வெயில் காலம் கொரோனாவுக்குச் சாவு மணி அடிக்கும் காலம் என்ற நம்பிக்கை மக்களுள் பரவத் தொடங்கியது. அதோடு, பொதுவாகவே களியாட்டங்களுக்கு பிரதான இடம் கொடுக்கும் இளையவர்களை, நாட்கள் போகப்போக கொரோனாவின் மரண பயம் அவ்வளவாக அச்சுறுத்தவில்லை, பயமுறுத்தவில்லை என்றும் சொல்லலாம்.
எதிர்ப்புச் சக்தி குறைவான வயதானவர்கள், நோயாளர்களே அதன் பலி என்று தெரிந்த பின்னர், சுகதேகிகள் என்று எண்ணுபவர்களால் வீட்டினுள் இருக்க முடியவில்லை. எத்தனைக்கு என்றுதான் அடைந்து கிடப்பது? ஆதவனைத் தவற விடாத கோடை காலம் வயதானவர்களையுமே வெளியே ஓடு ஓடு என்றே ஆசை காட்டியது. அதுவே, கோடைக் கொண்டாட்டங்களுக்கு அவர்களைத் தயாராக்கியிருந்தது. விளைவு? கொரோனாவின் தாண்டவம் அதிகமாகிக் கொண்டே போயிற்று.
மலிந்த மரணங்களோடு சேர்ந்து தம் வாழ்வை ஓட்டத் தொடங்கினர் எல்லாரும்.
லாதிக்குக் கோடை விடுமுறை முடிந்து இணையவழி வகுப்புகள் ஆரம்பமாகியிருந்தன. வீடு ஒரு ரிதத்தில் போய்க்கொண்டிருந்தது.
அப்படியிருக்கையில் ஒருநாள்…
வீடொன்றினை வாங்க விரும்பியவர்களுக்குக் காட்டவென காலையிலேயே வெளியே சென்றிருந்தான் பூபாலன். வெற்றிகரமாக அந்த வீட்டை விற்றுவிட்டு வர மாலையாகியிருந்தது.
வீட்டினுள் உள்ளிட்ட வேகத்தில் எதிர்ப்பட்ட சரசுவிடம், “இங்க எல்லாம் ஓகே தானே சித்தி, குளிச்சிட்டு வந்திருரன்.” மாடியேறினான்.
சில நிமிடங்களும் சென்றிராது, “அப்பா இன்னுமா குளிக்கிறீங்க? கெதியா வாங்கோவன்!” லாதியின் குரலுக்கு, “ஏனம்மா, இந்தா வாறன்.” என்றவன், மகள் பொறுமையைச் சோதித்து விட்டே, “இண்டைக்கு கிளாஸ் எப்படிப் போச்சு?” கேட்டவாறே வெளியில் வந்தான்.
“போரிங் பா, எனக்கு ஸ்கூல் போகத்தான் விருப்பம்.”
“ம்ம் என்ன செய்யிறது? கொஞ்ச நாட்களுக்கு இப்பிடித்தான் படிக்க வேணும். ஹோம் வேர்க் செய்தீங்களா?”
“கிளாஸ் முடியவே செய்திட்டன். நீங்க கெதியா வெளிக்கிட்டு வாங்கோப்பா!”
“ஏன்டா, அப்படி என்ன விசயம்?” கேட்ட தகப்பனுக்கு கள்ளச் சிரிப்பு மட்டுமே பதிலாகக் கொடுத்தாள், லாதி. மகளை ஓர் கணம் அதிகமாகவே பார்த்தான், பூபாலன். தாயின் பிரிவு ஏற்படுத்திய வலியில் இருந்து மீண்டு வருகிறாளா?! மகள் முகத்தின் மலர்வும் நடத்தையில் துள்ளலும் அப்படித்தான் எண்ண வைத்திட்டு.
