அத்தியாயம் 23 – 2

“டோய்! டோய்!” குழந்தையைக் கைகளில் ஏந்திக்கொண்ட பூபாலன், மகனை முறைத்தான். அவனோ, குனிந்து தமக்கையின் தலைமுடியைப் பற்றி இழுத்தான். “விடுங்கோ….ஆஆ அக்காக்கு நோகுது!” அவள் வேறு கத்தினாள்.

“இவன…இவன் ஒருத்தனக் கவனிக்க நாலு பேர் வேணும் போலக் கிடக்கே!” உணவு சிதறிக் கிடந்த அப்பகுதியைப் பார்த்தபடி சொன்னான், பூபாலன்.

“அதெல்லாம் நான் கிளின் பண்ணுறன், நீ அவன்ட வாயைக்கழுவிப்போட்டு ‘ப்ளே பென்’னில விட்டுட்டு வந்து சாப்பிடு தம்பி!” விமலா.

“சாப்பிடுங்க அக்கா வாறன்.” மகனோடு மாடியேறினான். சகோதரனுக்கு விளையாட்டுக் காட்டியபடி பின்னாலே ஏறினாள், லாதி.

“இவனில இப்பிடி மீன் மணக்குதே!” 

“ஓம் பா, உவக்!”

அப்படியே ‘பாத்’தில் இறக்கிவிட்டு, போட்டிருந்த ஆடைகளை அகற்ற, அவனுக்கோ அப்படி ஒரு சந்தோசம். குளிக்க என்று இறங்கினால் இலேசில் வெளியில் வரமாட்டான். தொட்டி ஓரத்தைக் கைகளால் பற்றிக்கொண்டு நின்று தையத் தக்கா போட்டுத் துள்ளினான்.

சால்மன் மீன் வாசம் போக குளிப்பாட்டி எடுக்க நினைத்தான், பூபாலன். அதுவோ முழுக்கில் முடிந்திருந்தது. குளியலறையும் ஈரமாகி, தகப்பன் மகளுமே நனைந்திருந்தார்கள்.

“போதுமடா வா வா!” மகனை அணைத்துத் தூக்கினான்.

“அடடா பிள்ளேட டவல் உடுப்பு எல்லாம் கீழ ஸ்வீட்டிட அறையில என்ன?” 

“அப்பா நான் போய் எடுத்துக் கொண்டு வாறன்.” பதிலுக்குக் காத்திராமல் ஓடினாள், லாதி.

“குஞ்சு ஈரக்கால், கவனம்.” என்றபடி, அங்கிருந்த தோய்த்த துவாய் ஒன்றை எடுத்து மகனை அப்படியே மூடித் துடைத்தபடி இறங்கினான், பூபாலன்.

ஓடிச் சென்று கதவைத் திறந்த லாதியைப் பார்த்து நெற்றியைச் சுருக்கியபடி காதுகளில் இருந்த ‘எயர் பொட்’டை அகற்றினாள், கயல். கலந்துரையாடல் முடிந்திருக்க, உணவைக் கேட்ட வயிற்றைக் கவனித்துவிட்டு வேலையைத் தொடர எண்ணி எழ இருந்தவள், “என்ன ஈரமா வந்து நிக்கிறீங்க?” கதிரையை விட்டு எழவில்லை பூபாலனும் குழந்தையும் உள்ளிட்டார்கள்.

“இவனிட சாமான்கள அவனிட அறைக்கு மாத்தினா நல்லம் கயல்.” என்றபடி அவன் உள்ளிட, கயல்விழியைக் கண்டுவிட்ட குழந்தை அவளை நோக்கித் தாவினான். 

“என்ன இது, முழுகினானா இவன்? அதும் சாப்பிட்ட கையோட!” நனைந்து நின்ற தகப்பன் மகள் கோலம் குளியலறையில் என்ன நடந்திருக்கும் என்பதைத் தெளிவாகவே சொல்லிற்று!

“இல்ல… உடம்பெல்லாம் சாப்பாடு அதான். அவனத் தாரும் துடைச்சு உடுப்புப் போட்டுட்டுப் பால் குடுத்துத் தூங்க வைக்கிறன். மீட்டிங் முடிஞ்சிட்டா, இடையில வந்து குழப்பி விட்டிட்டமா? சொறி!” பூபாலன்.

“உங்கள…கொஞ்சமும் யோசிக்க மாட்டிங்களா?” எரிந்து விழுந்தாள், கயல்விழி.

