அத்தியாயம் 18 – 3

அடுத்து, தாயில்லாத குழந்தைகளின் அப்பாவாக, ‘உங்களுக்கு நானிருக்கிறன், எப்பவுமே இருப்பன்’ என்று, வார்த்தைகளில் மட்டும் சொல்லாது செய்கையில் உணர்த்த வேண்டிய அவசியத்தை நன்றாகவே உணர்ந்தபடி, வார்த்தைகளைத் தெரிந்தெடுத்துக் கதைத்தான், பூபாலன்.

 

“ஸ்வீட்டி இலங்கையில இருந்து இங்க வந்தது வேலைக்கு. அத அவா செய்ய வேணும் எல்லா?” திடீரென்று இப்படிக் கேட்க, லாதி போலவே கயல்விழியும் விளங்காது தான் அவனைப் பார்த்தார்கள். 

“தம்பியையும் உங்களையும் பார்க்க அவா வரேல்ல; அது உங்களுக்கு விளங்க வேணும் குஞ்சு. சரியோ?” லாதியின் விழிகள் பட்டென்று நிறைந்தன. 

அவனோ அதைச் சொல்கையில் கயலைக் கூர்மையாகப் பார்த்தான். அவளே தான் வந்த நோக்கம் மறந்து விட்டாள் போலல்லவா இருக்கு! அவன் வீடு மறக்கப் பண்ணிவிட்டது என்று தன்னைத் தானே குற்றம் சுமத்திக் கொண்டான், அவன்.

“அவா வேலை செய்து முடிய இங்க இருந்து இலங்கை போயிருவா.” என்று சொல்லிவிட்டு, “இல்ல இல்ல, நம்மட பிரணவ் அங்கிளக்  கலியாணம் செய்து அவேட வீட்ட போயிருவா. அவேட வீடு பக்கத்தில தானே. நாம இடைக்கிடை போய்ப் பார்க்கலாம். அவவும் இங்க வரலாம். இதை எல்லாம் பிள்ளேட்ட ஏன் அப்பா சொல்லுறன் எண்டா, எல்லாத்துக்கும் ஸ்வீட்டி ஸ்வீட்டி எண்டு இருந்து பழகக் கூடாது. அவாவும் பாவம் தானே? அப்பா என்ன சொல்லுறன் எண்டு குஞ்சம்மாவுக்கு விளங்குதோ!” மகள் முகத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கேட்க, அவள் விளங்குது என்ற வகையில் தலையாட்டினாள்.

கயல்விழிக்கு வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் நின்றாலும் வெளியே வரவில்லை. ‘நீ வந்த வேலையப் பாத்திட்டு வெளிக்கிடு!’ என்று, தனக்கே அவன் சொல்வது போலிருந்தது. 

“எத்தின தடவை அத்தை சாப்பிட கூப்பிட்டா நீங்க போகேல்ல. அப்பிடி எல்லாம் செய்யக்கூடாது செல்லக் குட்டி! ம்ம்ம்…இனிச் செய்யக்கூடாது என்ன?” என்று, மகள் தலையாட்டலைப் பெற்றுக்கொண்டு தொடர்ந்தான்.

“ஒன்லைன் வகுப்புகளுக்குப் போயிட்டு விளையாடுற நேரம் தம்பியோடயும் விளையாட வேணும் என்ன? செல்லம்மா, குட்டியன், அப்பா மூண்டு பேரும் தான் இனி இங்க.” அவள் உச்சியில் கொஞ்சியவன் விழிகள் கசிந்தன.

“பிள்ளைக்கு என்ன வேணும்  எண்டாலும் அப்பாட்டக் கேட்கோணும்; அம்மாட்ட சொல்லுறது போல பள்ளிக்கூடக்  கதைகள் எல்லாம் அப்பாட்டச் சொல்லோணும். வேற என்ன எண்டாலுமே அப்பாட்டத்தான் சொல்லோணும் சரியோ?” 

லாதியின் விழிகள் விடாது வழிய வழிய துடைத்து விட்டபடி, இப்பவே சொல்லிவிடு என்று மனம் கட்டளையிட்டவற்றை நிதானமாக எடுத்துச் சொன்னான் பூபாலன். 

