அத்தியாயம் 25 – 1

அத்தியாயம் 25  

மணித்தியாலங்களை விழுங்கிக் கொண்டு தொடர்ந்த வாக்குவாதத்தின் முடிவில், அந்தப் போதைத் தடுப்பு அதிகாரியின் நெற்றிப் பொட்டை குண்டு துளைத்தது தான் மிச்சம்! 

நான்கு கண்களும் அதிர்வில் நிலைக்குத்தி நின்று விட்டுத் துடித்தன. 

“நல்ல காலம்” ஒருவன் சொல்லிக்கொண்டான். பின்ன, சுகாதார அமைச்சர் அணிந்திருக்கும் சட்டைப் பொத்தானில், உயர்ரக நுண்ணிய கமரா இருப்பது தெரிந்தால், அவர் நெற்றியை அல்லவா குண்டு முத்தமிட்டிருக்கும்!

 “உன்னிப்பாகக் கவனி! சந்தேகப்படுபவரை முடி! கொஞ்சக் காலத்துக்குச் சில்லறை வியாபாரத்தை மறந்து விடுங்கள்!” கட்டளைகள் இடியாக இறங்கின.

 சில கணங்கள் முன் வரை, ஒன்றாக இருந்தவரின் அசைவற்ற உடலில் விழிகள் குத்திட்டு நிற்க, பொம்மலாட்ட பொம்மைகளானார்கள், மற்றைய மூவரும்.`

 

ஜேர்மன் வந்து மூன்றாம் நாள் மாலை ஐந்து மணிவாக்கில், பிரான்ஸ் ‘கார்டினோர்ட்’ செல்லும் இரயிலில் ஏறியிருந்தார்கள், ஐவரும். 

நாட்கள் இறக்கை கட்டிப் பறக்க, இன்னுமே பார்ப்பதற்கு நிறைய இடமிருக்கே என்ற கவலையும் மீண்டும் வர வேண்டும் என்ற கதையுமாக தம் இருக்கைகளைத் தேடி அமர்ந்து கொண்டார்கள். அமர்ந்த வேகத்தில், அவர்களோடு சேர்ந்து கதைத்தாலும் பைரவியின் வலக்கை விரல்களும் பார்வையும் பெர்லினில் சுற்றித்திரிந்த மூன்று நாட்களும் கிளிக்கிய புகைப்படங்களில் ஓடித் திரிந்தன.

அதன் பலனாக, அரை மணித்தியாலத்தின் பின், மேலும் பத்துப் புகைப்படங்கள் அவளுடைய இன்ஸ்டாவில் சென்றமர்ந்து கொண்டன. கூடவே, அவளிதழ்களில் அழகிய முறுவல். மனதுள் அடக்கப்பட்ட பரபரப்பு! அப்படியே, ஆரூரன் ப்ரோஃபைல் சென்றவள், ‘காளான் காளான் காளான் …வேற ஒண்டுமே இராதா?’ மனதுள் முணுமுணுத்தபடி மேலும் கீழுமாகத் தட்டினாள். எதை எதிர்பார்க்கிறாள்? அவள் மனதுக்கே சரியாகத் தெரியவில்லையோ! தெரிந்தும் தெரியாத பாவனையோ! அப்படித்தான் இருக்க வேண்டும் என்றது, அடுத்து வந்த அவளின் முணுமுணுப்பு! 

“ப்ரோபைல்ல கூட ஃபோட்டோ இல்ல, அவரிட  காளான் கடை லோகோ தான்.” மெல்ல முணுமுணுத்தவள் உதடுகள் தன்பாட்டில் பிதுங்கின. தாமதித்துத் தயங்கி என்றெல்லாம் இல்லாது, வாட்ஸ் அப் ‘சேட்’ திறந்தவள், ‘so… கோல் பண்ணினா எடுக்க மாட்டிங்க என்ன?’ தட்டி அனுப்பிவிட்டுக் காத்திருந்தாள். மறு நிமிடமே பார்த்துவிட்டான் என்றன, நீலம் பூசிவிட்ட சரிகள். பதில் மட்டும் சொல்ல மாட்டானாம்.

அவள் மனதுள், என்ன ஏதென்றில்லாது எரிச்சல் தான் பரவிற்று. “கடைசித் தடவை…” முணுமுணுத்துக்கொண்டே அவனுக்கு அழைத்தாள்.

அவள் புகைப்படம் வெளியிட்டதும் அறிவிப்பு வருமே; உடன்  இன்ஸ்ட்டா போயிருந்தான், ஆரூரன். கால் முறிவில், இந்த நாலைந்து நாட்களாகக் கொஞ்சமே கொஞ்சம் ஓய்வு! அதுகூட, வெளியில் சுற்றுவதில் இருந்து மட்டும். அச்சிறு ஓய்வே மனதுள் தேவையற்ற வேலைகளைச் செய்யப் போதுமாகவிருந்தது.

