அத்தியாயம் 20 – 1

  நான் அழைத்த குரலில் ஓடி வந்திருந்தாள் தங்கை

   அழைப்பேன்  என்று காத்திருந்தாள் போல! அவ்வளவு வேகமாக வந்து நின்றாள். அழுது கொண்டிருந்திருக்கிறாள் என்பது அப்படியே தெரிய வேதனைதான் அதிகரித்தது

  என் உணர்வுகளுக்காக என்னைச் சுற்றியிருப்பவர்கள் எல்லோரையும் மிகவுமே வருத்துகிறேன் எனும் எண்ணம் மீண்டும் மீண்டும் உறுத்தி  நெஞ்சில் கனத்தைக் கூட்டியது

   என்ன ஏதென்று கேட்காது என்னையே பார்த்து நின்றவளுக்குப் பதில் சொல்ல முனைகையில் தான், வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது

  “நம்மட  வீட்டுக்கா?” வாசலை நோக்கி ஓடினாள் தங்கை

  “வெளிக்கிடு, போயிட்டு வருவம்!” என்றபடிதான் பின்னால் சென்றேன்

   சட்டென்று நின்று திரும்பியவள் கண்கள் குளமாகி விட்டன.

  “தாங்க்ஸ் அண்ணா; இனி மனம் மாற மாட்டீங்க தானே?”

   கேட்டவளின் துன்பம் தாக்கிய வேகமாக்கும், “இல்ல, நீ முதல் கண்களைத் துடை!” என்றிருந்தேன்.

   நான் சொன்ன அந்த வார்த்தைகள், என் காதுகளில் விழுந்து என்னால் உணரப்பட்ட அந்தக் கணத்தில் என் நெஞ்சு குலுங்கிப்போயிற்று. என்னதான் முடிவெடுத்துவிட்டாலும் அதைச் செயல்படுத்துவது இரண வேதனையே!

  உயிரென நேசித்தவளை முழுமையாகப் பிரிந்து இந்தச்  சில வருடங்களாக அனுபவித்து நின்ற வேதனை இமைப்பொழுதில் பன்மடங்கானதாக உணர்ந்தேன். அதையும் அனுபவித்தே ஆகவேண்டும் என்றிருக்கையில் என்ன செய்ய முடியும்?

  சத்தியமாக அக்கணம் என்னுள் ஒருவகை விரக்தியுணர்வே எழுந்தது. அதற்கு மாறாக முகம் மலர்ந்தாள்  குட்டி

  “அண்ணா எண்டா அண்ணா தான். தன்ர  அக்காக்கள், தங்கச்சி  எண்டா உயிராகப் பார்த்துக்கொள்ளுற அண்ணாக்கு இன்னொரு பொம்பளப் பிள்ளயஅதுவும் நமக்கு வேண்டப்பட்ட நம்மட குடும்பத்துப்பிள்ளய வருத்த முடியுமா என்ன?” 

  தனக்குள் சொல்வதுபோல் வார்த்தைகளை உதிர்த்தவள்கண்களைத் துடைத்துவிட்டு அழுகையோடு சிரித்தாள்

  “உதயா உங்களுக்கு எல்லாவுமாக இருப்பாள் அண்ணா! அதில துளியும் சந்தேகம் வேணாம்வாங்கோ!” 

  கரங்களைப்  பிடித்திழுத்தபடி விரைந்தவளின் இழுப்புக்கு இழுபட்டுப் போனேன், உணர்வுகள் மறைத்த, மரத்தசூர்யாவாக!

 “வாங்கோ, ஆட்டோ சத்தம் கேட்டிச்சே என்ன எண்டு பார்த்திட்டுப் போயிட்டு வருவம்.” என்றவளுக்குப் பதில் சொல்லாது நடந்த நான், முன்னால்  நடந்த குட்டி, “அண்ணா!”  என்றபடி நிற்க, அவள் பார்வையைத் தொடர்ந்து எட்டிப் பார்த்தேன்.

  ஆட்டோ எங்கள் வீட்டுக்கே தான் வந்திருந்தது. அதிலிருந்து இறங்கியவர்கள்

 என்னைத் திரும்பிப் பார்த்த குட்டி, பிடித்திருந்த என் கரத்தை விட்டுவிட்டு இறங்கி  ஓடிச் சென்றாள்.

  “இங்க பார் பிள்ளை, இத்தனைக்கும் பிறகும் நான் வந்து கேட்டோன்ன என்னை மதிச்சு  நம்மட வீட்டுக்கு வாறன் எண்டு சொல்லி இருக்கிறாள் உதயா. அது சின்ன விசயம் இல்ல. அந்தளவுக்கு அந்தப் பிள்ளய வேதனைப்படுத்தின ஆக்கள் நாம. அதனால, நீ உன்ர அண்ணாவைக் கூட்டிக்கொண்டு வந்து எங்களைக் கூட்டிக்கொண்டு போங்க! அதுதான் முறை!” என்று அம்மா  சொன்னதைத்  தங்கை அப்படியே ஒப்பித்திருந்தாள்.

