போதைப்பொருள் புனர்வாழ்வு மையங்கள் பற்றிய ஆழ்ந்த ஆராய்வும் கவனிப்பும் மிக்க மிக்க அவசியமானதொன்றாகும். சமூகத்தை வேரறுக்க, புரையோட ஆரம்பித்துள்ள ஒரு தீய பழக்கத்தை அழிக்க, அதில் உட்பட்டோரை மீட்பதென்பது அத்தியாயவசியமாகிறது. அப்படிப்பட்டோருக்கு, அங்கு, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உரிய வகையில், பாரபட்சமின்றி உதவிகள் வழங்கப்படுகிறதா? பாதுகாப்புள்ளதா? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடும் அவசியமும் கட்டாயமாக இருக்கிறது. உன்னிப்பாக ஆராய வேண்டிய தேவையும் உண்டு.
அதுமட்டுமின்றி, பால் பேதமின்றி, பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் நிலையும் நிலவுகிறது. இது, அவர்களின் உடல் உள ரீதியான சிக்கல்களை மேலும் மேலும் வளர்த்து விடும் நிலைக்கே தள்ளிவிடும் அபாயமுள்ளது.
இப்படியான நடவடிக்கைகளால் ஏற்படும் உளரீதியான சிக்கல்கள் தீர்க்கப்படாது, இயல்பு வாழ்வு திரும்புபவர்கள், மீண்டும் ஏதோ ஒரு வழியில் போதை வாழ்வுக்கு அடிமையாகும் அபாயமும் உள்ளது. சமுதாயத்தை, நிமிர்வோடு எதிர்கொள்ளும் சக்தியற்றவர்களாவும் ஆகிவிடும் நிலையுண்டு.
எனவே, போதைப்பொருள் புனர்வாழ்வு மையங்கள், ஒன்றிற்கு மேற்பட்டவர்களால் உன்னிப்பான மேற்பார்வைக்குட்படுவது அத்தியாவசியமாகிறது.
சீறிச் சென்ற மோட்டார் சைக்கிள், பைரவியின் அறையிருக்கும் பாதையால் வளைந்தது. கைபேசி வேறு கிணுகிணுத்தது. பாதையோரமாக நிறுத்தி எடுத்துப் பார்த்தான்,ஆரூரன். குறுஞ்செய்தி தான்; சிக்கனமாக தம்ஸ் அப் அனுப்பியவன் முகத்தில், பெரியதொரு வேலையைத் திறம்படச் செய்து விட்ட திருப்தி!
இனி அடுத்து என்று, வேலைகள் மனதுள் வரிசை கட்டி நிற்க, மோட்டார் சைக்கிளை இயக்கிச் செலுத்தியவன் விழிகளில் விழுந்தான், அவன்; சத்யன் தான். இன்னொருவனுடன் கதைத்துக் கொண்டு நின்றான். சில வீடுகள் தள்ளிச் சென்றால், பைரவி தங்கியுள்ள வீட்டு ஒழுங்கை வரும். வேறு வேலைக்காகவும் வந்திருக்கலாம்; அது, அவன் நண்பன் வீடாகவும் இருக்கலாம். எது எப்பிடியோ, இவன், பார்வையில் கூர்மையும் ஆராய்ச்சியுமாகத் தான் அவர்களைக் கடந்தான்.
அவன், இவனை அடையாளம் கண்டு கொண்டானோ என்ற சிறு சந்தேகம், ஆரூரனுக்கு. அதுவே, பைரவி வீட்டு ஒழுங்கைக்குள் நுழைய விடவில்லை. நேரே சென்று, சற்றே தள்ளி வந்த பின் நிறுத்திவிட்டு மயூரனுக்கு அழைத்தான்.
“அண்ணா சொல்லுங்க.” என்றவன் குரலில் பேதமிருந்தது. தெரிந்திருக்குமோ! பச்! நானும் அதிகமாகத்தான் கோபப்பட்டுட்டுட்டனோ! பின்ன? அவா மட்டும்… என்ன மாதிரி வாய் காட்டுறா!
மனதுள், அவள் பால் உள்ள எரிச்சல், சந்தர்ப்பம் கிடைக்கவும் வெளிப்பட்டுவிட்டது புரிந்தது.
“அலுவலா அண்ணா?”
“அலுவல் இருந்தாத் தான் எடுக்கோணுமோ!”
“அதுக்கில்ல அண்ணா, இங்க பைரவியிட அறைக்கு வந்தனான். கதைச்சுக்கொண்டு நிக்கிறன், அதான்.”
“ஓ! பக்கத்தில நிக்கிறாவோ?” என்றவன், ஆம் என்றதும் அவளிடம் கொடுக்கச் சொன்னான். மயூரன் அதை எதிர்பார்க்கவில்லை என்றது, அவனது, “அண்ணா!” விளிப்பு.
“நானும் அங்க தான் வந்தனான், மயூரன். ரோட்டில அந்தச் சத்யன் நிக்கிறான். வீண் சீன் ஏன் எண்டு தான் இங்கால வந்து நிக்கிறன்.”
