Skip to content
போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி, தவறான வழி சென்றவர்களில், கையாலாகாத தனமும் பயமும் வெறுப்பும் எரிச்சலும் கோபமுமே எஞ்சி நிற்கும்;ஒரு படி மேலே சென்று தமக்காகச் சிந்திக்கும் சக்தியிழந்தவர்களாகவும் இருக்கலாம். இந்நிலையில், இத்தகைய கொடும் வாழ்விலிருந்து மீட்பு வழங்கும் இடமாகச் சுட்டப்படும் ‘புனர்வாழ்வு மையங்கள்’, வாழும் உதாரணங்களோடு கை காட்டப்பட்டால்?
புனர்வாழ்வு மையங்களின் நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் அங்கிருந்து சிகிச்சை பெற்று, இயல்பான வாழ்வில் கலந்தவர்கள் மூலம் சொல்லப்படுதல் சிறந்த பயனளிக்கும்.
‘நான் இங்கு இந்நிலையில் வந்தேன்; எனக்கு, இந்த இந்த வழிகளில் மீட்பு நடவடிக்கைகள் எடுத்தார்கள்; உடலும் மனமும் சீராகி, இன்று, இப்படி, என் குடும்பத்தோடு வாழ்கிறேன்’ என்று, நம்பிக்கை கொடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
தொலைக்காட்சி நிகழ்வுகள் மற்றும் விழிப்புணர்வுக் கூட்டங்களில், சிகிச்சையில் தேறியவர்கள் பங்களிப்பு இருத்தல் அத்தியாவசியமாகிறது.
இவர்கள் சென்றபோது எல்லாளன் அங்கிருந்தான். அப்படியும் சொல்ல முடியாது; பைரவியை விசாரிக்க விரும்பியே வந்திருந்தான். காரணம், அவளை அழைத்து வர ஆட்கள் சென்ற கையோடு வந்திருந்த மேலிடத்துச் சலுகை, கட்டளை!
‘சொந்த மாமா Superintendent of Police… ம்ம்ம் வரும் தானே!’ என்று பார்த்தால்… அவரிடமிருந்து வந்தது போலில்லையே! கனடாவில் பிறந்து வளர்ந்து, படிக்கவென்று இங்கு வந்த ஒரு மாணவிக்கும் கொழும்பில் இருந்து வரும் சிங்கள பொலிஸ் மா அதிபரின் நற்சான்றுப் பத்திரத்துக்கும் எப்படித் தொடர்பு? யோசித்தபடியிருந்தான், எல்லாளன். இப்படியான தலையீடுகளை வெறுப்பவன்,அவன். ஆனாலும் செவிசாய்க்காதும் இருக்க முடியாதே!
அவன் பற்றி எல்லோருக்குமே தெரியும். அதுவே, “உங்கள் வேலையில் தலையிடவில்லை, எல்லாளன். அவவை வரச் சொல்லி விசாரிக்கலாம். ஆனால், அவவுக்கு, இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்பது எங்களுக்கு நிச்சயம்.” என்றுமிருந்தார்கள்.
ஏற்கனவே, அண்மைய வருடங்களாக, போதைப்பொருள் தொடர்பான பெரிய பெரிய குற்றவாளிகள் பிடிபடுகிறார்கள்; அதுவும் அங்கிங்கு தப்பிக்க முடியாத முழு ஆதாரங்களோடு.
பெரும்பாலான நேரங்களில் பிடிப்பது ஒன்றும் காவல்துறை இல்லை; போதைத் தடுப்புக் குற்றவியல் பிரிவும் இல்லை; யார் என்பதே மூடு மந்திரமாக இருக்கிறது. ஆனால், பாராட்டு காவல்துறைக்கு!
இப்போ, இதில், பைரவிக்குச் சம்பந்தம் இல்லை என்பது, தெளிவாகத் தெரியும் என்றால், இந்தக் கேஸ் சம்பந்தமாக, சத்தியன் தொடர்பாக எல்லாமே தெரியுமோ? எப்படி?
முதல், அது என்ன தேவைக்கு? நான் சென்று அவர்கள் பகுதிக்குள் துப்புத் துலக்கித் தலையிடுகிறேனா என்ன? சினந்தவனால், இதன் பின்னால், பைரவியின் மாமா மறைமுகமாகச் செயல்பட்டிருக்கிறார் என்ற முடிவுக்குத்தான் வர முடிந்தது. பெரும் எரிச்சலோடு தான், பைரவியை எதிர்பார்த்திருந்தான், எல்லாளன்.
தன், அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவர்களை, நெஞ்சாழம் தொடும் கூர் பார்வையால் அளந்தான்.
எல்லாளன் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருந்தான்,ஆரூரன். பைரவிக்கு அப்படியில்லை என்றாலும் சத்யன், போதைப்பொருள் கடத்தல் கும்பலோடு தொடர்புபட்டவன் என்றதே அவளை ஆட்டிப் பார்த்திருந்தது. அதுவே, விறைப்பாக உள்ளிட்ட ஆரூரன் பின்னால், தயக்கத்தோடு நுழைய வைத்திருந்தது.
பார்க்காமலே, பின் நின்றவள் மனநிலையைப் புரிந்து கொண்டான், ஆரூரன்.
“பயப்படாமல் சாதாரணமா வாரும்.” திரும்பி, அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னபடி உள்ளிட்டான்,அவன்.
