எங்கிருந்து, யாரால் அச்சுறுத்தப்படுத்தப்படுகிறார்கள்? கண்காணிக்கப்படுகிறார்கள்? முடக்கப்படுகிறார்கள்? ஏன், முளையிலேயே கிள்ளியும் எறியப்படுகிறார்கள்? இலட்சாதி லட்சம் கோடி பெறுமதியான போதைப் பொருட்கள் பிடிபடுவதும் அழிக்கப்படுவதும் இலங்கையில் தொடர்ந்த வண்ணம் இருக்கிறதே!
அடுத்தடுத்து, வேகமாக, ரிதம் தப்பாது நாட்கள் உருண்டோடின, பைரவிக்கு. தம் வீட்டுக்கு வந்த பின், இலங்கை வாழ்வு, இன்னுமே அழகானதாக மாறிவிட்டிருந்தது. முதல் வருடம், அடிக்கடி மனநிலை குழம்பியதாலோ என்னவோ, அப்பப்போ, தன் கனத்தை உணர்த்தியிருந்தது, மருத்துவப் படிப்பு. இரண்டாம் வருடமோ, கூடப் படிப்பவர்கள் கடினம் என்றால், இவள், சிறு புன்னகையோடு கடந்தாள்; அந்தளவுக்கு, அவளுள்ளம் இலகுவாக மாறிவிட்டிருந்தது.
தினமும் விடியலே அவ்வளவு இரசிப்பானதாகவிருந்தது. அலாரம் தன் கடமையைச் செய்ய விரும்பினாலும் சுற்றத்து மரங்களில் வாசம் செய்யும் பறவைகள், குருவிகள் விடுவதில்லை. ஒரு படி மேலே சென்று, ஆரூரன் வீட்டுச் சேவல்கள், போட்டி போட்டுக்கொண்டு அவளை எழுப்பி விட்டன.
அடுத்த அரை மணித்தியாலத்தில், கைக்குள் பொத்திய கோப்பிக் கோப்பையோடு தோட்டத்தைச் சுற்றி வருவாள். மெல்லிய உறிஞ்சலில், அளவான சூட்டில், தொண்டைக் குழிக்கால் இறங்கும் கமகம கோப்பி, அச்சுற்றத்தை மேலும் வடிவாக்கி விடும்.
நீ என்ன சொல்வது என்ற நிமிர்வும் குறும்புமாக, மெதுவாக, காளான் கொட்டில்களுக்குள் கூட தலை காட்டுவாள். வேலை செய்பவர்கள் எல்லோருமே அண்ணாவாகி இருந்தார்கள். பிறகென்ன? எப்போதாவது ஆரூரன் வேலையாக நிற்பான். ‘உனக்கு இங்க என்ன வேலை?’ சரேலென்று திரும்பும் பார்வையில் கேள்வி இருக்கும்.
“அப்பப்பா… வழிமாறி வந்திட்டன் அப்பா!” வாயைச் சுழித்துவிட்டு, வெளியேறி விடுவாள். அதே வேகத்தில், ஆரூரன் அன்னையிடம் சென்று நிற்பாள்.
“புதினமான தொழில் செய்யிறார் உங்கட மகன். பாத்துக்கொண்டே இருங்க ஆன்ட்டி, அவருக்குப் போட்டியா நான் காளான் பண்ணை வைக்கப் போறன். அது நடக்காமல் இருக்க வேணும் எண்டா, எனக்கும் இங்க ஏதாவது பார்ட் டைம் வேலை போட்டுத் தாங்கோ!” வெருட்டுவாள்.
“டொக்டருக்கு இங்க என்ன வேலை தாறது?” அவள் சொல்வதைப் பகிடியாக எடுத்து விடுவார், கௌசல்யா.
“பகிடிக்கு இல்ல ஆன்ட்டி, உண்மையாத் தான் கேக்கிறன்.” தீவிரமாகச் சொல்பவளை யோசனையாகப் பார்த்துவிட்டு, “தம்பிட்டக் கேட்டுப் பாக்கிறன். இப்பப் படிப்பப் பாரும். ரெண்டாம் வருசம் நிறையப் படிக்க இருக்கும் எண்டு எல்லா சொல்லுறவே? விளையாடாதேயும் பிள்ளை!” என்பார்.
ஒரு வருடத்திற்கு முதல் தான் அறிமுகமான குடும்பம் என்றால், பைரவியாலேயே நம்ப முடியவில்லை. அந்தளவுக்கு, அவர்களுள் ஒருத்தியாகிருந்தாள். மூன்று வேளையும் சாப்பாடு அவர்கள் வீட்டில் தான். மாலைத் தேநீர், இடையிடை சிற்றுண்டிகளும் அடங்கிவிடும். ஆரம்பத்தில், கொண்டுவந்து அறையில் வைத்து விடுவார், கௌசல்யா.
வேண்டாம் என்று தடுத்து விட்டு, அவர்கள் வீடு சென்று, மதியோடு அமர்ந்து கலகலவென்று உண்பதை வழக்கமாக்கியும் இருந்தாள், பைரவி.
இப்படி படிப்பு, பல்கலைக்கழகம், கிழமையில் ஒரு தடவை அத்தை வீடு என்பது தவிர்ந்த நேரம், ஆரூரன் வீட்டில் தான்.
