அத்தியாயம் 10 – 2

கவனமாக அவர்கள் பேசியத்தைக் கேட்டதின் பலனாக எவ்வளவு விஷயங்கள் தெரிய வருகின்றன?

காலை சாப்பாடாக பிரட் டோஸ்ட், அதுவும் அதனை அடுக்கி வைக்கவே  ஒரு அழகான ரேக். ஒவ்வொரு ஸ்லைசும் ஒவ்வொரு அடுக்கில் படுக்கை வாக்கில் வைக்கப் பட்டிருந்தது. சாப்பிட பரிமாறும்போது நான்கு ஸ்லைஸ் இருக்கும் ரேக்கில் வைப்பார்களாம். வெண்ணை, கலர் கலராக ஜாம்கள் குட்டி குட்டி அழகு பாட்டில்களில். இரண்டையும் எடுக்க வைத்திருந்த கரண்டியில் தான் எத்தனை வேலைப்பாடு? முட்டைகளை மஞ்சளும் மிளகு உப்பு போட்டு வறுத்து வைத்திருந்தனர். அதுதான் ஸ்க்ராம்பிள்டு எக் என்று சொன்னார் சேச்சி. 

அவ்வளவு பெரிய சாப்பாட்டு அறை இருக்கிறதே? ஏன் அங்கு அமர்ந்து சாப்பிடாமல் தங்களது அறையிலேயே அமர்ந்து சாப்பிடுகின்றனர்? யோசித்தபோதே… வேலையாட்களின் தங்கும் அறையிலேயே ஒரு மேஜை போட்டு வைத்திருப்பவர்கள் அவர்கள் அறையை எப்படி வைத்திருப்பார்கள்? யார் கண்டது சின்ன சாப்பாட்டு மேஜை கூட அந்த அறையில் இருக்கலாம். 

“பாலா… ஓவியாவுக்கு மதியசாப்பாடு டிபன் பாக்சில் போட்டு ஸ்கூலுக்கு அனுப்பிட்டு வந்துடுறேன்.  பெட்ஷீட் எல்லாம் மடிச்சு வச்சுட்டேன். அய்யா குளிக்கப் போகும்போது குரல் கொடுத்தேன்னா ஒரே ஓட்டமா ஓடி வந்து சுத்தம் செஞ்சுட்டு, மாத்திட்டுப் போயிடுவேன்” சொன்ன மாதிரியே ஓட்டமாய் ஓடினார் காளியம்மா. 

அவ்வளவு பெரிய அந்த வீட்டில் காளியம்மாவின் காலடி ஓசை மட்டும் அவ்வளவு தெளிவாய் கேட்டது. அப்படி ஒரு அமைதி. ஒரு பஸ் ஹாரன், பைக் சத்தம்  இல்லை, ஒரு கீரைக்காரியோ, விளக்குமாறு விற்பவனோ தெருவில் குரல் கொடுக்கவில்லை. டிவி சத்தம், திருவிழா மைக் செட்டு சத்தம் எதுவும் இங்கு இல்லை. அதற்கு பதில் பறவைகளின் சத்தம், காற்று ஒவ்வொரு மரமாக ஊஞ்சலாடி இலைகளை கிச்சு கிச்சு மூட்டும் சத்தம் இதெல்லாம் தெளிவாகக் கேட்டது. 

“போயிட்டு வரேன் அம்மா” என்று சொல்லிவிட்டு ஓவியா சைக்கிளில் ஏறிப் பள்ளிக்குச் சென்றாள். மாடியில் ஜன்னலின் அருகே நின்று அவளிடம் டாட்டா காட்டினாள் செம்பருத்தி. பதிலுக்கு அவளும் டாடா காட்டிவிட்டு சைக்கிள் மணியை அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு சென்றாள். தான் இப்படித்தானே பட்டாம்பூச்சி போல சிறகடித்துப் பள்ளிக்குச் சென்றோம். இந்தக் குழந்தையாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மனதார வேண்டினாள் செம்பருத்தி. 

