Episode 3

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Jun 2, 2026
24
35
13
Virudhunagar
வரம் 3
மாலை வேளையில் அந்த ஊரின் நாட்டாமை இவர்கள் வீடு தேடி வந்தார். அவருக்கு கிட்டத்தட்ட எழுபது வயது இருக்கும். நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்வ செழிப்புடன் எந்தக் குறையும் இல்லாமல் வளர்ந்தவர் என்பதால் அந்த வயதிலும் கம்பீரம் குறையாமல் இருந்தார். வராதவர் வந்ததைக் கண்டதும் பதறி எழுந்து அருகே வந்தனர் காத்தவராயனும், கண்ணப்பனும்.

அஞ்சனை தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, வாங்கிப் பருகியவர் சற்று நேரம் அமைதியாக இருந்தார். ஏதோ சொல்ல வந்து சொல்ல முடியாமல் தடுமாறுவது போல் தோன்ற ஏதோதோ நினைப்பில் தாய் உள்ளம் பதறியது.

தொண்டையை செருமிக்கொண்டு பேச்சை ஆரம்பித்தார் நாட்டாமை. “எப்படி சொல்றதுன்னு தெரியல காத்தவராயா. உன் பேரனும், பேத்தியும் என் வீட்டில் தான் இருக்காங்க. நம்ம நவநீ என்னென்னவோ சொல்றான். கண்ணு முன்னாடி வளர்ந்த பையன் தப்பு பண்ணி இருப்பான்னு நம்பவும் முடியல. ஆதாரங்களை நேருக்கு நேராப் பார்த்த பின்னால் நம்பாம இருக்கவும் முடியல. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அதனால் தான் நேரடியா இங்கேயே வந்துட்டேன்.” என்றார்.

“தம்பி உங்க வீட்டில் என்ன பண்றான்?” கண்ணப்பன் கேட்க, “என் பேரன் என்ன சொன்னான்?” முக்கியமான கேள்வியைக் கேட்டார் காத்தவராயன்.

“மாயவனுக்கும், துவாரகாவுக்கும் நடந்த கல்யாணத்தை ரத்து பண்ணிட்டு அவனுக்கும், துவாரகாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேட்கிறான்.” என்க, கையில் இருந்த தண்ணீர் செம்பை கீழே போட்டார் அஞ்சனை.

“அவனுக்கு கிறுக்கு எதுவும் பிடிச்சு போச்சா?” காத்தவராயன் கோபமாய் கேட்க, “அவனுக்கும், துவாரகாவுக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கிறதாவும், அவங்க இரண்டு பேரும் ஏற்கனவே நெருக்கமா பழக ஆரம்பிச்சுடதாவும் சொன்னான்.” என்று நிறுத்த, “பொய்.” என்று கத்தினார் அஞ்சனை.

நாட்டாமை அமைதியாக இருக்க, “என் பையன் மேல அபாண்டமா பழிபோடாதீங்க ஐயா.” நடுங்கும் குரலில் சொன்னார்.

“என் முகத்தைப் பார்த்து ஒருத்தன் ஒரு விஷயம் சொல்றான்னா, அதில் உண்மை இருக்குமா பொய் இருக்குமான்னு விசாரிக்காம குற்றம் சொல்றவன் நான்னு நினைக்கிறியா மா?” என்க, “அப்படின்னா?” அதிர்ச்சியாய் கேட்டார் கண்ணப்பன்.

“துவாரகாவுக்கு கருகலைப்பு நடத்தப்பட்டிருக்கு. அந்த ரிப்போர்ட்டை என் பேரன் எனக்கு படிச்சு காட்டினான். கலைஞ்சு போன குழந்தையோட ஆயுள் நாற்பது நாள். ஆனா கடந்த மூணு மாசமா துவாரகா இந்த வீட்டில் தானே இருக்கா.” நாட்டாமை கேள்வியாய் நிறுத்த, தலையில் அடித்து அழ ஆரம்பித்து விட்டார் அஞ்சனை.

மகன் இப்படி ஒரு தவறைச் செய்வான் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திடாதவர், தன் வளர்ப்பு தவறாய் போன சோகம் தாங்காமல் பெரும் தவிப்பில் ஆழ்ந்தார்.

காத்தவராயனின் முகம் முழுவதும் வெளுத்துப் போனது. கண்ணப்பனுக்கு மகனைச் சந்தேகிக்க முடியவில்லை. இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று முழுமையாக நம்பினார்.

