அத்தியாயம் 22 – 1

‘ஃபோனில அம்பிடுறான்(பிடிபடுகின்றான்) இல்ல, இலங்கை வரை எப்பிடி எப்படியோ கதை போயிருக்கு. அதைவிட, அவன் எப்பிடி விமலா அக்காட்ட அப்பிடி ஒரு வார்த்தை விடலாம்.’ மனம் ஆறவில்லை பூபாலனுக்கு. நண்பனில் அவ்வளவு கோபம்.

பிரணவ்வை நேரில் சந்திக்க முடிவெடுத்தான். மனதுள் கிடந்து அரித்த கோபத்தை உடனே கொட்டிட வேண்டும்  போலிருந்தது. அன்று இரவே, சொல்லாமல் கொள்ளாமல் வந்து கதவடியில் நின்றவனை, “வெளியே போ!” என்று சொல்வது எப்படி? 

சம்பிரதாய முறுவலோடு உள்ளே விட்டிருந்தார், பிரணவ் தந்தை. பொதுவாக இரு வார்த்தைகள் கதைத்துவிட்டு, “இருங்கோவன், தம்பிய வரச் சொல்லுறன்.” நகர்ந்தவர், “பிரணவ், ஆர் வந்திருகிறது எண்டு வந்து பார்!” மாடியைப் பார்த்துச் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். எப்போதும் எல்லோருமாக வந்து வரவேற்று உபசரிப்பார்கள். இன்றோ, யாருமே எட்டிப் பார்க்கவில்லை. 

“ஆர் அப்பா?” வந்த பிரணவ் பாவனை இவனை எதிர்பார்க்கவில்லை என்றது. 

அது புரிந்தும் உணராத மாதிரி அமர்ந்திருந்தான், பூபாலன். அதோடு, மனதுள் இருக்கும் கோபத்தை அப்படியே கொட்டிக் கவிழ்க்கவும் முடியவில்லை. ‘இப்ப முக்கியம் கயலுக்கும் இவனுக்குமான பிரச்சின தீர வேணும்.’ மனதுள் சொல்லிக்கொண்டவன், நிதானமாகவே, “நான் தான் அண்டைக்கு அம்மா அப்பிடிக் கதைச்ச கோவத்துல ஏதோ சொன்னா நீ அப்பிடியே வந்திருவியோ?” உரிமையாகக் கோபித்துக்கொண்டான். 

ஒரு கணம் ஆழ்ந்து பார்த்துவிட்டு அவனெதிரில் அமர்ந்து கொண்ட பிரணவ் பார்வை நண்பனை ஏறிடவில்லை.

“பிரணவ்” எழுந்து அவனருகில் அமர்ந்துகொண்டான், பூபாலன். நட்போடு தோளில் கை வைத்தான். அப்போதும் அவன் முகம் பார்க்கவில்லை, பிரணவ். அவன் மனதுள் எரிமலை கொதித்துக் கொண்டிருந்தது. அதை நண்பனில் கொட்டுவதில் எந்தவிதத்திலும் நியாயம் உள்ளதாகவும் தெரியவில்லை. ஏன் யாரிலுமே கொட்டுவதில் நியாயமும் இல்லை, இலாபமும் இல்லை. தன்னில் தானே கொட்டி வெந்து போக வேண்டும் போலிருந்தது. 

“நம்மட இத்தின வருசப் பழக்கம் இந்த விசயத்தால முறியிறதில எனக்கு உண்மையா விருப்பம் இல்ல பூபாலன். இப்ப இது பத்திக் கதைக்கிறது கடைசித் தடவையா இருக்கட்டும்.” அவன் முகத்தைப் பார்த்தவன் பாவனையிலிருந்து முடிவெடுத்துக் கதைக்கிறான் என்று மட்டும் தெளிவாகிற்று.

“எனக்கும் அண்டைக்கு நிறையவே உன்னட்டச் சொல்ல வாய் உண்ணினது. உன்ர நிலை உணர்ந்துதான் அமைதியா வந்தனான். அண்டைக்கு நீ கதைச்சதுக்கும் எனக்கும் கயல்விழிக்கும் இடையில இனி எதுவுமே வேணாம் எண்டு நான் முடிவெடுத்ததுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்ல.” வறட்சியாக  இருந்தது அவன் குரல். முகம் இறுகிப் போயிருந்தது.

“ஆரம்பத்திலயே கயல்விழி கலியாணத்தில விருப்பம் இல்ல எண்ட போதும் பொறுமையா இருந்தனி. இப்ப என்ன திடீரெண்டு இப்பிடி அவசரப்பட்டு முட்டாள் முடிவு எல்லாம் எடுக்கிற பிரணவ்?” இழுத்துப்பிடித்த அமைதி பூபாலன் குரலில்.

“கயல் அண்டைக்கு ஏதோ ஒரு கோவத்தில கதைச்சியிருப்பா. அதும் என்னில உள்ள கோவத்தில. அதோட அவாவிட்ட  சொல்லாமல் ரெஜிஸ்ட்ரேசன் எண்டு கதை வர எல்லாம் சேர்ந்த கோவத்தில கதைச்சு இருப்பா. இன்னொருக்கா ரெண்டு பேரும் கதையுங்க பிரணவ்.  அதைவிட்டுட்டு அங்க ஊருக்கு எடுத்து இடையில என்ர தலையையும் உருட்டி அதெல்லாம் நல்லவா இருக்கு?” இப்போது அவன் குரலில் கடினம்.

