அத்தியாயம் 26- 1

இனி இதுதான் எனக்கு, வேறு சாத்தியங்களைத் தொட்டுப் பார்க்க வேண்டாமே!’ என்று, ஒருவிதக் கட்டாயத்தில் மனத்தை நிறுத்தி முடிவெடுத்து இங்கு வந்துவிட்டாலும், அம்மம்மாவும்  குட்டி அக்காவும்  பழகிய விதமோ என்னவோ, இது என் இடம் என்ற உணர்வில் தான் இங்கு என் நாட்கள் ஒவ்வொன்றும் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

  வெளிப்படையாகவே சொல்லப் போனால், சித்தி, கூர்பார்வையோடு அப்படியும் இப்படியும் நடமாடிக்கொண்டிருக்கையில் என்னுடைய சொந்த வீட்டில் இருந்ததையும் விடவே, ஒரு இயல்பான உணர்வோடு இங்கே என்னால் இருக்க முடிந்தது என்பேன்

  காலையிலும் மாலையிலும் சூர்யாவின் நடமாட்டம் இருக்கையில் மட்டும் முகமும் மனமும் கோணத்  தொடங்கினாலும், அது கூட பழக்கப்பட்டுவிட்டதோ என்றளவில் நடமாடத் தொடங்கியிருந்தேன்.

  அத்தோடு,  ‘இவன் உன்ர புருசன், நீ அவன்ட பெஞ்சாதிஎன்றவகையில் எந்தவிதமான கதைகளும் இங்கு வலிந்து கொண்டு வரப்படவுமில்லை

  இப்படியிருக்கையில், முதன் முதலாகக் குட்டி அக்கா கொழும்பு சென்றுவிட்ட பின்னர் விடிந்த விடியலில், ஒரு தேநீருக்கு அம்மம்மா இப்படியெல்லாம் கதைப்பார் என்று நான் துளியும் எதிர்பார்க்கவில்லை. வீட்டிலிருக்கும் மூவரோடும் சுமூகமான உறவில்லை, எதையும் எதிர்பார்க்க முடியாது என்றுதானே தானே தயாரிக்கச் சென்றிருப்பார்? அதற்குப் போய் அப்படியா கதைப்பது?

   பெருத்த பாவமாக இருக்கவே, ‘தேத்தண்ணி குடிச்சிட்டு போங்கஎன்று கேட்கவே காலையில் வெளியில் சென்றேன். அவர் என் கணவர் என்ற உணர்வில் எல்லாம் இல்லை, அந்த இடத்தில் யார் இருந்திருந்தாலும் அப்படித்தான் நடந்திருப்பேன்.

   அது பார்த்தால், விட்டால் என் முகத்தில் அல்லவா தொலைபேசியை விசிறி அடித்திருப்பார்!

   ‘போ போ, நல்லா காஞ்சிட்டு வா!’ என்று விட்டால், மனிதன் மதியமும் வந்து சாப்பிடவில்லை என்பதை அம்மம்மாவின் கதைகளிலிருந்து அறிய முடிந்தது.

    இப்பத்தான் குடிக்கிறதையும் விட்டுட்டாரே! சிலவருடங்கள் மொடாக்குடியனாக இருந்த ஒரு ஆள், குறுகிய காலத்தினுள் அதை முழுதும் நிறுத்துவது என்றால் எவ்வளவு மனக்கட்டுப்பாடும் திடமும் வேண்டும்?

  அதைப்  பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, எந்தநேரமும், கண்ணில் படும் போதெல்லாம் அவர் காதுகளில் விழவேகுடிகாரன் குடிகாரன்கெட்டுக் குட்டிச் சுவராத்தான் போவான்!’ என்று சொல்லிக் கண்டபடி கதைக்காதிருக்கலாமே!  

   ‘சும்மா இருப்பவனையும் குடி குடி என்று தூண்டுவது போலில்லையா?’

  இதை அம்மம்மாவிடம் கேட்க எத்தனையோ தடவைகள் முயன்றும் வாயில் துருத்திய வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு அமைதியாகப் போய்க் கொண்டிருக்கிறேன்

  எல்லோரும் சாப்பிடுகையில் அவரின் தட்டிலும் போட்டு வைத்தால் என்னவாம்? உண்மையில் அம்மம்மாவில்  எரிச்சல் தான் வந்தது.

  எனக்காகக் கதைப்பதாக எனக்குணர்த்தத்தான் இப்படியெல்லாம் நடக்கிறார் போலும்அதற்காக இப்படியுமா

 இந்த எண்ணத்தில், பசியில் வந்தவரின் கன்றிக்கிடந்த முகத்தைப் பார்த்துவிட்டே உணவைப் பரிமாறிக் கொடுத்தேன். அது பார்த்தால் எங்கள் இருவருக்குமிடையில் எந்தவிதமான மனக்கசப்புகளும் இல்லவே இல்லை என்றது போலல்லவா இயல்பாகக்  கதைக்கவும், பார்க்கவும் முயல்கின்றார்?

  மனதில் சுறுசுவென்று கோபமேறிது!