விபரம் தெரிந்த வயதாச்சே! இப்பெரிய இழப்பிலிருந்து எப்படி மீளப் போகிறாள் என்ற கேள்வியின் விடை புரியாது தவித்திருந்தான். மனதளவில் பாதிக்கப்பட்டு விட்டாள் என்றால் என்ன செய்வேன் என்று கலங்கியிருக்கிறான். ஆனால், அந்தளவுக்கு பிள்ளைகளை விடவில்லை…கயல்.
மனதில் கயல் முகம் வந்திட்டு. ‘நிறையவே கடமைப்பட்டுட்டம் காயு. எப்பிடித் தீர்க்கப் போறமோ!’ எண்ணியவனுக்கு, அப்போதும் பிரணவ்வை இன்னொரு தடவை அணுகிப் பார்க்கும் எண்ணமே!
“ரெடியாப்பா? போவமே?”
“மத்தியானம் என்ன சாப்பிட்டிங்க?”
“பேக் சிக்கன். இண்டைக்கு ஸ்வீட்டி செய்து தந்தவா. அதோட ஃபிரைஸ்.”
“ஏனாம் அவாக்கு இந்த வேலை? வேலையோட… சொன்னாலும் கேக்கிறது இல்ல.” அலுத்துக்கொண்டான். “குட்டியன் உங்கட ஸ்வீட்டிக்கு கரச்சல் குடுத்தாரா? சாப்பிட்டாரா?” மகளிடம் கேள்வி கேட்டுக்கொண்டே வெளிக்கிட்டவனை, “இனி வாங்கோ!” கரம் பிடித்து இழுத்துச் சென்றாள், சிறுமி.
மகள் பிடியில் நடந்தவன் அவள் கயல்விழியின் அறைவாயிலில் வந்து நிற்கவும், “என்னடா, ஸ்வீட்டிக்கு வேலையே முடிஞ்சிராதே இன்னும் அஞ்சு மணி ஆகேல்ல. தம்பி எங்க?” கேட்டுக்கொண்டிருக்கவே, “முதல் உள்ள வாங்கோவன்.” கதவைத் திறந்து தகப்பனை உள்ளே இழுத்தாள், மகள்.
அங்கேயோ….
பூபாலனுக்குப் பட்டென்று பேச்சு வரவில்லை. தகப்பனைக் கண்ட மகன் “பப்பா பா!” கயல் கரத்திலிருந்து வளைந்து துள்ளவும் தான் அசைந்தான், அவன்.
எப்படி மறந்தான்? ஓரெட்டில் அணுகியிருந்தான். குழந்தையை வாங்கிக் கொஞ்சியவன் விழிகள் கசிந்து விட்டன. ‘அவள் இருந்திருந்தா என்ன எல்லாம் செய்திருப்பாள்!’ மகனை அணைத்தவன் கசிந்த விழிகளோடு கயலைப் பார்த்தான்.
அதுவரை, அவனும் ஏதாவது சொல்லிவிடுவானோ என்ற தவிப்பில் கலங்கிக் கொண்டேதான் இருந்தது. அவன் பார்வையில் நிச்சயம் கோபமோ எரிச்சலோ இல்லையே! தயங்கித் தயங்கியே என்றாலும் இந்த ஆயத்தங்களைச் செய்ததற்கு இப்போது சந்தோசமாக உணர்ந்தாள், கயல்விழி.
“தாய் போய் ஆறுமாசமாகேல்ல, இதெல்லாம் வேணாம் எண்டா இந்தப் பிள்ள காதிலயே வாங்கிறேல்ல. பெரிய மனுசர் சொல்லுறதக் கேக்கிற குணமே இவாட்டச் சுத்தமா இல்ல. தான் இந்த வீட்டுக்காரி எண்டது போல நினைக்கிறதுகள எல்லாம் செய்யிறா! என்னவும் செய்யுங்க!” புறுபுறுத்தார், சரசு.