“நான் உங்களோட வரேன் ஐயா. வந்து தம்பி கிட்டேயும், துவாரகா கிட்டேயும் பேசுறேன்.” என்றார்.

“என்னத்தடா பேசப் போற. ஒன்னும் பேச வேண்டாம்.” மகனிடம் சொன்ன காத்தவராயன் நாட்டாமை பக்கம் திரும்பி, “ஒழுக்கம் தவறியவங்களுக்கு இந்த வீட்டில் இடம் கிடையாது. அது பேரனா இருந்தாலும் சரிதான். பேத்தியா இருந்தாலும் சரிதான். அவங்க இரண்டு பேரையும் அப்படியே எங்கேயாவது போயிடச் சொல்லுங்க.” என்றார்.

“நாங்க ஏன் போகணும்.” என்றவாறு உள்ளே வந்தான் நவநீதன்.

“என்ன சாமி இதெல்லாம். உன்னைப் பத்தி என்னென்னவோ சொல்றாங்களே. அது எதுவும் உண்மையில்ல தானே.” அழுகை மற்றும் நம்ப முடியாத தன்மையுடன் கேட்டார் அஞ்சனை.

சில நொடிகள் தாயின் முகத்தைக் கனிவோடு பார்த்தவன், “எனக்கு துவாராகவை பிடிச்சிருக்கும்மா. கல்யாணம் பண்ணா அவளைத் தான் பண்ணனும் னு உறுதியா இருக்கேன்.” என்க, பிறந்ததில் இருந்து கை நீட்டாத மகனை ஓங்கி அறைந்தார் அஞ்சனை.

தாயின் கரங்களால் விழுந்த முதல் அறை. கன்னத்தை விட நெஞ்சம் சற்றே அதிகம் வலித்தது. தாங்கிக்கொண்டு வலியோடு புன்னகைத்தான் நவநீதன்.

“என் வளர்ப்பு எங்கடா தவறிப்போச்சு. துவாரகா கல்யாணம் ஆன பொண்ணு. இன்னொருத்தனுக்குச் சொந்தமானவ. அவ மேல எதுக்காக டா உன்னோட பார்வை போச்சு. உன் பெயரைக் கெடுத்துக்கிட்டது மட்டும் இல்லாம அவ எதிர்காலத்தையும் இல்ல சேர்த்து கெடுத்திருக்க.

ஊருக்குள்ள இனி உன் அப்பாவும், தாத்தாவும் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா? இப்படி ஒரு கலங்கத்தை உண்டாக்கிக் கொடுக்க தான் ஒத்தப் பிள்ளையா என் வயித்தில் வந்து பிறந்தியா?” ஒவ்வொரு கேள்வியாக கேட்டுக்கொண்டே அவன் இரண்டு புஜங்களிலும் மாறி மாறி அடித்தார் அஞ்சனை. அடிகள் அனைத்தையும் வாங்கிக்கொண்டவன் ஒரு கட்டத்தில் அவரின் இரண்டு கரங்களையும் பிடித்துக்கொண்டான்.

“துவாரகா பிறந்த நேரமே எனக்குன்னு பேசி வைச்சவ தானே. அவளை எனக்கே கொடுத்திடுங்க.” சாதாரணமாகச் சொன்னான்.

“அவளை உனக்கு சொந்தமாக்கிக்க இதுவரைக்கும் எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைச்சது. அப்பெல்லாம் அமைதியா இருந்துட்டு, எதுக்காக தம்பி இந்த திடீர் முடிவு.” மகனை கண்ணோடு கண் பார்த்து கேட்டார் கண்ணப்பன்.

“ஒரு பொருளோட உண்மையான மதிப்பு அது நம்மை விட்டுப் போன பின்னால் தான் தெரியும் னு சொல்லுவாங்க. அதுதான் துவாரகா விஷயத்திலும் நடந்தது. அவ கல்யாணம் ஆகாம நம்ம வீட்டில் இருக்கும் வரை எனக்கு அவ மேல எந்த அபிப்பிராயமும் வரல. அதனால் தான் ஐஸ்வர்யாவோட முடிவான கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன். ஆனா அவ கல்யாணம் ஆகி போன பின்னால் எனக்கு அவ நினைப்பு அதிகமா வர ஆரம்பிச்சது. ஒருகட்டத்தில் அவ இல்லாம நான் இல்லைங்கிற நிலைக்கு வந்துட்டேன்.” என்று நிறுத்த,

“உன்னோட ஆசைக்காக நல்லா இருந்த அவ கல்யாண வாழ்க்கையை நாசம் பண்ணியா?” கோபமாகக் கேட்டார் அஞ்சனை.