“ஆர்… தேர்ட் இயர் சத்யனா? அவன் நிண்டா என்ன அண்ணா?” என்றவனுக்குப் பதில் சொல்லாமல், “ஒருக்கா உம்மட மச்சாளிட்டக் குடுமன்.” மீண்டும் சொன்னான்.
“ஆரூரன் அண்ணா கதைக்கோணுமாம்.” கைபேசியை நீட்டியிருப்பான் போல்.
“ஆர் அது? தெரியாத மனுசரோட கனடாச் சனம் கதைக்கிறது இல்ல!” அவள், வெடுக்கென்று சொன்னது தெளிவாகவே கேட்டது.
“மயூரன்”
“ஓம் அண்ணா”
“ஸ்பீக்கர்ல போடும் ஒருக்கா!”
“போட்டாச்சு.”
“இங்க பாருங்க தங்கச்சி, இந்த முறுக்கு முறுக்கிறதுக்கு இங்க ஒண்டும் நடக்கேல்ல. பப்ளிக்ல வச்சு, அதும் என்ர ஹோட்டலில வச்சு சூப் எத்தின கனடா மனுசர் இவே! சரி, ஒருத்தன் நாலு வார்த்தை சொல்லிட்டான் தான். அதுக்காக? அதைத் தூக்கிப் பிடிச்சுக்கொண்டு கோவிச்சுக்கொண்டு வாறது எல்லாம் என்ன வேலையாம்? சரி விடும், நான் கதைச்சதுக்கு மன்னிச்சுக் கொள்ளும், சரியா? இப்ப, மயூரனோட வீட்ட போம். அரைச்ச மீன் குழம்பு, பைரவி பைரவி எண்டு அழுகுதாம்.” பகிடியாக, இலகுக் குரலில் சொன்னவன், அவள் முக ரௌத்ரம் பார்க்க நேரிலா நிற்கிறான்.
“சும்மா இருமப்பா, ஒண்டும் சொல்லாதேயும். பிளீஸ்!” மைத்துனிக்கு வாயசைவால் சொல்லிக் கொண்டு நின்றான்,மயூரன்.
“ப்ளீஸ்! மயூரனோட போம் என்ன?” தொடர்ந்த ஆரூரன், “இன்னொன்று தங்கச்சி, சிலிண்டர் மாத்தக் காசு கொஞ்சம்… இல்ல, சரியா ஏழாயிரம் உதைக்குது எண்டு இருந்தனான். கனடாக்காரர் எண்டா கனடாக்காரர் தான்.” என்றவனுக்கான மொத்த முறைப்பையும் மயூரன் வாங்கிக் கொண்டான்.
ஆருரனோடு ஒற்றை வார்த்தை கதைக்கவில்லை, அவள். அவன் அழைப்பைத் துண்டித்த பிறகே வாய் திறந்தாள்.
“தங்கச்சியும் மண்ணாங்கட்டியும். இந்தாளைப் போல ஒரு அண்ணா இருக்கிறதுக்கு, அப்பிடி ஒரு உறவே இல்லாமல் இருந்திருவன்.” மயூரனிடம் தான் பாய்ந்தாள்.
ஆரூரன் அப்படிச் சொல்லி விட்டான் என்று, அவர்கள் வீட்டிற்குச் செல்லவில்லை; அரைச்ச குழம்பு தான் அவளைத் தேடி நிலாவோடு வந்திருந்தது. அதுவே, அப்பப்போ வாடிக்கையும் ஆனது. அவள் மட்டும் ஆரூரன் வீட்டுப் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை.
மாதங்கள் சிலது உருண்டிருந்தன. தினம் தினம் தன் இருப்பை, அதுவும், ‘எனக்குத்தான் நீ’ என்றதை உணர்த்துவதே குறியாக இருந்தான், சத்யன். ஒரு கட்டத்துக்கு மேல், அதையெல்லாம் பொருட்படுத்தாதிருக்க முயன்று, வெற்றி கண்டிருந்தாள், பைரவி.
விருப்பம் இல்லை, எனக்கென ஒருவன் இருக்கிறான் என்ற பிறகு, இந்தளவுக்கு இருப்பவன் விசரனோ என்ற ஐயம் அவளுக்கு. வந்த வேலையைப் பார்த்துவிட்டு ஓடுவோம் என்றது மட்டுமே அவள் மனதிலிருந்தது.
இடையிடை அப்பம்மா, தாத்தா, அத்தை என்று, அவர்கள் வீட்டுக்கும் செல்வாள். டினோசனுக்கு, ஆயுள் தண்டனை முடிவாகியிருந்தது. மைத்துனிகளைப் பார்க்கத்தான் பெரும் பாவமாகவும் இருக்கும். இவள் என்ன செய்யவியலும்? படிப்பும் அதிகமாக அதிகமாக அவள் கவனம் அதில் சென்றிட்டு!