“அதுதானே, சாப்பிட்ட உடனே தண்ணிக்க போட்டு எடுத்தியா பூபாலன்? நீயும் இன்னும் சாப்பிடேல்ல. என்னவோ போங்க. வருத்தம் துன்பத்த இழுத்திட்டு நிண்டு ஆடாதீங்கோ! சரி, அவனும் ஒரு வாய் கூட ஒழுங்காச் சாப்பிடேல்ல விடு!” விமலாவின் குரல் வேறு இடையிட்டிட்டு.

“ஒகே ஒகே ஒரு நாளைக்கு முழுகினா ஒண்ணும் நடவாது. முறைக்காம அவனத் தாரும்.” குழந்தையை வாங்க முனைந்தான். அவனோ, கயலோடு அட்டைபோன்று ஒட்டிக் கொண்டான்.

“லாதி, போய் உடுப்ப மாத்திப்  போட்டு வாங்கோ; படியில வழுக்கிரும் கவனம்!” ஆதித்தைக் கட்டிலில் விட்டு துடைத்தாள், கயல்.

“இப்ப என்னத்துக்கு எல்லாத்துக்கும் முறைக்கிறீரோ எனக்குத் தெரியேல்ல. உமக்கு கரைச்சல் குடுக்காமல் இருக்கத்தான் என்ர பிள்ளைகள நானே பாக்க நினைக்கிறன்.  கொஞ்சம் கொஞ்சமாத்தான் பழக வேணும். உமக்கு ஏன் விளங்குது இல்ல.” பார்த்து நின்றவன் குரல் வலியோடு வந்தது.

பூபாலன் வாயிலிருந்து வரும் அந்த, ‘என்ர பிள்ளைகள நானே பாக்க நினைக்கிறன்’ குழந்தைகளில் பாசத்தோடுள்ள கயல்விழியின் மனதில் சுருக்கென்று தைத்துவிடும். அதோடு, அவளை இந்த வீட்டில் அன்னியமாகத் தள்ளி நிறுத்தியும் விடும்.

இப்போதும் அதுவே நடந்தது. “நான் ஒண்ணுமே சொல்லேல்ல ஓகே! அதுக்க உடுப்புகள் இருக்கு.” என்றுவிட்டு, சிணுங்கிய குழந்தையைக் கட்டிலில் விட்டுவிட்டு வெளியேறிவிட்டாள்.

இப்பிடியே நகர்ந்த நாட்கள் போர்த்தியிருந்த இயந்திரத் தன்மையை கலகலப்பாகினான், ஆதித். தாயின் பிரிவில் அப்பப்போ கலங்கித் தவித்தாலும் கயல்விழியோடு சேர்ந்து பழைய கலகலப்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள், லாதி. தகப்பனோடு சேர்ந்து திரிந்து அவனையும் கலகலப்பாக்க முனைந்தாள் என்றும் சொல்லலாம்.

கயல்விழியோடு வேலை செய்யும் இருவருக்கு கொரோனாத் தொற்று வந்துவிட, அவர்கள் முடிக்க வேண்டிய வேலைகள் மிகுதியுள்ளவர்கள் கைக்கு வந்திருந்தன. கயல்விழியின் வேலையோடு அதுவும் சேர்ந்திட்டு.

அந்நேரம், தன் தொழில் விசயங்களையும் கவனித்துக்கொண்டு விடுமுறையில் நிற்கும் லாதியை வெளியே அழைத்துச் செல்கையில் குழந்தையையும் கூட்டிச்  செல்வது என, பிள்ளைகளோடு சற்று அதிகமாகவே நேரம் செலவிடத் தொடங்கிவிட்டான், பூபாலன். சிந்தனையை, உடலை வழமைக்கு மிஞ்சி எந்நேரமும் சுறுசுறுப்பாக வைத்திருக்க முயன்று வென்றான். அதுவே, மனைவியின் இழப்பின் வெற்றிடத்தை ஆழ்ந்து அனுபவிக்க விடாது வைத்திருக்கச் சிறிதேனும் உதவியது.  

கயல்விழி வேலைகளைத் தொடங்க முன்னரும் முடிந்த பின்னரும் எப்போதென்று காத்திருந்து லாதி வந்துவிடுவாள். குழந்தையும் இவள் கைக்கு வந்துவிட்டால் பிறகு நித்திரை கொண்ட பின்னரே பூபாலன் தூக்கிச் செல்வான். அதிலும் இரவில் முழிப்பு வந்து விட்டால் மீண்டும் கயல் அருகில் வந்து ஒன்றிக்கொள்வாள், லாதி. தாய் இருக்கையில் தன்னறையில் தனியே தூங்குபவள் தினமும் இரவில் தாய் தகப்பனுக்கு இடையில் வந்து குறண்டி விடுவாள். இப்போதோ, தகப்பன் அருகிலிருந்து கயல் அருகுக்கு.

