“இன்னொருக்கா இங்க நிண்டு வாய் திறந்தால் ரெண்டு பேரும் என்னாவீங்க எண்டு எனக்கே தெரியாது; மரியாதையா வீட்ட நடவுங்க!” என்றுவிட்டு என்னிடம் திரும்பினார் சித்தி.
“இப்ப முதல் வேலையா உன்ர சிநேகிதி வீட்டாக்களை மரியாதையா போயிறச் சொல்லு! இங்க வந்து நிண்டு வீண் பிரச்சினை கிளப்ப வேணாம் எண்டும் சொல்லு! போலீஸ் எண்டதும் இங்க யாரும் பயப்படப் போறதில்ல. இப்பிடி எத்தின பேரைக் கண்ட ஆக்கள் நாங்க!”
கெளதம் அண்ணாவை வெறுப்போடு பார்த்தார்.
“எவ்வளவு அவமரியாதை செய்தாலும் நகராது நிக்குதுகளே! வெட்கம் கெட்ட சனங்கள்” அவர்களுக்குக் கேட்கும் படியே முணுமுணுத்தார்.
நர்மதா குடும்பத்தினர் முகங்கள் கன்றிச் சிறுத்தும் ஒருவரும் அசையவில்லை.
“வீண் கதைகளை வளர்த்துப் பிரச்சினப்படாதீங்க! ஒரு நல்ல நாளும் அதுவுமா வீட்டில நிண்டு கத்திக் குளறிக்கொண்டு…அயலட்டம் எல்லாம் பார்க்குதுகள்.”
சூர்யாவின் அக்கா தங்கைகளின் கணவர்மார் சற்று முன்னர் தான் திருமண மண்டபத்திலிருந்து வந்திருந்தவர்கள், நடந்தவற்றை மனைவிமாரிடம் கேட்டுவிட்டு மெல்ல நிலைமையைச் சுமூகமாக்க முயன்றார்கள்.
“இந்த அயலட்டத்துக்கு இங்க என்ன நடக்குது எண்டு இண்டைக்கா தெரியும்? இப்ப நிண்டு பார்க்க?” என்ற நர்மதா, என்னை நோக்கி வந்தாள்.
“இங்க பாருங்க, நீங்க எவ்வளவோ பேரைக் கண்டிருக்கலாம்; நாங்களும் அப்பிடித்தான். உங்களைப் போல எத்தின ஆக்களக் கண்டிருக்கிறம் தெரியுமா? அதனால, எங்களோட பிரச்சனைக்கு வர வேணாம். பிறகு நல்லா இருக்காது. உதயாவுக்காக எந்த நேரமும் பார்க்க மாட்டம்!” சித்தியை எச்சரித்தவள்,
“இதெல்லாம் உனக்குப் போதாதடி எரும! இனியும் இங்க நிண்டு என்னடி செய்யப் போற? எவ்வளவு சொன்னம்?
இனி அதைக் கதைச்சுப் பிரயோசனம் இல்ல. இந்தளவோட எல்லாம் தெரிய வந்ததே எண்டு சந்தோசப்படு! சரியே வராது எண்டு தெரிஞ்ச பிறகும் நீ ஊரைத் திருத்தி வாழவைக்கப் பிறப்பெடுக்க இல்ல நினைவில வச்சிரு!
வா…நாம போகலாம். உனக்கு யாரும் வேணாம், நான் இருக்கிறன்…நாங்க இருக்கிறமடி!”
கண்ணீரோடு என் கரத்தைப் பற்றி இழுக்கையில் தான் என் கால்களில் சுளீரென்ற வலியையே உணர்ந்தேன்.
மறுகணமே, “அம்மா!” அலறிவிட்டேன்.
நர்மதாவின் தோளைப் பற்றிக்கொண்டு நிற்க முடியாது தடுமாறிய என்னை, “என்னடி?” என்று நர்மதாவும், “அக்கா! என்னக்கா?” என்று தங்கச்சிகளும் வர, மெல்ல சேலையை உயர்த்தி பார்த்தேன்.
“என்னடி இது ரத்தம்?”
“ஐயோ! அப்பவே சொன்னன் தானே? கண்ணாடி வெட்டீட்டுப் போல. சின்னக்கா தும்புத்தடியை எடுத்துக்கொண்டு வந்து இந்த இடத்தை ஒருக்கா கூட்டி அள்ளக்கா!” என்ற குட்டி, “இப்பிடி வந்திரு உதயா.” அருகில் கிடந்த கதிரையில் அமர்த்தினார்.
