அத்தியாயம் 18 – 2

நின்று நிதானித்து மூச்சு விட முடியா வேலைப்பளுவின் மத்தியிலும் ஒரு கட்டிட்டிட நிறுவனத்தைப் பிடித்துக் கதைத்து ஒழுங்கு செய்ததில், வீட்டின் பக்கவாட்டில் கட்டுமான வேலைகளும் தொடங்கியிருந்தன. 

“என்னதான் எண்டாலும் இந்தளவுக்கு எல்லாம் செல்லம் குடுக்கக்  கூடாது. அவாக்குத் தான் நினைச்சது எல்லாம் செய்ய வேணும். நம்மட மதியப் பாருங்க.” தாயிடம் முணுமுணுத்திருந்தான், ஆரூரன். 

“ச்சே ச்சே, பைரவி அந்த மாதிரிப் பிள்ள இல்ல.” தாமதியாது சொன்ன தாயை முறைத்தான், சாப்பிட்டுக் கொண்டிருந்தவன். 

“உண்மையாத்தான் சொல்லுறன் தம்பி. செல்லமா வளர்ந்திருந்தாலும் நல்ல பொறுப்பானவா. அந்தச் சின்ன அறையில இந்த ஒரு வருசமும் இருக்கேல்லையா? இங்க நம்மட வீட்டில வந்து இந்தச் சின்ன இடத்தில சந்தோசமா நிக்கேல்லையா? ஒருநாள், முகம் சுளிச்சதக் காணேல்ல. இப்ப, வசதி இருக்கிற படியா செய்யலாம் எண்டு சொல்லி இருக்கிறா. உங்கட தங்கச்சிகள் கூட,  நல்ல வசதி வாய்ப்புகளோட இருந்தா தங்கட விருப்பங்களை இப்படித்தான் செய்வீனமா இருக்கும்.” அவர் சொல்லி முடிக்க முதல் குறுக்கிட்டிருந்தான், அவன்.

“சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னன் அம்மா. அதுக்கு இப்பிடியா?” நக்கலாகச் சொன்னவன், “எது எப்பிடியோ, செலவழிக்கிறது அவே. நான் என்ன சொல்லக் கிடக்கு? பொறுப்பெடுத்த வேலையைச் செய்து குடுக்கிற கடமை எனக்கிருக்கு.” என்றவன், தன் கண் பார்வையில் அனைத்தையும் செய்வித்தான். 

பெற்றோர் மற்றும் மைத்துனிகளோடு கொழும்பு சென்றிருந்தாள், பைரவி. டினோசனின் சகோதரிகளை, அவர்கள் இறுக்கத்திலிருந்து வெளிக்கொணரவே இந்தப் பயணமென்று, கௌசல்யாவிடம் சொல்லியிருந்தார், பாமினி.

ஒரு முழு மாதம் சுற்றித் திரிந்து விட்டு, சுகுமார், பாமினி கனடாவுக்கு விடைபெற்றிருந்தார்கள். மைத்துனிமாரோடு யாழ்ப்பாணம் வந்தாள், பைரவி.

வந்ததும் வராததுமாக, மலர் இல்லத்துக்கு வரும் ஆயத்தங்களில் இறங்கி விட்டாள்.

“இன்னும் சில வெளி வேலைகள் கிடக்கு எண்டவர், ஆரூரன் அண்ணா.” என்ற மயூரன், “செல்ல மச்சாள் எல்லா? நாங்க அந்த அறையையும் இப்ப கட்டின பகுதியையும் எடுக்கலாமா? இன்னொரு அறையில இருக்கிற பிள்ளைகள எழுப்பிப் போட்டு நீர் இருமன். இப்பக் கட்டினது அந்தளவுக்கு வடிவா இருக்கு பைரவி!” கெஞ்சலாகக் கேட்டு, நிலாவிடம் முறைப்பை வாங்கிக் கொண்டான்.

“நீர் இன்னும் பாக்கேல்ல எல்லா? பாத்தா நீரும் இதைத்தான் கேப்பீர்!”  என்றான் மயூரன், மனைவியிடம்.

“முழு வேலையும் முடிய விட்டுப் பாக்கலாம் எண்டவர் அண்ணா. நீங்க எப்பப் பாத்தீங்க?” இப்படி, அவர்கள் கதைக்க கதைக்க, பைரவியினுள் ஆர்வம் எக்கச்சக்கமானது.