இப்படியிருக்கையில், “நான் வந்தும் அஞ்சு மாசங்கள் ஆகப்போகுது இந்தச் சனிக்கிழம வீட்ட போகலாம் எண்டு இருக்கிறன்.” விமலா சொல்ல, “இன்னும் கொஞ்ச நாட்கள் நிண்டிட்டுப் போங்கோ கா!” என்றான், பூபாலன்.

“எனக்கும் விருப்பம் தான். மகளுக்கு இப்ப எட்டு மாதம், இனி நான் போய் நிக்கிறதுதான் நல்லது. எப்ப லொக் டவுன் போடுவானோ! பிள்ளைப்பெறு நேரத்தில போக ஏலாமல் போயிட்டு எண்டா!” 

அதன் பிறகு என்ன சொல்வது? சான்ஃப்ரான்ஸ்சிஸ்கோ செல்ல விமானப்பதிவைச் செய்து கொடுத்தான், பூபாலன்.

கயலை இந்த வீட்டில் நிரந்தரமாகப் பிடித்து வைக்க முடியாமல் போய்விட்டதே என்பதில் விமலாவுக்கோ மனதில் பெரும் குறை! கடைசித் தடவையாக முயன்று பார்த்தால் என்ன என்ற அவர் எண்ணம் லாதியைப் பிடிக்க வைத்திருந்தது.

“அத்த இந்த வீக் எண்ட் போயிருவன் லாதி. அதுபோல இன்னும் மூணு நாலு மாசங்களில ஸ்வீட்டியும் போயிருவா…” என்று ஆரம்பிக்க, சிறுமியின் முகம் அதிர்ச்சியைத் தத்தெடுத்திட்டு.

“நோ… ஸ்வீட்டி இங்க தான் இருப்பா அத்த!”

“அது எப்பிடி? அவா இங்க இருக்க வேணும் எண்டா உங்கட அப்பாவக்  கலியாணம் செய்திருக்க வேணும். அதவிட்டுட்டு சும்மா எல்லாம் இங்க இருக்க அவேட வீட்டில விடாயினம் தெரியுமா?” அவர் சொன்னது சிறுமியின் முகத்தில் கலக்கத்தைக் கொண்டுவந்திட்டு.

‘அப்பாவக் கலியாணமா?’ நோ நோ நோ’ மனதுள் எதிர்ப்புக்குரல். பட்டென்று அங்கிருந்து ஓடிவிட்டாள்.

 

அவளுக்கு மிக மிகப் பிடித்த ஸ்வீட்டி! தாயின் பிரிவைக் கூட நினைத்து உழன்று கொண்டிராது மீட்டு எடுத்ததும் அவளேதான். இப்போதோ, தாயை நினைத்து அழ வைத்தாள். விளைவு, அடுத்தடுத்த நாட்களில் கயல்விழியிடமிருந்து ஒதுங்கிப் போனாள், லாதி. அதையுணர்ந்த கயலும் என்ன ஏதென்று கேட்டுக் களைத்துப் போனதுதான் மிச்சம்.

எதுவோ கதைக்க அழைத்த விமலாவைப் பார்த்து, “ஐ ஹேட் யூ அத்த!” என்று அவள் கத்திவிட்டுச் செல்லவும் தான், அவர்தான் என்னவோ சொல்லியிருக்கிறார் என்ற முடிவுக்கு வந்தாள், கயல்.

“அக்கா, லாதியைப் ஏசிப் போட்டிங்களா? எது எண்டாலும் அவேட அப்பாட்டச் சொல்லுங்கோ. அவர், அவளுக்கு ஏற்றமாதிரி சொல்லுவார். இப்பத்தான் கொஞ்சம் பழைய மாதிரி வந்தாள் அக்கா.  அதுக்க… திரும்பவும் காயுட ஃபோட்டோவப் பாத்துப் பாத்து அழுறாள்.” என்றிருந்தாள். 

அதையேதான் பூபாலனும் தமக்கையிடம் கேட்டான். அவரோ மூச்சும் விடவில்லை. 

