‘இதென்ன கோலம் தம்பி? தாடியும் அதுவுமாப் பார்க்கச் சகிக்கேல்ல‘ என்று, எப்போதும் அம்மா ஏசியதையும் காதுகளில் போட்டுக் கொள்ளவில்லை.
” ‘தாடியும் அதுவுமா போன ஆளையே நினைச்சிக்கொண்டு இருக்கிறவர் எங்கட அக்காட வாழ்க்கையில விளையாட நினைச்சாரோ கொலை செய்திருவம்.’ என்று தீபி சொன்னபோது அவளுக்கு வந்த கோபத்தைப் பாக்க மாட்டீங்கண்ணா!” பழைய நினைவுகளை அறுத்துக்கொண்டு இடையிட்டது, நேற்றிரவு தங்கை சொன்னது.
“நான் யார்ட வாழ்க்கையிலும் விளையாட நினைக்கேல்லையே! என்ர வாழ்க்கையில தான் என்ன என்னவோ எல்லாம் விளையாட்டு நடக்குது“
வாய்விட்டே சொன்னேன்.
நெஞ்சை அடைத்துக்கொண்டிருந்த துன்பத்தின் துளி, ஏக்க மூச்சாய் வெளியேறி உப்புக்காற்றின் பாரத்துக்குச் சுமையேற்றியது. குளிர் காற்று சற்றே வலுத்திருந்தது.
மழைவரும் போலிருக்கே என்ற எண்ணம் தோன்றினாலும் அப்படியே அசையாது நின்றிருந்தேன்.
மீண்டும் தங்கை கதைத்த இடத்துக்கே சென்றது மனம்.
ஆமாம்! தன்னையும் அறியாது, என்றோ நடந்தவற்றைப் பின்தள்ளிவிட்டு தற்போதைய நிலையை எண்ணியது என்னுள்ளம்.
” ‘அவர்ட அறைக்குள்ள இன்னும் அந்தப் படங்கள் இருக்கா எண்டு பார்க்க வேணும்‘ என்றவே அண்ணா. கவியும் தீபியும் இந்தாப் பாக்கிறம் எண்டு எழும்ப, உதயா தான் பிடிச்சு அதட்டி நிப்பாட்டினவள்.” என்று தங்கை சொன்னபோது நான் தலை குனிந்து அமர்ந்திருந்தேன்.
தங்கையின் கூரிய பார்வை அந்த அந்தகாரத்திலும் என்னை ஊசியாய்த் துளைத்தது.
“எங்க ஐஞ்சு பேர்ல ஒரு ஆளுக்கு உதயாட நிலை வந்திருந்தா நீங்க என்ன செய்வீங்க?” திடுமென்று கேட்டாள் குட்டி.
அவளை நிமிர்ந்து பார்த்தேன். வாய் மட்டும் இறுக ஒட்டிக் கிடந்தது.
எனக்கு நியாய அநியாயம் துளியும் விளங்குதில்லையே என்ற கவலையில் விதம் விதமாக உள்ள நிலையை விளக்க முயல்கிறாள் குட்டி. எனக்குத்தான் எல்லாம் விளங்கியும் மின்னலாக மனத்தை மாற்றிவிட்டு உதயாவோடு குடும்பம் நடத்த முடியவில்லை.
“உதயாவைப் பெரியக்கா கட்டாயப்படுத்தினார் எண்டே வச்சுக் கொண்டாலும் உங்களில ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கப் போய்த்தான் அவள் கலியாணம் செய்தவள் எண்டதைத் திரும்பவும் நினைவுபடுத்தத் தேவையில்ல தானே அண்ணா. எண்டாலும் சொல்லுறன், அவளிட அந்த நம்பிக்கையக் காப்பாத்த வேண்டியது உங்கட பொறுப்பு!
அதுமட்டும் இல்ல, ‘கலியாணமும் வேணாம் ஒன்றும் வேணாம் வா‘ எண்டு நர்மதா கூப்பிடப் போனவளத் திரும்பவும் கூட்டிக்கொண்டு வாறது பற்றித் தொடங்கியவள் நான் தானே?
நான் நாளைக்கு வெளிநாடு போனாலும் ஒரு கணமும் நிம்மதியா இருக்க முடியாதண்ணா. இங்க உதயா சந்தோசமாக இருக்கிறாள் என்றால் தான் எனக்கும் சந்தோசமாக இருக்க முடியும்.
கவி, தீபி, அம்மா, நான் எண்டு எங்க எல்லாரின்டையும் சந்தோசமும் நீங்களும் உதயாவும் சந்தோசமா இருக்கிறதில தான் இருக்கு!” என்று அவள் சொல்லி முடிக்கையில், “அக்கா! தூங்கேல்லையா நீங்க? இருட்டுக்க நிண்டு என்ன செய்யிறீங்க?” உள்ளே கேட்ட தீபியின் குரலில் திடுக்கிட்டு விட்டோம் நாங்கள்.
