அத்தியாயம் 11 – 1

அதுவரை சுவரில் அலங்காரமாகத் தொங்கிய கல்யாணியின் புகைப்படங்கள் அறையின் மூலையில் நொருங்கிக் கிடக்கஎன் உள்ளம் போலவே சுக்குநூறாகிப்போன கண்ணாடிச் சிதறல்கள் அறையெங்கும் சில்லுச் சில்லாய்ச் சிதறிக் கிடந்தன.

 “ஐயோ பிள்ளைகள்! இதெல்லாம் என்ன வேலை? பாருங்க, காலுக்க கண்ணாடித் துண்டுகள்; முதல் இந்தப் பக்கம் வாங்கோ!” 

  சூர்யாவின் கடைசித் தங்கை உள்ளே நுழைந்து தங்கச்சிகளை  இழுக்க, “பச் விடுங்க! இனிமேல் யாரும் எங்களில பெரிய அக்கறை உள்ளது போல கதைச்சுக் கொண்டு வர வேணாம் சொல்லீட்டன்.” சீறினாள் தீபி

  “எங்கட அக்காண்ட வாழ்க்கை இது! இதெல்லாம் உங்களுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்? அப்பிடியிருக்க எப்பிடிக் குட்டிச் சித்தி? அக்காட வாழ்க்க பற்றி உங்களுக்கு எல்லாம் ஒண்டும் இல்ல என்ன? நீங்க மட்டும் நல்லா சந்தோசமா இருங்கோ என்ன?” 

  அவரைப் பிடித்துத் தள்ளிவிட்டுவிட்டுபெரிதாக அழுதபடி பின்னால் நகர்ந்து சுவரில் மோதி நின்றாள் கவி

  “எல்லாருமாச்  சேர்ந்து எங்கட அக்காட வாழ்க்கையில விளையாடீட்டிங்க தானே?” 

   துக்கம் தாங்காது கேவிக் கேவி அழுதாள் சின்னவள்

  எப்போதுமே அவர்களின் சிறு கலக்கத்தையும் காணச் சகிக்காத நானோ, இன்று, அப்படியே அசைவின்றி நின்றிருந்தேன். மனமும்தான், அடுத்து என்ன என்று என்னால் துளி கூட சிந்திக்க  முடியவில்லை.

  அதேநேரம், “அங்க என்ன சத்தம்? அதுவும் என்ர அறைக்க உங்களுக்கெல்லாம் என்ன வேலை?” சூர்யா குரலுயர்த்தியபடி வருவது தெரிந்தது

  அதுதானே? இந்த அறைக்குள் எனக்கு என்னதான் வேலை இருக்கு?

  ‘விசுக்கென்று நகர்ந்து அந்தாள் பார்வையில் படாது சென்று விடு!’ சூர்யாவின் குரலுக்கு மேலாக என் மனம் ஆணையிட்டது

  நகர்ந்துவிட நினைக்கையில்,“பச்! தள்ளுங்க!” வாயிலில் நின்றவர்களை விலத்திக்கொண்டு உள்ளே வந்தவர், அறை கிடந்த கோலத்தில் சிலையென நின்றது ஒருகணம் தான். மறுகணம், என்னை அவர் பார்த்த பார்வையில் முள்ளந்தண்டு சிலிட்டுப் போனது.

  நான் பார்க்க வேண்டிய பார்வை இது

  எல்லாம் தெரிந்தே கலியாணம் செய்திருந்தாலும் இது அதிகம் என்று இவருக்கு விளங்கவில்லையா

  ‘காதலியை மறக்க ஏலாது, மறக்கவும் மாட்டன் என்றெல்லாம் வார்த்தைகளில சொல்லுறது வேற. இது? இப்படிப்பட்டவருக்கு என்னத்துக்குக் கலியாணம்? அந்தளவுக்கு முடியாதென்று மறுக்கத் துணிவில்லையாமா? யாருக்குக் கதை விடுறார்?’

  என்னுள்ளத்தின் அலறல் அவர் உரத்த குரலில் அடங்கிப் போயிற்று.

  “உனக்கு எவ்வளவு துணிவிருந்தா என்ர அறைக்க வந்திருப்ப? அதுவும் இல்லாமல் என்ர கல்யாணிட  படங்களில கைவைக்கிற அளவுக்கு எப்பிடித் துணிவு வந்திச்சு!” 

  இப்படி அவர் கேட்பதற்கு நறுக்கென்று பதில் சொல்லலாம் என்று நினைக்கையில், ‘பளார்என்று அடித்த அடியில் அந்தக் கண்ணாடித் துண்டுகளின் சிதறல்களுக்கிடையில் சென்று விழுந்திருந்தேன் நான்.

  கன்னத்தில் விழுந்த அறையில் இரும்பால் அடிவாங்கியது போல்  தலை விண்ணென்று சுற்றியது. நாக்கில் உப்புக்கு கரித்தது

  “ஐயோக்கா!”

  “உதயா!” என்ற கூவல்களையும் மேவி, “ஏய்! நீயெல்லாம் ஒரு மனிசனா?” ஆக்கோரசக் குரலோடு சூர்யாவை நெருங்கியிருந்தார் கெளதம் அண்ணா.

