் தவறாகப் பேசியதற்குக் காரணம் அவள் குழந்தையை அழிக்க நினைத்த கோபம் இல்லை. விஷயம் அவனுக்குத் தெரிய வந்திருந்தால் அவனும் இதே முடிவிற்குத் தான் வந்திருப்பான்.

தனக்கு அடிமையாக இருந்த தன் மனைவி துவாரகா தன்னிச்சையாக முடிவெடுத்து தன்னை விட்டுப் பிரிய நினைத்ததையும், அதை நிறைவேற்றும் படிநிலையில் குழந்தையைக் கலைக்க முடிவெடுத்திருக்கிறாள் என்பதையும் தான் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவனைப் பொறுத்தவரை துவாரகா தங்க முட்டையிடும் வாத்து. அதை அடை வைத்து உடல்நிலையைக் கெடுக்க விடுவதோ, இல்லை வெட்டி கறி சமைக்கவோ அவன் முட்டாள் கிடையாது.

துவாரகாவை தன் பாதுகாப்பில் காலத்திற்கும் வைத்துக்கொள்வது தான் அவன் திடமான எண்ணம். அதற்கு எதிராக மனைவி காய் நகர்த்துகிறாள் என்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

தற்போது அவள் இருக்கும் இடத்தில் இருந்து அவளை இழுத்துக்கொண்டு தன் வீடு செல்ல வேண்டும். செய்த தவறுக்கு அவளுக்கு மொட்டையடித்து அறைக்குள் அடைத்து வைக்க வேண்டும் என கைகள் பரபரத்தாலும், காத்தவராயன் சொன்ன மானம், மரியாதை என்கிற வார்த்தையில் அமைதியாக இருந்தான் மாயவன்.

முன்பு அவள் மாதங்கியின் மகள், காத்தவராயனின் பேத்தி. ஆனால் இப்போது அவள் மாயவனின் மனைவி என்கிற பட்டத்தை தானே சுமந்து கொண்டிருக்கிறாள். அவள் செய்த தவறுக்கு தான் ஊர் வாயில் அவலாக மெல்லப்படுவதை மாயவன் விரும்பவில்லை. அதனால் கழுதைப்புலி போல் இரவு முழுவதும் அந்த வீட்டை கால்களால் அளந்தான். தன்னை மீறி மனைவி எங்கே சென்றுவிடுவாள் என்கிற மெத்தனம் அவனிடம் அதிகமாகவே இருந்தது. ஆனால் மாரியம்மனுக்கு காவலாக கருப்பண்ணசாமி இருப்பதை மறந்துவிட்டான் போலும்.

தங்கள் அறைக்குள் சோகமாக அமர்ந்திருந்தார் அஞ்சனை. கணவர் கண்ணப்பன் உள்ளே வந்ததும், “இந்தப் பையனுக்கு எதுக்காக இந்த வேண்டாத வேலை. துவாரகா அவன்கிட்ட உதவி கேட்டு இருந்தாலும் அவன் நம்மகிட்ட தானே சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு அவனா ஒரு முடிவுக்கு வருவானா? அதுவும் எத்தனை பெரிய முடிவு.

அவனைச் சொல்லி என்ன? முதலில் இந்த துவாரகாவுக்கு எங்க போச்சு புத்தி. ஊர் உலகத்தில் பிள்ளை இல்லாம எத்தனை பேர் கஷ்டப்படுறாங்க. இவ என்னடான்னா கிடைச்ச பிள்ளையை வாறிக்கொடுக்கத் துணிஞ்சிருக்கா.” கோபமாகப் பேசினார்.

“மாதங்கி சாவுக்கு வந்த துவாரகா இந்தக் கல்யாண வாழ்க்கை வேண்டாம், மாயவன் வீட்டுக்கு திரும்பப் போக மாட்டேன்னு நம்மகிட்ட சொல்லத்தான் செஞ்சா. ஆனா நாம என்ன ஏதுன்னு கூட விசாரிக்காம புருஷன் வீடு கொஞ்சம் முன்னப்பின்ன தான் இருக்கும். நீ பொறுத்து தான் போகணும் னு சொல்லி அவளை அமைதியாக்கத்தான் செஞ்சோம். அதனால் தான் குழந்தை விஷயத்தை நம்மகிட்ட சொல்லாம நவநீதன்கிட்ட சொன்னாளோ என்னவோ.

நாம அவகிட்ட என்ன பிரச்சனைன்னு கேட்டு இருக்கணும் அஞ்சனை. நம்ம பையன் இந்தளவு துணிஞ்சு இருக்கான்னா கண்டிப்பா சின்னப் பிரச்சனையா இருக்காது.” உறுதியாகச் சொன்னார்.

அஞ்சனைக்கும் கணவன் வார்த்தைகளில் இருந்த உண்மை புரிந்தது. ஆனால் அத்தை மகளுக்கு உதவி செய்யப் போய் மகன் தவறான பெயரைச் சம்பாதித்துவிட்டானே என்று தாயாய் அவர் மனம் பதறியது.

