நாட்கள் சில உருண்டிருந்தன.
அன்றைக்குப் பிறகு கராஜ் மூடிவிட்டு எல்லோரும் வீடு செல்கையில் என் மோட்டார் சைக்கிளும் வீடு நோக்கிச் செல்லத் தொடங்கியது. அவ்வாறே, இருள்பிரியா அதிகாலைப்பொழுதில் எழுந்தோடி வருவதும் நின்றுவிட்டது.
அன்று, நான் வீடு செல்கையில் என்னை முதலில் எதிர்கொண்டவள் தங்கைதான்.
“வாங்கண்ணா…” என்றவள், வேறு எதையும் வாய்விட்டுச் சொல்லவில்லை.
‘அவள் விழிகளில் தெறித்த மகிழ்வுக்காக இதைச்சரி செய்யவில்லை என்றால் பிறகென்ன?’
அத்தனை நேரமாகத் தடுமாறி நின்ற உள்ளத்துக்குச் சொல்லிக் கொண்டேன்.
ஆனால், ‘இதுதான் என்ர வாழ்க்கை எண்டது தெட்டத் தெளிவான பிறகு எத்தனைக்கு வீம்பு பிடிப்பதாம்?’
அதன்பின், என் மனச்சாட்சியின் சொல் கேட்பவனாகிவிட்டேன் நான்.
என் ஒருத்தனால் மற்றவர்கள் பட்டதெல்லாம் போதும்; என் நெஞ்சினுள் நைந்து கதறும் உணர்வுகளை அடக்கி ஆளும் சாமர்த்தியம் இல்லாதவனா நான்?
‘அப்படியான சாமர்த்தியம் அற்ற கோழை தான் நீ!’ என்று பார்ப்போர் சொல்லும் படி மூன்று நெடிய ஆண்டுகள் கடந்தும் வாழ்ந்தாயிற்று! இனிச்சரி முகத்தில் மோதும், நெஞ்சிலறையும் சவால்களை எதிர்கொள்வோமே!
எனக்கு நானே வைத்துக் கொண்ட பரீட்சை இதுவென்று சொன்னாலும் மிகையில்லை!
இருந்தும், அம்மாவின் பார்வை மட்டும் என்புறம் திரும்பவில்லை.
“இப்பிடி ரெண்டு நாளைக்கு நேர காலத்துக்கு வீட்டுக்கு வந்தால் மட்டும் எல்லாம் சரியாகீருமா?” என்று, என் காதுப்படவே சீறினார்.
தங்கை தான் என்னவோ சொல்லி இருப்பாள் போலும்.
அப்படிப் பெரிதாக என்ன சொல்லியிருக்கப் போறாள்?
“இரவுக்கு எல்லாரும் ஒண்டா இருந்து சாப்பிடப் போறமே, அண்ணாவையும் கூப்பிடுங்கோம்மா!” என்றுதான் சொல்லியிருப்பாள்.
“வேணாம்மா தாயே! வேணாம்; பட்டவரைக்கும் போதும்; நாய் வாலை நிமித்த முடியாது… விடு!” அம்மா சீறினார்.
“அதேதான் அம்மம்மா; எத்தனைக்கு எண்டு நாமளும் ஏமாறுறது?” சேர்ந்து கொதித்தது தீபி.
அதைத் தொடர்ந்து, “பெரியாக்கள் கதைக்கேக்க உன்னச் சும்மா இருக்கச் சொல்லி இருக்கிறன்; கெதியாச் சாப்பிட்டுட்டுப் போய்ப் படி! சோதனை வருது தானே?” உதயாவின் அதட்டல்.
‘இவள் என்ன மாதிரியானவள்? எதுவுமே நடவாத பாவனையில் எப்பிடி இவளால் இப்பிடி நடமாட முடியுது?’
உண்மையாகவே அவளின் இந்தப் போக்கே அவளைக் கவனிக்க வைத்தது எனலாம்.
இதுவரைக்கும் கவி, தீபி இங்கு வந்து தங்கி இருந்தாலும் இவள் ஒருமுறையும் வந்து எங்களோடு தங்கியதில்லை. ஏன், என் வீட்டில் யாருடனும் அளவுக்கதிகமாக ஒன்றோடு மறுவார்த்தை கதைத்தும் நானறியேன்.
இப்போதோ, குட்டியும் அவளும் காலா காலமாக நட்போடு பழகியது போலவே சிரித்துக் கதைத்துக் கொள்கிறார்கள்.
அம்மாவோ, “உதயா உதயா” என்று தாங்குகிறார். அவரோடு மிக இயல்பாகச் சேர்ந்துவிட்டாள். அவள் ஒவ்வொரு முறையும் “அம்மம்மா” என்று அழைக்கையில், அவளின் அப்பா…அதுதான், என்னுடைய பெரியத்தானின் நினைவுதான் வருகிறது.
