அத்தியாயம் 13 – 1

 என்னதான் என்றாலும், உதயாவின் விசயத்தில் நான் அப்படியெல்லாம் நடந்து கொண்டதில் கொஞ்சமும் நியாயம் இல்லை என்பதை என் மனம் தொடர்ந்து இடித்துரைத்துக் கொண்டிருந்தாலோ என்னவோ, எல்லாரும் வெறுப்போடு ஒதுக்கி வைத்திருக்க, தானும் வெறுப்பைக் காட்டினாலும் அதை உதறிவிட்டு வந்து பாசக்கரம் நீட்டிய என் தங்கையின்  பிடியை விடாது பற்றிக் கொண்டேன் நான்.

   உண்மையில் அது இப்போது எனக்கு மிகவும் தேவையாகவும் இருந்தது.

   கல்யாணியின் பிரிவில் இத்தனை நாட்களாகத் தனிமையில் புழுவெனத் துடிக்கவில்லையா

 அப்போதெல்லாம் மதுவின் துணையை நாடினேனேயொழிய மனிதர் துணையை எட்டியும் பார்க்கவில்லை. ஆனால், இப்போது அந்த மதுவின் புறம் தலைவைக்கும் எண்ணமே வரவில்லை

  “அண்ணா இன்னும் கொஞ்சம் குழம்பு…” கண்களில் கசிவோடுதான் பரிமாறினாள் தங்கை.

   “போதும் போதும்.” 

   பத்து நாட்களுக்குப் பின்னர் காய்ந்து சுருங்கிக் கிடந்த வயிறு குளிர உணவிட்டாள் குட்டி. அப்போதும், வெளியில் அமர்ந்திருந்த அம்மா அழுகையோடு புறுபுறுப்பது கேட்டுக் கொண்டுதான் இருந்தது

   அவர் சுமத்தும் அத்தனை குற்றங்களையும் புரிந்தவனாக உள்ளம் குன்றினாலும் உணவு மட்டும் கடகடவென்று தொண்டையால் இறங்கியது

   “இன்னும்  ஒரு அகப்பை சோறு போடட்டா?

   “ஐயோ வேணாம் மா, வேணாம்; வயிறு நிரம்பீட்டு!” 

   நான் எழுந்து  கைகழுவ, ததும்பிய கண்களை எனக்கு மறைப்பதாக எண்ணி மறுபுறம் திரும்பித் துடைத்துவிட்டு, என்னருகில் வந்து நின்றவள் எதையோ கேட்க நினைத்து மென்று விழுங்கினாள்.

  “ம்ம்சொல்லு, விசா வந்திட்டு எண்டு எப்பத் தெரியும்? எதிர்பார்த்ததை விடக் கெதியா வந்திட்டுது என்ன? இனி டிக்கெட் போட வேணுமே, கொழும்புக்குப் போக வேணும். ஏன்மா என்னட்ட உடனே சொல்லேல்ல? மச்சான் உடனே வா எண்டு சொல்லியிருப்பாரே!” மனத்தாங்கலோடு கேட்டேன்.

   அவள்  பதில் சொல்லாது வேறெங்கோ பார்த்தாள்.

   “அதையெல்லாம் சந்தோசமாகச் சொல்லிக் கதைக்கிற நிலையில் தானே நம்மட வீடு இருக்கு என்ன?” 

    என்னையுமறியாது நானே தான் சொல்லி அவளின் வாய்ப்பூட்டைத்  திறந்துவிட்டேன் போலும்.

    ஒர்  ஆழ்ந்த பார்வை பார்த்தாள் தங்கை

    சற்றே தடுமாறி விலகிவிட்டு மீண்டும் அவள் முகத்தில்  பார்வையைப் பதித்தேன்

   “எல்லாக் குழப்பமும் உன்னால் தானே? பிறகென்ன ஒன்றுமே நடவாத மாதிரிக் கேட்கிற எண்டு பாக்கிறயாம்மா?” 

    மறைக்க முனைந்தாலும் முடியாது வருத்தம் தோய்ந்த குரலில் சொல்ல, “அண்ணா!” கரமிரண்டையும் இறுக்கப் பற்றிக்கொண்டாள்  அவள்.

   “நடந்தது என்னவோ நடந்திட்டு; விடுங்கண்ணா!” அனுசரணையாகச் சொல்லவும் செய்தாள்முகத்தில் மட்டும் தீவிர பாவனை

    “சரி சொல்லு, டிக்கெட் போட வேணும்; எல்லாம் ஆயத்தம் செய்ய வேணும்; எப்போவாக்கில போக இருக்கிற?

   “இவர் அடுத்த பிளைட்டில வா எண்டவர். நான் நான்…” இழுத்தாள்.

    “பிறகென்ன? முதல் அந்த வேலைகளைப்  பார்ப்பம்.”

    “இல்ல அண்ணா. அதுக்கு முதல்…” மீண்டும் அதே தீவிர பார்வை.

