இன்று, மதியின் பிறந்தநாள் வேறு. கொக்குவிலில் ஆட்டிறைச்சி வாங்கிச் சமைத்திருந்தார்கள். ஆரூரன் வருவான் வருவான் என்று காத்திருந்துவிட்டு, ஒரு மணிக்குப் பிறகுதான் சாப்பிடத் தொடங்கினார்கள். மயூரனுக்கு டியூட்டி, இங்கிருந்தே சென்று விட்டான்.
“சாப்பாட்டக் குடுத்து விடுவம் எண்டாலும் அண்ணா வெளிய வேலை எண்டு போய்ட்டாராம். வந்து சாப்பிடட்டும் விடுங்க.” என்ற நிலா, மறுநாள் ஸ்டோல் டெலிவரிக்காக வேலை செய்து கொண்டிருந்த பெண்களோடு சேர்ந்து கொண்டாள்.
“நான் ஏதாவது செய்து தரவோ பைரவி?” சாப்பிட்ட கையோடு, சமையலறையில் பரபரவென்று வேலையாக நின்றவளிடம் வந்தாள், மதி.
“பெர்த் டே பேபிக்கு இண்டைக்குக் குசினிக்க வேலையில்லை. ஓடும், நானே செய்வன்.” அவளை வெளியே அனுப்பி விட்டாள்.
“கொஞ்ச நேரம் இருந்திட்டு செய்யலாமேம்மா. உதவி செய்யிறம் எண்டாலும் கேட்கிறீங்க இல்ல.” என்றார், கௌசல்யா.
“உதவி தேவை எண்டாக் கேப்பன் ஆன்ட்டி. இப்பவே தொடங்கினாத் தான் சரியா இருக்கும். நான் செய்யிற மஸ்ரூம் ரோல்ஸ சாப்பிட்டுட்டு, ஒராள் என்னட்ட வந்து, உங்கட ஸ்டோல்ல விக்கக் கெஞ்சிக் கேட்கோணும். நான் முதல் மாட்டன் எண்டு சொல்லோணும்.” என்று கண்ணடித்தபடி, வேலைகளில் ஈடுபட்டாள், அவள்.
சிரித்துக்கொண்டே சென்று, டெலிவரி வேலைகளைப் பார்த்தார், கௌசல்யா.
மாலை ஐந்து மணி வாக்கில் மதியின் நண்பர்கள், நண்பிகள் பத்துப் பன்னிரண்டு பேர் வருவார்களாம்; மிகுதி எல்லாம் ஆயத்தம் செய்தாயிற்று, ரோல்ஸ் செய்தால் சரி.
சூப்பர் மார்க்கட்டில் வாங்கி வந்திருந்த ரோல்ஸ் பேப்பரை எடுத்து வெளியில் வைத்தாள், பைரவி. அதே கையோடு, தாய்க்கு அழைத்துக் கதைத்தபடியே ரோல்ஸ் கறியைத் தயாரிக்கத் தொடங்கினாள்.
கௌசல்யா, வெங்காயம் உரித்துக் கழுவி வைத்திருந்தார். வேகமாக, சமையல் கலை நிபுணர் லெவலில், சிறிது சிறிதாக அரிந்து எடுத்து வைத்தாள். அதோடு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாமே, அவள் பிடியிலிருந்த, கூரான கத்தி வாயில் அகப்பட்டு வந்து ஒதுங்கின.
உரித்திருந்த பூண்டு, இஞ்சி இரண்டும் காரட் துருவுவதில் துருவலானது.
“மூண்டு கிழமைக்கு அம்மா. கனடாவில இருந்து ஃபிரெண்ட்ஸ் நாலு பேரும் ஹொலண்ட் வருவினம். நான் இங்க இருந்து போய்ச் சேர்ந்து கொள்ளுவன்.” தாய்க்குச் சொன்னபடி, தாச்சியை அடுப்பில் வைத்தாள். அளவாக எண்ணெயிட்டுச் சூடாக விட்டாள்.
மகள், முதல் முறையாக, இப்படித் தனியாக நண்பர்களோடு செல்ல இருக்கிறாள். இனியும் சிறுமியல்லவே! மறிக்கவா முடியும். என்றாலும், “பாத்துக் கவனம் பிள்ள. பிறகு, இங்க வந்து, ரெண்டு கிழமை தான் நிப்பீங்க என்ன?” கேட்டார், பாமினி.
“ஓம் அம்மா, கீர்த்தி மச்சாள்ட கலியாணம் முடியவிட்டு இங்க வரச் சரியா இருக்கும்.”
கடுகு படபடவென்று வெடித்ததும், சின்னச் சீரகம், பெரிய சீரகம் இட்டு அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், நறுக்கிய கறிவேப்பிலை, உப்பு இட்டு, வதங்கி வர இஞ்சி உள்ளி சேர்த்து பொன்னிறத்துக்கு வதக்கினாள்.
