அத்தியாயம் 17- 1

தவறு, குற்றம், தீய பழக்கங்களுக்கு உட்பட்டிருந்த நபர் ஒருவர், அதற்கான  தண்டனை பெற்று,  தவறுணர்ந்து வெளிவரும் பட்சத்தில், அல்லது புனர்வாழ்வு மையங்களிலிருந்துவிட்டு வெளிவருகையில், சமூகம் அவர்களை எந்த வகையில் எதிர்கொள்கிறது என்பது, மிக உன்னிப்பாகக்  கவனிக்கப்படவேண்டிய விடயமாகும். 

 ‘நீ இப்படிபட்ட நபராச்சே’ என்ற சுட்டல், ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அவர்கள் மீது வீசப்பட்டால் மீண்டும் அவர்கள் வாழ்வு கேள்விக்குறியாகலாம். இப்படியானவர்களுக்கு குடும்பம், உற்றவர்கள் அணையாக நிற்கும் பட்சத்தில் அவர்களால் சமூகத்தை எதிர்கொள்வது இலகுவாகலாம். 

இத்தனை களேபரங்கள், கலகலப்புக்குள் மருத்துவப் படிப்பில், ஒரு வருடத்தை முடிக்க இருந்தாள், பைரவி. விடுமுறைக்கு, கனடா செல்லலாம் என்றும் நினைத்தாள். 

மனநிலை, தான் பிறந்து வளர்ந்த சூழலுக்காக ஏங்கியது; தாய், தகப்பனைக் காணவும் தான். பயணச்சீட்டு எடுக்கவிருப்பதை மயூரனிடம் சொன்ன போதுதான், “ஓ! அப்ப என்ர கலியாணத்துக்கு நிக்க மாட்டிரா?” என்றான், அவன்.

“கலியாணமா? எப்ப? சொல்லவேயில்ல! பொம்பள ஆர்?” என்றவள், அவனும் நிலாவும் விரும்புவதாகச் சொன்ன போது…விழி விரித்தபடியிருந்தாள்.  

ஆச்சரியத்திலிருந்து மீண்டு, எப்போதிருந்து என்றால், அது நாலைந்து வருடங்களுக்கு முதலிலிருந்தேவாம்! எப்படியிருக்கும்? இரு பகுதி வீடுகளுக்கும் தெரியுமாம்; கல்யாணத்துக்கு நாள் குறித்தும் விட்டார்களாம். 

“இத்தின நாளா உங்களோட தானே இருக்கிறன். சொல்ல வேணும் எண்டு நினைக்கேல்ல எல்லா?” கோபத்தில் கண்கள் கலங்கிடக் கேட்டாள், பைரவி. 

என்னதான், மைத்துனி என்று அன்போடு பழகினாலும் வேற்றாளாகத் தள்ளியே வைத்திருக்கும் உணர்வு! நல்ல நட்பையும் அரவணைப்பையும் தந்த நிலா மட்டுமா? ‘ஆன்ட்டி, மதி கூட மறைச்சிட்டினமே!’ ஏன்? எல்லோருமே, அவளை, மூன்றாம் நபராகவே நடத்தியிருக்கிறார்கள். மிகவுமே தாழ்ந்து விட்டதாக உணர்ந்த மனம் சுட்டியதை, நேரவே கேட்டு விட்டாள்,பைரவி.

“லூசா நீர்? ஆரம்பத்தில ஆரூரன் அண்ணாவோட உங்களுக்கு பிரச்சினை இருக்க, சொல்லாமல் விட்டனான். பிறகும் மறைக்க வேணும் எண்டு இல்லை, சொல்லுறதுக்குச் சந்தர்ப்பம் வரேல்ல. அதான்…” சமாளித்த மயூரனோடு ஒற்றை வார்த்தை கதைக்கவில்லை, அவள்.

பயணச் சீட்டை எடுத்து விட்டாள். பாமினி மூலம் அறிந்த மயூரன், “அவ்வளவு சொல்லியும் இது என்ன வேலை பைரவி?” முறைப்போடு வந்து நின்றான். கூடவே வந்த நிலா, அவளை இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். 

