அத்தியாயம் 12 – 3

அம்மாவின் அழுகையோ அக்காக்கள் தங்கச்சிகளின்  பதற்றமோ, கலக்கமோ  அவளைத் தடுத்து நிறுத்தவில்லை

  அவளுரு மறைந்த பின்அவள் பார்த்த அந்தப் பார்வையில் என் நெஞ்சம் எக்கச்சக்கமாக நைந்து போனதென்பதே உண்மை

    ‘யாரில உள்ள கோவத்தில அவளப்  பழிவாங்கீட்டன்?’ 

   மனமாறக் காதலித்த காதலை வாழ்வு முழுமைக்கும் அனுபவிக்க முடியாத என்னிலா?   

   எனக்கு விதித்த விதியிலா?  

   அவளே கல்யாணத்தை நிறுத்தட்டும் என்று நினைத்தது எல்லாம் ஒரு ஆம்பிளை செய்யும் வேலையா

   விருப்பம் இல்லையோ முடியாது என்று மறுக்கும் துணிவற்றவனாகி இருந்திட்டனே

  “கிரீச்மனம் எங்கெங்கோ போய் வந்தாலும் சரியாக வீடு வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தேன்.  

  ‘இப்ப உள்ளுக்குப் போகவா வேணும்? இப்பிடியே எங்கயாவது  சுற்றிட்டு கராஜ் போனால் என்ன?’ என்று சிந்திக்கையில் வாயிலைத் திறந்து எட்டிப் பார்த்தாள் குட்டி. அதுமட்டுமில்லாமல் அதேவேகத்தில் கதவைப்  படீரென்று சாத்திவிட்டுச் சென்றும் விட்டாள்

  அதன் பின்னர் ஏனோ வேறெங்கும் போக முடியவில்லை. உள்ளே போய் மோட்டாரை நிறுத்திவிட்டு வாயில் கதவில் கை வைக்க, திறந்து கொண்டது. உள்ளே  வருவேன் என்றே திறந்து விட்டிருக்கிறாள்; இல்லையோ இப்படி விடமாட்டாள்.  

  உள்ளே நுழைந்த வேகத்தில் அங்க இங்க பாராது என்னறைக்குள் புகுந்து கொண்டேன்

  கட்டிலில் அமரப் போய்ப் பின்னர் அங்கு கிடந்த கதிரையில் அமர்ந்து கொண்டேன்

  மூன்று வருடங்களுக்கும் மேலாக நான் சுய நினைவோடிருக்கையில் என்னோடு உறவாடிய புகைப்படங்கள் அப்படியே மூலையிலிருந்த சிறுமேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன, வெறும் புகைப்படங்களும் மரச்  சட்டங்களுமாக.  

  மனம் அவளைப் பாரேன் என்று தூண்டியதில் கால்கள் வேகமாக அந்த மேசையை நாடின.  

  அந்த வேகத்துக்கு மாறாக, மெல்லமிக மெதுவாகத் தயங்கிக் கொண்டே நகர்ந்த வலக்கரம் மேலாக இருந்த புகைப்படத்தை எடுக்க, என்னுள் கொந்தளித்துக்கிடந்த உணர்வுகள் அனைத்தையும் தன்னுள் தேக்கி நின்ற என் விழிகள் மெல்லத் தழைந்து அவள் விழிகளுள் உற்றுப் பார்க்க முயன்றன

  எப்போதும், பார்த்ததும் என்னுள் சிலிர்ப்போடு இறங்கும் அவள் நினைவுகள் இப்போதோ, கண்டபடி தடதடத்தன.  

  அவள் முகத்தை, அதில் வீரியத்தோடிருக்கும் பார்வையை என்னால் சில கணங்களேனும் தொடர்ந்து பார்க்க முடியவில்லை

  சட்டென்று அந்தப்  புகைப்படத்தை வைத்துவிட்டு அப்படியே கட்டிலில் குப்புற விழுந்தேன். மனதுள் ஒரு அன்னியத் தன்மையோடு அவள் நிழல்

  ‘ஏன்? நீயும் என்னை ஏமாற்றீட்டுப் போனனீ தானே? அதுபோலத்தான் நானும் உன்ன ஏமாற்றீட்டு இன்னொருத்திக்குச் சொந்தமானவனாக மாறீட்டன்.’  

  அவள் எதுவுமே கேட்கவில்லை, இருந்தும் குற்றக்  குறுகுறுப்புக் கொண்ட மனம் முணுமுணுத்தது

  ‘இன்னொருத்திக்குச் சொந்தமானவனாக மாறீட்டன்.’ எத்தனை இலகுவாக என் மனம் இப்படி எண்ணிவிட்டது?

  கரங்கள் இரண்டும் முறுக எழுந்தமர்ந்தேன்.  