  நானென்ன நாய்க்குட்டியா

  அப்படித்தான் அவர் நினைக்கிறார் போலும் என்ற எண்ணமே, என் தட்டிலிட்ட உணவைத் தொண்டைக்குழிக்குள் இறக்குவதற்குள் பெரும் பாடு படுத்தி விட்டது.

  அதேநேரம், அவர் உணவை உண்ட விதம் பார்க்க உண்மையில் பரிதாபமாகவும்தான் இருந்தது. என்னைப் பார்த்தவரின் பார்வை கலங்கிக் கிடந்ததுவா? சட்டென்று விலக்கிக்கொண்ட என் பார்வையால் அறுதியிட்டு உணர முடியவில்லை.

   இனித்தேவையென்றால் போட்டுச் சாப்பிடட்டும் என்ற எண்ணத்தில் தட்டில் பரிமாறியதை விறுவிறுவென்று வாயில் அடைத்துக் கொண்டேன்.

  இருந்தும், அவர் தட்டில் உணவு காலியாவதைக் குறிப்பெடுத்த விழிகள் செய்த சமிக்சையில், ‘ஏதாவது வேணுமா?’ என்று, என்னையும் அறியாது வினவவும் முயன்றது நான்தான். அதற்கு அனுமதியாது தானே பரிமாறிக் கொண்டார் அவர்.

   “தீபி என்னடி சத்தமே இல்ல? வந்து போட்டுச் சாப்பிடு!” என்றபடி எழுந்த நான், கரங்களைக் கழுவிவிட்டு  “அம்மம்மா உங்களுக்கு ஏதாவது வேணுமோ?” என்று கேட்டபடி சமையலறையைவிட்டு வெளியே செல்ல, அங்கிருந்த சிறுவராண்டாவில் அமர்ந்திருந்தவர் என்னை உற்றுப் பார்த்தார்.

   “என்ன அம்மம்மா? இடியப்பம் வேணுமா?” மீண்டும்  கேட்க, அவரின் விழிகள் சுரந்தன

    “ரெண்டு இடியப்பம் சொதியோட தாறியாம்மா?” தட்டை நீட்டியவர், வலது மேல் கையையுயர்த்தி விழிகளைத் துடைத்துக் கொண்டார்.

   அப்போதுதான், நானே சூர்யாவுக்கு உணவைப் பரிமாறட்டும் என்றுஇவர் வேண்டுமென்றே எழுந்து வந்தாரோ!’ என்ற ஐயம் என்னுள் எழுந்தது

  மறுநொடிசிறு சலனமுமின்றித்  துடைத்தால் போல் ஆகிற்று, என் முகம்

   அம்மம்மாவுக்கு இடியப்பத்தைப் பரிமாறிக் கொடுத்துவிட்டு, “போய்ப் போட்டுச் சாப்பிடு தீபி! ” என்றுவிட்டு, கழுவ வேண்டிய பாத்திரங்களை எடுத்துக் கழுவத் தொடங்க பின்னால் வந்து நின்றார் சூர்யா.

 தள்ளி நின்றேன். தன் தட்டைக் கழுவி அருகிலிருந்த மேடையில் கவிழ்த்து வைத்துவிட்டுத் திரும்பியவர், “தாங்க்ஸ் உதயா!” என்று சொல்லி, அவரைப் பார்க்காது நின்ற என் பார்வையைத் தன்புறம் திருப்பினார்.

  ‘இப்ப என்னத்துக்குத் தாங்க்ஸ்?’ மனம் சினத்தோடு கேட்டதை என் விழிகள் நிச்சயம் உணர்த்தியிருக்கும்

  அந்த என் பார்வைக்கு, மீண்டும் அவருக்கும் எனக்குமிடையில் எதுவுமே நடவாத பாவனையில் இயல்பாக மோதிய அவரின் பார்வை என்னை மிகுந்த கோபமே கொள்ள வைத்தது.

   அது போதாதென்று, “சரியான பசியில வந்தன் உதயா! காலம போல அம்மாவோட மல்லுக்கு நிண்டு சாப்பிடவும் கிடைக்குதோ என்று நினைச்சிருக்க, இப்பிடி வயிறும் மனமும் நிறையச் சாப்பாடு தந்ததுக்கு  தாங்க்ஸ்என்கிறாரே பாருங்க.

   “இங்க பாருங்க, இது உங்கட வீடு; உங்கட காசில சமைக்கிற சாப்பாடு; இதில எனக்கு என்ன தாங்க்ஸ்? அப்பிடிப் பார்த்தால் என்ர சாப்பாட்டுக்கு நான்தான் நன்றி சொல்ல வேணும்.” 

  சொன்ன வேகத்தில் வெடுக்கென்று நகர்ந்து வெளியில் வர, அம்மம்மா என்னை அடிபட்ட பார்வையோடு எதிர்கொண்டார்.

   பின்ன? ஒருதடவை சாப்பாடு போட்டுக் கொடுத்ததும் எல்லாம் சரியென்று அர்த்தமா என்ன?

error: Alert: Content selection is disabled!!