அந்நேரம், “இங்க குசினிக்க என்ன சத்தம்?” என்றபடி, அம்மா வருவார் என்றே எதிர்பார்க்கவில்லை. வந்தவர் பார்த்தாரே ஒரு பார்வை, என்னையும் சமையலறை கிடந்த கோலத்தையும் அடுப்பிலிருந்த கேற்றிலையும்.
அதற்குப் பிறகும் அங்கு நிற்க முடியவில்லை. ஏதோ, யாரோ வீட்டில் களவு செய்து பிடிபட்ட உணர்வு!
விசுக்கென்று நகர்ந்து என்னறைக்குள் புகுந்துவிட்டேன்.
சொந்த வீட்டில் என் நிலை எதுவென்பது முகத்திலறைந்தது. உடல் தளர அப்படியே கட்டிலில் அமர்ந்து விட்டேன்.
எவ்வளவு நேரம் அப்படியிருந்தேனோ வீட்டில் நடமாட்டம் தொடங்கியிருந்தது. அதோடு குட்டி அழைத்திருந்தாள் போலும். உதயா அவளோடு கதைப்பதுவும் காதுகளில் விழுந்தது.
தேத்தண்ணி போடத்தான் போனேன் என்று அம்மாவுக்குத் தெரியும் தானே? தேத்தண்ணி தருவார் என மனம் மிகவும் எதிர்பார்த்தது. ஏமாற்றமும் கொண்டது.
எழுந்து மோட்டார் சைக்கிள் திறப்பை எடுத்துக்கொண்டு வெளியில் வர, கூடத்தில் நின்ற உதயா திரும்பி, கணத்திலும் குறைவாக என்னைப் பார்த்தவள், “இந்தா வாறார் குடுக்கிறன்.” என்றபடி வந்து என்னை நேருக்கு நேராகப் பார்க்காதே தொலைபேசியை நீட்டினாள்.
“ஆரு கதைக்கிறது?” சட்டென்று வாங்காது கேள்வி கேட்டேன். நேரே பார்த்துத் தந்தால் இப்போ குறைந்து போவாளோ!
கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாது வெடுக்கென்று ஒரு பார்வை பார்த்தாளே!
விடிய வெள்ளன ஒருவாய்த் தண்ணி குடிக்காது காஞ்சு கிடந்த தொண்டை மேலும் காய்ந்து போனது.
என்றாலும் நமக்குள்ளும் வம்பன் இருக்கிறானோ!
“யாரெண்டு கேட்டன் உதயா?”
“ஆங்! வாங்கிக் கதைத்துப் பார்த்தா அது தெரியப் போகுது!” தொலைபேசியின் வாய்ப் பகுதியைப் பொத்திக்கொண்டு சொன்னவள் மீண்டும் ஒரு அனல் பார்வை பார்த்தாள்.
“இவ்வளவு சொல்லுறதுக்குப் பதிலா அதைச் சொல்லீட்டுத் தந்தால் நீ குறைஞ்சு போவியோ!” என்ற என்னை, விசரனைப் பார்ப்பது போலவே பார்த்தாள்.
அந்தப் பார்வை சுருக்கென்று குத்தினாலும் அசையாது நின்றேன்.
“இங்க பாருங்க, வேணுமெண்டால் இந்தா வைக்கிறன் எடுத்து யாரெண்டு பாருங்க; இல்லையோ என்னவும் செய்யுங்க.”
அங்கிருந்த மேசையில் தொலைபேசியை வைத்துவிட்டு விடுவிடுவென்று சமையலறைப் பக்கமாக நடந்தாள் அவள். என்னவோ முணுமுணுப்போடுதான்.
அப்போதுதான் சமையலறை வாயிலில் நின்ற அம்மாவைக் கண்டேன். அவர் பார்வை இங்கேதான் இருந்தது. நான் பார்த்ததும் விசுக்கென்று உள்ளே சென்றுவிட்டார்.
“உப்ப்ப்ப்…” நீளமாகப் பெருமூச்சு விட்டபடி பேசியை எடுத்து, “சொல்லு குட்டி…” என்றேனா,
“சனத்துக்கு வர வரச் சேட்டை கூடுது!” என்று சொன்னபடி என்னைக் கடந்து சென்ற தீபியும், சற்றுமுதல் நான் உதயாவோடு கதைத்ததைக் கேட்டிருக்கிறாள் என்பதைச் சொல்லாது சொல்லிச் சென்றாள்.
‘வேவு பார்க்கீனமோ! அவளே சமாதானமாக வந்தாலும் இவையள் விட மாட்டீனம் போலக் கிடக்கே! பிறகு என்னத்துக்குத் தொட்டத்துக்கும் என்னில குறை கண்டு பிடிக்கிறது?’
மனம் முணுமுணுக்க நான் வெளியில் இறங்க, சமையலறையில் நடந்த உரையாடல் காதுகளில் பட்டுத் தெறித்து.
“இதெல்லாம் என்ன எண்டா கேட்கிற பிள்ள? வேறே என்ன? எல்லாம் என்ர தலையெழுத்து! உள்ள வேல போதாது பார், ஒரு கிலோ சீனி நேற்றுத்தான் போட்டு வச்சன். வாய்க்க விரல் வச்சாக் கடிக்கத் தெரியாத சின்னப்பாப்பா பார், எடுத்து இழுத்துக் கொட்டி வச்சிருக்கு! கருமம் பிடிச்சதுகளோட விடியவெள்ளன மனுசரிண்ட மண்டை வெடிக்கிது!”
