“அம்மோய்! ஏனன? சும்மா இருங்கோ!”
ஓடிச்சென்று அம்மாவின் கரங்களை இறுக்கப் பிடித்தபடி தானும் அழுதாள் தங்கை. அதற்குப் பிறகும் அங்கு நிற்க முடியாது கராஜ் வந்துவிட்டாலும், நடு இரவில் சரி வீடு போகத்தானே வேண்டும்?
விடுவிடுவென்று சென்று, ” வெளிக்கிட்டு வா உதயா, வீட்ட போகலாம்.” என்று கேட்போமா? என்னையும் அறியாது மனதுள் இந்த எண்ணம் தோன்றி என்னைத் திடுக்கிட வைத்தது. வேறொன்றும் இல்லை, அவளைக் காரணம் காட்டி குட்டி இப்படி அலும்பு பண்ணுறாளே! அதற்குத்தான். இருந்தும், அந்த எண்ணத்தை உதறிவிட்டு வீடு சென்றால் முழித்திருந்து கதவைத் திறந்தது தங்கைதான்.
“என்ன குட்டி? இன்னுமா தூங்கேல்ல?” என்று கேட்டுக்கொண்டே உள்ளிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமலேயே, “குளிச்சிட்டு வாறன், நீ போய்த் தூங்கு!” விடுவிடுவென்று நகர்ந்துவிட்டேன்.
வழமையை விடவும் நேரம் எடுத்து முழுகினேன்.
மேலே வானத்தில் குளிர் நிலவின் ஏகோபித்த ஆட்சி நடந்து கொண்டிருந்தது!
அடடா! நான் இருக்கும் நிலைக்கு இதையெல்லாமா கவனிக்கிறேன் என்ற எண்ணத்தோடு, ஒவ்வொருமுறை வாளியைப் போட்டு நீரை அள்ளும் போதும் கிணற்று நீரில் நர்த்தனம் ஆடின, கல்யாணியும் நானுமாக நிலவுமகளை இரசித்த காட்சிகள் ஒவ்வொன்றும்!
என்னதான் முடிவெடுத்து, இவள் நினைவுக்களைத் துரத்த முயன்றாலும் அது எல்லாம் அவ்வளவு சுலபமல்ல என்று உச்சியில் ஆணியடித்துச் சொல்லி நின்றன, அக்காட்சிகள்.
அப்படியே ஈரத்தோடு எவ்வளவு நேரம் நின்றேனோ தெரியாது, குளிரில் தேகம் நடுநடுங்கத் தொடங்கிய பின்னரே சுரணை வந்து வீட்டினுள் சென்றால்… தங்கை இன்னமும் கூடத்தில் அமர்ந்திருந்தாள்.
ஒரு முடிவோடுதான் இருக்கிறாள் என்பதை, அவள் இருந்த பாவனையே தெட்டத் தெளிவாக்கியது .
“என்னம்மா நீ? ஏன் இப்பிடி முழிச்…” முடிக்க முன்னரே, ” உங்களோட கொஞ்சம் கதைக்க வேணும் அண்ணா.” என்றாள் அவள்.
“இப்பவா? விடிய நேரத்துக்கு கராஜுக்குப் போக வேணும் மா. முந்தியப் போல இல்ல, இப்ப நிறைய வேலை வருது. பத்து மணிக்கு முடிச்சுக் குடுக்க வேண்டிய மூன்று வேலைகள் கிடக்கு!” என்றபடி வராத கொட்டாவியை விட்டேன்.
“ஓ! நல்ல விசயம் தானே அண்ணா! சந்தோசம்.” என்றவள், “ஆனால், நான் இப்பவே கதைக்க வேணும்.” பிடிவாதமாகச் சொன்னவளைப் பார்த்தபடி தண்ணீர்ச் செம்பை எடுக்க, “நீங்க சாப்பிட்டீங்களா? தேத்தண்ணி போட்டுத் தரவா?” பரிவோடு கேட்டாள்.
