“தம்பி…” மீண்டும் அழைத்தார் .
“இல்ல ஐயா, இதை நானே முடிச்சிட்டுச் சாப்பிடுறன்; நீங்க உங்கட வேலைகளைப் பாருங்க!”
கொஞ்ச நாட்களுக்குப் பின்னரான என் இறுகிய குரலில் அவர் நிச்சயம் யோசனையோடு என்னைப் பார்த்திருப்பார். தயங்கி நின்றார். நான் அதைக் கண்டுகொள்ளவேயில்லை.
அப்போது பார்த்துக் கைபேசி கிணுகிணுக்க எடுக்கும் எண்ணமின்றி வேலையைத் தொடர்ந்தேன்.
பெரியவர் மேசையில் கிடந்த பேசித்திரையை எட்டிப் பார்த்தார் போலும்.
“தம்பி, உங்கட தங்கச்சிதான்…” என்ற பிறகும் அமைதியாக இருக்க முடியாது எழுந்து, கரங்களைத் துடைத்தபடி கைபேசியை எடுத்தியக்கிக் காதுகளில் வைத்துக்கொண்டே வெளியில் சென்று நின்று கொண்டேன்.
சில நிமிடங்கள் பொதுவாகக் கதைத்தவள், “அண்ணா சாப்பிடப் போகேல்லையா? போய்ச் சாப்பிட்டுட்டு வாங்கோவன்.” என்றாள் அன்போடு.
‘வெள்ளன நித்திரையால எழும்பி ஒரு வாய்ச் சுடுதண்ணி குடிக்க எனக்கு அந்த வீட்டில உரிமையில்ல; இதில சாப்பாடா?’ மனம் தான் குழறியது.
“அதுக்கெல்லாம் நேரமில்ல குட்டி; வேல குவிஞ்சு கிடக்கு; நான் இங்க எதையாவது வாங்கிச் சாப்பிடுறன்; இரவுக்குப் போய் சாப்பிடலாம்.” என்று அவளிடம் கூறிச் சமாளித்துவிட்டுத் திரும்பினால், “அப்பத் தம்பி, பெடியள் சாப்பிடப் போகேக்க உங்களுக்கும் சாப்பாட்டுக்குச் சொல்லவோ?” என்றபடி நின்றார் பெரியவர்.
இனி என்ன சொல்லி மறுப்பதாம்?
அதனால் சரியென்பதாகத் தலையாட்டிவிட்டு, விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடர்ந்தேன்.
சாப்பாடும் வந்தது. என்னால் தான் இரண்டு வாய்கள் கூட உண்ண முடியவில்லை. அது எங்கே? மனம் உப்பிப் போய்க் கிடக்கையில் உணவு கசப்போ கசப்பாய்க் கசந்து வழிந்தது.
மாலையில் எல்லாரும் சென்ற பின்னரும் அண்மைக்காலங்கள் போல் அவ்வளவு இலகுவாக என்னால் வீடு செல்லவே முடியவில்லை. விருப்பமே வரவில்லை. அதற்கென்று கராஜில் எத்தனைக்கென்று இருப்பதாம்?
பூட்டிக்கொண்டு, மோட்டார் சைக்கிளை எடுத்த என்னுள் களேபரம்.
‘இப்பிடியே எங்காவது போய்விட்டால்?’
உதயாவைக் கலியாணம் செய்ய இருந்த அந்தக் கணம் என்னுள் எழுந்த அதே எண்ணம் இப்பொழுதும் எழத் திடுக்கிட்டேன் தான்.
மோட்டார் சைக்கிளை விட்டிறங்கி அப்படியே கராஜ் வாயில் படியில் அமர்ந்து விட்டேன்.
அப்படியே எவ்வளவு நேரம் இருந்தேனோ… கடைசியில், மீண்டும் மீண்டும் நடப்பவை அனைத்துக்கும் என்னையே குற்றவாளியாக்கி மனத்தைச் சமாதானம் செய்துகொண்டே வீட்டுக்குப் புறப்பட்டேன்.
நான் வீட்டினுள் நுழைகையில் அவ்வளவாக அரவம் இருக்கவில்லை.
