Episode 8

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Jun 2, 2026
24
35
13
Virudhunagar
வரம் 8
சபை மொத்தமும் அதிர்ந்து நிற்க பத்மனின் இதழோரம் மட்டும் இளக்காரமான புன்னகை. பழிவெறி மின்னும் கண்களோடு அவன் தன் செல்போன் திரையைப் பார்க்க, “இந்த பஞ்சாயத்து உறவை அத்துவிட்டாலும் சட்டப்படி அவங்க கணவன் மனைவியா தான் இருப்பாங்க. அவங்க மொத்தமா பிரியுறது தானே உனக்கு வேணும். அப்ப உன் அருமை அத்தை மக எங்களைப் பத்தி எதையும் சொல்லவிடாமப் பார்த்துக்கோ. எங்களைப் பத்தின உண்மை வெளியே தெரியாம இருக்கிற வரை தான் நீ நினைக்கிறது நடக்க சாத்தியக்கூறுகள் இருக்கு. பார்த்து நடந்துக்கோ.” என்று நவநீதனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி இருந்தது.

கூடியிருந்த ஊர்மக்களோடு சேர்த்து துவாரகாவும் நவநீதனை அதிர்ச்சியாய் பார்க்க, “பார்த்தீங்களா? அவங்களுக்குள்ள தப்பான தொடர்பு இருந்துச்சுன்னு தம்பியே ஒத்துக்கிட்டார். அப்படியே அடுத்ததா துவாரகா வயித்தில் இருந்த குழந்தை அவரோடது தான்னு தம்பியே ஒத்துப்பார்.” வில்லத்தனமான சிரிப்புடன் சொன்னான் பத்மன். கண்களை மூடி தன் உள்ளத்து உணர்வுகள் அனைத்தையும் தனக்குள் விழுங்கினான் நவநீதன்.

“எனக்காகப் பார்த்து உங்க மரியாதையை இழக்காதீங்க மச்சான். எனக்கு என்ன நடந்துச்சுன்னு வெளியே தெரிஞ்சா தான் அந்தக் குடும்பத்தோட இலட்சணம் நாலு பேருக்குத் தெரியும்.” என்ற துவாரகாவின் கரத்தை இறுக்கிப் பிடித்தவன், “பத்மன் சொல்றது உண்மை தான். கலைஞ்சு போன குழந்தை என்னோடது தான்.” அழுத்தம் திருத்தமாய் சொன்னான். காதில் விழுந்த வார்த்தைகளையும், கண்கள் காட்டிய தன் மச்சானின் பிம்பம் பொய்யாகிப் போனதையும் தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னிச்சையாக நவநீதனை விட்டு விலகி நின்ற துவாரகா அவனை நம்ப முடியாத பார்வை பார்த்தாள்.

கண்ணப்பன் மகனா இப்படி என்று அத்தனை பேரும் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பிக்க, “என்ன மச்சான் பேசுறீங்க?” அழுகையுடன் கேட்டாள் துவாரகா.

“என்னோட நோக்கம் உன்னை உன் புருஷன்கிட்ட இருந்து பிரிக்கிறது மட்டும் இல்ல. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதும் சேர்த்து தான்.” என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னான் நவநீதன்.

“பைத்தியம் பிடிச்சிருக்கா உங்களுக்கு. இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்.” என்ற துவாரகா நாட்டாமையை நோக்கிச் நகரப்பார்க்க, அவள் கரத்தை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான் நவநீதன்.

“என் பையனும், மருமகளும் எந்தத் தப்பும் செஞ்சிருக்க மாட்டாங்க. இதில் ஏதோ விஷயம் இருக்கு.” கண்ணப்பன் சொல்ல,

“சித்தப்பா கொஞ்சம் இருங்க. இப்படி ஏதாவது நடக்கும் னு தெரிஞ்சு தான், துவாரகாவுக்கு கருகலைப்பு நடத்திய டாக்டர் அவர் கைப்பட எழுதி நவநீதன் தம்பி கையெழுத்து போட்டு வாங்கி பத்திரமா வைச்சிருந்த மெடிகல் ரிப்போர்ட்டை நான் கொண்டு வந்திருக்கேன்.

இதில் இருக்கிற வார்த்தைகள் படி கலைஞ்சு போன குழந்தையோட ஆயுள் வெறும் நாற்பது நாள் மட்டும் தான்.” என்ற பத்மன், தான் கொண்டு வந்திருந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை அனைவரிடமும் காட்டினான்.

