இன்னும் காலைப்பொழுது முழுமையாகப் புலரவில்லை. இருந்தும், கழுத்தில் கத்திவைத்து வீட்டை விட்டு யாரோ கலைத்து விட்ட கதியில் வெளிக்கிட்டு வந்துவிட்டேன்.
அந்த நேரத்திலும், உறக்கத்தில் ஒட்டிக்கிடந்த இமைகளை முழுமையாகப் பிரிக்காதே எழுந்து வந்து சுடச்சுட தேநீரைத் தயாரித்துத் தந்த தங்கையின் அன்பில் நெஞ்சம் நெகிழ்ந்தது.
அப்பவும், “இந்த விடிய வெள்ளனவே போகப் போறீங்களாண்ணா?” என்று அவள் கேட்ட போது, அவள் முகம் பார்க்க முடியவில்லை. ஆமாம் என்று சொல்லவும் இயலவில்லை.
அவளும் எதிர்பார்க்கவில்லை போலும். “நேற்றிரவு நான் சொன்னதைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கண்ணா!” என்று மட்டும் சொல்லிவிட்டு, “நான் இன்னும் கொஞ்சநேரம் தூங்கப் போறன்.” என்று சென்றுவிட்டாள்.
இன்னும் எத்தனை நாட்களுக்கு? அவளும் வெளிநாடு போய்விட்டால் அந்த வீட்டில் என் முகம் பார்த்துச் சிறு சிரிப்பை உதிர்க்க யாருமில்லையே!
‘அட! இந்த நினைப்பு எல்லாம் இப்பத் தேவையா? யாராவது முகம் பார்த்துக் கதைக்கிற மாதிரி நான் நடக்கிறனா என்ன?’ என்ற கேள்வி, நியாயம் கதைக்கும் அடிமனதில் சிறு முணுமுணுப்பாகக் கேட்டுத் தொலைத்து.
பச்!
மோட்டார் சைக்கிள் தன்பாட்டில் போய்க்கொண்டிருக்க என் நினைவுகளோ தம் வேலையைத் தொடங்கியிருந்தன.
உதயா வீடு வந்த அன்றைப் போலவே நேற்றிரவும் நட்ட நடுச்சாமத்தில் தான் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
சொந்த வீட்டிலேயே கள்வனைப் போல் நடந்து திரியும் அனுபவம் உங்களில் யாருக்கெல்லாம் இருக்கின்றது? எனக்குக் கொஞ்ச நாட்களாகவே அதே அனுபவம் தான்.
முன் வாயிலைத் திறப்பதற்காகச் சாவியைப் போடும் போது கூட அத்தனை மெதுவாகத்தான் போட்டேன். திறந்து பார்த்தால், “வாங்கண்ணா, சாப்பாடு எடுத்து வைக்கவா?” இருட்டில் கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் குட்டி.
“என்னம்மா நீ? நேற்றே என்ன சொன்னன்? ஏனிப்படி முழிச்சிருக்கிற?”
தாழ்ந்த குரலில் கடிந்து கொண்டாலும், காந்திய வயிற்றுக்கு அவள் தந்த புட்டும் கருவாட்டுக் குழம்பும் தேவாமிர்தமாகவே இருந்தது.
“நீ சாப்பிட்டியா?”
“ம்ம்… உதயா ஒரே சண்டை; சாப்பிடேல்லையோ தனக்கும் வேணாம் எண்டு சொல்ல, அம்மாவும் கத்திக்கொண்டிருந்தாவா… சாப்பிட்டுட்டன் அண்ணா; நீங்க சாப்பிடுங்க!” என்றிருந்தாள்.
“சரி நீ போய்ப் படு! நான் இதையெல்லாம் எடுத்து வச்சிட்டுப் படுக்கிறன்” என்று சொல்லியும் நகராதிருந்தவள், சாப்பிட்டு முடித்தெழுந்து, “சரிம்மா இனிச்சரி போய்ப் படு!” என்றுவிட்டு நான் நகர, “உங்களோட கொஞ்சம் கதைக்க வேணும்.” என்றாளா? எனக்கு மூளைக்குள் மணி பலமாகவே அடித்தது.