அம்மா சமையலறைக்குள் இருந்தாரோ!
இல்லை, உதயாவும் அங்கேதான் நிற்கிறாள் என்றது அங்கிருந்து வந்த அவர்களின் பேச்சுக்குரல்கள்.
தீபி படித்துக்கொண்டிருந்தாள் போலும்.
நான் வந்தது தெரியாதிருக்காது; இருந்தும் யாருமே கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. விருட்டென்று என்னறைக்குள் புகுந்து கொண்டேன்.
அடுத்து வந்த அரைமணித்தியாலத்தில் குளித்துவிட்டு வருகையில் இரவுணவுக்காக அவர்கள் ஆயத்தமாவது தெரிந்தது. குளிக்கச் செல்கையில் பின்பக்கமாகச் சென்றாலும் சமையலறைப் பக்கமாகத்தான் திரும்பி வந்தேன். இருந்தும், அங்கு நின்ற அம்மாவோ உதயாவோ என்னைத் திரும்பியும் பார்க்கவில்லை.
ஒதுக்குறார்களாமே! ஏற்கனவே அவர்கள் அப்படித்தானே நடந்து கொள்வார்கள்? குட்டி இருக்கையில் அந்த ஒதுக்கம் பெரிதாகத் தெரியவில்லையோ! இப்போதோ பூதாகரமாகத் தெரிந்து வதைக்கின்றது.
பசி, கோரப்பசி வேறு வயிற்றைக் கபளீகரம் செய்து கொண்டிருந்தாலும் எதுவுமே நடக்கவில்லை என்று, அங்கு சென்றமரும் எண்ணமின்றி அப்படியே அறைக்குள் அடைந்து கொண்டேன்.
எவ்வளவு நேரத்துக்கு இந்தப் பிடிவாதம்? முதல் என் மனம் என்ன எதிர்பார்க்கின்றது? உதயாவோ அம்மாவோ வந்து சாப்பிட அழைப்பார்கள் என்றா?
“தீபி வந்து சாப்பிடு!” உதயா அழைப்பது கேட்க, அவர்கள் அழைப்பார்கள் என்ற நினைப்பே படு முட்டாள்தனமாகப் பட நானும் எழுந்தேன்.
‘சரி என்னதான் நடக்கின்றது பார்ப்பமே!’
‘ரோசம் கெட்டவனாகிக் கொண்டே வாறனோ!’
ஐயமெழுந்த அக்கணமே, ‘இதுவும் நானே எனக்கு வருவித்த நிலைதானே!’ என்னுள்ளமே பதிலளித்தும் விட்டது.
இது நிச்சயம் எனக்கு நானே செய்துகொள்ளும் சமாதானம் என்றளவும் புரியாதா? நிமிர்ந்து நின்ற உள்ளம் தளதளத்துச் சாயவேதான் சமையலறைக்குள் நுழைந்தேன்.
நான் நுழைந்த அரவத்தில் திரும்பிய தீபி விசுக்கென்று எழுந்துவிட்டாள்.
“ஏய் தீபி, பேசாமல் இருந்து சாப்பிடு!”
தமக்கை அதட்டியும் கேளாது, “நான் அங்கால(அந்தப்பக்கமாக) போயிருந்து நிம்மதியாச் சாப்பிடப் போறன்.”
வெடுக்கென்று சொல்லிவிட்டு என்னைக் கடந்து சென்றவளைப் பிடித்து நிறுத்தி கன்னத்தில் இரண்டு வைத்தால் என்னவாம்?
“ஏய்!” என்று திரும்பிய நான், “சமச்சதத் தின்னக் கூட நிம்மதியில்லை!” என்றபடி, சாப்பாட்டுத் தட்டோடு வெளியேறிய அம்மாவை என்ன செய்வதாம்?
“இங்க பாரன அம்மா, இதெல்லாம் கொஞ்சமும் சரியில்ல சொல்லீட்டன்.
இப்ப நான் என்ன செய்ய வேணும் எண்டு எதிர்பார்க்கிறீங்க?
கதைக்க வந்தா நாயெண்டும் மதிக்கிறேல்ல! நானும் எவ்வளவுக்கு எண்டு பொறுக்கிறது?
