“இந்தா பிள்ளேட அப்பா வந்திட்டார், இனி அவரிட்டையே வாங்கிச் சாப்பிடுங்கோ குட்டியன்.”
அதுவரை, நேரத்தையும் குழந்தையின் சாப்பாட்டுக் கிண்ணத்தையும் பார்த்துப் பார்த்து ஊட்டிக் கொண்டிருந்தவள் அவசரமாக எழுந்தாள். அவள் குரலில் நிச்சயம் நக்கல் இருந்தது.
கிண்ணத்தைப் பூபாலன் கையில் கொடுக்கையில், “இப்பத்தான் ரெண்டு வாய் குடுத்திருக்கிறன். பொறுமையாக் குடுத்தா இதில இருக்கிறது முழுசும் சாப்பிடுவான். நீங்க சாப்பிடுற வேகம் போல பிள்ள சாப்பிடுவான் எண்டு நினைக்காதீங்க!”
நக்கல் பார்வையோடு நகர, கைகால்களை உதைத்து, அமர்ந்திருந்த சிறுவர் சாப்பாட்டு இருக்கையில் அப்படியே கீழாக வழுவ முனைந்தான், ஆதித்.
“எங்களுக்கும் எல்லாம் தெரியும். லாதிக்கும் அப்பா தீத்தி விடுறனான் என்ன செல்லம்?” கயலை முறைத்தபடி சொன்னவன், சாப்பிட்டுக்கொண்டிருந்த மகள் தலையில் பரிவோடு தடவி விட்டு மகன் முன்னால் கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.
மறுநொடி, “இவன் என்னக்கா இதுக்கால விழுந்திருவான் போல!” எழுந்து மகனை நேராக அமர்த்தினான்.
“கயல் விட்டுட்டு அங்கால போனா இவர் இப்பிடித்தான் துள்ளுவார்!” விமலா.
“பின்ன? எந்த நேரமும் கைக்க வச்சு வச்சுக் கெட்ட பழக்கம் பழக்கி விட்டுருக்கிறா உங்கட ஸ்வீட்டி!” லாதியிடம் சொன்னவன், “எல்லாம் தனக்கு மட்டும் தான் தெரியும் எண்ட நினைப்பு! இதுக்கு முதல் ஐஞ்சு பிள்ளைகள வளத்த கணக்கில!” என்றான், விமலாவிடம்.
“உங்கட ஸ்வீட்டி காட்டுற படம் இருக்கே!” தம் பார்வையில் படும் படி அமர்ந்திருந்த கயல் கேட்க வேண்டும் என்றே சத்தமாகச் சொன்னபடி, மகன் வாயருகில் கரண்டியை கொண்டு போக, அதைத் தட்டிவிட்டு மீண்டும் அப்படியே வழுவினான், குழந்தை.
“டோய் டோய்…வர வர குழப்படி கூடுது. அக்கா எல்லாம் அமைதியா இருந்து சாப்பிடுறவா என்ன செல்லம்?” கொட்டிய குழைத்த சோற்றை டிசுவால் அப்படியே வழித்துத் துடைத்தெடுத்துவிட்டு, குழந்தையின் தலையைப் பிடித்து அணைத்து ஒரு கரண்டி உணவை வாயில் வைத்துவிட்டு நகர முதல் அவனோ, “ப்பூஊஊஊ” ஊதினான்.
பிரணவ் முகம் எல்லாம் சோற்றுப் பருக்கைகள். பட்டென்று கயலிடம் பார்வை போனது. அவளுக்கோ முக்கிய கலந்துரையாடல் ஒன்று. கணனியை இயக்கிக் கொண்டிருந்தவள் காதுகளில் எயர் பொட். கவனம் இங்கில்லை.
விமலாவைப் பார்த்தான். நக்கல் பார்வையோடு அமர்ந்திருந்தார். லாதிக்கோ சரியான சிரிப்பு. “பா, முகத்தக் கழுவுங்கோ! நான் சாப்பிட்டுட்டன் குடுக்கவோ?” பெரிய மனிசியாக உதவிக்கு வந்தாள்.
“இல்ல குட்டி, அப்பா தீத்திறன், ஆறுதலாச் சாப்பிடுங்க!” என்றுவிட்டுத் தமக்கையைப் பார்த்தவன், “கொஞ்சம் கொஞ்சமாத் தான் இவர வழிக்குக் கொண்டு வரவேணும். என்னட்டச் சாப்பிட்டுப் பழக்கம் வந்திட்டா கடகடவெண்டு தீத்திருவன்.” சொன்னவன் பார்வை அவனையும் மீறி மனைவியின் புகைப்படத்தை நோக்கிச் சென்றுவிட்டு மகனிடம் திரும்பியது.