“யா…ரு அம்மம்மா? தீபியா? அவள் என்னத்துக்குக் குசினிக்க வந்தவள்? இப்பக் கொஞ்சமுதல் தான் எழும்பினவள் அம்மம்மா. திறந்திருக்க பூனை ஏதும் தட்டி விட்டிருக்கும். நேற்றிரவு நான் தான் தேத்தண்ணி போட்டுட்டு வச்சன், வடிவா மூடேல்ல போல! தள்ளுங்க நான் கூட்டுறன்.”
உதயாவின் குரலில் தர்மசங்கடம்.
“நீயேன் எல்லாத்தையும் உன்ர தலையில போடுற? இங்க உனக்கு நடக்கிறதுகள் போதாதா என்ன? தீபி என்னத்துக்கு இந்த விசர் வேலை பார்க்கிறாள்? விடிய வெள்ளன எழும்பினதும் புதினமா தேத்தண்ணி கேட்குதோ! போய் நாலு போத்தல் சாராயத்தை வாங்கித் தொண்டைக்க கவுக்க வேண்டியது தானே?”
அம்மா தொடர்ந்து சொல்ல உதயாவின் குரலே கேட்கவில்லை.
கேட்டு நின்ற என் முகம் தான் கல்லாகிப் போயிற்று! மனம் கோபத்தில் கணகணத்தது.
‘நான் என்ன பிறந்ததிலிருந்து குடிச்சுக் குடிச்சு இவர்களின் சொத்தை எல்லாம் அழிச்சவனா? குடிக்காமலிருந்து எல்லாத்தையும் நேர் சீராக்கப் பார்த்தாலும் இவையல் விடாயீனம் போல!’ மனம் வெடித்தது.
தொலைபேசியில் குட்டி சொன்னவை, கேட்டவை என்று எதுவுமே என் கருத்தில் பதியேன் என்றதும், “நான் பிறகு கதைக்கிறன் குட்டி, பார்த்துக் கவனமாக இரு!” என்று அழைப்பைத் துண்டித்த வேகத்தில் கையிலிருந்த தொலைபேசியைச் சிதறி அடிக்கும் ஆவேசம் தான் வந்தது. அப்படியே ஓங்கி விசிற முயன்ற போதுதான் வாசலில் வந்து நின்றாள் உதயா.
என்னைத்தான் பார்த்தாள். உயர்ந்த கரம் கீழிறங்கினாலும் கோபம் மட்டும் தணியேன் என்றது.
“வெள்ளணக் காலத்தால ஒரு கோப்பைத் தேத்தண்ணி குடிக்க நினைச்சது அவ்வளவு பெரிய குற்றமா என்ன? ச்சே!”
ஏன் எதற்கு என்றில்லாது அவளைப் பார்த்துத்தான் சொன்னேன். அதே நேரம் என்னை என்னால் கட்டுப்படுத்த முடியாது சிதறி உடைந்தது தொலைபேசி!
அதே வேகத்தில் மோட்டார் சைக்கிளை உதைத்துக் கிளப்பி உச்ச வேகத்தில் வெளியேறியும் இருந்தேன்.
வீட்டிலிருந்து புறப்பட்ட வேகத்தில் வந்து, அந்தக் காலைப்பொழுதிலேயே கராஜைத் திறந்து வெறி கொண்டது போலவே அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தேன்.
மதியப்பொழுதுவரை வாயில் பச்சை தண்ணி படவில்லை. அவ்வளவு கோபம்.
யாரில்? என்னில் எனக்கிருந்த கோபமெல்லாம் ஓரமாகத் தள்ளுப்பட்டுக் கிடக்க, பிழையுணர்ந்து வலிந்து கதைக்க முற்பட்டாலே சினத்தைக் காட்டுபவளில் எக்கச்சக்கமாகக் கோபமேற்பட்டது; காணும் நேரங்களில் எல்லாம் பார்வையில் எள்ளலும் வார்த்தைகளில் குத்தலுமாகத் திரியும் கவி, தீபியில், எந்நேரமும் குத்தூசிகளாக வார்த்தைகளால் கிழித்துக் குதறும் அம்மாவில் என்று, உள்ளம் நெருப்பாகத் தகித்ததில் தலை கனத்தது.
‘இப்படியே இன்னும் கொஞ்சநாளுக்கு இருந்தனோ நிச்சயம் பைத்தியக்காரன் ஆவேன் நான்.’ சினத்தோடு அலறியதுள்ளம்.
“தம்பி! இதென்ன எல்லா வேலைகளையும் நீங்களே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யிறீங்க? அட இங்க பாருங்க, பத்துமணிக்கு வச்ச தேத்தண்ணி அப்படியே இருக்கு! நானும் கவனிக்கேல்ல. முதல் எழும்புங்கோ தம்பி, வீட்ட போய்ச் சாப்பிட்டுட்டு ஆறுதலாக வாங்கோவன்.” என்றபடி அருகில் வந்து நின்றார் பெரியவர்.
அவரை நிமிர்ந்தும் பார்க்காது பிரித்துக்கிடந்த அந்த மோட்டார் சைக்கிளைப் பொருத்துவதில் முனைந்தேன். என் முகத்தைப் பார்த்தார் என்றால் நிச்சயம் என்ன ஏதென்று கேட்பார். அப்படியெல்லாம் கதைக்கும் அளவுக்கு என் மனநிலை இல்லவே இல்லை.