கச்சேரிக்குச் செல்லும் போது சூர்யாவின் கராஜைக் கடந்து செல்ல வேண்டுமென்று தெரியும் தானே? இருந்தாலும் அவர் இப்படி வெளியில் நிற்பார் என்று எதிர்பார்க்கவில்லைதான். அப்படியே, சூர்யா மட்டும் நின்றிருந்தால் பேசாமல் என்பாட்டுக்குச் சென்றிருப்பேன். அதுபார்த்தால் குட்டி அக்காவும் நிற்க, அதுவும் அவர்கள் என்னைக் கண்ட பின்னர் காணாதது போலக் கடந்து செல்ல முடியாமல் தான் திரும்பி வந்தேன்.
அது இந்தளவுக்கு வருமென்று யார் கண்டார்?
உள்ளே நுழைந்ததும் பார்வையில் பட்டது அந்த ஸ்கூட்டி தான். எப்படி அவர் அறையில் கல்யாணியின் புகைப்படங்கள் இருந்தனவோ அப்படியே இங்கே அதை வைத்திருக்கிறாரே!
அது கல்யாணிக்காக இவர் வாங்கியது என்று எங்கள் எல்லாருக்குமே தெரியும். அதை இன்னும் வைத்திருக்கிறாரென்றால்?
மூச்சு முட்டிப்போயிற்று! முள்ளின் மீது நடப்பது போல் வேதனை கொண்டது என்னுள்ளம். விசுக்கென்று திரும்பி வெளியேறவும் முடியவில்லை. பெரியவரும் அங்கு வேலை செய்பவர்களும் ஆவலோடு பார்த்தபடி நிக்க, எதுவுமே நடவாத பாவனையில் சென்றால், பிறகும் அவர் பார்வையோ கல்யாணியின் வீட்டில்.
என்னையும் அறியாதுதான் கண்கள் கலங்கிப் போயின.
ஏதோ பெரிய அக்கறை உள்ளவர் போல ‘வெயிலுக்க நிக்காமல் உள்ள வாவன்‘ என்றதும், சோற்றைக் குழைத்துத் தந்து ‘சாப்பிடு‘ என்று சொல்லுறதும் …
அவர் எங்கே தந்தார்? குட்டி அக்கா அல்லவா கெஞ்சி வாங்கித் தந்தார்?
‘இந்தச் சோற்று உருண்டைக்காக நாங்கள் இங்க ஏங்கிக்கொண்டு கிடக்கிறமாக்கும்!’ எரிச்சலோடு சிலுப்பியது எனதுள்ளம்.
‘அப்பிடியே தட்டை வச்சிட்டு எழும்பிப் போயிரு!’ என்று மனம் கட்டளையிட்டாலும், அங்கு வைத்துத் தேவையில்லாத விடயங்களை செய்ய விரும்பாது, அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டுச் சோற்றைக் கிள்ளி வாயில் வைத்தேன்.
‘ஒரே ஒரு உருண்டை எண்டாலும் அன்பாகக் குழைச்சுத் தந்திருந்தா அமிர்தமாக இருந்திருக்குமோ!’ என்ற எண்ணம் மின்னி மறைய, துளியும் சுவையறியாது தொண்டைக்குள் சென்றது அந்த உணவு.
‘தேவையில்லாமல் உள்ள வந்து அவருக்குக் கொண்டுவந்த சாப்பாட்டை எனக்குத் தந்து, அதுவும் பெரிய அக்கறையும் அன்பும் உள்ள கணக்கில‘ எண்ணிக்கொண்டே நிமிர்ந்தால் கையில் உள்ள தட்டைப் பார்த்துச் சாப்பிடாமல் இங்க என்ன பார்வை வேண்டிக் கிடக்குதாம்?
வெடுக்கென்று என் பார்வையைத் திரும்பிவிட்டேன்.
தட்டில் மிகுதியாகவிருந்த சோற்றை ஒரேவாயில் திணித்து விழுங்கிய வேகத்தில் எழுந்து சென்றுவிட மனம் பரபரத்தது. அதன்படி கைகள் சோற்றைச் சேர்த்து உருட்ட, தன் கைபேசிக்கு அழைப்பு வரவே எழுந்தார் குட்டி அக்கா.
“இவர்தான் எடுக்கிறார். நீங்க சாப்பிடுங்க. அண்ணா கறிகள் எல்லாம் இருக்கு.” என்று தமையனிடம் சொன்னவர், “உதயா ஒருக்கா அண்ணாக்குப் பார்த்துப் போட்டு விடும் பா, நான் கதைச்சிட்டு வாறன்.” என்றவாறே, பின்புறமாக இறங்கிச் சற்றே தள்ளிப் போய் நின்று கதைக்கத் தொடங்கிவிட்டார்.
‘எனக்கு வேற வேலையே இல்லையா என்ன? இவருக்குச் சாப்பாடு போட்டுக் குடுக்கத்தான் பள்ளிக்கூடத்தில லீவு சொல்லீட்டு வந்தனான் பாருங்க!’ முறைத்தபடி பார்க்க, “இந்தா மீன்!” என்றபடி எழுந்து வந்து என் தட்டில் வைக்க முயன்றார் அவர்.