‘பாரடா மடையா! இவள நீ கலியாணம் செய்யச் சம்மதித்தது சரியா? உனக்கு அவள் எந்தவிதத்தில பொருத்தம்? நீயாகப் பார்த்து, முன்னின்று ஒரு பொருத்தமான இடத்தில கலியாணம் செய்து வச்சிருந்தா அது ஒரு மனுசனுக்கு அழகு! அதைவிட்டுட்டுக் கலியாணமும் செய்து வேதனைப்படுத்தவும் செய்யிறயே!’ என, அவர் மண்டைக்குள் புகுந்து வண்டாகக் குடைந்தெடுக்கிறாரே!
அந்த நேரங்களில் எல்லாம் அதிர்ந்து நின்றுவிடுவேன்.
‘எல்லாம் என் மனப்பிரேமை. என்னுள் உள்ள குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடு! விருப்பமில்லாத வீட்டில் கலியாணம் செய்து வந்தவள் போலவா அவள் இருக்கிறாள்?’
இப்படித்தான் என்னை நானே சமாதானம் செய்து கொள்ள ஆரம்பித்திருந்தேன்.
அல்லது வெளியில் சாதாரணமாக நடமாடும் அவளும் மனதுள் குமைவாளோ?
“நானும் ஒரு மனிதப் பிறப்புத் தானேடா?”
அவள் பார்வை எப்பவாவது மிகத் தற்செயலாக என் பார்வையில் மோதுகையில், அந்தப் பார்வையின் வீச்சில் இந்த ஆக்கோரசமான கேள்வி இருப்பது போலவே துடித்து நிற்பேன் நான்.
“நீங்க சாப்பிடுங்க பிள்ளைகள்.”
உதயாவுக்கும் தீபிக்கும் அம்மா உணவைப் பரிமாறுகையில் ஏக்கம் எழாது இருக்குமா? கட்டுப்படுத்திக் கொண்டேன்.
மூளியாகக் கிடந்த சுவர்களை வெறித்தபடி இருக்கும் என் செவிகள் மட்டும் அவர்களின் உரையாடலைக் கேட்கும் ஆவலில் அங்கிருக்கும்.
“இங்க பார் பிள்ளை…” என்ற அம்மாவின் குரலே, தங்கையைக் கோபமாகப் பார்த்திருப்பார் என்றதை உணர்த்தியது.
“உன்ர அண்ணனில நிறைய நம்பிக்கை வச்சிருந்தன்; அவன் அன்றைக்கு நடந்த விதத்தில் எல்லாத்தையும் அழிச்சிட்டான்.” என்றவர் குரல் கமறியது.
நான் எழுந்து வெளியில் இறங்கிவிட்டேன். பின் வளவில் கிணற்றடியில் கிடந்த பழைய துணி துவைக்கும் கல்லுக்கும் நான் இப்படிப் போகையில் தானே துணை கிடைக்கும்; சென்றமர்ந்து கொண்டேன்.
எவ்வளவு பெரிய உலகு! எத்தனை எத்தனை கோடானு கோடி உயிர்கள்! இருந்தும், நான் மட்டுமே தனித்துத் திக்குத் தெரியாது நிற்கும் உணர்வின் பிடியில் சிக்கித் தவித்து நின்றேன்.
‘மீட்சி கிடைக்குமோ!’ உள்ளத்தின் ஓரத்தில் துளியாக ஒரு நப்பாசை முளை விடப் பார்த்தது.
நீண்டநேரம் அங்கிருந்துவிட்டுத் திரும்பி வந்தால், “அண்ணா வாங்க நானும் இன்னும் சாப்பிடேல்ல, பசிக்குது!” என்று தங்கை வருகையில் கண்கள் குளமாகிவிடும். சாமர்த்தியமாக மறைத்தும் விடுவேன்.
“நீ ஏன்மா சாப்பிடாமல் இருக்கிற?” என்ற என் கண்டிப்புக்குப் பதில் சொல்லாது, அவள் பார்த்துப் பார்த்துப் பரிமாறுகையில் தொண்டைக்குழி அடைத்துக் கொள்ளும்.
“உனக்கு ஏன் மா இந்த வேலை? நானே போட்டுச் சாப்பிடுவன்; நீயும் சாப்பிடு!” என்றோ, “என்னட்ட வீட்டுச்சாவி தான் இருக்கே, பிறகேன் முழிச்சிருக்கிற?” என்றோ கேட்டுவிட்டால், கண்கள் சரசரவென்று வழிய விம்முவாள் தங்கை.
“இன்னும் எத்தின நாளுக்கு? மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு மாதம். அதுக்குப் பிறகு…” என்று அவள் சொல்கையில் என்னுள்ளும் நடுக்கம் ஓடும். இவள் வெளிநாடு சென்றுவிட்டால் அதன்பின் எனக்கு இதுவும் இல்லையோ!
அதற்குப் பிறகு எனக்கும் அதை நினைக்கப் பிடிக்கவில்லை. அவள் ஒருத்திதான் என்னோடு சுமுகமாகக் கதைப்பது, அவளும் சென்றுவிட்டால்?