இங்க நடக்கிற எல்லாத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறன். எல்லாம் முடிஞ்சு ஒரு வாய் தேத்தண்ணிக்கும் சாப்பாட்டுக்கும் கூட எனக்கு இங்க உரிமை இல்லையா என்ன?”
பெருங் குரலில் தான் கேட்டு விட்டேன்.
“பிறகு என்னத்துக்கு நான் இந்த வீட்டில இருக்க வேணும்?” அவ்வளவு ஆத்திரம் வந்தது எனக்கு.
“இங்க பார் உதயா, நான் யாரையும் தின்னவோ குடிக்கவோ வேணாம் எண்டு சொல்லேல்ல.
எல்லாத்துக்கும் முதல் இந்தக் குரல உயர்த்திக் கத்திற வேலையெல்லாம் என்னட்ட வைக்க வேணாம் எண்டு சொல்லு!
அதுக்குக் கண்டவைக்கும் தகுதியும் இல்ல சொல்லீட்டன்.
கொஞ்ச நாளா வீட்டில இருக்கிற அமைதியைக் குலைச்சு, திரும்பவும் அயலட்டத்துக்க நாறடிக்க வேணாம் எண்டும் சொல்லு!
மதிக்கிற மாதிரி நடக்கிறவனைத்தான் மதிக்கலாம். மதிப்பு வேணுமாம் மதிப்பு! மண்ணாங்கட்டி!”
அம்மாவும் பதிலுக்குக் குரலுயர்த்தினார்.
நான் வெளியே செல்ல முயன்றேன். அம்மாவின் முகம் பார்த்துக் கதைக்க வேண்டும். இன்றைக்கு ஒரு முடிவு தெரிய வேண்டும் எனக்கு.
விசுக்கென்று செல்ல முயன்ற நான், “அய்யோ! ஆளாளுக்கு வீணாச் சண்டைபோடாமல் பேசாமல் இருங்க! நீங்க வந்து சாப்பிடுங்க!” என்ற குரலில் அப்படியே வேரோடி நின்றேன்.
சொன்னவளை சரேலென்று திரும்பிப் பார்த்த என் விழிகள் கலங்கிவிட்டன. என் பெயர் சொல்லி எல்லாம் அழைத்துச் சொல்லவில்லை. துளி ஒட்டோ, பாசமோ, அன்போ என்றெல்லாம் கலந்திருக்கவும் இல்லை. என்றாலும் சொந்த வீட்டில், அதுவும் பெற்ற தாயால் கால் தூசென ஒதுக்கிவைக்கப்பட்டவனை முதல் முதல் சாப்பிடு என்றாள் அவள்.
இரு கரங்களாலும் தலையை இறுக்கப் பற்றியபடி சிறிது நேரம் நின்றுவிட்டேன். எனக்கு மீண்டும் அவள் முகம் பார்க்க அந்த அவகாசம் தேவைப்பட்டது. நான் அவளுக்கு என்ன எல்லாம் செய்தேன்? இன்று அவள் எனக்கு என்ன செய்கிறாள்?
நெஞ்சில் குற்றவுணர்வு குத்தீட்டியாய்க் குத்தி நின்றது.
மெல்லச் சென்று அவள் முன்னால் அமர்ந்து அவளையே பார்த்தேன். அவள் என்னைப் பார்க்கவில்லை. மிகக் கவனமாகத் தவிர்க்கிறாள் என்பது தெளிவாகவே தெரிந்தது. இருந்தும் என் பார்வை இம்மியும் விலகவில்லை. என் தட்டை எடுத்து உணவைப் பரிமாறினாள்.
அந்தக் கணம் மிக மிகப் புதியதாக எனக்குப்பட்டது என்பதை ஒத்துக்கொள்ளவே வேண்டும். நான் போய் யாரிடம் இதை ஒத்துக்கொள்ள வேண்டும்? ஏங்கிச் சுருங்கி வாடி வதங்கிக் கிடந்த என்னியதத்திடமே தான்.
