காலை குளிக்கும்போது கூட அதே நினைப்பு செம்பருத்திக்கு. யார் இந்த சிங்கம்? ஏன் இவ்வளவு பில்ட் அப் இவனுக்கு. இதுவரை சொன்னதில் ஒருத்தன் கூட நல்லவிதமான அபிப்பிராயத்தை சொல்லல. தான் அறிந்த விஷயங்களைப் புள்ளியாய் எடுத்துக் கொண்டு இணைத்து, அவனைப் பற்றிய கோலம் ஒன்றினை வரைந்தது அவளது மனம்.
ராவணன், தூணுக்கு சேலை கட்டினால் கூட விடமாட்டான். அதனாலேயே அழகு குறைவான ஒரு பெண்ணைத் தேடித் தேடித் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி இருப்பவன். ஆனால் ஆண்களை விட பெண்கள் சொல்லுக்கு மரியாதை தருபவன். அல்லது ஆண்களுக்கு இவனை மேய்க்கும் அளவுக்குப் பொறுமை இல்லை.
நல்லது… இதெல்லாம் இருப்பதால்தானே அவளுக்கு நல்ல சம்பளம் கொடுத்து, தங்க இடம், மூன்று வேளை ராஜ சாப்பாடு என்று கிட்டத்தட்ட அரைலட்சம் இவள் ஒருத்திக்கு மட்டும் செலவு செய்கிறார்கள்.
ஒரு சின்ன விஷயம்ன்னா கூட கோச்சுக்கிட்டுப் போயிடுவான், சாப்பாட்டில் கோபம், சொந்த அரண்மனையில் கூடத் தங்காம ஊரார் கூற்றுப்படி பழனி மலையில் உக்காந்த ஆண்டியப்பன் மாதிரி இங்க வந்து உக்காந்திருக்கான். வீட்டில் கோச்சுக்கிட்டு தொழில் நிறுவனத்துக்குப் போகல…
காலை பத்து மணி வரை தூக்கம். எதனால்? கோபன் கூட சொன்னானே மருந்து மாத்திரை சாப்பிடுபவன், ராத்திரி பசிக்கும் என்று… ஆக ஆரோக்கியத்தில் என்னவோ அசௌகரியம். அவன் கத்துவதற்குக் காரணம் அந்த வலி, அசௌகரியத்தால் எழுந்த கோபமாகக் கூட இருக்கலாம். உடல் வேதனையில் இருப்பவர்களுக்கு சிடுசிடுப்பு அதிகமாக இருக்கும். எனவே அதையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.
யோசித்து முடித்துவிட்டு வெளியே வந்த பொழுது எதை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்ளலாம் என்ற தெம்பு அவளுக்கு ஏற்பட்டிருந்தது.
அவள் குளித்து முடித்துவிட்டு வந்ததும் காலை உணவாகத் தந்த பிரட் ஜாமை விழுங்கவே முடியாமல் தொண்டையை அடைத்தது செம்பருத்திக்கு. இட்டிலி தோசை எல்லாவற்றையும் மறந்துவிட்டு ரெடிமேட் உணவு உணவுகளின் பின் ஓடுகிறோமே இது எங்கு சென்று முடியுமோ? சாயாவை அருந்தி தொண்டையில் அடைத்த ரொட்டியை விழுங்கினாள்.
“ஒரு ஸ்லைஸ் பிரெட் போதும் சேச்சி. சாப்பிடவே முடியல” முதல் முறையாக பசி மறைந்து பரீட்சை தினத்தன்று ஏற்படும் டென்ஷன் ஏற்பட்டது. வயிற்றில் ரயில் ஓடியது.
அவளது பதற்றத்தைப் புரிந்து கொண்டதைப் போல சிரித்த காளியம்மாள் “எதுக்கு பதட்டம் பாப்பா? நம்ம மேல எந்த தப்பும் இல்லாதப்ப நல்லா நிமுந்து நிக்கணும். கண்ணுக்கு நேரே பாத்து பேசணும். பயப்படக் கூடாது. நம்ம சனங்க இருக்காங்களே… நாய் கூட பயப்பட்டா கல்லைக் கொண்டு எறிவாங்க. தைரியமா குரைக்கிற நாயைக் கண்டு சைக்கிளை அழுத்திட்டு அவங்க ஓடுவாங்க”
“தைரியத்தை வரவழைச்சுட்டுத்தான் இந்த வேலைக்கு வந்திருக்கேன்கா… ஆனாலும் இன்னும் பத்தலை”
“தைரியமா பயமோ எல்லாம் விதை மாதிரிதான். மனசில் எதை விதைக்கிறோமோ அதுதான் மரமா நிக்கும்” போற போக்கில் மிகப் பெரிய தத்துவத்தை சாதாரணமாக சொல்லிவிட்டுச் சென்றாள் காளியம்மா.