“அவ நல்லா இருந்தா, அவ கல்யாண வாழ்க்கை நல்லபடியா இருந்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா? அந்த மாயவன் சரியான பொறுக்கி. அவனால் இவ உடம்பாலும், மனசாலும் நரக வேதனையை அனுபவிச்சு இருக்கா? அவ உடம்பில் காயம் இல்லாத இடமே கிடையாது தெரியுமா உங்களுக்கு.” கோபமாகக் கேட்டான்.

“உன்னோட செயலை நியாயப்படுத்த கண்டதையும் பேசாத. நான் மூணு மாசமா அவளைப் பார்க்கிறேன். அப்படியெல்லாம் எதுவும் இல்ல.” என்றார் காத்தவராயன்.

“புருஷன் என்கிற பெயரில் இருக்கும் மிருகம் உண்டாக்கின உள்காயத்தின் வலிகளை அவளோட உண்மையான புருஷனால் தான் புரிஞ்சுக்க முடியும், சரிபண்ண முடியும்.” நிமிர்வாகவே பதில் சொன்னான் நவநீதன்.

கண்ணப்பனுக்கு என்ன நடந்திருக்கும் என்பதில் ஒரு யூகம் வந்தது. மகன் மீது தீராத நம்பிக்கையும் இருந்தது. ஆனால் எதற்காக வேண்டாத பழியை சுமக்க நினைக்கிறான் என்கிற கேள்விக்கு தான் பதில் கிடைக்கவில்லை.

அதற்கான பதிலை அடுத்த நொடியே தந்தான் நவநீதன். நேரே தன் தாத்தா அருகே வந்தவன், “நடந்த விஷயங்களில் நீங்க என்மேல் கோபத்தில் இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும். இதுவரைக்கும் உங்க பேச்சை மீறாத நான் இன்னைக்கு இப்படி வந்து நிக்கிறேன்னா, துவாரகா மேல இருக்கும் என்னோட விருப்பத்தின் அளவை நீங்க புரிஞ்சுக்கணும்.” என்றான்.

“எனக்கு, இந்தக் குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. அவ என்னோட பேத்தியா இருந்தப்பவே அப்பா பேர் தெரியாதவங்கிறதுக்காக அவளை உனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடியாதுன்னு சொன்னவன் நான்.

ஆனா இப்ப அவ கட்டின புருஷனுக்கு துரோகம் பண்ணவ. பச்சைப் பிள்ளையைக் கொன்னவ. அவளை மாதிரி ஒருத்தியை உன்னோட வாழ்க்கைக்குள்ள என்ன இந்த வீட்டுக்குள்ள கூட நான் அனுமதிக்க மாட்டேன். நடந்தது எல்லாத்தையும் மறந்துட்டு அவளை அவ புருஷன் கூட அனுப்பிட்டு ஐஸ்வர்யாவைக் கல்யாணம் பண்ணிக்கிற வழியைப் பாரு.” என்றார்.

அவரை ஆழமாய் அர்த்தமாய் ஒரு பார்வை பார்த்த நவநீதன், “என் சொந்த இரத்தம், என்னோட மூத்த வாரிசுன்னு தெரிஞ்சும் நான் அந்தக் குழந்தையைக் கொல்ல நினைச்சேன்னா அதுக்கு ஒரே காரணம் என் தாத்தாவோட மானத்துக்கும், என் குடும்பத்தோட மரியாதைக்கும் எந்த பங்கமும் வந்திடக்கூடாதுன்னு தான்.

பேரனா உங்க மரியாதை மேல எனக்கு இருந்த மதிப்பு, தாத்தாவா என் ஆசை மேல உங்களுக்கு இல்ல தானே. உங்களுக்கு உங்க பையன், பொண்ணு, மருமக, பேத்தி எல்லோரையும் விட குடும்ப கௌரவம் முக்கியம். ஆனா அந்த கௌரத்தை விடவும் நான் தான் முக்கியம் னு சொல்லுவீங்களே. அதெல்லாம் வெறும் வாய் வார்த்தை தானா?” பதில் சொல்ல முடியாத கேள்விகளால் தாத்தாவை நேருக்கு நேராகப் பார்த்து கேள்வி எழுப்பினான் நவநீதன்.

