அத்தியாயம் 16- 2

உண்மை சுட்டதில் உதயாவுக்கு நான் இழைத்த அநீதி மேலும் பெரிதாகவே தெரிந்து தொலைத்தது.

   முணுமுணுத்தபடி வந்த தங்கையையும் அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி வருகையில் இருவருமே எதுவும் கதைத்துக் கொள்ளவில்லை

 வாயிலில் மோட்டாரை நிறுத்த, குட்டி இறங்கிக்கொண்டாள். நான் அப்படியே கராஜுக்குப் போய்விடத்தான் எண்ணினேன். உள்ளே சென்று இனி என்னதான் கதைக்க வேண்டியுள்ளது?

 இறங்கிய வேகத்தில் விடுவிடுவென்று உள்ளே சென்ற தங்கை வீட்டு வாயிலிலிருந்த படிக்கட்டில் தொப்பென்று அமரவும், என்னால் அப்படியே விட்டுவிட்டுச் செல்ல முடியவில்லை.

   உதயாவை அழைத்து வருவோம் என்று வெளிக்கிட்டது இவள்தானே?

  மறுப்பில் மிகவும் நொந்து போயிருந்தவளை அப்படியே விட்டுச் செல்ல முடியாது, உள்ளே சென்று, மோட்டரை நிறுத்திவிட்டு வந்து அவளருகில் அமர்ந்து கொண்டேன்.

  சிறிதுநேரம் இருவருமே எதுவும் கதைத்துக் கொள்ளவில்லை. இருந்தும் அந்த மௌனம் மிக மிகக் கனமாக இருந்தது

 “இப்ப அங்க போயிட்டு வந்ததை அம்மாட்டச்  சொல்ல வேணாம் குட்டி!” என்றேன், மூடியிருந்த முன் கதவைப் பார்த்தபடி.

  “பச்! சத்தியமா உதயா இப்பிடிச் சொல்லுவாள் எண்டு நான் நினைக்கவே இல்ல அண்ணா.” 

  ஏமாற்றத்தை மறைக்க முடியாது சொன்னாள் தங்கை. இதற்கு என்னிடமிருந்து என்ன பதில் இருக்கு

  சாத்தியிருந்த வீட்டுக் கதவைப் பார்த்துவிட்டு, “அதுதான், அம்மாவுக்குத்  தெரியத் தேவையில்ல. நல்ல காலம் நாம அங்க போக முதல் அம்மாட்டச்  சொல்லேல்ல. சொல்லிப் போட்டுப் போயிருக்க, ஒரு வேளை அவாவும் வந்திருப்பா, இல்லையோ ஆசையோட  உதயாவ  எதிர்பார்த்திருந்து ஏமாந்து போயிருப்பார்.” கண்கள் கலங்கியபடி சொன்னாள் குட்டி.

  அப்போதுமே  பதில் சொல்லத் தெரியாதமர்ந்திருந்தேன் நான்.

  “அவள் கட்டாயம் வருவாள் என்று நினைச்சன் அண்ணா!” மீண்டும் அதையே சொன்னாள்.

  ‘நானும் தான்மனதுள் சொன்னபடி வெளியில் பார்வையை அலைய விட்டேன்

  “விடுங்க அண்ணா, அவளுக்குக்  கோபம் இருக்கிறது நியாயம் தானே? ரெண்டு நாள் போகட்டும் இன்னொருக்காப்  போய்க் கதைச்சுப் பார்ப்பம். முதல் நீங்களே நேர கதையுங்க அண்ணா. இது நான் முதல் கதைச்சிட்டு நீங்க கதைக்கக்  கோபம் வந்திட்டோ என்னவோ! அதுதான் வரமாட்டன் என்று சொன்னாளோ  என்னவோ!” என்று குட்டி சொன்னதும்  சட்டென்று முறைத்தேன்.

  “நாம பிழை செய்திட்டம் எண்டுதானேம்மா போய்க் கூப்பிட்டம். இல்லை, முடியாது எண்ட பிறகு இனி என்ன? ஒருவகையில் பார்த்தால் இதுவும் நல்லதுக்குத்தான். அந்தப் பிள்ள இங்க வந்து ஏன் வீணாக் கரச்சல் பட வேணும்? அந்தப் பிள்ளைக்கு என்ன தலைவிதியா சொல்லு பார்ப்பம்?” 

   நான் சொல்ல, கோபமாகப் பார்த்தாள் குட்டி.

இதெல்லாம் நம்மட மனத்தைத் தேத்துறதுக்கு ஒரு சாட்டு அண்ணா. என்னைக் கேட்டால் நீங்களும் உள்ள வந்து அவளோட கதைச்சு இருக்க வேணும்.” என்றாள் அழுத்தமாகவே.

 “எனக்கென்னவோ அப்படித் தெரியேல்ல குட்டி. அதோட நான் எங்க உள்ள வாறது? வாசலிலயே பெரியக்காவைக் கண்டதும் பத்திக்  கொண்டு வந்திட்டுப்  பிறகென்ன? நான் மன்னிப்புக் கேட்கிறன் எண்டு தானே வந்தன். அந்தப் பிள்ள ஒருவார்த்தை கதைக்க விட்டதே? படபடவென்று பொரிஞ்சிட்டுப் போயிற்று!” 

   என்கையில், என் முகம் தன்னையும் அறியாது வருத்தத்தைக் காட்டித் துலைத்து விட்டது 

  அதை, என் முகத்தையே பார்த்திருந்த தங்கச்சி அவதானித்துவிட்டாள்.

  “எது  எப்படியோ போனதை எல்லாம் விடுங்கண்ணா. இனி என்ன செய்யலாம் எண்டு பார்ப்பமே! அதோட…” என்று விட்டு என்னைப் பார்த்தவள் முகத்தில் பிடிவாதம் பளிச்சென்றிருந்தது.

  “அண்ணா இப்பவும் நான் சொன்னது சொன்னதுதான். உதயா இங்க வந்த பிறகுதான் எல்லாம். நான் வெளிநாடு போறதும் இங்கயே இருக்கிறதும் உதயா கையில.” பிடிவாதமாக அவள் சொல்ல எரிச்சல் தான் மண்டியது

  “திரும்பவும் சொல்லுறன் குட்டி, இந்தக் கதையை  இதோட விட்டுட்டு நடக்க வேண்டிய வேலைகளைப் பார்பயண அலுவலப்  பார். கொழும்புக்கு எப்ப போக வேணும். நாட்களைக்  கடத்தாமல் வேலைகளை முடிக்க வேணும்மா.” 

   கண்டிப்போடு ஆரம்பித்துத் தணிவாக நான் சொல்லிக் கொண்டிருக்கையில்எங்கள் வீட்டின் முன் வாயில் படீரென்று திறந்து கொண்டது

 அங்கேகோபமும் கண்ணீருமாக நின்றார் அம்மா .

 

error: Alert: Content selection is disabled!!