‘சிடுமூஞ்சி இந்தப் பக்கம் தலைகாட்டுறது குறைவு. நமக்கு வாச்சிப் போச்சி!’ மனதுள் நினைப்பதை வெளியில் சொல்வாளா என்ன?
ஆரூரன் அன்னையோ, மகனோடு மல்லுக்கட்டிய படி. மூத்த மகளின் திருமணம் முடிந்திட்டே, இனி என்ன?
“முப்பது ஆகிற்றுத் தம்பி!” சல்லடை போட்டுப் பெண் தேடினார். ஆள், பிடி கொடுத்தால் தானே!
“எல்லாப் பக்கமும் தொழில் தொடங்கிக் கிடக்கு அம்மா. ஒண்டு ரெண்டு வருசம் போகட்டும். முப்பதெல்லாம் ஆம்பளைக்கு வயசா என்ன?” என்று, அவன் சொல்வதை, அவர் காதுகளில் வாங்கவே இல்லை.
“அதுசரி, வருசா வருசம் வயசு குறைகிற நினைப்போ! அதோட, நீங்க இப்படிக் கலைஞ்ச தலையும் ஊத்த உடுப்புமா வேலை வேலை எண்டு
திரிஞ்சா, பொம்பள பாத்த மாதிரித் தான். இத்தனை வேலையாட்கள் இருக்கினம் எல்லா தம்பி? கொஞ்ச நேரத்தை உங்களுக்காக ஒதுக்குங்கவன்.’’ கவலையோடு சொல்வார்,கௌசல்யா. மகனுக்கு, ஒரு நல்ல பொம்பளையைத் தேடிப் பிடித்திட வேண்டுமே என்றது, பெரும் கவலையாக அவருள் உருவெடுத்து விட்டது. காரணமும் இல்லாமல் இல்லை.
அடுத்தடுத்து இரு இடங்களில் குடும்பங்கள், சாதகப் பொருத்தம், பெண்ணின் படிப்பு, தோற்றம் என்று, எல்லாமே இவர்களுக்குப் பிடித்திருந்தது. அவர்களுக்கும் ஆரூரனைப் பிடித்திருந்தது. மறுக்க என்ன காரணம் இருக்காம் என்ற பெருமிதம் கௌசல்யாவுக்கு; வெளியில் காட்ட மாட்டார், அவ்வளவுதான்.
அப்படியிருக்கையில், முதலில், காளான் பண்ணை, ஸ்டோல் என்று எல்லாம் இருந்தாலும், வேறு வேலைக்குப் போக மாட்டாரா என்ற கேள்வி பெண் வீட்டிலிருந்து வந்தது. பிறகு, இப்போ தான் வெளிநாடு போக வசதி வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறதே என்ற கதை வந்தது. இறுதியில், ஐந்து வருடங்களுக்குச் சரி, வெளிநாடு சென்று வரலாம் என்று, பெண் நினைப்பதாகச் சொல்லியும் விட்டார்கள். வெளிநாட்டு வாய்ப்பு வழங்கும் நன்மைகளைப் பற்றி, இவனுக்கு வகுப்பே எடுக்கத் தொடங்கி விட்டார்கள்.
இவனோ, “பிறகென்ன? நல்ல சந்தோசம். அப்பிடி ஒருத்தரப் பாத்துக் கட்டிவையுங்கவன்.” சிறு முறுவலோடு, உறுதியான தொனியில் சொல்லி விட்டான்.
அடுத்ததும் அப்படியே, அதுவும் துரத்துச் சொந்தம் வேற. அவர்களும் இலங்கையில் இருப்பதையோ, இந்த வேலையையோ விரும்பவில்லை. இந்தா அந்தா என்று சென்று, முற்று நிலைக்கு வந்த கல்யாணம் கலைந்து போயிற்று.
சும்மாவே, வேலை வேலை என்று இருப்பவன், இப்போது வெறியாகத் திரிந்தான்.
“கட்டுவன் தானேம்மா? யோசியாதீங்க! எனக்கு எண்ட வாழ்க்கை நிச்சயம் இருக்கும்.” என்ற கதை வேறு!
தாய்க்கு இது சமாதானமா?
இப்படியே, ஒன்பது பத்து மாதங்கள் உருண்டிருந்தன.
அன்று ஒரு சனிக்கிழமை; மதிய உணவு வேளை முடிந்திருந்தது. பார்த்து பார்த்துச் சமைத்து என்ன பிரயோசனம் என்ற தாயின் புறுபுறுப்புக்கு, “ம்மா!” என்றதிலேயே, ஆட்சேபத்தைத் தெரிவித்தார்கள், நிலாவும் மதியும்.
“மயூரன், பைரவி, நாங்க எல்லாம் வடிவாச் சாப்பிடேல்லையா?”
“பச்! பின்ன என்ன பிள்ளைகள்? நிக்க இருக்க நேரமில்லாமல் ஓடுப்பட்டுத் திரியிற பிள்ளை எல்லா? கிழமையில ஒரு நாளுக்குச் சரி ஆமான சாப்பாடு சாப்பிடாட்டி?” மிகுந்த குறையோடு சமையலறையை ஒதுக்கினார், கௌசல்யா.