  அங்கு போகத்தான்  என்னை அழைத்து வாக்குவாதத்தில் நின்றோம். சரி போயிட்டு வருவோம் என்று புறப்படுகையில் அவர்களே வந்துவிட்டார்கள்.

  முன்னே சென்றவிட்ட குட்டி நின்று திரும்பினாள். நான் அசையாது நிற்பதைப் பார்த்தவள், “அண்ணா நீங்களும் வாங்க.” போன வேகத்தில் திரும்பி வந்து என் கையைப் பிடித்திழுத்துக் கொண்டு கேட்டை நோக்கி விரைந்தாள்.

  “பச்! விடு குட்டி, வாறன்.” என்றதைக் காதுகளிலும் போட்டுக்கொள்ளவில்லை

   ஆட்டோவிலிருந்து இரண்டு பயணப்பைகளை இறக்கி வைத்துவிட்டுக்  காசு கொடுத்து அனுப்பிக் கொண்டிருந்தாள் உதயா. அவள் தங்கைகளும் அம்மாவும் அருகில் நின்று கொண்டிருந்தார்கள்.

  என்னைக் கண்டதும் கடுமையாக முறைத்தார் அம்மா.

  கவி, தீபியோ சூர்யா என்றொருவன் அங்கு நிற்பது போலவே காட்டிக் கொள்ளாது குட்டியைப் பார்த்துச் சம்பிரதாயமாகச் சிரித்துத்  தம் கோபத்தைக் காட்டினார்கள்.

  “வாங்கம்மா, உங்களக் கூப்பிட வர வெளிக்கிட நீங்களே வந்திட்டீங்க.”  என்ற குட்டி, “உதயா…” என்றபடி சென்று அவளை இறுகக் கட்டிக் கொண்டாள்.

  தங்கையின் கண்கள் மீண்டும் கண்ணீரைச் சொரியஉதயாவோ அமைதியாகத்தான் நிற்பதாகப்பட்டது

  அம்மாவின் முறைப்பில் அந்தப் பக்கம் பாராது வேறெங்கோ பார்த்தேன்.

 “கூட்டிக்கொண்டு போக வா எண்டு சொல்லி எவ்வளவு நேரமாயிற்று! பொழுதும் பட்டிட்டு; நீங்க எப்ப வந்து நாங்க வாறது என்றுதான்   நாங்களே வந்திட்டம்.” சிடுசிடுத்த அம்மா,

   “சரி சரி, இனி உள்ள போய்க் கதைக்கலாம் தானே? அவள விடு!” தங்கையிடம் சொல்லிவிட்டு

  ” பிறகென்ன? இந்தப் பைகளைச் சரி உள்ள கொண்டு வந்து வைக்கச் சொல்லு!” வெடுக்கென்று என்னில்  மோதிய பார்வையோடு சொன்னவர், “நீ வா குஞ்சு!” உதயாவை அழைத்துக்கொண்டு நடக்க முற்பட

  “கவி, நீ இதக் கொண்டு வா!” என்று, சிறு பயணப்பையை அவளிடம் கொடுத்த உதயா, பெரிய பயணப்பையை தான் இழுத்துக் கொண்டு நடந்தாள்.

 “வச்சிப்போட்டு வாம்மா, அவையள் கொண்டு வருவீனம்.” மீண்டும் என்னைப்  பார்வையால் சுட்ட படி சொன்னார் அம்மா.

  ” தா, நான் கொண்டு வாறேன்!” கேட்டபடி கையையும்  நீட்டிவிட்டேன். பதிலுக்கு ஒரு பார்வை பார்த்தாளே

  ஒன்று பத்து நூறல்லகோடிக்கணக்கில் எச்சரிக்கை! நான் இருக்கும் திசைக்கே வந்திடாதே என்றமாதிரி இருந்தது அந்தப் பார்வை!

  “என்ர பை தானே அம்மம்மா? நானே கொண்டு வருவன்.” என்று சொல்லவும் செய்தாள் .

  சட்டென்று கண்டிப்போன முகத்துடன் கவியிடம் திரும்பினேன்.

 “நீ விட்டுட்டு நட கவி, நான் கொண்டு வாறன்.” என்று அவளிடமிருந்து  வாங்க முனைந்தேன்.

 “அய்யோப்பா! உங்கட அக்கறைக்கு பெரிய நன்றி! எங்களுக்கு எங்கட வேலைகளப்  பார்க்கேலும்.” உதடுகளைச்  சுழித்துப் பழித்தாள் என்றுதான் சொல்ல வேணும். நான் அசையாது அப்படியே நின்றுவிட்டேன். அவர்கள் முன்னேறினார்கள்.

error: Alert: Content selection is disabled!!