“மோளே… காளியம்மா அய்யா ரூமுக்குத் தான் சாப்பாடு எடுத்துட்டுப் போகுது. நீ அங்க காத்திரு. அய்யா கூப்பிடுவாரு”
காளியம்மா தள்ளு வண்டி ஒன்றின் மேலே தண்ணி ஜக், ஜூஸ், காலை உணவு என்று எல்லாவற்றையும் அடுக்கினாள். இரண்டாவது அடுக்கில் துண்டுகள், துடைக்கும் துணிகள், பெட்ஷீட்டுகள் போன்ற ஒன்று என்று ஏதேதோ இருந்தது. சாப்பிட எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம்?
“அதுவா… காலைல எந்திரிச்சதும் பாட்டிலை ஊத்தித் தான் வாயைக் கொப்பளிப்பார். இப்ப டாக்டர் சரக்கைத் தொடவே கூடாதுன்னு சொல்லிட்டாரு. காலைல காப்பி குடிக்க வேண்டிருக்கு. சாப்பாடு சாப்பிட வேண்டியிருக்கு. இதெல்லாம் பிடிக்காம சின்ன பிள்ளையாட்டம் அடம் பிடிக்க வேண்டியது”
“ஒன்னு ரெண்டு மாசத்தில் பழகி இருக்குமேக்கா. ஆரோக்கியத்துக்காகவாவது டாக்டர் சொன்னதைக் கேட்டுத்தானே ஆகணும்”
“மயக்கத்தில் வாழ்ந்தவனுக்கு மயக்கத்திலேயே இருக்கத்தானே பிடிக்கும். அவனை முழிச்சுக்க சொன்னா… கோவம் வருமா வராதா? அதுதான் இங்க நடக்குது”
இந்த வாழ்க்கை முறையே செம்பருத்திக்குப் புதிதாக இருந்தது. காலை சூரிய வெளித்திற்காக ஜன்னலில் திரைசீலைகளைப் பாதியாகத் திறந்து வைத்திருந்தனர். இவ்வளவு உயரமாக இருக்கும் திரைசீலையை எப்படி பாதியாகத் திறந்து வைத்திருப்பார்கள்? யோசித்துக் கொண்டே காளியம்மாவுடன் சென்றாள்.
சின்ன லிப்ட் ஒன்றில் ஏறி முதல் மாடிக்கு சென்றார்கள். அங்கிருந்த பிரமாண்டமான அறையிக்கு வெளியே ஒரு நடுத்தர வயது ஆள் நின்றுக் கொண்டிருந்தான்.
“அய்யா… எந்திருச்சாச்சா?”
“ம்ம்… இப்பத்தான் சிகிரெட் கேட்டார். இன்னும் கொஞ்ச நேரத்தில் காலை சாப்பாடு முடிஞ்சுரும்”
“செம்பருத்தி இதுதான் பாலா… நம்ம அய்யாவோட பர்சனல் அசிஸ்டண்ட். காலை எந்திருச்சத்தில் இருந்து ராத்திரி தூங்குற வரை அவரோட வேலைகள் எல்லாம் செய்றவர் இவர்தான். நீ பெருசா உடல் பலத்தைப் பயன்படுத்தி செய்ற வேலை எதுவும் இருக்காது. பாலா, இவங்க செம்பருத்தி, நிகிலாவுக்கு பதிலா வந்திருக்காங்க” என்று ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தியபடியே பாலாவுக்கு டீயை ஊற்றிக் கொடுத்தாள் காளியம்மா.
“அந்தம்மாவுக்கு பதிலாவா?” என்று கேட்ட பாலாவின் கண்களில் தெரிந்தது என்ன?
“அந்தம்மாவுக்கு பெரிய வீட்டில் கொடுத்த வேலையைச் செய்ய மட்டும்தான் செம்பருத்தி வந்திருக்காங்க. அந்தம்மா செஞ்ச எல்லா வேலையும் இல்லை” என்றாள் காளியம்மா அழுத்தமாக.
ஆக இந்த நிகிலாதான் இவளுக்கு முன்னர் இந்த வேலையில் இருந்தது. அவள் பெரிய வீட்டில் சொன்ன வேலையைத் தவிர சொல்லாத வேலைகளையும் சேர்த்து செய்ததால் அதிகப் பிரசங்கி என்று பட்டம் கட்டப்பட்டு வெளியே அனுப்பப் பட்டிருக்கலாம். பெரிய வீட்டில் தூரத்தில் இருந்தே இந்தப் பிடிவாதக்காரனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இங்கே யாருமே அந்த வீட்டினர் தென்படவில்லை என்றாலும் இந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பெரிய வீட்டினரின் கைப்பாவைகளே.