‘கேட்டனா என்ன?’ பார்வையால் சுட்டபடி தட்டைச் சட்டென்று விலக்க, என் விழிகளை உற்றுப் பார்த்தார்.
“எனக்கு வேணாம் எண்டு முதலே சொன்னனே! பசிக்கேல்ல; நீங்க சாப்பிடுங்க.” எழுந்துவிட்டேன்.
“இந்தக் கொஞ்சம் சாப்பிடுறதுக்கு இவ்வளவு பாடா? பசிக்காட்டியும் என்னோட பிராக்குக்குச் சாப்பிடு!” என்றுவிட்டு, சிரிக்கிறாரா என்ன?
‘அவேட வீட்டுக்குத் திரும்பி வந்திட்டன் என்றோன்ன, சூ மந்திரகாளி எண்டது போல ஒரே கணத்தில எல்லாத்தையும் மறந்திட்டு இவரோட பல்கலைக் காட்டுவன் எண்டு நினைச்சிட்டார் போல! அந்தளவுக்கு என்னைப் பார்க்க விசரி போலக் கிடக்கோ!’
ஐயோ கடவுளே! இந்த மனம் தான் முணுமுணுக்குதேயொழிய வார்த்தைகள் வெளியில் வராதாம்.
இருந்தாலும் என் பார்வை மட்டும் தயங்காது முறைத்தது. கணத்தில் விலகிச் சென்று குட்டி அக்காவையும் தொட்டு வந்தது.
அவரோ கைபேசியில் தன் கணவரோடு உரையாடுவதில் மும்மரமாக நின்றார்.
“இந்தாப் பிடி உதயா!” மீண்டும் மீனை என் தட்டில் வைக்க முயல முன்னர், அதிலிருந்த சோற்றை அப்படியே வழித்தெடுத்து அவர் தட்டில் வைத்துவிட்டேன்.
“நீங்களே சாப்பிடுங்க! எனக்கு வேணாம்.” சொன்ன வேகத்தில் நகர்ந்து கரங்களை அலம்பிவிட்டு, “எனக்கு நேரம் போயிட்டு அக்கா; நான் போயிட்டு வாறன்.”
குட்டி அக்காவிடம் சொன்ன வேகத்தில் கைபேசியையும் கைப்பையும் எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று வெளியேறிவிட்டேன், சூர்யா அசைவின்றி நிற்பதை உணர்ந்த படியேதான்.
வெடுக்கென்று முகத்தில் அடித்தது போலவேதான் நடந்து விட்டேன். நன்றாகவே புரிந்தாலும் மனதுள் எக்கச்சக்கக் கோபத்தை வைத்துக்கொண்டு நடிக்கவும் முடியவில்லை.
அவரோ எதுவுமே நடவாத மாதிரியல்லவா நடக்கப் பார்க்கிறார். அதுவும் கொஞ்சம் முதல் தானே கல்யாணியின் வீட்டைப் பார்த்துக்கொண்டு முகத்தில மொத்தச் சோகத்தையும் அப்பிக்கொண்டு நின்றவர். பிறகு அடுத்த நிமிசமே எனக்குச் சோறு குழைத்துத் தாறாராமே!
அடுத்து வந்த நாட்கள் சூர்யாவின் பார்வையில் படாதவாறு கவனமாக விலகி நடக்கத் தொடங்கிவிட்டேன்.
தீபியும் கூட இருந்ததால் அது ஒன்றும் கடினமாகவும் இருக்கவில்லை. எதிர்ப்படும் தருணங்களில் அவர் பார்வை என்னில் பட்டு விலகுவதைக் கண்டும் காணாது செல்லப் பழகிக்கொண்டேன்.
சில நாட்கள் சென்றிருக்கும், “உன்ர பயண அலுவல்களைப் பார்க்கிறது இல்லையா பிள்ளை? விசா வந்து எத்தின நாளாச்சு? உதயா இங்க வந்தால் தான் வெளிநாடு போவன் எண்டு அடம்பிடிச்ச. நல்ல காலமா பிள்ளையும் பிடிவாதம் பிடிக்காமல் வந்திட்டாள். இனி என்ன? நீ உன்ர புருசன்ட போற வழியைப் பாரன்!” என்று, அம்மம்மா தன்பாட்டில் சொல்லிக்கொண்டு செல்ல, கேட்டிருந்த நான் அதிர்ந்தேன் தான்.
‘ஓ! திடீரென்று வந்த கரிசனையின்ர ரகசியம் இதுதானா? அன்றைக்கும் அண்ணனும் தங்கச்சியும் வெளியில இருந்து கதைக்கேக்க குட்டி அக்கா இப்பிடி ஏதோ சொன்னார் தான்; சரியா விளங்கேல்ல எண்டு விட்டுட்டன். அது பார்த்தால், தன்ர தங்கச்சிக்காக என்னை இங்க கூப்பிட்டுச் சகித்துக் கொண்டிருக்க நினைச்சிருக்கிறார்.’