பேரனின் எந்தக் கேள்விக்கும் காத்தவராயனால் பதில் சொல்ல முடியவில்லை. தன் இயலாமையை கோபம் என்னும் மூகமூடிக்குள் மறைத்துக்கொண்டு, “என்னடா ஓவரா பேசுற, நான் சொன்னா சொன்னது தான். என் பேச்சை மீறி நீ அந்த ஒழுக்கம் கெட்டவளைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா என்னோட பேரனா இருக்க உனக்குத் தகுதி இல்லன்னு சொல்லி உன்னை வீட்டை விட்டு தள்ளி வைப்பேன். அப்புறம் கட்டின புருஷனுக்குத் துரோகம் பண்ணான்னு அந்த துவாரகாவை ஊரை விட்டே தள்ளி வைப்பேன். தேவைப்பட்டா என் பொண்ணோட பொண்ணுன்னு கூடப் பார்க்காம என் கையாலே வெட்டிக் கொல்லுவேன்.” கோபமாகச் சொன்னார் காத்தவராயன்.

“துவாரகா ஒழுக்கம் கெட்டவன்னா நானும் ஒழுக்கம் கெட்டவன் தான். அந்த வகையில் நானும் அவளும் சரியான ஜோடி தான். அப்புறம் என்ன சொன்னீங்க, துவாரகாவை வெட்டிப் போடுவீங்களா? என்னைத் தாண்டி என் வருங்காலப் பொண்டாட்டியோட தலைமுடியைக் கூட யாராலும் தொட முடியாது.” அழுத்தம் திருத்தமாய் சொன்னான் நவநீதன்.

“ஐஸ்வர்யாவுக்கு என்ன பதில் சொல்றது தம்பி?” உணர்ச்சிகள் இல்லாத குரலில் கேட்டார் அஞ்சனை.

“துவாரகா தான் என்னோட பொண்டாட்டின்னு எப்ப முடிவு பண்ணேனோ அப்பவே ஐஸ்வர்யாகிட்ட பேசி அவங்களை சமாதானம் பண்ணிட்டேன்.

உங்களை மாதிரி இல்ல அவங்க. குடும்ப கௌரவம், வாழ்ந்து முடிச்ச பெரியவங்களோட மனசுன்னு மட்டும் பார்க்காம, வாழப்போறவங்க விருப்பம் தான் ஒரு கல்யாண வாழ்க்கைக்கான அழகை நிர்ணயிக்கும் னு புரிஞ்சுக்கிட்டு பெரிய மனுஷத் தன்மையோட விலகிட்டாங்க.” என்றான்.

“துவாரகா கூட பழகினதால் அவளைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கல. அவளைக் கல்யாணம் பண்ணிக்க நினைச்சதால் தான் அவ கூட பழக ஆரம்பிச்சிருக்கீங்க அப்படித்தானே தம்பி.” நேரடியாக கண்ணப்பன் கேட்க, பதில் சொல்லவில்லை நவநீதன்.

“ஐஸ்வர்யாகிட்ட உங்களால் எந்த வித குற்றக்குறுகுறுப்பும் இல்லாம பேச முடிஞ்சது ஆச்சர்யம் தான். துவாரகாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறதுக்கு எத்தனை நாளா யோசிச்சீங்க தம்பி?” அழுத்தமான தொணியில் அடுத்த கேள்வியைக் கேட்டார்.

தந்தையின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அமைதியாக நின்றிருந்தான் நவநீதன். “துவாரகா உங்களைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டாளா?” அடுத்த கேள்வியை தகப்பன் முன்வைக்க, லேசாக எச்சில் விழுங்கினான் மகன். அதையும் துல்லியமாகக் கவனித்தார் கண்ணப்பன். அந்த நேரம் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் மாயவன்.
 

Author: துவாரகா
Article Title: Episode 3
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: ஷமீம்

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
இப்ப இவளோ பேசறியே துவா அங்க இருக்காளா????
அச்சோ வில்லன் வந்துட்டான்.....
கண்ணன் சரியா பாயிண்ட் பிடிசிட்டார்.....
இப்ப இவளோ பேசறவன் அவ கல்யாணத்து முன்னாடியே உன் தாத்தாவை எதிர்த்து நின்று இருக்கலாம் இல்ல டா