அத்தியாயம் 18 – 1

போதைப்பொருள்க் கடத்தல் சார்பில், 2009 க்குப் பின்னரான, கிட்டதட்டப் பத்து வருடங்கள் கடந்தும்  எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது; காசைத் தூக்கிப் போட்டால், கழுத்தை அறுத்துத் தரவும் தயார் என்றிருந்த, உயர் பொறுப்பிலிருந்தவர்கள் தொடக்கம் அன்றாடம் காச்சிகள் வரை, பொம்மலாட்ட பொம்மைகளாகவே செயற்பட்டார்கள். 

சில வருடங்களுக்கு முன், யாழ்ப்பாண மாவட்ட ஏஎஸ்பி எல்லாளனில் ஆரம்பித்து, நாடளாவிய ரீதியில், முறுக்கேறிய இளம் காவல் அதிகாரிகளோடு கைகோர்த்த நீதித்துறையும் முழிப்போடு செயல்பட்டு வேட்டையாடியதன் விளைவு, போதைப்பொருள்ச் சில்லறை வியாபாரம், தன் சிறகை, நன்றாகவே ஒடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருந்தது.

 (‘நீ தந்த கனவு’ நாவலின் நாயகன் ஏஎஸ்பி எல்லாளன். நன்றி  நிதனிபிரபு!)

ஆரூரன் வீட்டு வளவு பின்புற வேலியில், அவ்விரு வீடுகளுக்கும் இடையிலான பழக்கத்தைப் பறைசாற்றும் விதமாக, அந்தப் படலை சாதுவாக சாத்தப்பட்டிருந்தது. 

தள்ளித் திறந்து தம் வளவினுள் காலை வைத்தார், பாமினி; மேற்கொண்டு நகர முடியவில்லை; ஆழ்ந்த பெருமூச்செறிந்தார். சற்றே தள்ளியிருந்தது, அவர் பிறந்து வளர்ந்த, ‘மலர் இல்லம்’. 

வெளிப்பார்வைக்கு பழைய வீடு போல் இருந்தது. வீட்டைச் சுற்றி, நல்ல விசாலமான வளவு; இத்தனை வருடங்களில் இன்னும் அடர்த்தியான சோலையாகி இருந்தாலும் வலு சுத்தமாக இருந்தது. 

கண்ணீரோடு, மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து முன்னேறினார், பாமினி. அவரோடு சேர்ந்து உள்ளிட்ட தமையனுக்கும் மனம் பெரும் பாரமாக இருந்தது. இத்தனை வருடங்களாகப் பிடித்து வைத்திருந்த கோபமா? வறட்டுக் கௌரவமா? ஏதோவொன்று, இன்று, வலுவிழந்து போயிருந்தது. அவரில் தாக்கிய ஏதோவொரு சக்தி, சிந்திக்கவே விடாதல்லவா ஆரூரன் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தது. இது, இந்தக் கணம், ஏன் முதலிலேயே வரவில்லை? பெற்றோர் உயிரோடு இருக்கையில், அதுவும் அவர் தாய், ஒற்றை மகளை எண்ணியெண்ணி மனதுள் வெந்து மடிந்தாரே! தாய் பட்ட துன்பத்தைப் பார்த்தும் பாராதிருந்த அவரிதயம் மேலும் பாரமாகியது; விழிகள் நிரம்பிக் கசிந்தன.

“வெளில இருந்து பாக்கேக்க, பழைய வீடு போல இருந்தாலும் உள்ள நல்லா வடிவா இருக்கே!” தாய்க்குக் கேட்கும் வகையில் சொன்னாள், பைரவி. 

“எங்கட அம்மாட சீதன வீடு!” கரகரத்த குரலில் சொன்ன பாமினி, தான், இந்த வீட்டில் பிறந்து, திருமணம் வரை வாழ்ந்த நினைவுகளோடு இழுபட்டு விட்டார் என்று, அவர் முகபாவனையே காட்டிக் கொடுத்தது.

நான்கு விசாலமான படுக்கை அறைகள்; நல்ல பெரிய குசினி; அதன் முன்னால் பெரிய சாப்பாட்டறை; இரு படுக்கையறைகளோடு இணைந்ததாகக் குளியல் கழிப்பறைகள்; வெளியில் ஒரு கழிப்பறை, குளியலறை; ட வடிவில் விசாலமான வரவேற்பறை; சின்னதாகவொரு சுவாமியறை என, கம்பீரமாக, தன் வசதிகளைக் காட்டி நின்றது, ‘மலர் இல்லம்’. 

தாய் பிறந்து வளர்ந்த வீடு, தாயைப் பெற்றவர்கள் இறக்கும் தருவாயில் மகளுக்குச் சேர வேண்டும் என்று எழுதி வைத்ததாக, ஆரூரன் அன்னை வாயிலாகக் கேட்டிருந்தும் இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை, பைரவி. அந்தளவுக்கு, மாமாவில் கோபம்! அந்தக் கோபம், ஒதுக்கம் அவ்வளவு இலேசில் மறையாதே! என்றாலும், தாய், இந்த வீட்டைப் பார்த்துக் கலங்குவது, அன்போடு ரசிப்பது என்று பார்த்தவள், தானுமே இரசிக்கத் தொடங்கிவிட்டிருந்தாள். 

