அத்தியாயம் 18 – 2

“ஸ்வீட்டிய போகச் சொல்ல வேணாம். ப்ளீஸ் அப்பா!” அழுகையில் சுருதியை உச்சம் கொண்டு சென்றாள், லாதி.

“லாதி!” குரல் உயர அதட்டினான், பூபாலன். ஏற்கனவே தண்ணீர் கூசாவைத் தட்டிவிட்ட செயலில் இருந்த கோபமும் சேர கண்டிப்பும் எரிச்சலுமாக மகளைப் பார்த்தான்.

“இப்ப ஏன் பிள்ளையோட சத்தம் போடுறீங்க? இங்க பாருங்க லாதி, இவர் சொல்லி எல்லாம் நான் எங்கயும் போக மாட்டன்; நீங்க வாங்க நாம தம்பிக்குப் பால் குடுப்பம்.” வெளியே வந்து அங்கிருந்த இருக்கையை நிறைத்தார்கள்.

பூபாலனுக்கு மகளில் கோபம் அதிகரித்தது. “இப்பிடியே விட்டா…”  ஓரடி எடுத்து வைத்தவன் நின்றான். நிறுத்தியிருந்தது, லாதியின் ஓங்கி ஒலித்த அழுகை.

“இப்ப என்னத்துக்கு அவள அழப் பண்ணுறீங்க?” சிடுசிடுப்போடு கேட்க ஆரம்பித்த கயலின் பேச்சு அவன் முகத்தின் கடுமையில் தடைப்பட்டது. அவன் விழிகளில் குற்றச்சாட்டு வெளிப்படையாகவே பளிச்சிட்டது. 

இவன் எப்போதாவது மகளைக்  கண்டிக்கும் சந்தர்ப்பத்தில் அவள் முன்னால் வைத்து அவனைத் தடுத்ததில்லை, காயு. பிடிக்காவிட்டால் மகள் இல்லாத போது தன் ஆட்சேபனையைச் சொல்லுவாள். இவனும் அப்படியே. 

பிள்ளைகளுக்கு முன்னால் வைத்தே இப்படிக் கேட்டால்? ‘புத்தியில்லையா இவளுக்கு?’ கயல்விழியை பார்வையால் குற்றம் சாட்டினான். அதை அவள் உணர்ந்து கொள்ளவில்லை. இருந்தாலும் லாதியின் அழுகையை அடக்க முனைந்தாள்.

“என்னத்துக்கு இப்ப இப்பிடிக் கத்தி அழுறீர்? பாரும் தம்பி பயப்படுறான். பக்கத்தில எல்லாம் கேட்டா வெக்கம் எல்லா?” அவனை முந்திக்கொண்டு சிறுமியைக் கண்டித்தாள். சிறுமியின் அழுகைச் சத்தம் கேட்டு விரைந்து வந்த விமலா தள்ளியே  நின்று விட்டார்.

“வர வர லாதிட பழக்கம் சரியில்ல. எல்லாம் நீர் குடுக்கிற செல்லம். இப்பிடியே போனா…” அடிக்குரலில் சொன்ன பூபாலன், “எல்லாம் விளங்கிற உமக்கு இது விளங்கேல்லையா?” கயல்விழியில் தான் கோபம் கொண்டான். அதுவே குரலைச் சீறலாக்கியிருந்தது.

“அப்பா! நோ நோ நோ  ஸ்வீட்டிய ஏசி ஒண்ணும் சொல்ல வேணாம்.” அவன் குரலுக்கு மேலாகக்  கத்தினாள், லாதி.

“சத்தம் போடாத எண்டு சொல்லிக்கொண்டு இருக்கிறன்”  அவர்களை நோக்கி விசுக்கென்று முன்னேறிய வேகத்தில் மகளை எழுப்பி, “முதல் இங்க வா!” இழுத்துத் தன் முன்னால் நிறுத்தினான்.

“அவள விடுங்க!” எழ முயன்றவள் அவன் பார்த்த பார்வையில் அப்படியே இருந்தாள்.

“நீர் வாய மூடிட்டு உம்மட வேலையப் பாரும். இது எல்லாம் உம்மாலதான்.” அவளிடம் சீறியவன், “வர வர இதெல்லாம் என்ன பழக்கம் லாதி? அம்மா மட்டும் இருந்தாவோ இப்ப நீ நல்லா ஏச்சு வாங்குவ. இல்லையா ஓமா சொல்லு? அம்மாக்கு இப்பிடி எல்லாம் அழுது பிடிவாதம் பிடிக்கிறது, அதை இதைத் தட்டி உடைக்கிறது, கதவ அடிச்சுச் சாத்துறது, படியில தொம் தொம் எண்டு சத்தம் போட்டு ஏறுறது எல்லாம் பிடிக்குமா?” ஆங்கிலத்தில் கேட்டபடி மகளை உலுக்கியவன் குரல் கமறியது. கண்கள் நிறைந்திட்டு. 

