அத்தியாயம் 17- 2

ஆரூரன் வீட்டினர், அவர்களைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. “பாமினியோ!” கௌசல்யா ஓடிச் சென்று கட்டிப்பிடித்துக் கொண்டார்.

“அக்கா!” கண் கலங்கினார், பாமினி. அந்நேரம் உள்ளிட்டது, ஆரூரன் மோட்டார் சைக்கிள்.

அன்று, அதிகாலையே கொக்குவில் காளான் பண்ணைக்குச் சென்றிருந்தான்; இன்று, தானே பொருட்கள் விநியோக வாகனத்தில் செல்லவிருந்ததால், அவசரம் அவசரமாக வீடு வந்தவனும் இவர்களை எதிர்பார்க்கவில்லை.  

“வாங்க அங்கிள்? கல்யாணத்துக்குச் சொல்ல, வீட்ட வர இருந்தனாங்கள்.” சுகுமார் கைப்பற்றி மரியாதையோடு வரவேற்றான்.

 

“கார்ட் கிடைச்சதே! எங்கட வீட்டுக் கலியாணத்துக்கு ஆர் கூப்பிட வேணும்.” என்ற பாமினி. “போன முறை வந்த நேரம், ஒண்டுக்கு மூணு தடவைகள்  நேருக்கு நேராக் கண்டும் சந்தோசமா ரெண்டு வார்த்த கதைக்க ஏலாமல் போயிற்று. நான் தூக்கித் திரிஞ்ச சின்னவர் இப்பிடி வளர்ந்து நிக்கிறார் என்ன அக்கா! சும்மா இல்ல, வெருட்டலா!”அழுக்காக இருந்தவனை அன்போடு அணைத்துக்கொண்டார்.

“பையா நேற்றுத் தான் எல்லாம் சொன்னவள். சந்தோசமாப் படிக்கிறாள் எண்டு, நாங்க அங்க நிம்மதியா இருக்க எவ்வளவு நடந்திருக்கு? அது என்ன சின்ன விசயமா? எங்களிட்ட மறைச்சுப் போட்டாள்.” 

மகளை முறைத்தபடி அவர் சொல்ல, ஆரூரன் பார்வையும் அவளில். அவளோ, சிடுசிடுப்போடு நின்றிருந்தாள். 

அந்தச் செல்லமான, ‘பையா’ அழைப்பு, ஆரூரனுக்குச் சிரிப்பைக் கூட்டி வரவா என்றது; அடக்கிக் கொண்டான். 

“அதெல்லாம் சின்ன விசயம் பாமினி. நிலா, மதிக்கு ஒண்டு எண்டா பாக்க மாட்டமா? அப்பிடித்தான்.” என்றிருந்தார், ஆரூரன் அன்னை.

“அதோட  உங்கட பையாவுக்கு… கராட்டி வேற தெரியும்.” தன்னை மீறியே சொல்லி விட்டான், ஆரூரன். அந்தப் ‘பையா’ விளிப்பில், இதுவரை இல்லாத வகையில், சீண்டல் வந்து ஒட்டிக்கொண்டது. 

அவன், தாய் சகோதரி பார்வையே அவன் மீதுதான். சொன்ன பின்னரே அதையுணர்ந்தவன், சூடாகப் பார்த்த பைரவி பார்வையைத் தொட்ட வேகத்தில், “கதைச்சுக்கொண்டு இருங்க ஆன்ட்டி, குளிச்சிட்டு வாறன். கொஞ்சத்தில நான் முல்லைத்தீவு வரை போயிற்று வர வேணும். நீங்க மத்தியானம் சாப்பிட்டுப் போட்டுத்தான் போகோணும். கலியாணத்துக்கு எல்லாரும் கட்டாயம் வர வேணும்.” அன்போடு சொல்லிவிட்டுச் சென்றவன், இந்த ஒரு வருடமும் தனக்குத் தெரிந்த, உர்ரென்ற சிடுமூஞ்சிக் கரடி ஆருரனோ என்றிருந்தது, பைரவிக்கு.

மெல்ல நழுவிய நிலா மூலம், மயூரனுக்குச் செய்தி சென்றது; அடுத்த அரை மணித்தியாலத்தில், மயூரன் குடும்பம் அங்கு வந்திருந்தார்கள். அதை, ஆரூரன் அன்னையோ, பைரவியின் பெற்றோரோ கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

உள்ளிட்ட மயூரனின் தந்தை பார்வை, தவிப்போடு தங்கையில் படிந்து  நின்றது. பாமினியின் தேகம் நடுங்கியது; கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முதல், அடுத்தடுத்து இறந்த தந்தை, தாய் இறப்புக்கு வந்த நேரம் கூட, தமையன் வீட்டினுள் செல்ல முடியவில்லை; ஒரு வார்த்தை கதைக்கவும் இல்லை. உடல்கள் வைத்திருந்த பார்லரில் தான் இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர். 