அது, பைரவி மனத்தைத் தொடவில்லை. எல்லாளன் பார்வையே குற்றவாளி போல் அல்லவா உணர வைக்கிறது? தடுமாற்றமும் தயக்கமும் தான் அதிகரித்திட்டு.
வலு நிதானமாகச் சென்று அறிமுகம் செய்து கொண்டான், ஆரூரன். பைரவியையும் அறிமுகம் செய்து வைத்தான். எல்லாளனிடமிருந்து சிறு தலையாட்டல் மட்டுமே! முன்னால் இருந்த இருக்கைகளைக் காட்டினான்.
“இரும்.” அவள் அமர்ந்ததும் தானும் அமர்ந்துகொண்டான், ஆரூரன்.
அந்த நிகழ்வுக்கு இடையில், அவர்கள் ஒழுங்காக அமரக் கூட நேரம் கொடுக்கவில்லை, எல்லாளன். “இவா உமக்கு ஆர்?” கேள்வி, சீறலாக வந்திருந்தது.
ஆரூரனால் சட்டென்று பதிலிறுக்க முடியவில்லை; பைரவியைத் தான் பார்த்தான்; அவளும் அவனைத் தான் பார்த்திருந்தாள்.
முடிவுக்கு வந்தவனாக, “சொந்தம்” சுருக்கமாகச் சொல்லி விட்டான், ஆரூரன். மயூரன் பெயரையோ இன்னும் சில தினங்களில் ஓய்வு பெறப்போகும் அவன் தகப்பன் பெயரையோ எடுக்காவிட்டாலும் பைரவி யார் என்பது தான் எல்லாலாளனுக்குத் தெரியுமே!
“சொந்தம்!” அவன் நெற்றி சுருங்கியது. பின், ஆச்சரியம் காட்டும் வகையில் ஒற்றைப் புருவம் ஏறியிறங்கியது.
“ம்ம் சொந்தம் தான்.” அழுத்திச் சொன்ன ஆரூரன்,கரமிரண்டையும் கட்டிக்கொண்டு, பின்னால் சாய்ந்து இலகுவாக அமர்ந்து கொண்டான். எல்லாளன் கண்கள், அவனில், சந்தேகத்தோடு படிந்து விலகியதைக் குறிப்பெடுத்தும் காட்டிக் கொள்ளவில்லை.
“கனடாவில இருந்து படிக்க வந்தா, அதை விட்டுட்டு வேற வேலை பார்க்கிறீர் போல! ம்ம்ம்” எல்லாளனின் கடினக் குரலும் பார்வையும் பைரவி உள்ளத்தில் நடுக்கமோடச் செய்தது.
ஆனாலும், இது என்ன மாதிரியான குற்றசாட்டு! அதுவே வாய்ப்பூட்டைத் தெறிக்க விட்டிருந்தது.
சத்யனை எப்படித் தெரியும் என்று ஆரம்பித்துக் கடகடவென்று ஒப்பித்தாள். முக்கால்வாசி ஆங்கிலம் தான்; பதற்றத்தில் தமிழ் வரேன் என்றது.
நெற்றி மேலேறி இறங்க, கதை கேட்கும் பாவனையில் சாய்ந்து அமர்ந்துகொண்டான், எல்லாளன். கேளாமலேயே படபடவென்று பொரிந்து தள்ளுபவளை விட்டுப் பார்வையை அரக்கவில்லை.
ஆரூரன் மனதுள் மணி அடித்தது. ‘வாய்க்காரி! இவரோடும் கொழுவல் படப்போறாவோ!’ நினைத்தாலும் அவளைக் கட்டுப்படுத்துவது இலகுவான செயலா என்ன? அதுவும், இவன் எதையாவது சொல்லப்போக, எல்லாளன் முன்னால் வைத்தே மூக்குடைத்து விட்டாலும் விட்டிருவாள். விழிகளில் வந்தமர்ந்த சுவாரசியத்தோடு பார்த்திருந்தான், ஆரூரன். அந்தளவுக்கு வரிந்து கட்டிக்கொண்டு சொல்லிக்கொண்டு போனாள், பைரவி.
“சும்மா நாலு வார்த்தை சிரிச்சுக் கதைச்சாப் போதுமே! நான் தன்ர ஆள் எண்டு ஃபகல்ட்டி முழுசும் அலட்டினா நான் செய்யிறது சொல்லுங்க? எனக்குக் கனடாவில் போய் ஃபிரெண்ட் இருக்கிறார், படிச்சு முடிச்சுப் போக கலியாணம் எண்டு சொல்லியும் காதிலும் போட்டுக்கொள்ளாத மென்டலிட்ட நான் என்ன கதைக்கிறது?” அவள் சொல்லி முடித்த கணமே, எல்லாளன் உதட்டோரம், சின்னச் சிரிப்பு! அதுவே, அவள் சொன்னதை அவன் நம்பவில்லையாம் என்றது.
ஆரூரன் நெற்றி சுருங்க அமர்ந்திருந்தான்; பார்வை எல்லாளனில் தான். ‘ஓ போய் ஃபிரெண்ட் இருக்கோ!’ இதுவரை, பைரவியை, தன் இளைய சகோதரி போலவே சின்னவளாக எண்ணியிருந்தவன், அதையும் குறிப்பெடுத்துக் கொண்டான்.
error: Alert: Content selection is disabled!!