“சொல்லு லாதி, அம்மாக்குப் பிடிக்குமா?” சிறுமியின் தோள்களிரன்டையும் பற்றியிருந்தவன் அப்படியும் இப்படியும் அசைத்துக் கேட்டான்.

“பூபாலன் விடு, சின்னப்பிள்ள.” ஓரடி எடுத்து வைத்த விமலா அப்படியே தேங்கி நின்றுவிட்டார். 

தகப்பன் உலுக்கிக் கேட்க கேட்க விம்மல் அடங்க அப்படியே தகப்பனை இறுகக் கட்டிப் பிடித்து விக்கி விக்கி அழுதாள், லாதி. அவன் கரம் நடுக்கத்தோடு மகள் தலைமீது படிந்து வருடியது.

“அம்மா, அப்பாக்குப் பிடிக்காதது, வேணாம் எண்டதுகள அவே உங்களோட இல்லாட்டியும் செய்யக் கூடாது செல்லம்; பிள்ளேட நல்லதுக்குத்தான் அப்பா அம்மா சொல்லுறது.” சொல்லிக்கொண்டே, கண்ணீரோடு அமர்ந்திருந்த கயல்விழியை முறைத்தான்.

“இங்க பாருங்க குஞ்சு…” முழங்காலில் அமர்ந்து சிறுமியின் முகத்தைக் கைகளில் ஏந்தி கண்களைத் துடைத்துவிட்டவன் குரலில் மருந்துக்கும் கோபமோ கண்டிப்போ இல்லை. பலநாட்களின் பின்னால் தன் விருப்பத்துக்குரிய செல்ல அப்பாவைக் கண்டாள்  சிறுமி. அம்மாவும் இல்லாமல், அப்பா முன்னால் நடமாடியும் அப்பாவாக உணராது இத்தனை நாட்களும் அவள் மனம் பட்ட பாட்டில் சிறுமிக்கு மீண்டும் அழுகை பொங்கிற்று. 

உதடுகள் துடிக்க கட்டுப்படுத்த முடியாது விம்மியவளுக்கு, “பிள்ளேட ஸ்வீட்டிய நான் எங்கயும் போகச் சொல்லி சொல்லேல்ல.” அதுக்குத்தான் அழுகிறாள் என்றெண்ணி சொன்னான்.

அவளோ விம்மலோடு, “அப்பா!” அவன் தோளில் கை போட்டு இறுக்கிக் கொண்டவள் தலை அவன் கழுத்து வளைவில். மகளின் சூடான கண்ணீரைத் தோள்களில் உணர்ந்தவன் மனம் எரிந்தது. 

“காயு! பாரடி நம்மட பிள்ள அழுகிறத…” மனைவிக்குக் கேட்டிராதா என வாய்விட்டே கத்திவிட்டான்.

லாதியின் அழுகை வலுத்திட்டு. “அம்ம்ம்…மா அம்மா… அப்பா அம்மா” விம்மல்களிடையே சொல்லி அழுதவளை அப்படியே கட்டிக்கொண்டு நிலத்தில் அமர்ந்தவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. 

தாயின் இழப்பின் பின்னர் திரண்ட துயருக்கு வடிகாலாக கயல்விழியின் அருகாமையை நாடிய லாதி, இன்றுதான், தந்தையோடு அதைப் பகிர்ந்து கொள்கிறாள். அவர்கள் இருவரையும் பார்த்துச் சேர்ந்து அழ மட்டுமே முடிந்தது விமலா, கயலால்.

குழந்தை சிணுங்கினான். பாலைப் புகட்ட ஆரம்பித்த கயல்விழியின்  பார்வை மட்டும் தந்தை மகளை விட்டு அரங்கவில்லை.

விரைவில் சுதாகரித்துக் கொண்டான், பூபாலன். மகளுக்கு எதையோ சொல்ல நினைத்துத் துன்பத்தைக் கீறிவிட்டு விட்டானே!

“செல்லக்குஞ்சம்மா அழக் கூடாது. அப்பா இருக்கிறன் தானே? அம்மாவும் அப்பு சாமியோட இருந்து பிள்ளையைத்தான் பாத்துக் கொண்டு இருப்பா. அழுதா சரியாக் கவலைப்படுவா. எங்கட செல்லம் பெரிய பிள்ள எல்லா!” கண்ணீரைத் துடைத்து விட்டான்.

error: Alert: Content selection is disabled!!