Skip to content
சரி வராது என்று தவிர்த்துவிட்டாள் தான். இருந்தாலும் மனதுள் விழுந்த நேசத் துளியை ஒரேயடியாக வழித்துத் துடைத்தெறிவது அப்படி ஒன்றும் இலகுவானதாகவும் இல்லை என்று அவளுக்கே உணர்த்தியது, பிரணவுக்குத் திருமணமாம் என்ற செய்தி.
மனதுள் புரண்ட துக்கமா, இயலாமையா, நமக்கு அவ்வளவுதான் என்ற ஒரு எண்ணமா எதுவோ அவள் மூச்சைத் தடுமாறச் செய்திட்டு. இருந்தபோதும் சமாளித்துவிட்டாள். விருப்பங்கள் அனைத்தும் கைகூடுவதில்லையே! அதையே நினைத்து ஏங்குவதில் பயனேது? உள்ள நிலையை ஏற்று வாழ்வது சின்ன வயதில் இருந்தே இவளுக்கு அத்துப்படி. அதையேதான் இப்போதும் செய்தாள், கயல்விழி.
மனதுக்கும் உடலுக்கும் சிறிதுமே ஓய்வு கொடாது பார்த்துக்கொண்டாள். வேலைப்பழுவும் குழந்தைகளும் அவள் எண்ணங்களை அங்கிங்கு தடுமாறாது வைத்துக் கொண்டனர். சதா தன்னிருப்பை உணர்த்திப் பயமுறுத்துவதில் சற்றும் சளைக்காது இருந்த கொரோனா கூட அவள் மனத் தளம்பல்களுக்கு இடம் கொடாது பார்த்துக் கொண்டது.
இப்படியிருக்கையில்…லாதியின் ஏழாவது பிறந்தநாள் வந்தது. இப்போதான் நடந்தது போல் சென்ற வருட நினைவலைகள் புரண்டெழுந்தன. இவளும் முதல் நாளே இங்கு வந்து தங்கியிருந்தாள். நண்பர்கள் உறவுகள் சூழ எவ்வளவு ஆர்ப்பாட்டமாகப் பிறந்தநாளை ஒழுங்கு செய்திருந்தாள், காயு. அதை லாதியும் எதிர்பார்த்திருந்தாள் என்றது அன்று முழுவதும் வெளிப்பட்ட அவள் மகிழ்வு.
இவ்வருடம், சிறுமி எந்தவகையிலும் ஏமாற்றமடைந்து விடக்கூடாதென்று எண்ணினாள், கயல்விழி. யோசித்து யோசித்து பிறந்தநாள் ஆயத்தங்களைச் செய்தாள். லாதிக்குத் தெரியாது பேஸ்மெண்டில் வைத்து கேக் வெட்ட ஆயத்தங்களைச் செய்தாள். அதெல்லாம் கண்டும் காணாதது போலவே இருந்துவிட்டான், பூபாலன்.
சரசுவும் பார்வையாளராகவே இருந்துவிட்டார். மனம் மட்டும் ‘உனக்கு இந்தப் பிள்ளைகளில உள்ள அக்கறைக்கும் உன்னட்ட இருந்து அவேக்குக் கிடைக்கும் கவனிப்புக்கும் அரவணைப்புக்கும் ஆயுள் குறைவாக இருக்கக் கூடாகுடாதென்று கடவுளை வேண்டுகின்றேன்’ என்று புலம்பியபடியிருந்தது.
ஒருகட்டத்தில் வாயைத் திறந்து விட்டார்.
“இப்ப நான் ஏதாவது சொல்லப் போனா வீண் மனவருத்தம் தான் மிஞ்சும். ஆனா ஒண்டை யோசிச்சுப் பாரும் பிள்ள. அவேக்குப் பெத்த தாயில்ல எண்டு ஆயிற்று. அதுக்குப் பிறகு அவே அந்த இழப்ப ஏற்று வாழப் பழகோணும் எல்லா? அதுக்கு நீர் கொஞ்சமும் விடுறீர் இல்ல. விளங்கிச் செய்யிறீரா இல்லாட்டி…” என்றுவிட்டு முறைத்தவர், கயல் பார்வையில் தத்தளிப்பை கொண்டு வந்துவிட்டார்.
“நான் இங்க இருக்கும் மட்டும் தானே?” தடுமாற்றத்தையும் தத்தளிப்பையும் இலாவகமாக மறைத்தபடி சொன்னாள், கயல்.
“ஆங் அதைதான் சொல்லுறன். பிறகு அவே இன்னும் ஏங்கிருவினம் எண்டு நீர் யோசிக்க மாட்டிரா? இன்னும் கொஞ்ச மாசங்களில நீர் பெட்டி கட்டிருவீர். அவே…உம்ம நினைச்சு ஏங்கி விசராக வேணுமா? அதுக்காகத்தான் சொல்லுறன் கொஞ்சம் விலத்தி நில்லும் எண்டு. உம்மட மன ஆறுதலுக்கு அதுகளுக்கு அதை இதைச் செய்து ஆச காட்டிட்டுப் போயிராதேயும். பிறகு இங்க வேற ஒருத்தி வந்தா அதுகள் அவேயிட்டையும் அதை எதிர்பார்த்து ஏங்கிப் போயிருவினம் எல்லா? உம்மட வேலைகளை மட்டும் பார்த்திட்டு ஊருக்குக் கிளம்பிற வழியைப் பாரும்.” படபடவென்று கொட்டிவிட்டு அப்பால் சென்று விட்டார்.
அவர் சொன்ன விதம் மிகையாகவே காயப்படுத்தினாலும் அதில் பொதிந்து கிடக்கும் உண்மை உரைக்காதும் இல்லை. தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தே விட்டாள் கயல்.