இந்த வீட்டுக்கு, பூபாலனுக்கு, பிள்ளைகளுக்கு ஒரு பெண் துணை அவசியம்; அந்தப்  பெண் கயல்தான் என்றதில் அவர் உறுதியாக இருப்பதை மேலும் உறுதிப்படுத்தியது, அவர் வெளிக்கிட முதல்  நாள் நடந்த விசயமொன்று.

அன்று வேலை தொடங்க முதல் ஆதித்தின் காலை அலுவல்களைப் பார்த்து, காலையுணவையும் கொடுத்துவிட்டு, ‘பிளேபென்’னுக்குள் விட முதல் உயரத் தூக்கிப் போட்டுக் கொஞ்சினாள், கயல். அவனுக்கு அப்படித் தூக்கிப் போட்டுப் பிடிப்பது என்றால் வலு சந்தோசம் வந்துவிடும். ஒவ்வொருமுறை மேலே போய்விட்டுக் கீழே வருகையிலும் கிளுகிளுத்துச் சிரித்தபடி வளைந்து கயல் முகத்தில் கொஞ்சினான். அப்படியே நாலைந்து தடவைகள் தூக்கிப் போட்டுவிட்டு ‘பிளேபென்’னுக்குள் விட முனைய அவள் மூக்கில் கண்ணில் என்று கொஞ்சியவன், “ம்மா! அம்மா!” மழலையில் உதிர்க்க, உறைந்து நின்று விட்டாள், கயல்விழி.

அப்போதுதான் மாடிப்படியால் இறங்கி வந்து கொண்டிருந்த பூபாலன் கால்கள் வேரோட நின்றுவிட்டான். அவன் காதுகளில் மோதிய மகனின் “அம்மா” என்ற அழைப்பு, மனைவியின் பிரிவைப் பூதாகரமாக்கிற்று.

கன்னத்தில் எச்சில் பட ஆதித் கொஞ்சியதில் சுதாகரித்து விட்டாள், கயல்விழி. பட்டென்று திரும்பி விமலாவைப் பார்த்தவள் பார்வை, சற்றே தள்ளி நின்றிருந்த லாதியின் கலங்கிய முகத்தில் தரித்து நின்றது என்னவோ  கணம் தான்.

 

“லாதிம்மா, தம்பியன் கதைக்கிறார் பாருங்கவன்! பிள்ள அம்மா சொல்லுறாரே! அம்மா…அம்மா சொல்லுங்கோ குட்டியன்!” கொஞ்சியபடி சென்று அங்கிருந்த ஒற்றைச் சோஃபாவை காயுவின் படத்தின் முன்னால் தள்ளிப்போட்டவள், கால்கள் புதைய புதைய அதில் ஏறி நின்றாள்.

இப்போது, புகைப்படத்தில் இருந்த காயுவின் முகம் கயல்விழி முகத்துக்கு மிக அருகில்! 

கண்கள் கசிய, “குட்டியனிண்ட அம்மா…ஆய் குடுங்கோ!” ஆதித் முகத்தை மெதுவாகக் கொண்டுபோய் கயல் முகத்தோடு உரசினாள். குழந்தைக்கோ வெகு சந்தோசம். கயல்விழி பழக்கியிருந்த முட்டு முட்டு விளையாட்டுப் போலவே, “அம்மா… அம்மா சொல்லுங்கோ! ஆய்… ஆய் குடுங்கோ!” என்று சொல்லி சொல்லி அவன் முகத்தைக் கொண்டுபோக, தாய் முகத்தில் கொஞ்சி கொஞ்சி எடுத்தான், ஆதித்.

அந்தக் காட்சியைப் பார்த்து நின்ற பூபாலனால் அசையவே முடியவில்லை. கண்கள் கசியப் பார்த்தபடியே நின்றிருந்தான். அக்கணம், அதுவரை இருந்ததை விட மரியாதை கலந்த அன்பு கயல்விழியில் ஏற்பட்டிட்டு. 

லாதி பாய்ந்து வந்து தானும் ஏறியவள்,  “லவ் யூ ஸ்வீட்டி!” கயல்விழியைக் கட்டிப் பிடித்து விம்மினாள். 

“பிள்ளைகள் பாத்து! விழுந்திரப் போறீங்க, முதல் இறங்குங்கோ!” என்ற விமலாவும் வடியும் கண்ணீரைத் துடைக்க மறந்து நின்றாலும் ‘இந்தப்பிள்ள இங்கயே நிரந்தரமா இருந்திர வேணும்.’ கடவுளை வேண்டிக் கொண்டார்.  

 

error: Alert: Content selection is disabled!!