“அதென்ன வார்த்த விமலா அக்காட்ட சொல்லிட்டு வந்தனி? உன்ர வாயால அப்படி ஒரு வார்த்த எப்பிடி நீ சொல்லலாம் சொல்லு? கயல்விழிக்கு அது சரியான அதிர்ச்சி பிரணவ்.” 

கைகள் இரண்டையும் சேர்த்து இறுக்கிப் பொத்தினான், பிரணவ். முகத்தையும் சடக்கென்று அப்பால் திருப்பினான்.

‘நான் ஒண்ணும் ஆசையா அதைச் சொல்லேல்ல தெரியுமா?’ பெரும் குரலில் சொல்ல வேண்டும் போலிருந்தது. ‘நான் சொன்னதில ஒரு பிழையும் இல்ல, அதான் நடக்கப் போகுது’ மனதுள் சிரித்தான், விரக்தியோடு.

“நான் அவாவ உண்மையா விரும்பினன். அவாக்கும் முதல் இல்லை எண்டாலும்…” என்று விட்டு வார்த்தைகளை விழுங்கிவிட்டான்.

“கயல்விழி, நான் அவவில வச்ச அன்புக்கு ஒரு இடத்தில சரி மதிப்புக் குடுக்கேல்ல பூபாலன். அத என்ர மனம் தெளிவா உணர்ந்த பிறகு அந்த உறவ அடுத்த கட்டத்துக்கு நகர்த்திறது நல்லதாப் படேல்ல!” வெளிப்படையாகச் சொன்னவன், ‘உன்ர பிள்ளைகள் முன்னால் என்ர அன்பு தோத்துப் போயிற்று!’ மனதுள் முணுமுணுத்தான். 

“நீ…நீ என்னதான் சொன்னாலும் என்னை உங்கட பிரச்சினைக்க இழுத்துக் கதைச்சது சரியான பிழை பிரணவ். கயல் வீட்டுக்காரர் ஏதோ அவா என்ர பிள்ளைகளுக்கு …” அவனால் சொல்லி முடிக்க முடியவில்லை.

 “அப்படியெல்லாம் யோசிக்கக் கூட என்னால முடியேல்ல. நீ என்ன எண்டா அப்பிடி ஒரு கதையைத் துடக்கி விட்டிருக்கிற!” கோபத்தை மறைக்காது காட்டினான்.

பிரணவ், கொஞ்ச நேரம் வாயைத் திறக்கவில்லை. அடுத்தடுத்து பெருமூச்சுக்களை  விட்டவன், தீர்க்கமாக நண்பனைப் பார்த்தான்.

“கயலுக்கு சும்மாவே உன்ர பிள்ளைகளில சரியா அன்பு. இப்ப? காயுவும் இல்ல. அவாக்கு… பிள்ளைகளை விட்டுட்டு வேற தனியா யோசிக்க ஏலுமா வரும் எண்டு நான் நினைகேல்ல பூபாலன். நீ என்னதான் சொன்னாலும் அதான் வெளில கிடக்கிற உண்மை. பிள்ளைகள ஒரு கணம் கூட தவிக்க விட அவா தயாரில்ல!”

“அடேய் காயுதான் இல்ல, அப்பா நான் இருக்கிறன் என்ர பிள்ளைகளுக்கு.”

“ஐயோ நான் சொல்லுறது உனக்கு விளங்கேல்ல. நீ இருந்தாலும் ஒரு அம்மா பாக்கிறது போல வராது தானே? அதும் கைக்குழந்தை வேற. கயல் அவாக்கும் அறியாமல் அந்தப் பிள்ளைகளுக்கு அந்த இடத்தைக் குடுத்திட்டா!”

“உனக்கு என்ன விசரா? திரும்பவும் அந்த மாதிரியே கதைக்கிற!” விசுக்கென்று  எழுந்தான், பூபாலன்.

அவன் முகத்தின் இறுக்கமும் விழிகளின் சிவப்பும் ஒரு கணம் பிரணவ்வைத் திகைக்க வைத்திட்டு. பட்டென்று தானும் எழுந்து கொண்டான். ‘போட்டு மொத்தி விட்டுருவான் போல!’ அவனையும் அறியாது அந்த எண்ணம் வந்து போயிற்று. அப்படித்தான் பூபாலன் நின்ற தோரணையிருந்தது. 

“சரி விடு, இது நீ சம்பந்தப்பட்ட விசயம்; நான் என்ன சொல்ல இருக்கு?”

“பிரணவ், நீ திரும்பவும் பிழையாவே யோசிக்கிற!” குரலில் கோபம் தெறிக்க, நண்பனின் முகத்தின் முன்னால் ஆட்காட்டி விரல் ஆடச் சொன்னவன், நிதானித்தான்.

“அவேட வீட்டு ஆக்கள் உங்கட அம்மா எடுத்துக் கதைச்சதுகளச்  சொல்லி, பிள்ள வளத்தது போதும் உடனே கிளம்பி வா எண்டு கத்தின படி. நானும் கத்தினனா அப்ப கயல் என்ன சொன்னா தெரியுமா? அடேய், என்ர மூஞ்சிக்கு நேரயே ‘ரெண்டாம் தாரமா அதும் ரெண்டு பிள்ளைக்கு அப்பாவா இருக்கிற ஒரு ஆளக் கலியாணம் கட்டுற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லவே இல்ல’ எண்டு சொன்னவா. இங்க பார், தயவு செய்து அவவோட கதை. ஒரே ஒருக்கா. வா இப்பவே கத.” மன்றாட்டமாகச் சொல்லி அவனை இழுத்துக்கொண்டு நகர முயன்றான்.

error: Alert: Content selection is disabled!!