“அடுத்தடுத்து ஒரே பிரச்சினைகள் எல்லா? இதுக்க சொல்லக் கிடைக்கேல்ல  பா. அதுக்குப் போய்…” என்று ஆரம்பித்துக் கெஞ்சியவள் சொன்னவற்றைச் செவிமடுக்கவில்லை, இவள்.

ஒரு கட்டத்தில், “எங்களச் சொந்தம் எண்டு வெளில சொல்லாத, வீட்டுக்க விடாத உங்கட அப்பா, கலியாணத்துக்கு மட்டும் வர விடுவாரா என்ன?” மயூரன் முகத்தைக் கன்றிக் கறுக்க வைத்தாள்.

மருமகனுக்குக் கல்யாணம், அதுவும் இன்னார் வீட்டுப் பிள்ளையோடு என்றதைக் கேட்ட பாமினிக்கு, எல்லாமே மறந்து போயிற்று. மாமா, மாமி கட்டாயம் வர வேணும் என்றிருந்தான், மயூரன். ஆருரனின் தாயும் அழைத்துக் கதைத்திருந்தார்; திருமண அழைப்பிதழும் அனுப்பியிருந்தார். அதுவே, பைரவி எவ்வளவோ சொல்லியும் கேளாது, இலங்கைக்கு வந்திருந்தார்கள், சுகுமார்,பாமினி.

என்னதான் மனதாழத்தில் கோபம், வேதனை,உறுத்தல், ஒருவகையான பயம் என இருந்தாலும் தாய் தந்தையை, மருமகள்களை எண்ணி, நேரே, தங்கை வீட்டுக்குத்தான் சென்றார், சுகுமார்.

அந்த வீடு, இந்த ஒரு வருடத்தில் நிறையவே மாறிப்போயிருந்தது. டினோசன் செய்த வேலையின் தாக்கம் வெளிப்படையாகவே தெரிந்தது. ஒற்றை மகன் ஆயுளுக்கும் சிறையில்! அழுதபடியே இருந்தார், கலா. அந்நிலையிலும் பாமினியைக் கண்டதும் பெரும் கோபம் தான் வந்தது.

“வீடு பூந்து அடிச்சவன், என்ர குடும்பத்தில இத்தனையும் நடக்க பிள்ளையார் சுழி போட்ட குடும்பம் அது; அங்க போய், அவே பொம்பள முற்றாக்கி இருக்கினம். நீங்க என்ன எண்டா, கலியாணத்துக்கு வந்திருக்கிறீங்க! உங்கட மகள், இங்க வந்து தலை காட்டுறதே ஆடிக்கொருக்கா ஆமாவாசைக்கொருக்காத்தான். அங்க, அந்த வக்கில்லாத சனம் வீட்ட அடுகிடையாக் கிடக்கிறாள். எல்லாம் எங்களுக்குத் தெரியாது எண்டு இல்லை அண்ணா.” வந்ததும் வராததுமாகத் தொடங்கிவிட்டார். 

சுகுமார், பாமினி வாயே திறக்கவில்லை. பைரவி தான், முறைப்பும் முணுமுணுப்புமாகப் பிடுங்கல் பட்டாள். ஒரு கட்டத்தில், “இதுக்குத்தான் நான் அங்க வாறன் எண்டனான், நீங்க கேட்கேல்ல. சரி வெளிக்கிடுங்க, என்னோட அறையில தங்கலாம்.’’ என்றது வேறு, பெரும் பிரச்சினையாகியது.

பயணக்களையில் வந்தவர்களால் அங்கிங்கு திரும்ப முடியவில்லை. உண்மையில், ஏன் வந்தோம் என்று எண்ணும் வகையில் இருந்தது.

உறவுகள் என்பது, இத்தனைக்குப் பிக்கல் பிடுங்கலானதா? எரிச்சல் பட்டாள், பைரவி.

சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் தான் மனிதரின் குணநலன், நடத்தையைத்  தீர்மானிக்கும். கலா இருக்கும் மனநிலைக்கு, கதைவழிபட்டுப் பிரயோசனம் இல்லை. ‘‘விடம்மா!’’ மகளைச் சமாதானப்படுத்தினார், பாமினி.

இதே நேரம் ஆரூரன் வீட்டில்…

“பாமினி ஆட்கள் வந்திருக்கினம் தம்பி.” மெல்ல ஆரம்பித்தார், கௌசல்யா. 

“ஆர் அம்மா பாமினி?” கணக்கு வழக்குப் பார்த்துக் கொண்டிருந்தான், ஆரூரன். நிமிராதே கேட்டான்.

“ஆரா? நல்ல காலம் பைரவி இங்க இல்ல.” சொல்லிக்கொண்டு வந்தமர்ந்தாள், நிலா. பட்டென்று நிமிர்ந்தான், ஆரூரன்.

“ஓ! உடனே நினைவு வரேல்ல. உங்கட டொக்டர் கலியாணத்துக்குக் கூட நிக்காமல் வெளிக்கிட, இவே இங்க வந்திருக்கினம்! எப்ப வந்தவே?” என்றவனுக்குப் பதில் சொன்னதோடு நிறுத்தவில்லை, கௌசல்யா.

 “மயூரன்ட அப்பா அம்மாவே  இன்னுமே கதைக்கேல்ல, கலியாணத்துக்குக் கூப்பிடவும் இல்ல. மயூரன் தான் கூப்பிட்டு இருக்கிறார். இனி, இந்த விசயத்தில நான் என்ன சொல்லுறது? நாம ஒருக்கா, அவே வீட்டுக்குப் போய்க் கூப்பிடோணும். அதான் முறை தம்பி!” என்றவருள், அவர்கள் தங்கியுள்ளது கலா வீடு, இவன் வர வேண்டுமே என்ற தவிப்பு.

அவர் நினைத்தபடி, விசுக்கென்று தாயிடம் திரும்பியவன் தாமதியாது மறுத்தான்.

“அந்த வீட்டுக்குப் போய்க் கூப்பிட நான் வரமாட்டன். நீங்களும் போறேல்ல மா! கலியாணக் கார்ட் அனுப்பினீங்க தானே? அது போதும்!” ஒரேயடியாகச் சொல்லிவிட்டான். 

கௌசல்யா விடவில்லை; அன்று முழுவதும் முன்னும் பின்னும் வாதாடி, “சரி சரி… நாளைக்கு டெலிவரி போயிட்டு வந்த பிறகு… ம்ம்ம்… ஒரு ரெண்டு நாட்கள் தாங்கம்மா, வந்தோன்ன போகலாம். ஆனா, என்ன பிரச்சினை வந்தாலும் நீங்க தான் பொறுப்பு!” என்றிருந்தான்.

அது பார்த்தால், மறுநாள் காலை பத்து மணிவாக்கில், அவர்கள் வீட்டில் வந்து நின்றார்கள், பாமினியும் சுகுமாரும்; கூடவே பைரவியும். 

முதல் நாளிரவு தான், சத்தியன் பிரச்சினை பற்றி, அதில் துணையாக நின்ற ஆரூரன் குடும்பம் பற்றி எல்லாம் சொல்லியிருந்தாள், பைரவி. இவ்வளவு பெரிய விடயத்தைத் தம்மிடம் மறைத்த மகளை ஏசினார்கள்; இன்னும் நான்கு வருடங்கள், அவளை இங்கே விடுவது சரி வருமா என்று வேறு பதைபதைத்தார்கள்; மகள், சொல்வதைக் கேட்டால் தானே என்று அந்தரித்தார்கள்; விடிந்தும் விடியாததுமாக வெளிக்கிட்டு விட்டிருந்தார்கள்.  

 

error: Alert: Content selection is disabled!!