கூட்டம் மொத்தமும் வாயடைத்துப் போனது. நவநீதன் நெற்றியைத் தேய்த்தபடி துவாரகாவைப் பார்த்தான். “இது எப்படி சாத்தியம்?” என்கிற பார்வையோடு அவள் இருக்க, “நாட்டாமை மூலமா என் அப்பா, அம்மா, தாத்தாவை சமாளிச்சு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க நான் தான் போலியான ரிப்போர்ட் ஏற்பாடு பண்ணேன். அது என் கையோட தான் இருக்கு. இவன் மறுபடி ஹாஸ்பிடலுக்குப் போய் ஏற்பாடு பண்ணியிருக்கான் போல.” என்றான் மெதுவான குரலில். அவ்வளவு நேரம் இருந்த தவிப்பு தாண்டி கடும் கோபம் வந்தது துவாரகாவிற்கு.

“ஊர் மக்கள் எல்லோருக்கும் இந்த துவாரகாவோட இலட்சணம் தெரிஞ்சிருக்கும். ஒழுக்கம் கெட்டவ கூட என் தம்பி வாழ வேண்டிய அவசியம் இல்லை. அதனால் ஊர் வழக்கப்படி என்ன செய்யணுமோ செஞ்சிடுங்க. அதே சமயம் நடத்தை கெட்ட துவாரகாவுக்கும், அவளோட சேர்ந்து கெட்டுப்போன நவநீதனுக்கும் இந்த பஞ்சாயத்து தண்டனை கொடுக்கணும்.” என்று பத்மன் பேச,

தன் செல்போனை எடுத்த நவநீதன், “துவாரகாவை ஏதாவது பண்ண நினைச்ச உன்னை ஒன்னும் இல்லாம ஆக்கிடுவேன்.” என்று வெளிப்படையாக மிரட்டல் வார்த்தைகளை மாயவனுக்கு அனுப்பி இருந்தான்.

குறுஞ்செய்தியைப் பார்த்ததும் பேய் அறைந்தது போல் ஆன மாயவன் நவநீதனைப் பார்க்க, பேசு என்பது போல் கண்ஜாடை காட்டினான் நாயகன்.

“அண்ணா ஒரு நிமிஷம், அவங்க இரண்டு பேருக்கும் தண்டனை கொடுக்கிறதில் எனக்கு உடன்பாடு இல்ல. என் கூட வாழ்ந்த அவ வேண்ணா தப்பானவளா இருந்திருக்கலாம். ஆனா நான் நல்லவன் தான்.

இந்த உலகத்தில் பிறந்த எல்லோருக்கும் அவங்களுக்குப் பிடிச்சவங்க கூட வாழ உரிமை இருக்கு. அப்படி இருக்க அவ விருப்பத்தைக் குறை சொல்ல நான் யார். அவ மட்டும் என்கிட்ட நேரடியா வந்து உன்னை எனக்குப் பிடிக்கல. என் மாமன் மகனைத் தான் பிடிச்சிருக்குன்னு சொல்லி இருந்தா நானே அவளை முறைப்படி என்னோட இருந்த பந்தத்தில் இருந்து விடுவிச்சு இருப்பேன். ஆனா என்கிட்ட நேருக்கு நேர் பேச அவளுக்குத் தைரியம் இல்ல போல.

அவ அவனுக்குப் பிடிச்சவ கூட வாழட்டும். என் மேல் தப்பு இல்ல அவ மேல் தான் தப்புன்னு நிரூபிக்க நினைச்சேனே தவிர அவளை அவமானப்படுத்த நினைக்கல. அவளை விட்டுடுங்க.” அக்மார்க் நல்லவன் போல் பேச, ஊரே அவனுக்காக அனுதாபப்பட்டது.

பத்மன் தம்பியின் அருகே வந்து கண்களால் காரணம் கேட்க, “அவன்கிட்ட இருக்கிறதும் நம்மகிட்ட இருக்கிறதும் ஒரே ஆதாரம் தான். அதை வைச்சு நாம ஒரு அளவுக்கு தான் அவனை கார்னர் பண்ண முடியும். அதிகமா நடந்துக்கிட்டா அதை நமக்கு எதிராத் திருப்பிடுவான். கொஞ்சம் அடங்கிப்போவோம்.” என்றான் மாயவன்.

“அதுக்காக அவங்களை அப்படியே விட்டுட முடியுமா?” பல்லைக் கடித்தான் பத்மன்.

“இதுக்கு மேல என்ன பண்ணனும். அந்த நவநீதனுக்கு இந்த சமுதாயத்தைப் பத்தி சரியாத் தெரியல. நல்லவங்களோட வாழ்ந்து எல்லோரும் அப்படித்தான்னு நினைச்சுக்கிட்டு இருக்கான்.

