Skip to content
கூட்டம் தொடங்கியது; ஆரம்பமே வலு சூடு பறந்தது!
எத்தனைக்குச் சமாளிப்பது? அதுவும், இந்தக் கொலைகாரர்களிடம்! கப்பலுக்குள் உள்ளிட்டிருந்தவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. என்ன நடக்குது? எப்படித் துகள்கள் கசிகிறது, கண்டுபிடிக்கிறார்கள்? முதல், யார் தலைமையில் என்று, எதையுமே அனுமானிக்க முடியவில்லை என்ற உண்மையை, வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டார்கள்,
“எங்களுக்கு என்னவோ, உங்களுள் உள்ள போட்டியில் யாரோ தகவல் குடுக்கிறார்களோ என்றிருக்கு!” என்று, போதைத்தடுப்புப் பிரிவு அதிகாரி, அவர்களுள் பெரும் சலசலப்பை உருவாக்கியும் விட்டிருந்தான்.
சற்றே கொந்தளிப்பிலிருந்த ஆழ்கடலில், சிறு தாலாட்டோடு தரித்து நின்ற அந்த நவீன விசைப்படகிலோ, நான்கு கண்களுக்கும் உரியவர்களின் இறுகிய முகத்தில், குட்டியாகச் சிரிப்பு முளைத்தது. முகமூடி அணிந்திருந்தவர்களின் பார்வைகள் மோதிக்கொண்டன!
“வெளிநாடு போன பிள்ளை, ஒரு வார்த்த எடுத்துச் சொல்லேல்ல என்ன?” கௌசல்யா சொல்லிக்கொண்டே திரிந்தார். இப்படி, நண்பர் நண்பிகளோடு சேர்ந்து ஐரோப்பாச் சுற்றுலா போகப்போவதாக பைரவி சொன்னதிலிருந்து அவர் மனதுள் பதற்றம் தான். அது என்னவோ மதி, நிலா போலவே, தன் மகளாகத் தான் பைரவியையும் பார்த்தார், அவர். அதுவே, தன் மனதை அவளிடமே சொல்லவும் வைத்திருந்தது.
கேட்டவளோ, சிரித்துக்கொண்டே அவரைக் கட்டிப் பிடித்து ஒரு சுற்றுச் சுற்றினாள்.
“என்ன ஆன்ட்டி நீங்க? நான் என்ன சின்னப் பிள்ளையா சொல்லுங்க? கனடால இருந்து இங்க படிக்க வந்திருக்கிறன்.” இல்லாத கொலரை தூக்கி விட்டாள்.
“அதும் இதும் ஒண்டாம்மா?”
“சரி சரி, ரெண்டும் ஒண்டு இல்லைத்தான். ஆனா, அதெல்லாம் பயமே இல்ல ஆன்ட்டி. ஐஞ்சு பேருமே பெரியாக்கள். அதோட, அவே நாலு பேரும் அடிக்கடி இப்பிடிச் சுத்தித் திரியிற ஆக்கள் தான். நான் தான்… இது முதல் முறை. அதுவும், பாமினி ஓம் எண்டு சொல்லப் பட்டபாடு எனக்கு எல்லா தெரியும்! தயவு செய்து ஆன்ட்டி, அம்மா கதைக்கேக்க எதையாவது சொல்லிராதீங்க… ப்ளீஸ்!” அவர் கன்னத்தில் கொஞ்சியபடி கெஞ்சியிருந்தாள்.
“பிள்ள நல்லபடி போயிட்டு, வீட்ட போக வேணும். ஆளும் வடிவா துடிதுடிப்பா இருக்கிறா! என்னதான் கெட்டித்தனமா இருந்தாலும் காலம் எல்லா கெட்டுக் கிடக்கு!” அப்பப்போ சொல்லியபடி அவள் அழைப்புக்குக் காத்திருந்தார், கௌசல்யா.
மகள்களிடம் கேட்டு முடித்து, “இப்ப நெதர்லாந்து போய் இறங்கி இருப்பா எல்லா தம்பி?” ஆரூரனிடமும் கேட்டிருந்தார்.
“இறங்காமல்… உங்களை எல்லாம் மறந்திருப்பா!” நக்கலாகச் சொன்னாலும் எடுக்கவில்லையே என்றதே அவனுக்கும்.
அவர்கள் காத்திருந்து சலிப்படைந்து, நிலாவிடமும் கேட்டிருந்தார்கள்; அவளும் எடுக்கவில்லை என்றே சொன்னாள். கௌசல்யாவுக்குள் பதற்றம்; அதைப் போக்கும் வழி தெரியாதே மணித்துளிகளைக் கடத்தினார், விடியட்டும் பாமினிக்கு எடுத்துக் கேட்பம் என்ற முடிவோடு!
அன்று இரவு பத்துமணி போல் களைத்து வந்த ஆரூரன், “முழுகிட்டு வாறன் அம்மா, சரியாப் பசிக்கிது.” என்று சென்றிருந்தான்.
அவனுக்கான சாப்பாட்டை எடுத்து வைக்கையில், அரிசிமாப் புட்டும் நெத்தலிப்பொரியியலும் என்றால், கேட்டு வாங்கிச் சாப்பிடும் பைரவி தான் நினைவுக்கு வந்தாள்.