“மச்சான் மட்டுமில்ல, ஃபிரெண்ட் ஆகவும் போய்ட்டீர் எண்ட ஒண்டுக்காக, ஒரு இரவுக்குத் தங்க வேணும் எண்டா… போனால் போகுதெண்டு  அனுமதி கிடைக்கும். மற்றும்படி, ம்ம்ம்… சான்சே இல்ல பிள்ளைகளா! நீங்களே இதை விட பெட்டரா ஒண்டக் கட்டிறது.” வாயைச் சுழித்தாள், பைரவி.

“கட்டத் தொடங்கின நேரம் அம்மா அப்பா பார்த்தவே. எல்லாம் முடிய விட்டே பாக்கலாம் எண்டு நானும் இருந்திட்டன். நீங்க இப்பிடிச் சொல்ல சொல்ல பரபரப்பா இருக்கே!” வீட்டு ஆன்ட்டி, அங்கிளிட்டச் சொல்லிக்கொண்டு புறப்பட்டார்கள்.

இதுவரை, ஆரூரன் வீட்டின் பின்புறத்தால் மலர் இல்லம் சென்றிருந்தவள், முதல் முறையாக, முன் வாயில் வழியாக உள்ளிட்டாள்.

வலதுகைப் பக்கம் இருந்த முன்னறை தாண்டி, பின்னால் இருந்த பெரிய அறைக்குப் பக்கத்தில், புத்தம் புதுக் கூரையோடு, மூன்று புறமும் கண்ணாடி யன்னல்களோடு இருந்த பகுதி கண்ணில் பட்டது.

“வாவ்! இங்க இருந்து பார்க்கவே சூப்பரா இருக்கே!” 

ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, ஆவலோடு ஓரடி எடுத்து வைத்தவள் நடை,  ஆரூரன் வரவில் சற்றே தாமதமானது. அவனோடு கௌசல்யா, மதியும் வந்தார்கள்.

ஓடி வந்தாள், மதி. “கொழும்புக்குப் போனோன்ன எங்களை ஒராள் மறந்திட்டா!”என்றவாறே, பைரவியின் விழிகளை இறுகவே பொத்திக்கொண்டன, அவள் கரங்களிரண்டும்.

“ஆர் மறந்தது? நான் கோல் எடுகேக்க எல்லாம் நீர் தான் வீட்டில இருக்கேல்ல. விடும் மதி!” அவள் பிடியிலிருந்து விடுபட முனைந்தாள், பைரவி. 

“ஸ்ஸ்ஸ்ஸ் உள்ள போய்த்தான் பாக்கிறது. நல்ல பிள்ளையா வாரும்.” அதட்டலோடு அவளை அழைத்துச் சென்றாள், மதி.

“ஏய்ய்ய்! இது கூட நல்லா இருக்கே!” முன்னால் கரங்களை நீட்டித் துலாவிக்கொண்டு அவள் நடந்த விதம், எல்லோர் முகத்திலும் முறுவலைக் கொண்டு வந்திருந்தது.

அருகில், கௌசல்யாவின் குரல் கேட்கவும், “ஆன்ட்டி எப்பிடிச் சுகம்? என்னை மிஸ் பண்ணீங்களா? ஓம் தானே?” என்றபடி, கரத்தைப் பக்கவாட்டில் நீட்டித் துலாவியவள், தட்டுப்பட்ட கரத்தைப் பிடித்துமிருந்தாள். அது கௌசல்யா இல்லையென்று அவள் உணர்வதற்குள், மறுகையால், அவள் கரத்தைப் பிரித்து விடுவித்து விலகி விட்டிருந்தான், ஆரூரன்.

“மயூரன்…” இவள் குரல் சந்தேகமாகத்தான் ஒலித்தது.

“அது அம்மாவோ, அத்தாரோ இல்ல, என்ர அண்ணா!” என்றபடி சிரித்தாள்,மதி. 

“ஆங்!” என்றவள், வார்த்தை வராது தடுமாறி நிற்க, அந்த விடயத்தைக் கடக்க வைத்துவிட்டது, ஆரூரன் அன்னையின் குரல். 

“பிள்ளயத் தேடாமல்? வீட்ட கலகலப்பே இல்லாமல் இருந்தது.” அவர் சொல்லவும், “இப்பப் புதுசாக் கட்டின பகுதிக்குப் போறம் ஓகே!” அறிவித்தாள்,மதி. 

கண்ணாடிக் கதவு, மயூரன் பிடியில் வாய் திறந்திருக்க, மெல்ல உள்ளிட்டாள்,பைரவி.

“இனி விடும் ப்ளீஸ்!” ஆர்வம் பொங்க, கண்களை விடுவித்துக் கொள்ள முயன்றாள். 

error: Alert: Content selection is disabled!!