இத்தனை நாட்களாக குடும்பம், சகோதரிகள், தொழில் முன்னேற்றம் என்று மட்டுமே இருந்த மனம், இப்போது தடம் பிறழ்கிறதே! நானும் மனிதன் தான் என்றதை நினைவில் வைத்திரு என்று அவனுக்கே அச்சுறுத்தல் வேறு விடுகிறது. அதற்காக யாரில்? தடுமாறியவன், அவள் மீதே முறைப்பைத் திருப்பியிருந்தான். பின்ன? அவளும் தான், இங்கு நேரில் சீண்டும் அதேபாங்கில், உலகின் எங்கோவொரு மூலையில் சுற்றிக்கொண்டே வம்பிழுக்கிறாளே! 

வீணாகக் குழப்பம் கொள்ளாதே ஆரூரன். முதல் என்னைப் பாரேன் என்றன, புகைப்படங்கள். முதல் படம் ஒரு சட்டை; வெள்ளை நிறப் பருத்தித் துணியில் இடுப்பில் சுருக்கு வைத்த வடிவான மொட்டைக்கைச் சட்டை; அதனருகில், கண்ணடிக்கும் ஸ்மைலி. அடுத்ததில், அந்தச் சட்டையை அணிந்து நின்றாள், அந்தக் கண்ணடிக்கும் ஸ்மைலி கண்ணுக்குச் சொந்தக்காரி! அவள் முகத்தில் பளிச்சிட்ட குறும்புச் சிரிப்பு, தனக்கானது என்று, ஆரூரனால் உணராது இருக்க முடியவில்லை. முழங்காலில் தொட்டு நின்ற சட்டையும் தலையில் ஓஃப் வைட் டயானா  தொப்பியுமாக நின்றவளைப் பார்க்காதே என்றாலும் மீண்டும் மீண்டும் பார்த்தான், அவன்.

இன்னுமொரு புகைப்படத்தில், தொளதொளவென்ற ஷோர்ட்ஸ், டீ சேர்ட் அதுவும் தொள தொளதான். அதையும் விட, ஒற்றைக் காலைப் பின்னால் மடக்கி, சுவரில் ஊன்றிச் சற்றே முன்னால் சரிந்து நின்றவள், நாக்கைத் துருத்தி, கண்ணைச் சிமிட்டி, நாடிக்குக் கீழாகச் சென்ற வலக்கை ஆட்காட்டி விரல் சுட்டிய இடம்…

ஆரூரன் சுவாசம் நின்று தட்டுத் தடுமாறிச் சீரானது. அது ஒரு பல்பொருள் அங்காடி போலும். மரக்கறி, இன்ன பிற பொருட்கள் என, அச்சுவர் முழுவதும் விலையோடு போட்டிருந்தார்கள். அதில், சிறு சிறு குடைகளாக இருந்த காளான்களைத் தான், அவள் ஆட்காட்டி விரல் சுட்டி நின்றது. 

ஆரூரனால் பார்வையை விலக்க முடியவில்லை. எல்லாவற்றையும் மேவி, உள்ளத்துள் என்னவோ செய்தது. அந்த முப்பது வயதுக்குக்காரனை அவள் முக பாவனையும் விரல் சுட்டலும் ஒரு சுழற்றுச் சுழற்றித் தள்ளியது.

‘டேய் ஆரூரன், அவளிட சேட்டைக்க அம்பிட்டிராத! பொல்லாதவள்  அவள்!’ தன்னைத் தானே எச்சரித்தாலும் எங்கே! 

பொல்லாத, ஆபத்தான  சேட்டைகளுள் தலைகொடுப்பதே இந்த ஆரூரருனுக்குத் தண்ணி பட்ட பாடே!  நெஞ்சை நிமிர்த்திய மனதை என்னவென்று சொல்வது!

அவன் நிலையறியாது, “பாருங்க அம்மா இந்தப் படத்த!” தாயின் பார்வைக்குக் கைப்பேசியைக் கொண்டு வந்தாள், மதி.

“பைரவி அங்க போயும் காளானை விட்டு வைக்கேல்ல!”அவள் சொல்ல,  வந்திருந்த நிலாவும் சேர்ந்து கலகலவென்று சிரித்தார்கள். 

இவன் தான், முகத்தில் மனதைக் காட்டிவிட்டால் என்ற தவிப்பில், காளான் கொட்டிலுக்குள் புகுந்து கொள்ள வேண்டியிருந்தது.

