Skip to content
“இங்க பார் பிள்ளை, இவ்வளவும் தான் உனக்கு மரியாதை; நீ முதல் வெளியே போ!” சித்தி.
“ஐயோ அக்கா! கொஞ்ச நேரம் சும்மா இருங்கோவன், நாங்க பார்க்கிறம்.” என்ற, தன் சகோதரிகளின் வார்த்தைகளைக் காதிலும் வாங்காது நர்மதாவை அடிக்கும் பாவனையில் நின்றார் சித்தி.
“இந்த நீ வா என்றதெல்லாம் இங்க வேணாம், மரியாதையாக் கதையுங்கோ!” கெளதம் அண்ணா.
“ஓ! மரியாதை வேண்டிக் கிடக்கோ? அடுத்தவன் வீட்டு விசயங்களில மூக்கை நுழைக்கிற பெரிய மனுசருக்கு மரியாதை என்ன வேண்டிக் கிடக்கு?”
“எது அடுத்தவன் வீட்டு விசயம்? உதயா எங்களுக்கும் பிள்ளைதான்.” குறுக்கிட்டார் நர்மதாவின் அன்னை.
“இது என்ன புதுக்கதை? எப்பிடியெப்படி? இவள் உங்களுக்கும் பிள்ளையா? அப்ப, உங்கட மகளை விட ஏழெட்டு மாதங்கள் மூத்தவள் தானே இவள்? நல்ல உத்தியோகத்தில இருக்கிற, குடிப்பழக்கமில்லாத, முக்கியமா முதல் காதல் கீதல் செய்யாத மாப்பிள்ளையாய்ப் பார்த்துக் கட்டி வச்சிப் போட்டல்லோ நர்மதாக்குச் செய்திருக்க வேணும்? அதைவிட்டுட்டுக் கலியாணத்துக்குக் கட்டாயம் வா எண்டு வந்து கார்ட் நீட்டுறதுதான் பாசமும் அக்கறையும் பொங்குற சொந்தமா?”
“இங்க பாருங்க, விதண்டாவாதம் பண்ணிக்கொண்டிருக்க நேரமில்ல, வாங்க போவம்.” வெளியேறினார் நர்மதாவின் தந்தை.
“நர்மதா, உதயாவைக் கூட்டிக்கொண்டு வா!” கௌதம் அண்ணா.
“அதெல்லாம் முடியாது. அவள் எங்கயும் வரமாட்டாள், நீங்க இடத்தைக் காலி பண்ணுங்க; சொல்லிச் சொல்லிக் களைச்சுப் போனன்.”
சித்தி என் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினார்.
“இங்க பாரடி, நன்றி கெட்டவளா நடக்க நினைக்காத! நீ உன்ர விருப்பத்துக்குப் போய் இந்தப் பிள்ளைகள்ட வாழ்க்கையில மண்ணள்ளிப் போட்டிராத!”
“இல்லக்கா இல்ல, நீங்க இங்க இருக்க வேணாம்; யாரையும் பார்க்க வேணாம்; நர்மதாக்காவோட கொழும்புக்கே போங்கோ!”
தங்கைகள் இருவரும் ஓடி வந்து சித்தியின் இரும்புப் பிடியிலிருந்து என் கரத்தை விடுவிக்கப் பார்த்து, பளார் பளாரென்று அறைவாங்க, “ஐயோ அக்கா! உங்களுக்கு உண்மையாவே விசர் பிடிச்சிட்டு; நீங்கதான் எல்லாத்தையும் பெரிசாக்கிறீங்க!” அவரின் தங்கைகள் இடையில் வந்தார்கள்.
“ஓமடி ஓம்! எனக்கு விசர் தான்! நீங்களும் ஒன்பது வயதுப் பிள்ளையோட ஒருத்தன ரெண்டாம் தாரமாகக் கட்டிப் பாருங்க, அப்பத் தெரியும்.” கிரீச்சிட்டார் சித்தி.