மகள், சிறுமியே என்றாலும் எடுத்துச் சொல்ல சொல்ல புரிந்து கொள்வாள் என்று நம்பினான். அதுமட்டுமின்றி ‘பிள்ளைகளைப் பார்ப்பதென்பது உன்னால் இயலாத காரியம்’ என எண்ணும் தன் வீட்டுப் பெரியவர்களுக்கும், காயு சொன்ன வார்த்தைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு ‘தானின்றி எதுவுமே நடவாது’ என்ற வகையில் நடக்கும் கயலுக்கும் விளங்க வேண்டுமே. 

அவளுக்கும் தெளிவாகவே விளங்கிற்று! குழந்தைகள் ஒட்டிப் பழகிவிட்டால் விடாயினம். இப்போதே குழந்தை எல்லாவற்றுக்கும் அவளைத்தான் தேடுகிறான். இப்படியே போனால்… ‘நான் இங்க இருந்து போன பிறகு…’ எண்ணியவளுக்கு அப்படியொருநிலையில் பிள்ளைகளைப் பார்க்க, பூபாலன் வெகுவாகவே சிரமப்படுவான் என்று விளங்கியது.

‘இவ்வளவு நாளும் துன்பத்தில பிள்ளைகள்ட பக்கமே வராமல் இருந்த மனுசன் இப்ப ‘இது  என்ர பொறுப்பு!’ என்று முன் வரேக்க நான் மெல்ல விலகிறதுதான் மரியாத!’ முடிவெடுத்தாள், கயல்விழி.

கையில் அணைந்திருந்த குழந்தையைப் பார்க்கையில், அவனைப் பிரிவது பற்றி நினைக்கவே பிடிக்கவில்லை. ஆனாலும் நிதர்சனம் அதுதானே?  

“எங்கட செல்லக் குட்டிக்கு விளங்கும் எண்டு எனக்குத் தெரியும். இப்ப அப்பாவோட வாங்கோ முகம் கழுவிட்டுச் சாப்பிடுவம்.” எழுந்து நடந்தான், பூபாலன்.

மறுப்புச் சொல்லாது தகப்பன் பிடியில் நடந்தாள், லாதி. பார்வை மட்டும், கயல்விழியின் உரு மறையும் மட்டும் அவள் நோக்கித் திரும்பி திரும்பிப் பார்த்திட்டு!

முகம் கழுவிவிட்டு வந்து சமையலறை செல்கையிலும் அவளைத்தான்  பார்த்தபடி சென்றாள். விருப்பின்றிச் செல்கிறாள் என்பது விளங்கியும் கயல் வாய் திறக்கவில்லை.

உணவு மேசையில்…

“இதில இருங்க!” மகள் வழமையாக அமரும் இருக்கையை இழுத்து விட, அமராது தகப்பன் முகம் பார்த்தாள், லாதி. 

“ஏனம்மா, பசிக்கலையா?”

“இல்லப்பா….இப்ப வேணாம். நான் ஸ்வீ…” சொல்ல வந்ததை விளுங்கிவிட்டாலும் பூபாலனுக்கு விளங்கவே செய்தது. கயல் இங்கு தங்க வந்ததிலிருந்து அவளோடு அவள் பார்வையில்தானே எல்லாம். இனி வேண்டாம். மனதில் நினைத்ததை வெளியில் சொல்லாது, “முதல் வடிவா இருங்கோ!” அமர்ந்துவிட்டாள், லாதி.

பட்டென்று பெரும் தனிமை அவளைத் தாக்கிற்று. ‘அம்மா…’ வாய்விட்டுச் சத்தமாகக் கத்த வேண்டும் போலிருந்தது. 

பார்த்தும் பாராததுமாக மகளில் கண்ணிருக்க, அவளின் பிளேட்டை எடுத்தான், பூபாலன். 

“பச், அத வச்சிட்டு நீ இரு தம்பி, சாப்பிடு. நான் குடுக்கிறன்.” என்றுவிட்டார், விமலா.

அவனுக்கும் உண்ண வேண்டும் போலவே இருக்கவில்லை. இருந்தாலும் தன் குழந்தைகளுக்காக தான் நலமாக இருக்க வேண்டுமே! கலங்கிய விழிகளை மறைத்தபடி அமர்ந்து கொண்டான், பூபாலன். 

 

error: Alert: Content selection is disabled!!