பிரிவு என்ற ஒன்று பற்றி எண்ணியே இராதபோது காணவே முடியாத நிலையில் தள்ளிவிட்டால், முகம் இறுகிப் போயிருந்தது.
மகன் தலையைத் தன் வயிற்ரோடு அணைத்துப் பிடித்து அடுத்த கரண்டியை உள்ளே வைத்துவிட்டு பெருமூச்சோடு மீண்டும் அமர்ந்து கொண்டான்.
அந்த இடத்தில் கனத்த அமைதி. அதைக் கிழித்தது, லாதி கதிரையைத் தள்ளி எழுந்து சென்ற சத்தம். அதோடு, முன்னாலிருந்த தட்டில் பட்டுப் பட்டென்று அடித்துக் கண்பார்வையில் இருந்த கயல் கவனத்தை இழுக்க முயன்ற ஆதித் செய்கை.
“வாய்க்க வச்சது அப்பிடியே இருக்கு. சாப்பிடடா!” மகனோ, பூபாலன் பொறுமைக்கு பெரும் பரீட்சை வைத்துக் கொண்டிருந்தான்.
பொறுமை பறந்திருக்க, விறுவிறுவென்று கயல் முன்னால் சென்று நின்றான், பூபாலன்.
‘அதுக்குள்ள தீத்தி முடிச்சிட்டாரா?’ஆச்சரியம் ஓட, என்னவென்பதாகப் பார்த்தாள், அவள்.
“அறைக்க அல்லது மேல் மாடியில போயிருமன், அவன் உம்மையே பாத்துக் கத்துறான். ஒரு வாய் உள்ள போகேல்ல!” தாழ்ந்த குரலில் பரிதாபமாகச் சொன்னவனைப் பார்த்துச் சிரிப்பதா, இந்நிலையில் நிற்கும் தகப்பன் மகனைப் பார்த்து அழுவதா?
காதுக்குள் அவளின் ‘டீம் லீட்’ இன் கணீர் குரல் வேறு. கணனியும் ஃபோனுமாக எழுந்தவள் கடந்து செல்கையில் ஆதித் அழவே தொடங்கியிருந்தான், வாய்க்குள் வைத்திருந்த உணவை வெளியே துப்பிக் கொண்டே.
ஓடிவந்து அவனைக் கவனித்துவிட்டுச் செல்ல வேண்டும் போலொரு உணர்வெழுந்தாலும் அவள் இங்கே இருப்பதே காதுக்குள் ஒலிக்கும் கட்டளைகளை நிறைவேற்றத்தானே! நிறையவே சலுகைகள் எடுத்துவிட்டாள். விரைந்து தன்னறைக்குள் புகுந்து கொண்டாள்.
“கொஞ்சம் கொஞ்சமா குடுத்தாச் சாப்பிடுவான் பூபாலன். கயல் எண்டா முழுசும் எவ்வளவு நேரம் செண்டாலும் தீத்துவா. நீ அரைகுறையாக் குடுத்திட்டு பாலக் குடிக்க வச்சுப் படுக்க விட்டா அவன் மெலிஞ்சு தான் போவான். என்னவோ செய்யுங்க. பசிக்குது சாப்பிடப் போறன்.” புறுபுறுப்போடு, தனக்கான உணவைப் பரிமாறிக்கொண்டார், விமலா.
பூபாலன் எதுவும் கதைக்கவில்லை லாதி வந்து விளையாட்டுக் காட்ட காட்ட, ஒருவாறு மூன்று வாய்கள் அதுவும் காலும் அரையுமாகத்தான், தீத்தி முடித்துவிட்டுப் பார்த்தால் கிண்ணத்தில் இருந்த உணவும் முடிந்திருந்தது.
“வயித்துக்க போக வேண்டியது அவ்வளவும் வெளில போயிட்டு! உன்ன என்ன செய்யிறது கள்ளா!” செல்லமாக மகன் கன்னத்தை ஆட்டியபடி தூக்கினான்.
தகப்பன் உயரமாகத் தூக்க குழந்தைக்குக் குதூகலம். பாதம் இரண்டும் தகப்பனின் கழுத்தில் பஞ்சாக அழுந்தியிருக்க, துள்ளல் போட்டபடி அதுவரை கொடுப்புக்குள் வைத்திருந்த சோற்று வாயை அப்படியே தகப்பன் முகத்தில் துப்பினான்.