கேட்டு நின்ற கயல்விழியின் முகம் இறுகிற்று. அதுவே சரசு வேண்டாம் என்று சொல்லச் சொல்ல செய்துள்ளாள் என்று தெளிவாகிற்று.
“தாங்க்ஸ் கயல்! நான்…எனக்கு நினைவே வரேல்ல. என்ர செல்லக்குட்டிக்கு இண்டைக்குப் பிறந்தநாளா!” சொன்னவன் விழிகளால் நீர் உருண்டு தெறிக்க, “அப்பா!” என்று கட்டிப்பிடித்த மகளையும் தூக்கிக் கொண்டான்.
பிள்ளைகள் இருவரையும் மாறி மாறிக் கொஞ்சினான். பார்த்து நின்ற கயலுக்கும் வாசலில் நின்ற சரசுவுக்குமே கண்கள் கலங்கிட்டு.
தன் அறைக்குள் வைத்தே கேக் வெட்டும் வகையில் செட் பண்ணியிருந்தாள், கயல். அப்படியெல்லாம் ஒரு அலங்காரமும் இல்லை. ஒரு மிக்கி மவுஸ் முகம் மட்டும் 1 என்ற மெழுகுவர்த்தியோடு இருந்தது.
“கேக் வெட்டுவமா? சித்தி வாங்கோ!” வாயிலோரமாகவே நின்றவரை அழைத்தான், பூபாலன்.
“நான் இதிலயே நிக்கிறன்.” முறுக்கினார் சரசு.
“ஹையோ வந்து நில்லுங்கோ! லாதி எவ்வளவு சந்தோசமா எல்லாம் செய்ய உதவினா. அவேட சந்தோசத்துக்குத் தானே வேற என்னத்துக்கு?” அவரை அழைத்து வந்து நிறுத்தினாள், கயல்விழி.
“காயுக்கு இப்பத்தான் சந்தோசமா இருக்கும் சித்தி. நான் சுத்தமா மறந்திட்டன். இந்த வீட்டு ஆளா, எப்பவுமே பிள்ளைகளிட நலனில அக்கறை உள்ளவரா கயல் இதைச் செய்ததுக்கு…” என்றதோடு நிறுத்திவிட்டான், பூபாலன். பார்வை மட்டும் கயல்விழியில் நன்றியோடு படிந்திட்டு.
அடுத்த சிலநிமிடங்களில் தன் முதல் பிறந்தநாளை மிக எளிமையாகக் கொண்டாடி முடித்திருந்தான், குழந்தை ஆதித்.
“நீர் நில்லும் நான் எடுக்கிறன். இவனப் பிடியும்.” தாவிய குழந்தையை வாங்கியவள், “அப்படியே நில்லுங்கோ செல்ஃபியே எடுக்கலாம்.” என்று, பார்த்துப் பார்த்து செல்ஃபி எடுத்தவளில் தான் பூபாலன் பார்வை.
என்னதான் ‘கேக் செய்யிறன் சாப்பாடு செய்யிறன்’ என்று, கயல் ஓடித் திரிகையில் புறுபுறுப்போடு இருந்தாலும் சரசுவின் அடிமனதில் அவளில் நல்ல அபிப்பிராயம் உருவாகியிருந்தது.
வீட்டோடு இருக்கிறாள் அப்படியே பூபாலனுக்குச் செய்து வச்சிரலாம் என்று பூபாலன் வீட்டினர் முயன்றதைக் கேள்விப்பட்ட காயு வீட்டினருக்கு உடனே ஒரு கோபம். மகள் இறந்து அழுது முடியவில்லை அதுக்குள்ளவா என்று. அதுவே, கயல் மறுத்துவிட ‘அவளைப் போல ஆரால் குழந்தைகளைக் கவனிக்க ஏலும்? எப்பிடியும் ஆரோ ஒருத்தி வரத்தான் போகிறாள்.’ என்றும் கவலை.