“அது…அது ஒண்டும் இல்லடி, தாகமா இருந்திச்சு; தண்ணி கொண்டு போய் வைக்க வேணும் எண்டு நினைச்சிட்டு மறந்து தூங்கீட்டன். அதுதான் இப்ப எடுக்க வந்தன். நீ லைட்டைப் போடவும் என்ன எண்டு நின்று பார்த்தன்.” என்றது உதயா தான். அதுவும் நாங்கள் அமர்ந்திருந்து கதைத்த முன்வாயிலுக்கு மிகவும் அருகில் உட்புறமிருந்து அவள் குரல் வந்தது.
வாயில் கைவைத்துப்பொத்திக் கொண்டாள் தங்கை.
“ஐயோண்ணா! நாம கதைச்சது எல்லாம் உதயா கேட்டிருப்பாவோ!” சொல்கையில் குட்டியின் விழிகளில் பயம்.
“சரி, கெதியா வந்து படுங்க!”
“ம்ம்…நீ லைட்ட நூத்திட்டுத் (அணைத்துவிட்டுத்) தூங்கு, இந்தா வாறன்.” என்று உதயா நகருவதும் கேட்டது.
“வா, நாங்களும் உள்ள போவம்.” நான் எழுந்து கொண்டேன்.
“விசரா அண்ணா உங்களுக்கு? இப்ப உள்ள போக, தீபியும் வந்து நடுச்சாமத்தில சண்டைதான் வரும்.”
குட்டி மறுத்துக் கொண்டிருக்கையில் நான் உள்ளே சென்றிருந்தேன். ஒன்றுமே செய்ய முடியாது பின்னால் வந்த தங்கையின் முகத்தில் பயம் மட்டுமே.
“நீ போய்ப் படு!” தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டுத் திரும்பி என்னையுமறியாதுதான் சமயலறை நோக்கிச் சென்றிருந்தேன்.
“அண்ணா!” பின்னால் தங்கையின் பதற்றக் குரல்.
அங்கே, போத்தலில் நிறைந்திருந்த நீரைக் கடகடவென்று குடித்துக் கொண்டிருந்தாள் உதயா. கணத்துக்கும் குறைவாகத்தான் என்னைப் பார்த்திருப்பாள். மின்னலாய் அவள் முகத்தில் திகைப்போடியது. குடிப்பதை நிறுத்திவிட்டு மூடியை மூடிக்கொண்டே என்னைக் கடந்து செல்ல முயல, சத்தியமாய் என்னையுமறியாதுதான் என் கரம் நீண்டிருந்தது.
திடுக்கிட்டுப் பார்த்தவள் விழிகளில் என்ன இருந்தது? பயமே தான்! அப்போதுதான் முதல் முறையாக அவள் விழிகளைப் பார்க்கிறேன்.
அதில் தெரிந்த பயத்தில் நான் சுக்கல் சுக்கலாக நொறுங்கிப் போனேன். இருந்தும், “தண்ணி…குடிச்சிட்டுத் தாறன்.” அப்போதுதான் நான் நீட்டிய கரம் அப்படியே இருப்பதை உணர்ந்தேன்.
பார்த்தாளே ஒரு பார்வை! இவளா சில கணங்களுக்கு முதல் பயத்தை வெளிப்படுத்தியது.
அப்படி ஒரு முறைப்பு!
‘தண்ணி வேணுமோ போய் எடுத்துக் குடிக்கலாம்‘ இவள் தங்கைகள் என்றால் இதுதான் பதிலாக வந்திருக்கும்.
‘இவளும் அதைத்தான் சொல்லப் போறாளோ!’
கடுகதியில் என் மனம் எண்ண, அவளோ, போத்தலை என் கரத்தில் திணித்த வேகத்தில் விறுவிறுவென்று சென்றுவிட்டாள்.
மடமடவென்று அவ்வளவையும் குடித்துவிட்டு அறைக்குள் நுழைந்த என் முதுகில் தங்கையின் பார்வை!
மனம் கிடந்த வெம்மையில் சில்லிட்டு இறங்கிய அந்த நீரின் குளுமையை இப்போதும் என்னால் உணர முடிந்தது. அதேநேரம், சடசடவென்று மழை கொட்டத் தொடங்கவும் மோட்டார் சைக்கிளை உயிர்ப்பித்தேன்.
கராஜ் வாசலில் சென்று நிற்கையில் தெப்பலாக நனைந்திருந்தேன்.
கராஜை திறந்து உள்ளே சென்று வேலை செய்யும் போது போடும் ஆடைக்கு மாறிவிட்டு நனைந்த உடைகளைப் பிழிந்து பின்புறமிருந்த சிறு கயிற்றுக்கொடியில் விரித்துக் காயப் போட்டேன்.
அப்போது, என்னைமறியாது என் விழிகள் பின் வீட்டில் படிந்து தவிப்போடு உலவியது.
“மழைக்குளிருக்குத் தேத்தண்ணி தரவா?” அங்கிருந்து ஒரு மென்குரல் கசிந்து வந்து.
பலமாகத் தலையை உதறிக்கொண்டேன் .
‘இப்பிடிக் கனவிலும் நினைவுகளிலும் நொந்து தடுமாறவா உன்னச் சந்திச்சன்? உயிருக்கு உயிரா விரும்பினன்?’
நைந்த உள்ளத்தின் வலி பெருமூச்சென வெளியேறியது.