‘எனக்கென்று அமைந்த வாழ்விதுதான்! இதை, ஏற்று நடந்தேயாக வேண்டும்!’ என்று, அரைகுறையாகத் தத்தளிக்கும் மனத்தோடு, இவளுக்கும் எனக்குமிடையேயான வாழ்வுக்கு என்னைத் தயார்ப்படுத்த நினைத்திருக்கையில், அதன் ஆரம்பப்புள்ளியில், இப்பிடியான ஒரு சிறுசெயலுக்கே இத்தனை சக்தியிருக்குமா?
கோபத்திலும் பசியிலும் நெருப்பாக எரிந்த வயிறும் நெஞ்சும் கூட தணிந்தது போலுணர்ந்தேன்.
“உங்கள மத்தியானம் சாப்பிட வர வேணாம் எண்டு இங்க ஒருவரும் சொல்லேல்ல; காலேல அம்மம்மா ஏதோ கோவத்தில சொன்னா எண்டா அதுக்குப் போய் ஃபோனை உடைச்சிட்டுப் போகச் சொல்லியும் யாரும் சொல்லேல்ல. எங்களுக்கு வாற கோபத்துக்கு…” சொல்லிக் கொண்டே இடியப்பத்தையும் கறிகளைகளையும் பரிமாறி என் புறமாக வைத்தாள்.
கணம் கூடத் தாமதிக்காது நகர்ந்த கரம் தட்டை எடுத்துக்கொண்டது.
‘இப்ப என்ர முகம் பார்த்துக் கதைக்க மாட்டியோ நீ! ஒரு ஆம்பிள நான் எவ்வளவுக்குத்தான் தணிஞ்சு போறதாம்? போட்ட சாப்பாட்டைக் கையில தந்தால் குறைஞ்சா போவ? நாய்க்கு வைக்கிறது போல போட்டு வைக்கிற!’
என்றெல்லாம் திமிராகக் கேட்க நினைக்கவில்லை நான். பிறகெதற்கு இந்த நினைப்பாம்?
பாழாய்ப்போன, நான் ஆண் எனும் மிதப்புக்கொண்ட மனத்தின் எதிர்பார்ப்பது! நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்படிக் கொண்டாடப்பட்டவன் தான் நான். ம்ம்… அதெல்லாம் ஒரு காலம், விடுங்க!
சமய சந்தர்ப்பம் அறிந்து ஒரு ஓரமாக முடங்கிக் கொண்டது என்னுள்ளம்.
கை உணவைப் பிசைந்தாலும் என் பார்வை அவள் முகத்தில் தான். சொல்ல வந்ததை இடையில் நிறுத்தி விட்டாளே! தன் தட்டை எடுத்துப் பரிமாறத் தொடங்கியவள், “சிலரிட மண்டையையே உடைச்சு நொறுக்க வேணும் போலக் கிடக்கிறது; செய்யிறனாங்களே!” என்றாள் பாருங்க.
சாப்பாடு பரிமாறித் தந்ததற்கே இதம் பரவுது என்றேன் தானே? இதற்கு? நெஞ்சறியச் சொல்ல வேண்டுமென்றால் எனக்குப் பசிக்கவே இல்லை.
முதல் முதல் அவள் இத்தனை இலகுவாக என்னோடு உரையாடி இருக்கிறாள். மண்டையை உடைக்க வேணும் போல இருக்கென்று சொன்னாலும் கதைச்சிட்டாள்.
“உதயா…” என்னையும் மீறி அழைத்திருந்தேன்.
கண்டுகொள்ளவில்லை. இல்லை இல்லை, அந்த அழைப்பு அவள் காதுகளில் விழுந்த பாவனை துளியும் அவளில் இல்லை.
“கறிகள், இடியப்பம் எல்லாம் இருக்கு…போட்டு வடிவாச் சாப்பிடுங்க!”
முகம் பாராது சொன்னவள் குரல் இப்போது ஒரு இயந்திரத் தன்மையை தனதாக்கி இருந்ததை என்னால் துல்லியமாகவே உணர முடிந்தது.
அவள் உண்ணத் தொடங்கியிருந்தாள். என்னால் அதன் பிறகு ஒரு வார்த்தை கதைக்க முடியவில்லை. உணவைப் பிசைந்து வாயில் அடைத்துக் கொண்டேன்.