இதுவரை செய்தது போதாது என்று அவர் மகன் அதிரடியாக பலப்பல வேலைகள் செய்யக் காத்திருக்கிறான். அதனால் அவன் மானம் மட்டும் அல்லாமல் துவாரகாவோடு சேர்த்து மொத்த குடும்ப மானமும் போகப்போகிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

பழைய பிரச்சனைகளுக்கு தகுந்த தீர்வையும், புதிதாக பல பிரச்சனைகளையும் கொடுக்கக் கூடிய அந்த நாள் அழகாக விடிந்தது. அன்று தான் தங்கள் வீட்டில் அமைதி நிலைத்திருக்கப் போகிற கடைசி நாள் என்று தெரியாமல், இன்னும் சற்று நேரத்தில் மகன் நாத்தனாரின் மகளோடு வந்துவிடுவான், அதன்பிறகு என்னென்ன கூத்து நடக்குமோ என்னும் பயம் இருந்தாலும், தன் வீட்டு செயல்முறையில் சின்ன மாற்றம் வந்தாலும் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வந்துவிடும், அதற்கு அனுமதிக்கக்கூடாது என்று தன்னோடு சொல்லிக்கொண்டு வழக்கமான காலை வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் அஞ்சனை.

காலை கடந்து, மதியம் வந்து மாலையும் வந்துவிட்டது. ஆனால் முந்தைய நாள் மருத்துவமனை சென்ற இருவரும் வந்து சேரவில்லை எனவும் அஞ்சனையை பயம் பீடித்தது. மகனுக்கு அழைத்துப் பார்க்க ஸ்சுவிட் ஆஃப் என வந்தது.

மனைவி வந்ததும் அவளைக் கண் மண் தெரியாத அளவு கண்டிக்க, தண்டிக்க வேண்டும் அதற்கு தனக்கு ஆனை பலம் வேண்டும் என்று நினைத்த மாயவன் விடிந்ததும் மூக்கு முட்ட குடித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிக்க, வீட்டு மாப்பிள்ளை இப்படி அட்டகாசம் செய்கிறான் என்று தெரிய வந்தால் குடும்ப மானம் போய்விடும் என்று நினைத்த காத்தவராயன் பேத்தியின் கணவனை அறைக்குள் தள்ளி பூட்டி வைத்தார். காலை வயிறு நிறைய உண்டிருந்ததால் மாலை வந்தது கூட தெரியாமல் நல்ல உறக்கத்தில் இருந்தான் மாயவன்.

“இவனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லைன்னு தானேப்பா மாதங்கி சொன்னா.” மாயவன் இருந்த அறையைப் பார்த்து குழப்பத்துடன் கேட்டார் கண்ணப்பன். பெறாத மகளாக மார்பில் போட்டு வளர்த்த மருமகளின் எதிர்கால வாழ்க்கை இந்த மாயவனே என்னும் போது அவரின் மனதில் வருத்தம் சூழ்ந்தது.

குடியும், சூதும் எப்பேற்பட்டவனையும் வீழ்த்திவிடும் ஆயுதம். கூடுதலாக அது சாதாரண மனிதனை மிருகமாக்கும், மிருகத்தை சாத்தானாக்கும். இவனிடம் நம் வீட்டு சின்னப்பெண் என்ன பாடு பட்டிருப்பாளோ என வருந்தினார்.

“எல்லாம் அந்த மாதங்கியால் வந்த வினை தான். எந்த இலட்சணத்தில் விசாரிச்சாளோ. நான் சொன்னது எல்லாம் துவாரகாவோட நல்லதுக்கு தான்னு புரிஞ்சுக்காம, வெட்டி வீராப்பில் என் பொண்ணுக்கு நானே மாப்பிள்ளை பார்த்துக்கிறேன்னு கண்டவனுக்கும் பொண்ணைக் கட்டி வைச்சுட்டு அவ போய் சேர்ந்துட்டா. அந்தப் பாவத்தோட பலனை நாம சுமக்க வேண்டியது இருக்கு. அவ தான் சுமையா காலத்துக்கும் நம்மளோட காலடியில் சுத்தி இருந்தான்னு பார்த்தா, அவ மக நம்ம கழுத்தை சுத்தப் பார்க்கிறாளே.” கடுகடுப்பாய் சொன்னார் காத்தவராயன்.

“அப்பா என்ன பேசுறீங்க. அவங்க யாரோ இல்ல. நம்ம மாதங்கியும், துவாரகாவும்.” கண்ணப்பன் அழுத்தமாய் சொல்ல அமைதியானார் காத்தவராயன்.

மகன் திருமணம் முடித்து, பேரன் பிறந்து அவன் திருமணத்திற்கு காத்திருக்கும் வேளையில் கூட அந்த வீட்டில் காத்தவராயன் ஆட்சி தான். அதற்கு கண்ணப்பன் எந்த மறுப்பும் சொன்னது கிடையாது. தந்தையின் ஆணையை கடவுள் ஆணையாக நினைத்து நிறைவேற்றுபவர் தான். ஆனால் தவறு என்று தோன்றும் ஒன்றை தந்தை என்ன அந்த ஆண்டவனே வந்து சொன்னாலும் கேட்க மாட்டார்.

தன் தந்தையின் இந்த குணத்தின் மீது உள்ள நம்பிக்கையில் தான் அவர் தந்தையை எதிர்க்கும் நோக்கத்தில் பெரிய வேலையைச் செய்து வைத்திருந்தான் நவநீதன்.
 

Author: துவாரகா
Article Title: Episode 2
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
காத்தவராயன் மாதங்கி வாழ்க்கையை கெடுத்தா....அவங்க அவங்க பொண்ணு வாழ்க்கையை கெடுத்துட்டு போய்ட்டாங்க போல.....
இதில் இப்ப மாட்டி இருக்கறது துவா தான்....

ஆனாலும் இப்படி அந்த கருவை அழித்தது எந்த விதத்திலும் நியாயம் இல்ல......