கொஞ்ச நாள் பல்லைக் கடிச்சுக்கிட்டு பொறுத்துக்கிட்டா அவனுக்கும், துவாரகாவுக்கும் கிடைச்ச இந்தக் கெட்ட பெயர் மறைஞ்சிடும் னு நினைச்சுக்கிட்டு இருக்கான் பைத்தியக்காரன்.

ஒரு ஆண் இந்த மாதிரி பிரச்சனையில் சிக்கினா கொஞ்ச நாள் கழிச்சு அவனை மன்னிச்சு, மறந்து பழையபடி ஏத்துக்கும் நம்ம மக்கள், ஒருமுறை தப்பான பெயர் எடுத்த பொண்ணை, அவன்னு இல்லாம அவளோட பொண்ணு, பேத்தின்னு பரம்பரையில் இருக்கும் யாரையும் மறக்கவும் மாட்டாங்க, சம்பந்தப்பட்டவங்களையும் மறக்க விடமாட்டாங்க. துவாரகாவுக்கு இந்த தண்டனையே போதும்.” வில்லத்தனமாகச் சொன்னான். தம்பியின் வார்த்தைகளில் இருந்த உண்மையில் பத்மன் அமைதியானான். மாயவன் நினைத்தபடியே ஊர் மக்களின் வாய் திறந்து கொண்டது.

“ஊமை ஊரைக் கெடுக்கும் னு சும்மாவா சொன்னாங்க. அவ அம்மா யாரையோ நம்பி ஏமாந்து போனா. இவ கூட வளர்ந்தவனை ஏமாத்தி அவளோட வலையில் போட்டுக்கிட்டாளே. கண்ணப்பனும், அஞ்சனையும் தான் பாவம். பெத்த பையனும், வளர்த்த மருமகளும் சேர்ந்து ஊருக்கு நடுவில் நிற்க வைச்சு அவமானப்படுத்துவாங்கன்னு கனவில் கூட நினைச்சிருக்க மாட்டாங்க.

மானம், ரோஷம், குடும்ப கௌரவம் னு பேசும் காத்தவராயன் இனி என்ன பண்ணப் போறாரோ. அடுத்தவங்க நிம்மதியைப் பறிச்சுட்டு இவங்க மட்டும் சந்தோஷமா வாழ்ந்திடுவாங்களா? கண்டிப்பா இவங்க நல்லா இருக்க மாட்டாங்க.” என்று ஆளுக்கொன்றாய் பேசிக்கொண்டிருக்க மௌனமாய் கண்ணீர் வடித்தாள் துவாரகா. அன்போடு வளர்த்தவனை நம்பி கோவிலுக்கு வரும் ஆட்டை அவனே துள்ளத்துடிக்க கொல்வது போல் ஆனது அவள் நிலை. தன்னை நிரூபிக்க வேண்டும் என்பதைக் கூட மறக்கச் செய்திருந்தது நவநீதன் செய்த நம்பிக்கை துரோகம்.

அவள் முகத்தைப் பார்ப்பதற்கே நவநீதனுக்கு சங்கடமாக இருந்தது. கழுத்துப் பகுதியை தேய்த்து விட்டுக்கொண்டவன், “எல்லாம் நாளைக்கே சரியாகிடும் னு சொல்ல மாட்டேன். ஆனா எல்லாம் சரியாகும் வரை உனக்கு எல்லா வகையிலும் நான் துணையா இருப்பேன். என்னைத் தாண்டி எதுவும், யாரும் உன்னை நெருங்க முடியாது. கண்டிப்பா நீ நல்லா இருப்ப, நான் நல்லா இருப்பேன். நாம நல்லா இருப்போம்.” என்று தன்னோடு நினைத்துக்கொண்டான்.

பஞ்சாயத்து தலைமையில் இருந்த ஊர்ப் பெரியவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். சில பல நிமிடங்கள் நீடித்த அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் அனைவருமாகச் சேர்ந்து ஒரு மனதாக ஒரு முடிவுக்கு வந்தனர்.

அதன்படி மாயவன், துவாரகா இருவருக்கும் இடையே நடந்த திருமணம் செல்லாது என அந்த சபையினரால் முழு மனதாக அங்கீகரிக்கப்படுவதோடு, துவாரகா மற்றும் நவநீதன் செய்த தவறுக்குத் தண்டனையாக முழுதாக ஒரு வருடத்திற்கு இருவரும் அந்த ஊர் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்றும் ஊரின் எந்த விஷேஷங்களுக்கும் ஒரு வருடம் முடியும் வரை யாரும் அவர்கள் இருவரையும் அழைக்கக் கூடாது என்றும் சொல்ல, பலே என்று சந்தோஷமாக அதை ஏற்றுக்கொண்டனர் மாயவன், பத்மன் சகோதரர்கள்.

