அத்தியாயம் 20 – 2

அதும், உனக்கு இன்னும் கொஞ்ச மாசங்களில விசா முடிஞ்சிரும் தானே? இப்ப செய்தா அலுவல் பார்த்து நீ தொடர்ந்து அங்க இருக்கலாம் எண்டதால தான். நீ காயுட விசயத்தில, அந்தப் பிள்ளைகளோட சரியான பிசியா இருக்க எங்களுக்குச் சொல்லக் கிடைக்கேல்ல. அதையும் விட, தானே உனக்குச் சொல்ல வேணும் எண்டு பிரணவ் சொன்னவர்.” ஒரே மூச்சில் கொட்டினார், வேதா.

“ஓம் அக்கா, அவர் எவ்வளவு நம்பிக்கையும் சந்தோசமுமா எங்களோடு கதைச்சவர் தெரியுமா? அப்பிடி இருக்க, நீயும் உன்ர வீட்டாக்களும் ஆர் என்ர வாழ்க்க பற்றித் தீர்மானிக்க எண்டு கேட்டு இருக்க வேணாம் கா.” சுடர். 

“அதுதான். நீ நம்பிக்கை குடுக்கிறது போல நடக்காமலா உனக்கும் விருப்பம் எண்டு சொன்னவர்? அப்பிடி இருக்க, எத மனசில வச்சுக்கொண்டு அப்படிக் கதச்சனி?” கேட்ட கரன், “அந்தப் பிள்ளைகளுக்குத் தாயா இருக்கிறது எண்டு முடிவு எடுத்துப்  போட்டுக் கதைச்சியா?” சினத்தோடு சீறினார்.

அதுவரை, பிரணவ், தம் சிறு மனத்தாங்கலைச் சிறுபிள்ளை போல வீடு வரை கொண்டு சென்று விட்டானே என்று மட்டுமே சுணங்கியிருந்தாள். இப்போதோ? தகப்பன் வாய் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தைகளும் கயல் செவிவழி நுழைந்து இதயத்தில் கொடுத்த அதிர்வு அப்படியே முகத்தில் தாக்கியது. 

‘இதென்ன விசர்க் கத…’ நெஞ்சுக்குள்ளிருந்து கோபக்குரல் வரமுதல் குறுக்கிட்டிருந்தார், வேதா.

“இங்காருங்கப்பா, கதை பேச்சுக்குக் கூட இப்பிடி எல்லாம் சொல்ல வேணாம் சரியோ? சித்தியா இருக்கிறதிண்ட துன்பம் என்ன எண்டு இத்தின வருசமா அனுபவிக்கிற எனக்குத் தெரியும். எனக்கு இந்த வீட்டில எல்லாம் இருந்தும் மன அமைதி இல்ல. அந்த வேதனையில உழன்று கொண்டு இருக்கிற நான், என்ர மகளும் அத அனுபவிக்க ஒருக்காலும் விடமாட்டன்.” வேதாவின் குரல் உயர்ந்திருந்தது. அழுதபடி அவர் சொன்ன விதம் பெரும் பரிதாபமாக இருந்தது. 

“அம்மோய்! என்ன நீங்க?” இறுக கட்டிப்பிடித்துக் கொஞ்சினாள், சுடர். அப்போது அவள் கயலைப் பார்த்த பார்வையில் பெரும் குறையிருந்தது. 

“பச்…என்ன நீங்க வேதா!” கரன் கரம் மனைவியின் தோளில் ஆதரவாகத் தட்டிற்று.

“உன்னில உண்மையா அன்பு வைக்கிற மனுசர நீ தூக்கி வீசிற கயல்!” பலமாகவே குற்றச் சாட்டு வைத்தார், கரன்.

“அது உன்ர வாழ்க்கைக்குக் கொஞ்சமும் நல்லதில்ல. நீ இவாக்கு செய்தத, அன்பக் காட்டின மனுசிய ஒதுக்கினத பூபாலனிட பிள்ளைகள் உனக்குச் செய்ய எவ்வளவு நேரமாகும் எண்டு யோசிச்சியா? நடக்கக்கூடாத துன்பம் நடந்திட்டு. அன்பாப் பழகின மனுசருக்கு உதவுறது மனுசத்தன்மை. அதுக்காக அங்கயே அந்தப் பிள்ளைகளுக்குத் தாயா இருக்கப் போறன் எண்டு சொல்லி, கண்ணுக்கு முன்னால இருக்கிற நல்ல வாழ்க்கைய உதறுறது உன்ர தலையில நீயே மண்ணள்ளிப் போடுற வேலை!