அந்த சூழ்நிலையின் அமைதியைக் கிழித்துக் கொண்டு 

“ஓ மை காட்….  பாலா… எங்கடா போன… “ என்ற உரத்தக் கூச்சல் ஒன்று ஒலித்தது. 

“இதோ வந்துட்டேன்யா” என்ற பாலாவின் பதில் குரலும் கேட்டு பரபரப்புடன் சென்று அறையின் அருகில் நின்று கொண்டாள். 

“ஒன்னும் இல்லங்கய்யா சரியாயிடும். இதை மட்டும் சாப்பிடுங்க. உடனே சரி பண்ணி கொண்டு வந்துடுறேன்” என்று பாலா சொல்லிக் கொண்டிருந்தான். சற்று நேரம் கழித்து கையில் ஒரு சிறு முக்காலியுடன் வெளியே வந்தவன் இண்டர்காம் வழியாக ஒருவனை அழைத்து “இங்க உடைஞ்சிருக்கு பாரு சரி பண்ணி எடுத்துட்டு வா… “ என்று வேலை சொன்னான். 

“அஞ்சு நிமிஷத்தில் முடிஞ்சுடும்” என்று அவன் சொல்ல, 

“லேட் பண்ணிடாதடா… இதுக்கு மேலதான் அய்யா அவங்கம்மாவோட படத்தை வைப்பார். ஏதாவது சேதாரம் பண்ணி வச்ச பாத்துக்கோ… “

சற்று யோசித்தவன் “அம்மா.. நான் இதை கையோட சரி பண்ணி வாங்கிட்டு வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். 

பாலா சென்று ஐந்தாறு நிமிடங்கள் இருக்கும் உள்ளிருந்து பயங்கர இருமல் சத்தம் “பாலா… வாட்டர், வாட்டர்” என்று இருமலின் ஊடே குரல் கேட்க, பக்கத்தில் யாரும் இல்லாததால் வேறு வழியின்றி தண்ணீர் ஜக்கை எடுத்துக் கொண்டு அந்த பிரமாண்டமான அறையினுள் நுழைந்தாள். 

அப்பாடா… எவ்வளவு பெரிய அறை. அதன் மூலையில் ஒரு நான்கு பேர் தாராளமாக அமர்ந்து கொள்ளும் அளவுக்கு பெரிய சோபா… சுவற்றில் பிரமாண்டமான டிவி, மிக மிக அழகான தேக்கு மரக்கட்டில், அதன் மேலே மெத்து மெத்தென்று அப்படியே புதைந்து விடும்படி பஞ்சுப் பொதியாய் மெத்தைகள் மற்றும் தலையணைகள். பளிச்சென்று வெல்வெட்டாய் மின்னிய போர்வை. அந்த கிங் சைஸ் கட்டிலின் நடுவில் ஒருவன். பாதி உடலைப் போர்வை மூடியிருந்தது. சாய்ந்து உட்கார்ந்திருந்த அவனது படுக்கையில் இரு சிறு மேஜை. அந்த மேஜையில் காலை உணவு. ஓ! இந்த அலங்கார மேஜை காலை உணவு உண்ணவா? படுக்கையிலேயேவா?

யோசித்தவாறே பக்கத்தில் இருந்த கண்ணாடி டம்பளரில் தண்ணீரை நிரப்பிக் கொடுத்தாள். கண்களில் நீர் வர இருமிக் கொண்டிருந்தவன் அந்த நீரை வாங்கிப் பருகினான். அப்போதுதான் அவனைப் பார்த்தாள்.

 ஏ யப்பா இப்படி ஒரு அழகா? அவனை அரவிந்த் சாமி போல நல்ல நிறம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் வெளுப்புத்தான். நம்மூர் பக்கம் இந்த நிறத்தில் ஆண் இருந்தால் பய்யன் நல்ல சிவப்பு என்று சொல்லி விடுவார்கள். அளவான கண்கள், மூக்கு, தாடை, மீசை, காதுகள், உதடுகள்  மொத்தத்தில் நல்ல செதுக்கி வைத்தாற்போல முகம். சற்றே சுருட்டையான முடி. ஒரு மாதிரியான தேன் கலந்த நிறம் அவனை முழுவதும் போர்த்தி இருந்தது. 