பிடி வைக்கோலை எடுத்து அதை இரண்டாய் பிய்த்து ஒரு பாதியை துவாரகா கையிலும், மறுபாதியை மாயவன் கையிலும் கொடுத்து அக்னி சாட்சியாய் உருவான பந்தத்தை வைக்கோல் சாட்சியாய் முறித்து வைத்தனர் ஊர்ப் பெரியவர்கள்.

அடுத்த சில மாதங்களுக்கு சுவாரசியமாகப் பேசிக்கொள்வதற்கு தங்களுக்கு நல்லதொரு செய்தி கிடைத்துவிட்டது என்கிற சந்தோஷத்தில் ஊர்மக்கள் அனைவரும் கிளம்பப் பார்க்க, “மாயவனை இதில் கையெழுத்து போடச் சொல்லுங்க.” என்ற நவநீதன் தன் முதுகுப்பக்கம் இருந்து காகிதம் ஒன்றை எடுத்து நீட்டினான்.

அது துவாரகா மற்றும் மாயவன் இருவருக்கும் இடையே சட்டப்படி விவாகரத்து வாங்குவதற்காக நீதிமன்றத்தை அணுகும் ஏற்பாடு. அதில் கையொப்பம் இட சற்றே தயங்கினான் மாயவன்.

“ஊர் பஞ்சாயத்தில் பிரிச்சுவிட்ட பிறகு யாரும் அதை எதிர்த்து செயல்படக் கூடாதுன்னு தெரியாதா நவநீதா. நீ தான் ஊர் கட்டுப்பாட்டை மீறி நடந்துக்கிறன்னா எல்லோரும் அப்படியே இருக்க மாட்டாங்க.” நக்கலாகக் சொன்னார் பெரியவர் ஒருவர்.

“அந்த ஈரவெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும். நானும் துவாரகாவும் வாழப்போற எதிர்கால வாழ்க்கையில் புள்ளி அளவு கூட யாராலும் எந்தப் பிரச்சனையும் வந்திடக்கூடாதுன்னு நினைக்கிறேன். அதுக்காக தான் இந்த விவாகரத்து ஏற்பாடு.

துவாரகா அவ ஆசைப்பட்டவன் கூட வாழட்டும் னு பெரிய மனுஷத்தன்மையோட விட்டுக்கொடுத்த மாயவன் இதுக்கு ஒத்துக்க மாட்டாரா என்ன? இல்ல இப்ப நான் சொல்றதை செய்யாமப் போனா என்ன மாதிரியான பின்விளைவுகள் வரும் னு அவருக்குத் தெரியாம இருக்குமா?” கடுகடுப்போடு கேட்க, பட்டென்று அந்த விண்ணப்பத்தை வாங்கி அதில் தன் தகவல்களை எழுதி கையொப்பம் போட்டுக்கொடுத்தான் மாயவன். இந்தக் காட்சிக்கு தனியாக துவாரகா மற்றும் நவநீதன் இருவருக்கும் வசவுகளைக் கொடுத்துக்கொண்டே கலைந்தது கூட்டம்.

துவாரகாவை மிகப்பெரிய இக்கட்டில் இருந்து காப்பாற்றிவிட்டோம் என்கிற நிம்மதியோடு நவநீதன் அவளைத் தேட அவள் அங்கே இல்லை. கூட்டத்தை தாண்டி வேகமாக எங்கோ சென்று கொண்டிருந்தாள்.

“இவளை எப்படி சமாளிக்கப் போறேனோ தெரியலையே.” என்றபடி அவளை நோக்கி ஓடினான் நவநீதன்.

எங்கே போகிறோம், என்ன செய்யப்போகிறோம் என எதுவும் தெரியாமல் தன்போக்கில் நடந்து கொண்டிருந்தாள் துவாரகா. பச்சை உடம்புக்காரி, குறுதிப்போக்கு இன்னும் நிற்காத நிலையில் இப்படி வேகமாக நடந்து போகிறாளே என்னும் பரிதவிப்பில் ஓடி வந்து அவளுக்கு முன்பாக இரண்டு கரங்களையும் நீட்டி பாதையை மறைத்தபடி நின்றான் நவநீதன்.
 

Author: துவாரகா
Article Title: Episode 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
என்ன தான் மாயவன் கெட்டவன், கேடு கெட்டவன் அப்படினாலும்....அவன் சொல்வதில் உண்மை இருக்கு தானே.....
ஏன் இதை எல்லாம் யோசிக்கவே இல்ல நவநீ