இரண்டு பாதங்களிலும் கண்ணாடிச் சிதறல்கள் தயை தாட்சண்யமின்றிக் கிழித்திருந்தது. அதோடு, அடித்த அடியில் விழுந்தேன் தானே? பின்னங்கைகள் முழங்கை என்று எல்லா இடமும் கண்ணாடியின் உரசல்; இரத்தம் கசிந்தது. இத்தனை நேரமும் உணராத வலியும் எரிச்சலும் தன்பங்குங்கு உயிரை வாங்கியது.
“வடிவாத் துடைச்சசிட்டு இப்போதைக்கு இந்த மருந்தைப் போட்டு விடுங்க!” யாரோ கொண்டு வந்து நீட்டினார்கள்.
“இல்ல இல்ல… மருந்து எல்லாம் வேணாம். கண்ணாடி எதுவும் இருக்கா என்று பார்த்திட்டு சும்மா கட்டுப் போட்டாச் சரி. நாங்க டாக்டரிட்ட கூட்டிக்கொண்டு போறம்.”
கராறாகச் சொன்ன நர்மதாவின் தாய்க்கோ, இங்கிருந்து கிளம்பிவிடும் அவசரம். நர்மதாவும் தலையசைத்து ஆமோதித்தாள்.
“உதயா இந்தப் பெட்டிகள் உம்மட தானே?”
நர்மதாவின் தந்தை வாயிலோரமாகக் கிடந்த என் பைகளை எடுக்க, கெளதம் அண்ணா ஒன்றை வாங்கிக் கொண்டார்.
நான் யாரையும் பார்க்கவில்லை. இங்கிருந்து கண்காணாத இடம் போகச் சொன்னாலும் தயார் நிலையிலிருந்தது மனம். இருந்தும் சூர்யாவின் தாயின் விசும்பல் ஒலி மனத்தைத் தைத்தது தான். அதுவும் நர்மதாவின் தந்தை பெட்டியை இழுத்து வெளியில் எடுக்க அழுகை ஒலி அதிகரித்தது.
“ஏய் உதயா! என்னடி விளையாடுறியா? இதுக்குத்தான் இந்தச் சனம் பின்னால வந்ததுகளா? எப்படா என்னவாவது பிரச்சனை நடக்கும் இழுத்துக் கொண்டு போவம் என்ற கணக்கில நிக்கீனம்! என்ன விசயம்? எங்களுக்கே தெரியாமல்?”
சித்தி ஒருமாதிரிக் கேட்க, தலையில் அடித்துக் கொண்டாள் நர்மதா.
“இதில இனியும் நின்றால் மனுசருக்கு விசர் பிடிக்கும். நீ மெல்ல எழும்பி வா!”
எழுந்துவிட்டேன் .
“உதயா!” கோபத்தோடு அதட்டினார் சித்தி.
“என்னடி கொழுப்பா? இப்பத்தான் கலியாணம் முடிஞ்சு வந்திட்டு அதே வேகத்தில பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிற; எங்க போகப் போற? இதுகள் எத்தின நாளைக்கு உன்னை வச்சிருக்குங்கள்? அரசனை நம்பி புருசனக் கைவிடாத!”
“பிறகு இங்க இருந்து என்ன செய்யிறது? எங்க போகப் போறாள் எண்ட கவலையெல்லாம் உங்களுக்கு வேணாம்.
பெரிய புருசன்! இவர் இல்லை எண்டுதான் அவள் கிடந்து அழுகிறாள் பாருங்க. ரெண்டு மணித்தியாலத்துக்கு முதல் எப்படி இருந்தவள்? இப்ப இவளிண்ட கோலத்தைப் பாருங்க. இந்த ரெண்டு மணித்தியாலத்தில இப்படி எண்டால் இங்கயே விட்டுட்டுப் போனால்? அடிச்சே கொல்லுவீங்க!”
சித்தியிடம் சினத்தோடு ஆரம்பித்துச் சூர்யாவில் முடித்தாள் நர்மதா.
சூர்யாவின் முகத்தின் பாவனையை நான் பார்க்கவே நினைக்கவில்லை.
‘இது என் குடும்பப் பிரச்சினை யாரும் தலையிட வேணாம்’ என்றவர் ஆச்சே! என் பதில் இதுதான். இந்தக் கணம் மனதுள் இருந்த அத்தனை கசப்பிலும் ஒரு சுகமோடியது. பழிக்குப் பழி அல்ல, என்னைக் கட்டுப்படுத்தும் தகுதி உனக்கில்லை, உங்கள் யாருக்குமே இல்லை.