நாலு அறைகளிலும் பல்கலைக்கழகப் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றான், மயூரன்.

“வீடு திருத்தம், பராமரிப்புக்கு என்று போக, மிச்சம் அப்பிடியே  பேங்கில இருக்கு பாமினி. அம்மா, திரும்ப திரும்ப இது உன்ர கைக்குப் போகோணும் எண்டவா!” குரல் கரகரக்கச் சொன்ன நவநீதன் பார்வை, விலகி அப்பால் சென்று தவிப்போடு சுழன்றது.

“இத எப்பவும் விக்க மாட்டன் அண்ணா. ஆனா… லீசுக்கு வேணும் எண்டா ஆரூரனுக்குக் குடுக்கலாம்.” என்றார், பாமினி.

கதைத்தபடியே வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருகையில், “இந்தப் பெரிய அறை வேகன்ட் ஆகுது பைரவி. நீர், பேசாமல் இங்கயே வந்திருக்கலாம்.” என்றான், அவன். 

அவள் பதில் சொல்லவில்லை.

அடுத்த கிழமையே, மலர் இல்லத்தின் வளவை 15 வருட லீசுக்கு எடுத்துக் கொண்டான், ஆரூரன். வீடு, காணி என்று, பராமரிப்பையும் அவனிடமே கொடுத்தார், பாமினி. அதோடு, மகளை அங்கு வந்து தங்கிக் கொள்ளச் சொன்னார்கள். இந்த ஒரு கிழமையாக அவள் மனதுக்குள்ளும் அந்த எண்ணம் தான் ஓடிக்கொண்டிருந்தது. பக்கத்தில் ஆன்ட்டி, மதி என்று பொழுதும் போகுமே! பிரதானமாக நின்ற இந்த நினைவே ஆமோதிக்க வைத்தது.

“அப்ப, விருப்பமான மாதிரி மாற்றம் ஏதாவது செய்ய வேணும் எண்டா  பார்த்துச் சொல்லம்மா. நாங்க இங்க நிக்கேக்கயே செய்து தந்திட்டுப் போறம்.” என்றார், சுகுமார்.

அதற்கு, தன் அறையின் பக்கச் சுவரில் கதவொன்று, அப்படியே, அந்தப் பக்கம் பெரிதாக ஒரு ஹோல் கட்டி, அதில் இரு கூடை ஊஞ்சல் என்று அவள் சொன்ன விதம் பார்த்து, மகளை முறைத்தார், பாமினி.

“விளையாடுறியாம்மா? இதெல்லாம் பெரிய வேலை. மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் நாலு வருசங்கள் இங்க இருக்கப் போறீங்க?” என்று, தாய் சொன்னதில், மகள் விருப்புக்கு மறுப்பு இருந்தது.

 “ப்ளீஸ் ப்ளீஸ்!” ஒற்றைக் காலில் நின்றாள், அவர்கள் மகள்.

“ப்ளீஸ் மா, இது என்ர ஆசை எண்டு உங்களுக்கே தெரியும். படிச்சு முடிய, கனடாவில, எங்கட வீட்டில இப்படிச் செய்ய வேணும் எண்டு இருந்தனான். இப்ப, இந்தச் சோலைக்குள்ள செய்தா என்ன எண்டு இருக்கு. ப்ளீஸ்… ப்ளீஸ்!” என்று, அவள் கெஞ்சிக் கொண்டு இருந்ததே, ஆருரனோடு கதைத்து, அதற்கான ஒழுங்குகளைச் செய்யவும்  வைத்திருந்தது. 

“கட்டி முடியவே நான் இங்க வாறன்.” என்று விட்டிருந்தாள், பைரவி.

பாமினி வளவு கிடைக்கும் என்ற எண்ணமே ஆரூரனுக்கு இருக்கவில்லை. வேறு இடத்தில் இடம் பார்த்தபடி இருந்தவன், இப்போ, அந்த வளவே கிடைத்த சந்தோசத்தில் மடமடவென்று, காளான் பண்ணை வேலைகளை ஆரம்பித்திருந்தான். 

இரு பெரிய காளான் கொட்டில்கள்;  ஒவ்வொரு கொட்டிலும் பதியத்துக்கு, அறுவடைக்கு என இரு பிரிவுகளோடு தயாரானது. வளவின் கடைசியில் சின்னதாக ஒரு தோட்ட வீடு, அதன் முன்னால், தூள் கலக்க சீமெந்து மேடை, அதன் அருகிலேயே நான்கு பெரிய ட்ரம் அடுப்புகள் என்று, அந்த வளவு, காளான் பண்ணைக்குரிய அம்சங்களை ஏந்திக்கொள்ளத் தொடங்கியிருந்தது.  

error: Alert: Content selection is disabled!!