     “என்னம்மா?” என்றேன் நான். அதற்கு, “உதயா இந்த வீட்டுக்கு வந்தால் தான் நான் இங்க இருந்து போவன்.” இப்படிச் சொல்வாள் என்று நினைக்கவில்லை

    உதயாவுக்கு நான் நல்லது எதுவும் செய்யவில்லை என்று தெளிவாகப் புரிந்ததில் தங்கையை நேராகப் பார்க்க முடியாது திண்டாடினேன் தான். இருந்தும், அவளுக்குப் புருசனாகப் போகிறேன் என்ற ஒன்றிற்காக என்னை நான் மாற்ற முனையவில்லையா

  மொடாக்குடியன் என்று சொல்லப்பட்டவன் அதன் பக்கமே போகாது விட்டது எதுக்காம்?  

 இருக்கிறாளோ இல்லையோ கல்யாணிதான் என் வாழ்வு என்று திரிந்தவன் அதைகூடத் துறக்கத் துணிந்தேனா இல்லையா

  ச்சே!

  எக்கச் சக்கமாகக் கோபமும் உருவாகீற்று! உதயாவில்தான்.

   நான் இப்படித்தான் என்று பூரணமாகத் தெரிந்தே கலியாணம் செய்தவள் பொசுக்கென்று வீட்டை விட்டுப் போவாளா என்ன?

   அன்றைக்கு எதிர்த்து நின்றிருக்க வேணாமா? நான் செய்யாத குற்றத்திற்கு நீ எப்படித் தண்டனை தரலாம் என்று கேட்டிருக்க வேணாமா? அந்தளவு நூலிழை நம்பிக்கையோடுதான் என்னைக் கட்டினாளாமோ!

  அவ்வளவு இலகுவாக இந்தத் திருமணத்தை அவளால் உதற  முடியும் என்றால் அதன் அர்த்தம் என்ன? நூறு வீதம் கட்டாயத்தின் பெயரில் கழுத்தை நீட்டி இருக்கிறாள் என்பது தானே?

   நண்பியும் அவள் குடும்பமும் துணையாக நின்று, ‘கலியாணமும் மண்ணாம்கட்டியும் தூக்கிப்போட்டுட்டு வா!’ என்றதும் போய்விட்டாள்!

   ‘பிறகென்ன? அவள் அப்படிப் போனதும் நல்லதுக்குத்தான்.’ என்றது, கோபத்தில் சீறிய என் மனம்

    ‘சொந்த அக்காவே என்னைக் கட்டினால்  அவள்ட  வாழ்க்கை சிரிப்பாச் சிரிக்கும் எண்டு எதிர்பார்க்கிற நிலையில நானிருக்க, அவள்போனதுதான் சரி!’ 

  விரக்தியும் கோபமுமாக கனன்று நின்ற மனமோ அறுதியான முடிவுக்கு வந்துவிட்டிருந்தது.

    இவ்வளவு நேரமாக விசும்பலும் புறுபுறுப்புமாக இருந்த அம்மாவின் குரல் அடங்கியிருந்தது. நிச்சயம் நாங்கள் கதைப்பதைக் கேட்கிறார் என்று புரிந்தது.

    “இங்க பார் குட்டி, ஒரு முறை பெரியமிகப்பெரிய தவறைக்  கொஞ்சமும் யோசிக்காமல் செய்திட்டன். இனியும் அதைத் தொடர வேணாம்மா. நீ அதையும் உன்ர வாழ்க்கையையும் சேர்த்து முடிச்சுப் போடப் பார்க்காத! உனக்குச்  சத்தியமே செய்து தாறன் …” அவள் கரத்தைப் பற்றிக் கொண்டேன்.

   “இல்ல அண்ணா…” இடையிட முயன்றவளைக்  கதைக்க விடவில்லை நான்.

   “உதயா தன்ர வீட்டுக்குப் போனதுதான் சரிம்மா; இங்க இருந்து அக்காட ஆசைப்படி சீரலியத்  தேவையில்ல.” 

 “ஐயோண்ணா! பெரியக்காட விசர்க்கதைகளை விடுங்கோ; என்ர அண்ணா போல யாரு வருவீனம்?” 

  சொல்லும் போதே அவளின் தொண்டை அடைத்திட்டு. கண்ணீரோடு நின்றவள்  தலையை ஆதரவாகத் தடவினேன்.

  “கண்டதையும் யோசிச்சுக் குழம்பாத குட்டி! பெரியத்தார் இல்லாத போது கவியும் தீபியும் என்ர  பொறுப்புத்தானே? அதைப்போலவே உதயாவுக்கு ஒரு நல்ல அருமையான வாழ்க்கையைத் தேடிக் கொடுக்க வேண்டியதும்  என்ர  பொறுப்பு.” 

   நான் முடிக்க, வெடுக்கென்று என் கரத்தை உதறிவிட்டு முறைத்தாள் தங்கை

   அம்மாவோ, “ஐயோ! ஐயோ! இன்னும் என்ன என்ன பரிசிகேட்டை எல்லாம் நான் காணப் போறனோ! கடவுளே முருகா! இந்தப் பாழாய்ப் போன உயிர் போகாமல் கிடந்து என்னத்தக் காணப் போகுதோ? விடிய எழும்பபேக்க அப்பிடியே போயிருக்க வேணும்; நான் செத்துத் துலைஞ்சிருக்க வேணும்.” 

   தலையில் படீர் படீரென்று அடித்துக்கொண்டு  தொடங்கிவிட்டார்.

error: Alert: Content selection is disabled!!