   எழுந்து சென்று யன்னலால் வெளிப்புறத்தை இலக்கின்றி வெறித்து நின்றேன்

    அன்று, உதயா வெளியேறிய வேகத்தில் கொழும்பு சென்றுவிடுவாள் என்றுதான் என் மனம் சொன்னது. ஆனால், அவள் கொழும்பு போகவில்லை என்று, அடுத்தடுத்த நாளில் அம்மாவும் தங்கச்சியும்  கதைத்துக் கொண்டதைக் கேட்க நேரிட்டது. தங்கைகளை விட்டுவிட்டுப் போக யோசித்திருக்கலாம் என்றது என்மனம்

   “அவள் போனால் என்ன? போகாட்டி என்ன? தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்று அந்தப்பிள்ளை இந்த நரகத்தில இருந்து தப்பிப் போயிற்று!   அதின்ட மனசுக்கு எங்க இருந்தாலும் நல்லா இருக்கும்; இருக்க வேணும்!” என்றார்  அம்மா

  அதைச் சொல்கையில் அவர் குரலில் உள்ள வேதனையைத் தெள்ளத் தெளிவாக உணர முடிந்தது. அதுமட்டுமில்லாமல்  விசும்பல்  சத்தமும்

  “குடிச்சுக் குட்டிச்சுவாராகிப் போய்த்  துலையட்டும் எண்டு விடாமல், பத்து மாதம் சுமந்து பெற்ற கடமைக்கு  நல்லா வாழ வச்சுப்  பார்க்க நினைச்சன் பார், என்ர  புத்தியைத் தேஞ்ச செருப்பால அடிக்க வேணும்

  சும்மாவே  வெளியில நடந்தால்என்ன உங்கட மகன் இப்பிடிப் போயிட்டான்?’  என்று பரிதாபமாகக்  கேட்டுக்  கேட்டுச்   சனம் என்ன பாடு படுத்திறது?  

  இப்பப் பார், ‘கெட்டழிஞ்ச குடிகாரனுக்கு எப்பேர்ப்பட்ட பொம்பளப் பிள்ளையைப் பார்த்துக் கட்டி வச்சு, தாய் தகப்பன் இல்லாத அந்தப் பிள்ளையின்ர  வாழ்க்கையைக் கெடுத்திட்டு ஒண்டுமே நடவாத மாதிரித் திரியுதுகள்என்று காரித்துப்புது சனம்.” என்றுவிட்டு, அதுக்கும் அழுதார்.  

  பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நான் இரண்டு நாட்களுக்கு முதல், “இப்ப இருந்து இவ்வளவு கவலைப்படுற ஆக்கள் இந்தக் கெட்டழிஞ்சவனுக்குக்  கலியாணம் பேச முதல் இதையெல்லாம் நினைச்சுப் பார்த்திருக்க வேணும்

  உங்களுக்குத் தெரியவேதானே இந்த அறைக்குள்ள கலியாணிட படங்களை எடுக்கவே மாட்டன் எண்டு வச்சிருந்தன். அப்பவே என்ர மனமறிஞ்சு கலியாணத்தை நிப்பாட்டியிருக்க, இப்ப சனம் துப்பாதே!

  எத்தின தடவைகள் சொன்னன்? இந்தா சாகிறன் எண்டு நிண்டு கட்டி வச்சுப்போட்டு என்னில பிழ சொல்ல வேணாம்.” என்று, கோபத்தில் கத்திவிட்டேன்

  “ஐயோ கடவுளே! எண்ட வயித்தில பெத்த இந்த ரெண்டுகள் மட்டும் எப்பிடி இப்பிடி கோணல் புத்தியோடுபெத்த வயிறு எரியுதே! இதுக்கும் மேல நான் உயிரோட இருந்து என்னத்தச் சாதிக்கப் போறன்?” 

   அம்மா தலையில் அடித்துக்கொண்டு அழத் தொடங்கிவிட்டார்.  

   விசுக்கென்று வந்து அம்மாவை ஆறுதல் படுத்திய தங்கையின் தீவிழிப் பார்வையில் அகப்பட்ட நான் வெட்கித்தான் நின்றேன். இப்படி, என் தங்கை கண்டிக்கும் நிலையில் தாழ்ந்து நிற்கின்றேனே

  “எல்லாம் முடிஞ்சிட்டு அண்ணா, இனி அம்மாவையும் கொன்றிட்டு நீங்க மட்டும் நல்ல சந்தோசமா உங்களுக்கு விரும்பின மாதிரி இருங்க என்ன?” அவள் சொன்ன வார்த்தைகளில் மனம் சுக்கலாகியது.  

  அதனாலேயே, அவர்களை இயன்ற மட்டுக்கும் தவிர்க்கத் தொடங்கி விட்டேன். தவிர்த்தேனேயொழிய, நடந்துவிட்ட சம்பவத்தை ஒன்றுமேயில்லை என்று ஒதுக்கிவிட்டு என் வேலைகளைப் பார்க்க முடிந்ததா என்ன

error: Alert: Content selection is disabled!!