அதன்பின், அந்த வீடு வளவு, அவர் பெயருக்கு மாற்றப்பட்டது, என்றாவது, மகளிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, தாயின் நகை, பணம் உள்ளது மட்டுமா? மகளை நினைத்து நினைத்துப் பெற்றோர் வருந்தினார்கள் என்றது  எல்லாமே, ஆரூரன் அன்னை மூலம் தான் தெரிய வந்திருந்தது.

அவை எதுவுமே வேண்டாம் என்று விட்டார், பாமினி. கூடப்பிறந்த உறவே தள்ளி நிற்கையில், உயிரோடு இருக்கையில் பெற்றோரால் தள்ளி வைக்கப்பட்டு இருக்கையில், பணமும் சொத்துப் பத்தும் யாருக்கு வேண்டுமாம்! 

ஆனால், அதன் பிறகு, மனைவி பிள்ளைகள் இவர்களைச் சந்திப்பதில், தொலைபேசியில் கதைப்பதையெல்லாம் கண்டும் காணாத பாவனையில் இருந்திருந்தார், பாமினியின் சகோதரர். அப்படியிருந்த அவர்கள் உறவு, இன்று… இந்தக் கணத்தை உருவாக்கியுள்ளதா? சற்றுமே எதிர்பார்த்திராத பாமினி மெல்ல நகர்ந்தார். 

“அண்ணா!” தன்னருகில் வந்தணைந்த சகோதரியை, ஒரு கையால் அணைத்துக் கொண்ட நவநீதன் கண்கள் கலங்கியிருந்தன. தமையனைக் கட்டிப்பிடித்துச் சிறுமியாக அழுதார், பாமினி; சுற்றி நின்றவர்கள் விழிகளும் நனைந்தன. 

எப்போதுமே நடக்காதிருப்பதற்குப் பதில், இத்தனை காலதாமதமாகவேனும் இந்த ஒன்றுகூடல் நிகழ்ந்ததே! அதுவே, பெருத்த மகிழ்வும் நிம்மதியும் என்ற எண்ணமே மயூரன், பைரவி குடும்பத்தவர் மனத்தில்.

பிறகு என்ன? மயூரன் கல்யாண வேலைகளில் முதல் ஆளாக ஈடுபட்டார், அவன் அத்தை பாமினி. இருந்தாலும் அவர் பெற்ற செல்ல மகளால் தான், நவநீதன், தம்மை ஒதுக்கி வைத்ததை மறக்க முடியவில்லை. 

“உங்களை விடுங்க, நான், இங்க எவ்வளவு பிரச்சினையில இருக்கேக்க  கூட, அவர் வந்து நிற்கேல்ல அம்மா. அதனால, அவே வீட்டுக்கு இனியும் என்னால் வர ஏலாது. உங்கட அண்ணனோட கதைக்கவும் தான். கலியாணத்துக்கு வருவன், நான் பொம்பள பகுதி!” முடிவாகவே சொல்லி விட்டாள்; அதிலேயே நின்றுமிருந்தாள். சமாதானமாகக் கதைக்க முயன்ற மயூரன் தந்தைக்கும் ஏமாற்றமே கிட்டியது! 

இரண்டு நாட்கள் என்று புறப்பட்டுப் போன ஆரூரன், இம்முறை, வீடு வர நான்கு நாட்களானது. முல்லைத்தீவு ஸ்டோல் பார்ப்பவர் திடீர் விடுமுறை எடுத்திருக்க, அங்கு ஒரு நாள் நின்றவன், வவுனியாவில் இரு தினங்கள் நிற்கவும் வேண்டியிருந்தது. என்ன ஏதென்று தவிக்கக் கூட நேரமின்றி, கல்யாண வேலைகளில் ஓடுப்பட்டுத் திரிந்தார், கௌசல்யா.

“சொந்தத் தங்கச்சி கல்யாண வேலைகளை விட, உம்மட அண்ணாக்கு அவரோட சூப் வியாபாரம் தான் முக்கியமாமே!” கடித்தாள், பைரவி. அவனோ, அங்கு நின்றபடியே கல்யாண வேலைகளையும் பார்த்தான். 

குறித்த நாளில், முகூர்த்தத்தில், நிலா மயூரன் கல்யாணம் வெகு விமர்சையாக நடந்தேறியது.

 

error: Alert: Content selection is disabled!!