‘நாம கிடந்து அல்லாடி? ஒருக்கா எடுக்க வேணும் எண்டு அந்தப்பிள்ள நினைக்கேல்லையே! இல்லாட்டி… என்ன பிரச்சினையோ!’ எண்ணிக்கொண்டே தான், மகனுக்கு உணவைக் கொடுத்தார், கௌசல்யா.
அதேநேரம், “இன்னொருக்கா அக்காக்கு எடுக்கவா மா? போன பைரவி இன்னும் கோல் எடுக்கேல்லையே!” என்றபடி, அறைக்குள்ளிருந்து வந்தாள், மதி.
ஆரூரன் வாயை நெருங்கியிருந்த புட்டு, சற்றுத் தாமதித்துவிட்டே உள்ளே சென்றது.
“பத்தரையும் தாண்டிட்டு. வேணாம் விடு! விடியக் கேட்கலாம்.” அன்னை சொல்ல, “அப்ப மெசேஜ் போடுறன்.” என்றபடியே தட்டிவிட்டிருந்தாள், மதி.
உடனேயே அழைத்தாள், நிலா.
“பாருங்க சொல்ல மறந்து போனன். பைரவி சுகமாப் போய் இறங்கிட்டா. அவவா எடுக்கேல்ல. பாத்திருந்திட்டு, மயூரன் தான் எடுத்தவர். நல்ல ஏச்சும் குடுத்தவர். நாம இங்க யோசிச்சுக்கொண்டு இருக்க, அவா, போன வேகத்துக்கு ஊர் சுத்த வெளிக்கிட்டுட்டா!”
சகோதரியின் குரல் ஸ்பீக்கர் வழி வந்து ஆரூரன் செவிக்குள்ளால் நுழைந்தது. மனதுள் சுறுசுறுவென்று எரிச்சல் பரவியது.
அடுத்தடுத்த நாட்களும் அந்த எரிச்சல் மட்டும் மறையவே இல்லை. ‘பாவம் அம்மா, எவ்வளவு யோசிக்கிறா. ஒரு வார்த்தை எடுத்துச் சொன்னா குறைஞ்சிருவாவோ!’ என்கிறதே எரிச்சலுக்குக் காரணம் என்றது, அவனுள்ளம்.
என்னவும் செய்யட்டும். நமக்குப் பார்க்க வேலையா இல்லை என்று திரிந்தாலும், “அம்மா, இங்க வந்து பாருங்கவன். பைரவி ஃபோட்டோ போட்டிருக்கிறா. நெதர்லாந்தில பார்த்த இடங்கள்… அய்யோம்மா எல்லாமே பே வடிவான இடங்கள்.” என்று, மதி காட்டவும் நின்று விட்டான். அவனுக்குள்ளும் ஆர்வம். அவனுக்கும் இன்ஸ்ட்டா அக்கவுண்ட் இருக்குத்தான். ஆனால், அவளை ஃபளோ செய்யவில்லையே!
“இதாரு நம்மட பைரவியாம்மா?” என்றபடி, மதியைப் பார்த்தார், கௌசல்யா.
“ம்மா ஏன்? அவா கனடாவிலயே பிறந்து வளர்ந்த பிள்ளை.”
“என்னதான் சொல்லு, இதென்ன வெள்ளைகாரப் பிள்ளைகள் போல!” என்றிருந்தார் அவர்.
“பச்! இப்ப இங்கயே இதவிட மோசம்.” இப்படி, அவர்கள் கதைக்க கதைக்க, வாங்கிப் பார் என்றது, அவனுள்ளம்.
“பாப்பம்…” கை நீட்டியிருந்தான், ஆரூரன்.
அப்போதுதான், தமையன் அங்கு நிற்பதைக் கண்டாள், மதி. அவளுக்குத் தடுமாற்றமாக இருந்தது; தாயைப் பார்த்தாள்.
“அதில அவவ வடிவாத் தெரியவும் இல்லத் தம்பி. டெலிவரி சாமான்கள் எல்லாம் பேக் பண்ணியிருக்கு. மதி, போன வச்சிப் போட்டு வந்து, வேனுக்க எடுத்து வைக்க அண்ணாக்கு உதவி செய்யம்மா!” எழுந்தார், கௌசல்யா.
“தாவன் பார்த்திட்டுத் தாறன்.”அவளிடமிருந்து பிடுங்காத குறையாக கைப்பேசியை வாங்கியிருந்தான், ஆரூரன்.
“அண்ணா அது…” எழுந்து விட்டாள், மதி. பைரவியோடு சும்மாவே சிடுசிடுப்பானே! இப்போ, இதையெல்லாம் பார்த்தால்? தாயும் சகோதரியும் தவிப்போடு பார்த்து நிற்க, ஆரூரன் பார்வையோ, கைப்பேசித் திரையில் ஊன்றிப் பதிந்தது.
முதல் புகைப்படத்தில், சிறுசிறு வெண்பஞ்சுச் சிதறல் அலங்காரத்தோடு, நீல வானமும் நெதர்லாந்து கால்வாய்களும் கட்டிடங்களுமான பின்னணியில், மூன்று பெண்களும் இரு ஆண்களுமாக, தோளில் கைபோட்டு குதூகலித்துக் கொண்டிருந்தார்கள். நடுவில் நின்றிருந்தாள் பைரவி.
error: Alert: Content selection is disabled!!