அதேநேரம், கழுவி இருந்த காளான்களைத் துண்டுகளாக்கி வைத்துவிட்டு, உருளைக்கிழங்கையும் சிறு துண்டுகளாக்கி தண்ணீருக்குள் போட்டு வைத்தாள்.
வதங்கிய வெங்காயத்தில், முதலில் உருளைக்கிழங்கை இட்டு, மிளகாய்த்தூள் சேர்த்து, அரைப் பதத்துக்கு வேகும் வரை வதங்க விட்டவள், வேலைக்குப் புறப்பட்டு வந்த தந்தையோடும் கலகலத்தாள்.
பின், காளான் சேர்த்து, வெந்து வதங்கி வர, வாசனைத்தூள், மிளகுத்தூள் சேர்த்து இறக்கி வைத்தவள், “ம்மா பாருங்க.” தாய்க்குக் காட்டினாள்.
“ருசி பாக்கேல்லையா?” தாய் கேட்க, சின்னக் கரண்டியால் கிள்ளியெடுத்து, நாலு தடவைகள் ஊதிவிட்டு வாய்க்குள் இட்டவள் விழிகள் விரிந்தன, நெற்றி மேலேறியது.
“ம்மா! உண்மையா சும்மா சொல்லக் கூடாது. நீங்க செய்யிறத விட ருசியா இருக்குது தெரியுமா? வேற லெவல்!” தாயைச் சீண்டினாள். அதோடு நிறுத்த குறும்பி மனம் இடம் கொடுக்கவில்லையே!
“இங்க, இவே செய்து விக்கிற காளான் கட்லட் எல்லாம் எந்த மூலைக்கு அம்மா!” என்றபடி திரும்பியவள், வாயிலில், சாய்ந்து நின்றவனைப் பார்த்துப் புரையேற, உச்சியில் படபடவென்று தட்டினாள்.
அவளையே தான் பார்த்து நின்றான், ஆரூரன். நெற்றி ஏறியிறங்கியது. அதே கையோடு நகர்ந்தவன், அவளை நோக்கி முன்னேறினான். கலவரமாகிப் போனாள், பைரவி.
“இல்ல, அது வந்து…பகிடிக்கு.” என்றவளைக் கடந்து, வலு நிதானமாக அவள் கைப்பேசியை எடுத்திருந்தான், அவன்.
“ஹாய் ஆன்ட்டி” என்று, பாமினியோடு குசலம் விசாரித்துக் கதைத்தவனை நன்றாகவே முறைத்தாள், பைரவி. அப்போது தான், அவன் விழிகளில் உள்ள சீண்டலை உணர்ந்தாள்.
அது போதாதா?
“கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல் ஃபோன எடுக்கிறார்.” அவனுக்குக் கேட்கவே முணுமுணுத்தபடி நகர்ந்தவள், “ஆன்ட்டி, உங்கட அருமந்த புத்திரன் வந்திட்டார்.” என்றதும், மறுநிமிடம் பரபரவென்று வந்தார், கௌசல்யா.
“கொஞ்சம் விடன ஆச்சி, கறிகளை ஒருக்கா சூடு பண்ணிட்டு விடுறன்.” என்று, மகனுக்குச் சாப்பாட்டைத் தயார் செய்தார், அவர்.
“அந்த அந்த நேரத்துக்கு வந்து சாப்பிடத் தெரியாதவேக்கு, ஆறின சாப்பாட்டைக் குடுக்கோணும் ஆன்ட்டி. அப்பத்தான் அடுத்த வேளைக்குச் சரியா வந்து நிப்பினம். உலகத்திலேயே இவர் ஒராள் தான் உழைப்பாளி போல என்னடா பில்டப்பு!” தாய்க்கு ‘பை’ சொல்லிவிட்டு, அவனோடு வம்பிழுத்தவளை, ஒரு பார்வை பார்த்தபடி அங்கேயே சாப்பிட அமர்ந்து விட்டான், ஆரூரன்.
“நல்ல காலம் ரோல்ஸ் கறி செய்திட்டன். இல்லையோ, சில மனுசர் செய்முறையை கொப்பி அடிச்சு வித்திருங்கள்.” கடைக்கண்ணால் அவனைப் பார்த்தால், நேராகவே பார்த்துக் கொண்டு இருந்தான், அவன். வாயை மட்டும் திறக்கவில்லை.
“அந்தப் பயம் இருக்கோணும். இப்ப சூப் இல்ல, கேற்றிலில சுடுதண்ணி தான் இருக்கு.” இப்படி, வேண்டும் என்றே மகனோடு மல்லுக்கு நிற்பவளை என்ன செய்வது? அவன் சீறிவிட்டால் என்று, கௌசல்யாவுக்குத் தான் பதைபதைப்பாக இருந்தது.