‘வெளிய போயிட்டு வரப்போறன் ஏதாவது வாங்க வேணுமா?’ என்று, கயல்விழியிடம் கேட்பதற்காக பேஸ்மென்ட் வந்த பூபாலன், சரசு சொன்னவற்றைக் கேட்டுவிட்டு அப்படியே நின்று விட்டான்.
கயல்விழி சென்ற பிறகு? அதுபற்றிய கற்பனையே அவ்வளவு இலகுவாக இல்லை. வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்துவிடுவான்; பிள்ளைகளையும் அவனால் கவனிக்க முடியும். ஆனாலும்… அவர்களை அரவணைப்பதில் கயல்விழி ஒரு படி மேல் தான். காயு அளவுக்கு இல்லை என்றாலும் தன்னால் முடிந்தளவு அக்கறையையும் கவனிப்பையும் கொடுக்கிறாள். அவர்கள் பற்றி நன்றாகவே அறிந்து வைத்துள்ளாள். அவளும் போய்விட்டால்…தொடர்ந்த யோசனையை ஒத்திப் போட்டு விட்டான். அதைச் செய்ய வைத்தது, ’வேற ஒருத்தி வந்தா’ என்று சரசு சொன்னது. விருட்டென்று திரும்பிவிட்டான்.
“நானே பேசாமல் இருந்தாலும் சுத்தி இருக்கிறதுகள் விடாயினம் போல’ அவன் மனதுள் சினந்தது போலவே தான் கயல்விழியும் எண்ணிக்கொண்டாள்.
“நானே என்ர பிள்ளைகளப் பாப்பன் எண்டு சொல்லுறார் தானே? பிறகென்ன? இன்னொருத்தி வந்தா எண்டு கதை கதைக்கிறது…இவையள…” முணுமுணுத்தவளுள் உற்சாகம் வடிந்திருந்தது.
தன் பிரிவுக்கும் பிள்ளைகளைத் தயார் செய்ய வேண்டிய அவசியத்தை எண்ணியபடியேதான் ஆயத்தங்களைச் செய்தாள்.
லாதிக்கு, மறுநாள் அவள் பிறந்தநாள் என்று நன்றாகவே தெரிந்தும் அதைப் பற்றி எதுவுமே கதைக்கவில்லை. மனம் தாயின் அருகாமைக்காக வெகுவாகவே ஏங்கியது. விம்மி அழ வேண்டும் போலிருந்தது, சிறுமிக்கு. கயல்விழியோடு ஒட்டிக்கொண்டு கலகலத்துத் திரிபவள் அமைதியாக இருந்துவிட்டாள். அவள் பார்வை நேர் முன்னால் இருந்த தாயின் புகைப்படத்தில்.
அவள் அறிந்து நடந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஒவ்வொன்றும் நினைவில் வந்து போக கண்ணீரோடு அமர்ந்திருந்தவள் அருகில் வந்தமர்ந்தாள், கயல்விழி.
“என்ன பிள்ளேட அக்கா இதில இருந்திட்டா! தம்பியோட விளையாட வாங்க அக்கா!” சீண்டலாகச் சொன்னபடி, மடியில் அமர்த்தியிருந்த குழந்தையின் பிஞ்சுக் கையால் சிறுமியின் கன்னத்தில் தட்டி தட்டிச் சீண்டினாள்.
“ம்ம்ம்…” சகோதரன் கையைக் கன்னத்தில் பிடித்து அழுத்தியபடி கயல்விழியோடு அணைந்து கொண்டாலும் வாய் திறந்து எதையுமே சொல்லவில்லை,லாதி.
“லாதிம்மா டிரையருக்க இருக்கிற பிள்ளைகளிட உடுப்புகள மடிப்பமா?”
“நோ!”
“என்ன நோ? இல்ல என்ன நோ?” கிச்சு கிச்சு முட்டினாள்.
“நோ ஸ்வீட்டி, எனக்கு மடிக்கத் தெரியாது.” மீண்டும் அவளுள்ளே ஒடுங்கினாள்.
“ஸ்வீட்டி காட்டித் தாறன் வாங்கோ. தம்பிய வோக்கருக்க விட்டுட்டு நாம மடிப்பம்.” வற்புறுத்தி அழைத்துச் சென்று ஆடைகளை எடுத்து மடிக்கத் தொடங்கியவர்களை பார்த்தும் பாராததுமாகச் சென்றார், சரசு.
இதுவரை பிள்ளைகளின் உடுப்புகளை கயல்விழிதான் தோய்க்கப் போடுவது மடித்து வைப்பது எல்லாம். பூபாலன் இயல்பாக நடமாடத் தொடங்கியதும் தன்னுடையதுகளை போட்டுவிட்டு பிள்ளைகளின் உடுப்பைப் போடப் பார்கையில் ஒருநாளும் சேர்ந்து இருப்பதில்லை; அந்தளவு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தவளுக்கு, இப்போது தன்னில் அவர்கள் கொஞ்சமும் தங்கியிருக்கும் நிலை கூடாதென்று புரிந்திட்டு.
அன்று முழுவதும் லாதிக்கு சின்னன் சின்னனாக ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுக்க, “நீர் போனாலும் பிள்ளைகள் சமாளிப்பினம் எண்டு எல்லாம் சொல்லிக் குடுக்கிறீர் போல!” நக்கலாகக் கேட்டார் சரசு. பூபாலனும் அங்கேதான் இருந்தான். கயல்விழியையே பார்த்தான். அவள் சின்னச் சிரிப்போடு அப்பால் சென்றுவிட்டாள்.
error: Alert: Content selection is disabled!!