பகல் இவள் கையால் உண்டதற்குப் பிறகு எதையும் உண்ணவில்லை. இருந்தும், இந்தச் சாமத்தில் உண்ண வேண்டும் போலிருக்கவும் இல்லை.
இருந்தாலும்…வெடவெடத்த குளிருக்கு ஒரு தேநீர் …
“ஏலுமென்றா ஒரு பால் தேத்தண்ணி போட்டுத் தாறியா?”
“ஒரு அஞ்சு நிமிசம்.” என்று போனவள், சுடச் சுட நுரைபொங்கிய தேநீர் கோப்பையோடு வந்தாள்.
“உனக்கு?” என்றபடி வாங்கிக் கொண்டேன்.
“எனக்கு இப்ப வேணாம் ணா, நீங்க குடியுங்கோ!” என்றவள் பார்வை என் முகத்தில் தான். சட்டென்று வாய் திறவாது அமைதியாகப் பார்த்திருந்தாள்.
“அம்மா நேரத்துக்கே தூங்கீட்டாவோ?”
தேனீரை உறிஞ்சியபடி கேட்க, ஆமென்பதாகத் தலையசைத்துவிட்டு அப்போதும் அமைதி காத்தாள்.
“சரி குட்டி, என்ன விசயம் எண்டு சொல்லன்!” என்றேன் நான்.
இலேசில் வாய்திறவேன் என்ற கணக்கில் இருந்தவளின் முகத்தில் மட்டும் பல உணர்வுகள். எதற்கோ உள்ளே தயாராகிக்கொண்டிருக்கிறாள் என்ற கணக்கில் இருந்தாள்.
“காசு எதுவும் வேணுமா? உனக்குக் கொண்டுபோக என்ன வேணுமோ தாராளமா வாங்கு! நாளைக்குக் காசு தாறன். உனக்கு எவ்வளவு மட்டில வேணும்?
“அதெல்லாம் ஒண்டும் வேணாம் ணா!” என்றவள், “முதல் தேத்தண்ணியைக் குடியுங்கோவன்.” என்றாள், மீண்டும்.
“நீ என்ன விசயம் எண்டு சொல்லன்; குடிச்சுக் குடிச்சுக் கேட்கிறன்.” என்றேன் நான் அழுத்தமாக.
“வேற என்னண்ணா சொல்லப் போறன்? நாளைக்கு விடியவே நானும் நீங்களுமாக உதயா வீட்ட போறம்; அவள எப்படியும் நம்மட வீட்ட கூட்டிக் கொண்டு வாறம்.” என்றாள், படு தீர்மானமாக.
பதில் சொல்லவில்லை நான். அப்படியும் இப்படியும் மாறி மாறி என் இதயம் படும் வேதனையை எப்படி இவளிடம் சொல்வேன்?
மீண்டும், அன்று போகையில் பார்த்தாளே ஒரு பார்வை அதுதான் நினைவில் வந்து போயிற்று!
‘அவள் வர மாட்டாள்; எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும் எண்டு பார்த்திருந்து போனவள் எப்பிடி வருவாள்?
இப்படி என்னுள் எழுந்த சந்தேகம் குட்டியினுள் இருப்பது போலவே தெரியவில்லை. அவளை வரவைத்தே தீருவேன் என்ற தீர்மானம் அச்சந்தேகத்தை எழ விடவில்லையோ என்னவோ!
“அவள் இங்க வர வேணும் அண்ணா! அதுக்குப் பிறகுதான் நான் வெளிநாடு போறது பற்றி யோசிப்பன். இதில யார் என்ன சமாதானம் சொன்னாலும் கேட்கவே மாட்டன். என்ர முடிவில எந்த மாற்றமும் இல்ல சொல்லீட்டன். நான் அவருக்குப் ஃபோனில இதைத் தெளிவாச் சொல்லீட்டன்.” என்றபடி, என் முகத்தையே உற்றுப் பார்த்தாள்.