அவன் படுக்கையில் அமர்ந்து இருந்ததால் உயரம் தெரியவில்லை. தண்ணீர் குடித்துவிட்டு அவளிடம் வெறும் டம்பளரைத் தந்தான். இன்னும் அவளை அவன் பார்க்கக் கூட இல்லை. 

“தேங்க்ஸ்”

“பரவால்ல” என்று பதில் சொன்னதும் திகைத்து, திரும்பிப் பார்த்தான். அவன் பார்வையில் கேள்வி. புருவம் நெரிந்தது. 

“யார் நீ?”

“செம்பருத்தி”

“ஓஹோ… எந்த சமஸ்தானத்து மஹராணி?”

பதில் சொல்ல முடியாமல் திகைத்தாள். 

“எந்த சமஸ்தானமா இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. கெட் அவுட்”

அப்படியே செய்வதறியாமல் நிற்க 

“காதில் விழல. கெட் அவுட் மேடம்” என்றான் விரல்கள் அறை வாயிலைக் காட்ட, கண்களில் தீக்கங்குகள் பறக்க அவன் சொன்னதைக் கேட்டு மெளனமாக வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று. 

வெளியே வந்தவளை தூரத்தில் பார்த்த பாலா ஓடி வந்தான் “சாரிம்மா… ரிப்பேர் செஞ்சுட்டு வர நேரமாயிருச்சு. ஐயா கூப்பிட்டாரா?”

ஆமாம் என்று தலையசைத்தவள் “கோவமா இருக்கார்” என்று சொல்லி முடிப்பதற்குள் 

“பாலா, எங்க போன? யார் யாரோ என் அனுமதி இல்லாம ரூமுக்கு வர்றாங்க. என்னடா நடக்குது. அந்தக் குடும்பமே சேர்ந்து இன்னைக்கு என்னைத் தீர்த்து கட்டப் போகுதா?” என்று கத்தும் சத்தம் கேட்க, அதன் பின்னே பீங்கான் பாத்திரம் ஏதோ உடையும் ஓசை கேட்டது. 

ஏன் இவ்வளவு கோவம் அவனுக்கு? யோசித்தபோது அவன் மேலாடை கூட அணியாமல் ஒரு இரவு நேர ப்ளூ நிறத்தில்  பளபள கோட் ஒன்றினை மட்டும் அணிந்து கழுத்தில் போட்ட தங்க செயின் மார்பில் படர அமர்ந்து, ஒரு கண் பக்கத்தில் இருக்கும் ஆங்கில செய்தித்தாளிலும் மற்றொரு கண் ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியிலும் இருக்க ஏதோ நினைவுடன்  உணவருத்திக் கொண்டிருந்த காட்சி நினைவுக்கு வந்தது. 

வெகு நாட்களாகப் பழகிய பாலாதான் உள்ளே வருகிறான் என்ற நினைவில் காலை எழுந்து தனது அறையில் சுதந்திரமாய் அமர்ந்திருந்தவனின் முன் அறிமுகமில்லாத பெண் ஒருத்தி நின்றால்  கோவம்தான் வரும். பெண்கள் அறைக்கு மட்டும் இல்லை, அனுமதி பெறாமல் ஆண்கள் அறைக்குள் நுழைவதும் தவறுதானே? 

ஆனால், நான் வேண்டுமென்றவா நுழைந்தேன். அவன்தானே இருமிக் கொண்டிருந்தான். தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்தது தவறா?

இருவர் மேலும் தவறில்லை. இப்படி ஒரு முதல் சந்திப்பை ஏற்படுத்தித் தந்த விதியின் மேல் தான் முழு தவறும். 

‘சே! முதல் சந்தர்ப்பத்திலேயே சொதப்பிட்டியே. நீ நல்லவளாத்தான் இருக்கணும்னு நினைக்குற. ஆனால் உன் மண்டைல இருக்குற சுழி உன்னைக்  கெட்டவளாக்கிடுதே!’ தன்னைத் தானே திட்டிக் கொண்டாள் செம்பருத்தி. 

 

error: Alert: Content selection is disabled!!