காரணம், அவள் குரலில் வந்திருந்த தீர்க்கம்.
இப்ப என்ன சொல்லப் போறாள்?
‘இதைச் செய், இப்பிடி நட, அப்பத் தான் நான் வெளிநாடு போவன்‘ என்று திரும்பவும் மிரட்டப் போறாளா?
ஆயாசத்தோடு பார்த்தேன். அவளோ, கோபத்தோடு பார்த்தாள்.
சர்ரென்று மோட்டார் சைக்கிள் ஒன்று கடந்து சென்றது. படீரென்று நினைவுகளிலிருந்து கலைந்து விட்டேன். பார்த்தால் கராஜடிக்கு வந்திருந்தேன். இப்ப இந்த வெள்ளனத்தோடு கராஜைத் திறந்து என்ன செய்யப் போறேன்? முதல், யாரவது கண்டால் மொத்தமாகத் தட்டீட்டுது என்றல்லவா நினைப்பார்கள்?
மோட்டாரை நேரே விட்டேன். நினைவுகளும் தொடர்ந்தன.
“என்னம்மா சொல்ல வேணும்? அதுவும் இந்த நேரத்தில! போய்ப் படு, நாளைக்குக் கதைக்கலாம்.” என்றேன் தன்மையாக.
“நாளைக்கும் இந்த நேரம் தானே உங்களைக் காண முடியும் அண்ணா? பிறகு என்ன இந்த நேரத்திலா எண்டு கேட்கிறீங்க?” என்றவள் குரலில் அத்தனை காரம்.
“ஏதாவது பிரச்சனையாம்மா?”
அதற்குப் பதில் சொல்லாமல் நகர்ந்தவள், ” வாங்க வெளியில இருந்து கதைப்பம்; எல்லாரும் நல்ல நித்திரை, அவர்களைக் குழப்புவான் ஏன்?”
வாயிலைத் திறந்து வாசலிலிருந்த படியில் அமர, கதவைச் சாத்திவிட்டு நானும் எதிரில் அமர்ந்து கொண்டேன்.
நிலவு வெளிச்சம் கூட இல்லை; கருமை கொட்டிக் கிடந்தது. எங்கேயோ ஒரு நாயின் குரைப்பு விட்டு விட்டுக் கேட்டுக்கொண்டிருந்தது.
கதைக்க வேண்டும் என்று வந்தவளோ இருட்டைத் துளாவியபடி மௌனம் காத்தாள்.
‘ஒத்திகை பார்க்கிறாளோ? அல்லது ஏதாவது நடந்திருக்குமோ? பெரியக்கா வந்து சண்டையேதும் போட்டாவோ?’ கேள்விகள் மின்னலாய் முளைத்தன.
“என்ன விசயம் மா? தீபி இங்கயா நிக்கிறாள்? கவி வந்தவளோ? பெரியக்கா ஏதும் …”
“தீபி இங்க தான் நிக்கிறாள்; இங்க தான் நிப்பாளாம்; தன்ர அக்காவத் தனியா விட்டுட்டுப் போனா என்னவும் செய்யத் தயங்காத மனுசர் நீங்க எண்டு சொல்லுறாள் அண்ணா.” என்ற போது அவள் குரல் தளம்பியது.
வெடுக் வெடுக்கென்று கவியும் தீபியும் எடுத்தெறிஞ்சுக் கதைக்கையில் எல்லாம் சுருக்கென்று தைத்துவிடுகின்றது தான்; சுரீரென்று கோபம் கூட வரும்; ஆனால், அதை அவர்களிடம் காட்டத்தான் மனம் வராது.