‘இதையே இன்னும் எத்தனை காலத்துக்குச் சொல்வார்?’ எல்லார் மனதிலும் நிச்சயம் இதுதான் ஓடியிருக்கும்.
“பார்! என்ன நேரத்தில நீ என்ன கதை கதைக்கிற பிள்ள? ஐயோ கடவுளே! எனக்கு மட்டும் ஏன் இப்பிடி?” அழுதார் சித்தியின் தாய்.
“தேவையான கதைதான் கதைக்கிறன். அண்டைக்குத் தாயில்லாமல் சின்னப்பெட்டையா ‘பே‘ எண்டு நின்ற நாளில இருந்து, இவேதான் உன்னப் பார்த்தவையாடி?
வா எண்டதும் கொஞ்சமும் தயங்காமல் போற. வெட்கமா இல்லையா உனக்கு?
இப்பிடி அண்டைக்கு நான் போயிருந்தா நீயும் உன்ர அப்பனும் என்ன கதியாகி இருப்பீங்க சொல்லு பார்ப்பம்?” மூச்சுவிடாது கேட்டவர்,
“நீ இல்லையெண்டால் இன்னொரு பெண் எண்டெல்லாம் சொல்ல வராத; அப்பிடி நினைச்சும் பாராத; உன்ர அப்பாவோட வேற ஒருத்தி ஒரு மணித்தியாலம் கூட இருந்திருக்க மாட்டாள்.” என்றார், அழுகையோடு.
“ச்சே!” தன் தலையில் பலமாகவே அடித்துக் கொண்டார் சூர்யா. திரும்பிப் பார்க்காமலே அது தெரிந்தது.
எப்போதுமே சித்தி அப்பாவைக் குறைத்துக் கதைத்தார் என்றால் எதிர்ப்பவர்தான். அந்தளவு மரியாதை எல்லாம் அப்பாவில் மட்டும் தான். தொண்டை முட்டக் கசந்து வழிந்தது.
‘அவர் இப்ப எப்பிடி இருந்தாலும் எல்லாம் மறந்து நாங்க சந்தோசமாக வாழ்வோம்‘ என்று, இதே நர்மதாவிடமும், புனிதா ஆன்ட்டியிடமும் மார்தட்டியது நானா?
எனக்கே பெருத்த சந்தேகமாக இருந்தது.
“நான் இப்பிடிச் சொன்னா உங்களுக்கு அதை நம்ப ஏலாது. வாழ்ந்து பார்த்தது நான் தானே? கலியாணம் கட்டின நாளில இருந்து, அந்த மனுசன் சாகிற நிமிசம் வரைக்கும் தன்ர மனிசி…அதுதான் மகராசியா செத்துப் போனாளே அவள்ட நினைவிலதான் இருந்தவன். போதாததுக்கு அவள் பெத்த மகள், அதுவும், மனிசியையே உரிச்சு வச்சிக்கொண்டு.” வெறுப்பாக என்னைப் பார்த்தார்.
“என்ர மகள் என்ர மகள் எண்டு கொஞ்சேக்க அப்படியே கொதி தண்ணியை ஊத்த வேணும் போல இருக்கிறது. ஒருநாள் சரி நான் பெத்த இந்தச் சனியங்களக் கொஞ்சி இருப்பானா உன்ர அப்பன்?
இந்த ரெண்டு மோடுகளுக்கும் அது கொஞ்சமும் விளங்கிறது இல்ல. அப்படி இருக்க நான் இந்தச் சனியங்களப் பெத்து உன்னையும் பார்த்து…இந்தா வாழேல்லையா?
அப்படி நீயும் வாழ்ந்து பாரடி, வாழ்ந்து பார்! அரைகுறையில போன உன்ர அப்பன்ட ஆவி அங்க இங்க திரிஞ்சு அதைப் பார்க்க வேணும்; ‘அடடா நான் ஒருத்திக்குச் செய்ததை இன்னொருத்தன் என்ர செல்ல மகளுக்குச் செய்யிறானே‘ எண்டு அந்தரிச்சுத் திரிய வேணுமடி, திரிய வேணும்; அப்பத்தான் என்ர மனம் ஆறும்.”
நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார் சித்தி.
அவரைப் பார்க்கையில் ஒருபுறம் பெரும் பாவமாகவும் மறுபுறமோ, பயமாகவும் இருந்தது.
தங்கைகள் அப்படியே பின்னால் சென்று சுவரோடு ஒடுங்கி நின்று சித்தியைப் பைத்தியத்தைப் பார்ப்பது போல் பார்த்தார்கள்.
“கடவுள் ஆணையாச் சொல்லுறன், உன்ர அப்பன விட இவன் எதிலும் குறைச்சல் இல்ல. உன்ர கொப்பர் தன்ர முதல் மனிசியச் சாகும் வரை மறக்கேல்ல; இவன், காலத்துக்கும் காதலியை மறக்க மாட்டான்.”
அங்கு ஓரமாகக் கிடந்த கல்யாணியின் புகைப்படத்தைச் சுட்டிக்காட்டியவர் பெரிதாகச் சிரித்தார்.
அங்கு நின்ற எல்லோருமே உண்மையில் அதிர்ந்துதான் போனோம். ‘நான் எப்படி வாழ்ந்தேனோ, நீயும் அப்படியே வாழ வேணும்; வாழ்ந்து பார்!’ என்றது போலல்லவா சொல்கிறார். பழிவாங்கல் போலில்லையா?
“சித்தி!”
இந்த வீட்டில் கால்வைத்த பின்னர் திக்கித் திணறி முதல் முதல் ஒரு சொல் வழுவி விழுந்தது.
“ஓமடி ஓம், சித்திதான்! இங்கப்பார், நீ எங்கயும் போகேலாது. மரியாதையா இங்கயே கிட. உனக்குக் கெட்டித்தனம் இருந்தா எல்லாத்தையும் நேராக்கி வாழு! யாரும் இங்க வேணாம் எண்டு சொல்லேல்ல.” என்றார், நக்கலாக.
“ஏன்டி, வீட்டுக்கு மூத்தவள் எண்டு எவ்வளவு பாசமா இருந்தன். நீ என்ன எண்டால் இப்பிடியெல்லாம் திட்டம் போட்டுக் குழி பறிக்கிறியே!” அதிர்வும் கோபமும் அழுகையுமாகக் கேட்டார் அம்மம்மா.
“சொந்தத் தம்பி, வாழ்க்கையில நல்லா இருக்க வேணும் எண்டு உன்ர வீட்டுப் பிள்ளயக் கலியாணம் செய்து தாறன் எண்டு சொல்லுற என்று நம்பி ஏமாந்து போனனே! இப்ப என்ன எண்டால் இப்படிக் கண்டதுகளையும் கதைச்சு அந்தச் சின்னப்பிள்ளேட மனத்தைக் குழப்புறியே!
சூர்யா எப்பவும் ‘அக்கா பெரிய சுயநலவாதி’ எண்டு சொல்லேக்க நான் நம்பிறேல்ல. ஆனால், நீ எல்லாத்துக்கும் மேல!
போ! போடி! நீ முதல் வெளிய போ! இனிமேல்பட்டு இந்தப் பக்கம் வந்திராத!”
மகள் முதுகில் கை வைத்து வெளியில் தள்ளிச் சென்றார் அவர்.
“போவம் நர்மதா…” நடந்தார் கௌதம் அண்ணா.
“வாடி!” மீண்டும் என் கரம் பற்றி நர்மதா நடக்க, ஒருகணம் தங்கைகளை ஏறிட்ட என் நெஞ்சம் கனத்துப் போயிற்று!
அதன் சுமை கால்களை ஒத்த அடி நகர்த்தவில்லை.
error: Alert: Content selection is disabled!!