  கண்ணீர்  தளும்பி மறைத்த விழிகளைச்  சிமிட்டி நடப்பதைக் காண முயன்ற என்னை, “ஐயோக்கா சொண்டால ரெத்தம் வருது?” கவி அழுதவாறே துடைத்துவிட, அணைத்து எழுப்பி நிறுத்தினாள் சின்னவள்.

  சூர்யா, தன் கன்னத்தைப் பதம் பார்க்கவிருந்த கெளதம் அண்ணாவின்  கரத்தைக் கெட்டியாகப் பற்றி, மிக நிதானமாக விலக்கியபடி அவரை ஒரு பார்வை பார்த்தார்.

  ‘தலையிடாதே!’ சொல்லாமல் சொன்ன பார்வையில் கெளதம் அண்ணாவின் முகத்தில் கோபத்தீ தெறித்தது.

  “உதயா எங்கட வீட்டுப்பிள்ள. அதனால தான் இன்னமும் உங்கட அக்கா சொன்ன கதைகளை எல்லாம் கேட்ட பிறகும் இங்க நிண்டு கொண்டிருக்கிறம். இங்க என்ன நடந்தாலும் பார்த்துக் கொண்டிருப்பன் எண்டு நினைக்காதீங்க!” குரலை உயர்த்தினார், கெளதம் அண்ணா.

  “அதுக்காக? கையோங்கிற வேலை எல்லாம் இங்க வேணாம். இதை எல்லாம் உங்கட ஸ்டேசனில வச்சுக்கொள்ளுங்க!” 

   சூர்யாவின் குரல் உயரவில்லை, ஆனால் அந்தச் சீறலில் என்னுடல் நடுங்கியது.

   “! நீங்க மட்டும் உங்க விருப்படி நடக்கலாம், கையோங்கலாம் அடிக்கலாம் போல!”

   “இங்க பாருங்க, இது என்ர குடும்ப விசயம். தயவு செய்து நீங்க தலையிடாமல் இருக்கிறது நல்லது!” 

  அதே குரலில் எச்சரிக்கும் தொனியில் சொன்ன சூர்யாவை, ‘விசரா உனக்கு?’ என்றமாதிரி ஒரு பார்வை பார்த்த கௌதம் அண்ணா, “இதையேஅதுதான் இது உங்கட குடும்ப விசயம் எண்டத உதயா சொல்லட்டும் நாங்க போய்க்கொண்டெ இருப்பம்.” சவால் போலத்தான் சொன்னார்.

  சூர்யாவோ, திரும்பி என்னை வெறித்தார்

  “இங்க பாருங்க தம்பி, இதெல்லாம் கொஞ்சமும் சரியில்லை சொல்லீட்டன். அதெப்படி என்ர தம்பிக்கு நீங்க கையோங்களாம்? நான் முதலே சொன்னன், கலியாணம் முடிஞ்சா அதே சந்தோசத்தோட போயிட்டு வாங்கோ எண்டு. தள்ளுங்க. நீங்க முதல் வெளியில போங்க!” சீறியபடி வந்து அவரைப் பிடித்து வெளியில் அனுப்ப முயன்றார்   சித்தி

  “நீங்க சொல்லுறபடியெல்லாம் செய்ய முடியாது; என்ன செய்வீங்க?”

   தன்னை வெளியில் அனுப்ப முயன்ற சித்தியின் கரங்களைப்  பட்டெனத்  தட்டி விட்டார் கெளதம் அண்ணா.

  “கண்ணுக்கு முன்னால எங்கட பிள்ளேட  வாழ்க்கையோட விளையாட, பார்த்துக்கொண்டிருந்திட்டு பேசாமல் போவமா? கெளதம், நீங்க வாங்க பேசாமல் போலீசில சொல்லுவம். அப்பத்தான் எல்லாரும் அடங்குவீனம்.” 

  தீர்மானமாக இடையிட்டது நர்மதாவின் தந்தையின் குரல்.

   “போங்கோ! எங்க வேணுமெண்டாலும் போய்ச் சொல்லுங்க. யாரும் இங்க தடுக்கேல்ல.” மீண்டும் இடியென முழங்கினார் சூர்யா.

  “கலியாணத்துக்கு முதலும் இவளிட்ட என்ன கேட்டன்? நான் இப்படித்தான் இருக்கப் போறன், கல்யாணியை மறக்கிறது முடியாத காரியம் எண்டு சொல்லி, உனக்கு விருப்பம் இல்லையெண்டால் இப்பவும் சொல்லு கலியாணத்தை நிறுத்தலாம் என்றேனா இல்லையா? அண்டைக்கு விருப்பமில்லை என்றிருக்க, இப்ப இப்பிடிக் கண்டவர்களுக்கும் நான் பதில் சொல்ல வேண்டி வந்திராது.”

   மீண்டும் என்னிடம் திரும்பியவரைப் பார்க்கவே பயமாக இருந்தது.

  என்னுடல் நடுங்கக் கண்ணீரோடு அணைத்துக் கொண்டார்கள் தங்கைகள்.

error: Alert: Content selection is disabled!!