பைரவிக்கோ, அவனாக அழைத்தாலும் என்றிருந்த சிறு நப்பாசையும் பொய்த்துவிட, விடுமுறை முடிந்து சென்று அவனை ஒரு கை பார்க்கலாம் என்ற முடிவுக்கே வர முடிந்தது. 

“ரோபோ!” முணுமுணுத்துவிட்டு, நண்பர்களின் கலகலப்பில் கலந்து கொண்டாள்.

ஆனாலும், இரு நாட்களுக்கு ஒரு தடவை, சில நிமிடங்களேனும் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துக் கதைத்து விட வேண்டும் என்று தீர்மானமாக எண்ணிக்கொண்டாள்.

அதற்கு மேல் யோசிக்க நேரமா இருந்தது? பிரான்ஸ் நகரைச் சுற்றி வரத் தொடங்கினார்கள். 

முக்கியமாக, ஈபிள் கோபுரம், லூவ்ரே அருங்காட்சியகம் மற்றும்  வெர்ஸ்சா அரண்மனை என்று சென்று வந்தவர்கள், ஷொப்பிங் மோல் செல்லவும் அந்தந்த இடத்திற்குரிய உணவுகளைச் சுவைக்கவும் மறக்கவில்லை.

யாழில் உள்ளவர்களுக்கு, சிறு சிறு பரிசுப் பொருட்களையும் வாங்கிக் கொண்டாள், பைரவி. அதில், இரு, காளான் சமையல் புத்தகங்களும் அடக்கம்.

மூன்று நாட்கள் எப்படிப் போனதென்று தெரியவில்லை; அங்கிருந்து,  பிரான்சின் தென்பகுதியிலுள்ள ‘நீஸ்’ என்ற இடத்திற்கு இரயிலேறினார்கள். 

முதல் நாள், மின்சாரச் சைக்கிளில் நகரைச் சுற்றி வந்தார்கள். மறுநாளோ, பள்ளத்தாக்குகள், சுரங்கப் பாதைகள் மற்றும் நீண்ட இரயில் பாதைகளைச் சுமந்து நின்ற பாலங்கள் எனக் கடந்து, ஆல்ஃப் மலையூடு சென்ற ரயில் பயணம் புத்தம் புது அனுபவம் தருவதாக இருந்தது. 

அது முடிந்த போது, அவ்வளவு களைத்துப் போயிருந்தார்கள். ஓய்வுக்குக் கெஞ்சிய உடல்களைச் சரித்த வேகத்தில் எல்லோரும் உறங்கிவிட, ஒருத்தி மட்டும் விழித்திருந்தாள்.  

பிரான்ஸ் சுற்றுலா பற்றிச் சொல்லும் பத்துப் புகைப்படங்களைத்  தேர்ந்தெடுப்பது என்ன அவ்வளவு இலகுவானதா? அதுவும், ஒன்று ஒன்றும் ஏதாவது ஒரு வழியில் யாழில் உள்ளவனைச் சீண்ட வேண்டுமே! புகைப்படங்கள் இன்ஸ்ட்டாவில் சென்றமர, இங்கே, குறும்பில் நெளிந்த உதடுகளோடு கண்ணயர்ந்திருந்தாள், பைரவி. 

முதல் நாள், அவ்வளவு களைப்பாக உணர்ந்தவர்கள் இவர்களா என்றளவுக்கு, மறுநாள் காலையில் எழுந்து, இத்தாலி நோக்கிப் புறப்பட்டு விட்டார்கள்.

வெனிஸ், பைசா கோபுரம் என்று, அவர்கள் செல்லவுள்ள இடங்கள் பற்றிய கலந்துரையாடல் செல்ல, பைரவியோ, எங்கெங்கெல்லாம் காளான் சேர்த்த உணவு வகைகள் கிடைக்கும் என்று குறிப்பெடுத்தபடியிருந்தாள். அடுத்த பத்துப் புகைப்படங்களில் அவனை வம்பிழுக்க வேண்டாமா என்ன?

அந்தத் தேடுதலின் முடிவு, அடுத்த மூன்றாம் நாள் இத்தாலியில் இருந்து லண்டன் செல்கையில், இவளது இன்ஸ்டாவைப் பார்த்திருந்த ஆரூரன் முகத்தில் தெரிந்தது! 

“விசர் பிடிச்சிட்டு இவவுக்கு!” எரிச்சலோடு தான் சொல்ல முயன்றான்.

  

அதுபோலவே, இலண்டன் மாநகரின் சுற்றுலாத் தளங்களில் சுற்றித் திரிந்துவிட்டு கனடா செல்கையிலும் இவளது கைப்பேசி கலரியும் இன்ஸ்டாவும் இணைந்து யாழில் உள்ளவனைச் சுழற்றி அடித்தது.  

 

error: Alert: Content selection is disabled!!