பூபாலன்ட அக்கா, அதான் அங்க இருக்கிறாவே, அவா எடுத்து  ‘கயல் தான் பிள்ளைகளுக்குத் தாய்’ என்று சொன்னாவாம். அது ஆர் குடுத்த தைரியம்? கேட்ட நேரம் தொட்டு உன்ர அம்மம்மாவும் அம்மப்பாவும்  துடிச்சுக்கொண்டு கிடக்கினம். பாத்துப் பாத்துப் பக்குவமா வளர்த்த மனுசருக்கு வயசுபோன காலத்தில நீ செய்யிற வேலை இதா சொல்லு?” 

கரன் இப்படிக் கோபத்தோடு கத்தி முதல் முதல் பார்க்கும் கயல் நாக்கு அசையவேயில்லை. இல்லாத ஒன்றைப் பற்றி அதுதான் உண்மை என்றளவில் அவர்கள் கதைப்பது அதிர்வில் உறையவே வைத்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்த கண்ணீரால் விழிகள் நிறைந்துவிட்டன. 

“அண்டைக்கு வீட்ட வாம்மா எண்டதுக்கு உன்ர அம்மம்மாவக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு அழுதியே, நினைவிருக்கா உனக்கு? எனக்கு அந்தக் காட்சி சாகிற வரைக்கும் மறக்காது! மறக்காது கயல் மறக்காது! அப்பப் பிடிச்சு இழுத்திட்டு வந்திருக்க நாலு நாளுக்குப் பிறகு சமாதானமாகி இருந்திருப்ப. அதைச் செய்யாத என்ர முட்டாள்தனத்துக்கு…” தொடர்ந்து கதைக்க முடியாது தடுமாறினார். ஆனாலும் நெஞ்சு எரியுதே!

கரனின் முகம் விசுக்கென்று திரைக்கு வெகு கிட்ட வந்தது. கண்கள் சிவந்து கலங்கியிருக்க, கோபமும் ஆத்திரமும் வேதனையும் கலவையாக முகத்தில் தாண்டவமாட  முதல் முதல் தகப்பனைக் கண்டு மூச்சு விடவும் மறந்து உறைந்து போனாள், கயல்விழி.

“அண்டைக்கு நான் செய்த பெரும் பிழை அது. அப்பா எண்ட என்ர உரிமைய விட்டுகுடுத்த ஒண்டுக்காக, அந்த ஒரு பிழைக்காக இண்டு வர நிம்மதியில்லாமல் நான் தவிக்கிறது எனக்கு மட்டும் இல்ல, போய்ச் சேர்ந்த உன்ர அம்மாக்கும் தெரியும். இப்பத் திரும்பவும் இந்த விசயத்தில வாய் மூடிக்கொண்டு, ‘எனக்கு என்ர வாழ்க்கையப் பாக்கத் தெரியும்’ எண்டு நீ சொல்லுறதக் கேட்டுட்டு இருப்பன் எண்டு  கனவிலும் நினையாத கயல். நான் செத்தப்பிறகு வேணும் எண்டா அப்பிடி இரு! இப்ப, வேலையும் வேணாம் ஒண்ணும் வேணாம் இந்த விசர்க் கூத்த விட்டுட்டு, மரியாதையா அங்க இருந்து கெதியாக்  கிளம்பிற வழியைப் பார்! எங்க பூபாலன்? கூப்பிடு, இதெல்லாம் நல்ல வேலையோ எண்டு கேட்கிறன். அவேயே கலியாணம் பேசுவீனமாம். பிறகு அவேயே வேட்டும்  வைப்பினமாம்.” அவர் கத்த, இணைப்பைத் துண்டித்திருந்தாள், கயல்.

அதுவரை நெஞ்சை அழுத்திய வேதனை பெரும் விம்மலாக வெடித்துக் கிளம்ப வாயைப் பொத்திக்கொண்டு நிமிர்ந்தவள் பார்வை, வாயிலில் உறைந்து நின்றிருந்த பூபாலனில். 

 

error: Alert: Content selection is disabled!!