அது என்னவோ, அவன் கதைக்காது பார்வையால் வெருட்டல் போட்டுச் செல்ல செல்ல, இவள் சீண்டுவது தான், இந்தச் சில மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறது.
“எனக்கு ஒரு பார்ட் டைம் வேலை தரச் சொல்லுங்கோ ஆன்ட்டி.” ஆட்டிறைச்சியைத் தனியாக எடுத்து வைத்துச் சுவைத்து உண்டவன் பார்வை மீண்டும் அவளில்.
“ம்மா! தயவு செய்து கேட்டிராதீங்க! என்ர தொழில் ஏதோ கொஞ்சம் நல்லாப் போகுது. கனக்கக் கதைக்கிற மனிசரத் தனியாத் தொடங்கி, ரோல்ஸ் செய்து விக்கச் சொல்லுங்கவன்.” என்றவன் குரலில் தீர்மானம்; மாறாக, விழிகளில் மின்னலென சீண்டல் வந்து போனது.
முகத்துக்கு நேரே அவன் மறுத்ததில் சுருக்கென்று இருந்தது, பைரவிக்கு.
இதோடு, எத்தனை தடவைகள் கேட்டுவிட்டாள்.
“கறி ஆறட்டும், வாறன் ஆன்ட்டி.” விருட்டென்று, தன் வீடு நோக்கிச் சென்று விட்டாள்.
அரைமணியில் அவள் வந்தபோது அவன் சிலமன் இல்லை.
கடகடவென்று ரோல்ஸ் சுத்தி, மாவில் தோய்த்து, ரஸ்க் தூளில் பிரட்டி எடுத்து வைத்தவள், காலாகாலமாக, சமையல் செய்யும் பாவனையில் பொரித்தெடுக்கத் தொடங்கினாள்.
கௌசல்யாவுக்கு பெரும் ஆச்சர்யம்; வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த நவநாகரீக நங்கை; அதோடு, கடினமான படிப்பைப் படிப்பவள்; இருந்தாலும், தன் வேலைகள், வீட்டு வேலைகள், சமையல் என்று, எதிலும் பின் நிற்கவில்லை.
“நான் பொரிக்கவா குஞ்சு? இந்தத் தேத்தண்ணியைக் குடியுங்க!”
“இன்னும் கொஞ்சம் தான், நானே பொரிக்கிறன் ஆன்ட்டி. சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்க.” ரோல்ஸ் ஒன்றை எடுத்து அவர் கையில் கொடுத்தாள். அதேநேரம், ஆரூரனும் வர, அவசரம் அவசரமாக ரோல்ஸ் ரெண்டைத் தட்டில் வைத்து நீட்டி விட்டாள்; முன்னேற்பாடின்றி நடந்த செயலது.
“சாப்பிட்டுப் பாத்து எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க!” என்றதுமே, அவளை மீறியே வெளிவந்திருந்தது. அக்கணம், அவள் முகத்தில் இருந்த பாவனையே, அவன் பதில் எவ்வளவுக்குப் பெறுமதியானது என்று, தெள்ளென அவனுக்கு உணர்த்திற்று. பின்ன, சாப்பாட்டுக்கடை முதலாளி எல்லா?
“எப்பிடி இருக்கும் எண்டு நான் என்ன சொல்லுறது? அது உமக்கே தெரியுமே!” ஒரு சாதியாகச் சொன்னவன் இடது புருவம் உச்சம் சென்ற அதேவேளை, “வேணாம்.” என்றுவிட்டு நகர்ந்துமிருந்தான்.
சிரித்துவிட்டுச் செல்கிறானோ என்ற ஐயம் இவளுக்கு. இருந்தாலும் அந்த வேணாம் முகம் கன்ற வைத்திட்டு. அந்த நேரம், வெளியில் தனுசன் குரல் கேட்டது. இந்தச் சில மாதங்களில், ஆரூரன் வீட்டு வாயிலில் உள்ள ஸ்டோலை பொறுப்பாக பார்க்கும் அவன், பைரவியின் நல்ல நண்பனாகியும் இருந்தான். விறுவிறுவென்று சென்று அவனுக்கும் மதிக்கும் நீட்டினாள்.
“என்ர சொந்த ரெசிபி தனுசன். சாப்பிட்டுப் பாரும். இந்த ஸ்டோலுக்கு எதிர்ப்பக்கமா, நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ரோல்ஸ் கடை போடலாம்.” என்று அவள் சொல்ல, அவன், அவள் தலையில் தட்ட, அதை, ஒரு சாதியான பார்வை பார்த்துக்கொண்டு நகர்ந்தான், ஆரூரன்.