தகப்பன் இல்லாதவர்கள்; அவர்களைப் பார்ப்பது முழுவதும் என் பொறுப்பு; அப்படியிருக்க, எத்தனைக்கென்று கசந்து வழிவது?
“அவர்களில கோபிக்கக் கூட அருகதை இல்லாதவர்களாக… இல்லாதவனாக இருக்கிறன் மா!”
சின்னக் குரலில் சொல்லிவிட்டேன். விசுக்கென்று என்னைப் பார்த்தாள் தங்கை.
“விடிய வெள்ளன என்ன எல்லாம் கதைச்சாள் தெரியுமா? அவளை நான் இன்னும் சின்னவள் எண்டு நினைச்சிருக்க, அவளோ, சுருக்சுருக்கென்று வார்த்தைகளால குத்துறாள்.
‘என்ன சொல்லிக் கட்டாயப்படுத்தி உங்கட அண்ணாவை எங்கட வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தீங்க?’ எண்டு அவள் கேட்கேக்க எனக்குக் குற்றவுணவில…ச்சே…! என்றிருந்திச்சு அண்ணா. ஒரு வகையில அதுதானே உண்மை?
நான் வெளிநாடு போக வேணும் எண்ட ஒண்டுக்காகத்தானே, விருப்பமே இல்லாமல் உதயாவ இங்கக் கூட்டிக்கொண்டு வர ஓமெண்டு சொன்னீங்க!” சொல்லிவிட்டு விம்மியவளுக்கு என்ன சொல்வேன்?
‘இல்லை, அப்பிடியெல்லாம் எதுவும் இல்லை; அண்டைக்கு நான் நடந்து கொண்ட விதம் பிழை எண்டு உணர்ந்து நானே விரும்பி என்ர பெஞ்சாதியை கூட்டிக் கொண்டு வந்தன் என்றா!’
நா அசையேன் என்கின்றதே! என்னதான் நடப்பைப் புரிந்து நடக்க முடிவெடுத்தாலும் அதில் உள்ள துன்பம் இலகுவானதா என்ன?
இருளில் மின்னலென அவள்…கல்யாணி கடந்து சென்றாள் போலிருந்தது . அதுவும் என் மனதுள் கேட்ட ‘என்ர பெஞ்சாதி‘ என்பதைச் செவிமடுத்தபடி!
நெஞ்சு வலித்தது! சகித்துக் கடக்க வேண்டிய வலி!
“இனி யார் என்ன சொன்னாலும் தலைகீழாக நிண்டாலும் உதயா உங்கட மனிசி என்றத மாற்ற முடியாது தானே அண்ணா?”
என் மனம் அறிந்து இடையிட்டாளா என்றளவில் உறுதியாக இருந்தது குட்டியின் குரல்.
அப்போதும் என் நா அசையவில்லை.
“அப்படியிருக்க, ஏன் யாரும் கட்டாயப்படுத்த வேணும்? அண்ணாவே விரும்பித்தான் கூப்பிட வந்தவர் எண்டு சொன்னால், அதுக்கு ஒரு சிரிப்புச் சிரிச்சாள் பாருங்க!
‘எனக்கு எட்டு மாத்திலயே காது குத்தியாச்சு. இப்ப நாலு மாசத்துக்கு முதல் ரெண்டாவது தோடு குத்தினன். அதனால இந்தக் கதையை வேறெங்கயும் சொல்லுங்க!’ எண்டு சொல்லுறாள்.
அதோட விடேல்ல, ‘அப்பிடி வந்தவர் எங்கட அக்காட்ட மன்னிப்புக் கேட்டவரா? இதெல்லாம் எங்களுக்கு விளங்கியும் இண்டைக்கு இந்த வீட்டில வந்து நிக்கிறம் எண்டா, இந்த வயது போன நேரத்தில அம்மம்மா வந்து கிடந்து அழுது புரண்டதுதான் ஒரே ஒரு காரணம்.’ இப்படி நீட்டி முழக்கினாள்.